அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்

Vinkmag ad
அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் –  88. டெ வாக் விண்ட்மீல் அருங்காட்சியகம், லைடன், நெதர்லாந்து
 
முனைவர் சுபாஷிணி
 
விண்ட்மில் என்பவை காற்றின் மூலம் கிடைக்கக்கூடிய சக்தியைக் காற்றாடிகளின் சுழற்சியின் வழி உருவாக்கி, அதன் வழி கிடைக்கும் சக்தியை ஒரு குறிப்பிட்ட வகைப் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. பண்டைய காலத்தில் விண்ட்மில்கள் பயிர்களை அரைத்துத் தூளாக்கி மாவாக்கவும் தேங்கிய தண்ணீரை வெளியே எடுத்துக் கொட்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தன. நாளடைவில் விண்ட்மில்கள் உருவாக்கும் சக்தியை மின்சார சக்தியாக மாற்றலாம் என்பதை அறிவியல் துறை ஆய்வுகள் கண்டுபிடித்ததன் விளைவாகப் பெருவாரியாக விண்ட்மில்கள் உலகளாவிய அளவில் மின்சார உற்பத்திக்குப் பயன்படுகின்றன.
விண்ட்மில் ஒன்றினை நம் மனக்கண்ணில் நாம் நிறுத்திப் பார்த்தால் உடனே நம் சிந்தனைக்கு வரும் நாடு நெதர்லாந்து தானே. நெதர்லாந்து நாட்டை ஹோலந்து என்ற பெயரிலும் அழைப்பது வழக்கம். இதற்குக் காரணம் உண்டு. தாழ்மையான நிலப்பரப்பு என்பதைப் பிரதிபலிப்பதாகவே இந்தப் பெயர் அமைந்தது. நெதர்லாந்துக்குச் சென்றிருப்பவர்கள் இந்த நாட்டின் நில அமைப்பினை நன்கு கவனித்திருந்தால், நிலப்பகுதி தாழ்வாக இருப்பதையும் எங்கெங்கு காணினும் குட்டைகளும், குளங்களும், ஏரிகளும், ஆறுகளும் என ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம். ஆக, இப்படி தேங்கிப் போய் இருக்கும் நீரை வெளியேற்றி நிலத்தைச் சமப்படுத்தும் கருவியாக பெரும்பாலான விண்ட்மில்கள் முன்னர் அமைக்கப்பட்டன. இது மட்டுமல்ல. விளை நிலங்களில் விவசாயத்தின் வழி கிடைக்கின்ற தானியங்களை உடைத்து மாவாக்கும் இயந்திரத்தை விண்ட்மில்லுடன் பொருத்தி அதனை மாவு அரைக்கும் இயந்திர ஆலையாகவும் நெதர்லாந்து நாட்டில் புழக்கத்தில் கொண்டு வந்தனர். இன்றளவும் நெதர்லாந்தில் தானியங்களை மாவாக அரைக்கவும், நீரைத் தாழ் நிலங்களிலிருந்து வெளியேற்றவும் விண்ட்மில்கள் பயன்படுத்தப் படுகின்றன.
Inline image 1
இதே முறை ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலும் புழக்கத்தில் இருந்தன, இன்றும் இருக்கின்றன. உதாரணமாக ஜெர்மனியின் லியோன்பெர்க்கில் எனது இல்லம் இருக்கும் பகுதியில் ஓடும் க்ளெம்ஸ் நதி பாயும் பகுதியில் இந்த ஆற்று நீரில் இத்தகைய இயந்திரங்களை அமைத்து தானியங்கள் அரைக்கும் ஆலைகளை உருவாக்கியிருக்கின்றார்கள். ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மாவு அரைக்கும் ஆலைகள் இவை. இப்படி ஆற்றங்கரையோரத்தில் ஐரோப்பாவின் பல இடங்களில் இவ்வகை இயந்திரங்களையோ அல்லது பழமையான விண்ட்மில்களையோ காணலாம். இன்று பரவலாக மின்சாரம் உற்பத்தி செய்யும் விண்ட்மில்கள் ஏராளமாக வந்துவிட்டன. ஆயினும் இந்தப் பழமையான மரத்தால் ஆன விண்ட்மில்களுக்குள்ள அழகும் நேர்த்தியும் அந்த இயந்திரத்தன்மை கொண்ட விண்ட்மில்களுக்கு இல்லை என்றே சொல்லலாம்.
