அன்னையர் தினம் மே 13

Vinkmag ad

அன்னையர் தினம் மே 13
———————————————–

நான் அம்மாவின் தலைப்பிள்ளை
எனக்கு பிறகு ஏழாண்டுகள் கழித்துதான் தம்பி…எனவே
அம்மாவின் முழு அன்பையும் பெற்றே வளர்ந்தேன்

அம்மா ஆரம்ப கல்வி கூட பயில வில்லை ஆனால் அறிவு களஞ்சியம்.
எங்கள் கிராமத்தின் எந்த நிகழ்விலும் அம்மாவின் ஆலோசனை இருக்கும்.

நான் பத்தாம் வகுப்பு முதுகுளத்தூரில் முடித்தவுடன் ஒரு ஆசிரியர் இவனை அருப்புக்கோட்டை எஸ் பி கே பள்ளியில் சேர்த்தால் நல்லது என்றதும்..ஐயா எனக்கு தெக்கு வடக்கு தெரியாது ஒங்களுக்கு புண்ணியமா போகும் நீங்களே அவனை சேர்த்து விடுங்க என்று மடிப்பிச்சை கேட்டு சேர்த்து விட்டது இன்னும