நெதர்லாந்தை எடுத்துக் கொண்டால், அந்தச் சிறிய நாட்டில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ட்மில்கள் இருக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா? இந்த விண்ட்மில்களில் ஒன்றுதான் அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது. டெ வாக் விண்ட்மில் என அழைக்கப்படும் இந்த விண்ட்மில் நெதர்லாந்தின் தெற்குப் பகுதி நகரான லைடன் நகரில் அமைந்துள்ளது. நீராவி எந்திரம் 19ம் நூற்றாண்டில் பரவலான பயன்பாட்டிற்கு வந்த பின்னர் விண்ட்மில் இயந்திரத்தைப் பயன்படுத்தி தானியங்களை அரைப்பது என்பது குறைந்து விட்டது. லைடன் நகரை எடுத்துக் கொண்டால், நீராவி இயந்திரங்களின் வருகைக்குப் பின்னர் எஞ்சி நிற்கும் ஒரே ஒரு பழமையான, பயன்பாட்டில் இருந்த ஒரு விண்ட்மில் இது எனச் சொல்லலாம்.
1883ம் ஆண்டில் லைடன் நகரில் De Sleutels என்ற பெயர் கொண்ட மாவு உற்பத்தி தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவர் இந்த டெ வாக் விண்ட்மில்லின் உரிமையாளராவார். இந்த De Sleutels தான் லைடனிலேயே மிகப் பெரிய மாவு உற்பத்திசாலை என்ற சிறப்புடன் திகழ்வது.
லைடன் நகரை எடுத்துக் கொண்டால் 16ம் நூற்றாண்டு தொடக்கம் வரை விண்ட்மில் மாவு ஆலைகள் அனைத்தும் நகருக்கு வெளிப்புறத்தில் தான் அமைக்கப்பட்டிருந்தன. ஆக, மாவு அரைத்துக் கொண்டு வருவதற்கோ அல்லது வாங்குவதற்கோ மக்கள் நகருக்கு வெளியே சென்று வாங்கி வரும் நிலையே இருந்தது. பின்னர் 1573 வாக்கில் நகருக்கு உள்ளேயே புதிய விண்ட்மில்கள் கட்டப்பட்டன. இதற்கு மக்களின் பாதுகாப்பு அம்சங்களே முக்கிய காரணமாக அமைந்தன. லைடன் நகர் போரில் வெற்றி பெற்று தனி நகரமாக வளரத் தொடங்கிய 1574ம் ஆண்டில் இந்த நகரம் புதுப் பொலிவுடன் வளர்ச்சியைக் காணத்துவங்கியது. சோள மாவு ஆலை, தானிய ஆலை எனப் பல தொழிற்கூடங்கள் முளைக்கத் தொடங்கின. ஆலைகளுடன் துணிகளும் ஆடைகளும் தயாரிக்கும் தொழிற்கூடங்களும் உருவாக்கம் கண்டன.
Inline image 2
1611ம் ஆண்டில் லைடன் மாநகரம் சீரமைக்கப்பட்டு விரிவாக்கப்பட்ட சமயத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த டெ வாக் விண்ட்மில். பயன்பாட்டில் இருந்த இந்த விண்ட்மில் 1743ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. மரத்தால் செய்யப்பட்ட விண்ட்மில் காற்றாடிகள் மட்டும் இருக்க, அதன் உடல் பகுதி முழுமையும் மரத்திற்குப் பதிலாக கற்களைக் கொண்டு கட்டப்பட்டன. இப்பணி இரண்டரை மாதத்தில் நிறைவு பெற்றது. 1869ம் ஆண்டு வரை இரண்டு குடும்பங்கள் இந்த விண்ட்மில்லின் உரிமையாளராக இருந்திருக்கின்றனர். அதன் பின்னர் இது வான் ரெயின் குடும்பத்தாருக்குச் சொந்தமாகியது. பீட்டர் வான் ரெயின் இந்த ஆலையைத் திறமையுடன் நடத்தி வந்தார். இங்கு முக்கியமாக சோளம் உடைத்து மாவாகச் செய்யும் பணி நடந்து வந்தது. அவரது மேற்பார்வையில் இருந்த சமயத்தில், அதாவது 1869 முதல் 1889 வரை மிகுந்த லாபத்தை ஈட்டித்தந்த மாவு ஆலையாக இந்த விண்ட்மில் இருந்தது.
Inline image 3
இந்தக் காலகட்டத்தில் தான் மாவு உற்பத்தி செய்யும் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் பல நிறுவப்பட்டன. இது டெ வாக் போன்ற விண்ட்மில் மாவு அரைக்கும் இயந்திரங்களுக்குப் போட்டியை உருவாக்க ஆரம்பித்தது. இந்தப் போட்டியைச் சமாளிக்க எலெக்ட்ரிக் இயந்திரங்கள் இந்த டெ வாக் மாவு இயந்திரத்தில் 1923ம் ஆண்டு முதல் இணைக்கப்பட்டது. ஆனால் அது நல்ல பலனை உருவாக்கவில்லை.
முழுமையான புது வடிவமைப்புப் பணிகள் 1947ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டன.இதன் தொடர்ச்சியாக சில ஆண்டுகள் இந்த மாவு ஆலை பயன்பாட்டில் இருந்து வந்தது. 1965ம் ஆண்டு இதன் உரிமையாளர் வில்ஹெல்ம் வான் ரெயின் காலமான பின்னர் இந்த டெ வாக் விண்ட்மில் அருங்காட்சியகமாக உருபெற்றது.
Inline image 5
ஆறு தளங்களில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது. உள்ளே நுழைந்தால் முதலில் வருவது அலுவலகம். அங்குக் கட்டணம் செலுத்தி விட்டு டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு ஒவ்வொரு தளமாக மரப்படிகளில் ஏறிச் சென்று இதனை முழுமையாகக் காணலாம். முதல் தளத்தில் நல்லதொரு தங்கும் விடுதி அறை போல ஒரு அறை அமைந்திருக்கின்றது. ஒரு விண்ட்மில்லின் உள்ளே இருக்கின்றோம் என்ற சிந்தனையே எழாதவாறு இந்தத் தளத்தின் அமைப்பு அமைந்துள்ளது. மேசை நாற்காலிகள், சுவர் சித்திரங்கள், அதன் உரிமையாளரின் பழைய புகைப்படங்கள் என இங்குள்ள அனைத்துமே இத்தகைய சிந்தனையை எழுப்புவதாக உள்ளன.
Inline image 4
அடுத்தடுத்த தளங்களில் இந்த அருங்காட்சியகத்தில் மாவு அரைக்கப் பயன்படுத்தப்பட்ட கல் இயந்திரங்கள், மற்றும் பல கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இப்படியே படிப்படியாக விளக்கக்குறிப்புக்களை வாசித்துக் கொண்டே ஆறாவது தளத்தைக் கடந்து சென்றால் விண்ட்மில் காற்றாடி இருக்கும் தளத்தின் வெளிப்புறத்திற்கு அங்குள்ள கதவினைத் திறந்து அதன் வழியே வரலாம். வெளியே நின்று காற்றாடியின் முழு பரிமாணத்தையும் மிக அண்மையில் நின்று நாம் காண முடியும். காற்றின் வேகத்தைப் பொறுத்து காற்றாடிச் சுற்றிக்கொண்டிருப்பதை மிக அண்மையில் இருந்தவாறு நாம் பார்த்து ரசிக்கலாம். மேலிருந்து நோக்கும் போது லைடன் நகரையும் கண்களுக்கு எட்டிய தூரம் வரை பார்த்து ரசிக்கலாம்.
நெதர்லாந்து நாட்டிற்கு வருபவர்கள் தவறாமல் சென்று பார்க்க வேண்டிய ஒரு அருங்காட்சியகம் இது என்று சொல்வேன். ஏனெனில் நெதர்லாந்துக்கே சின்னமாகத் திகழும் விண்ட்மில் பற்றிய தெளிவான விளக்கங்களைத் தரக்கூடிய இன்றைக்கு ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அருங்காட்சியகம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.

News

Read Previous

பாலு மகேந்திரா விருது வழங்கும் விழா – 2017

Read Next

தோல் மருத்துவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *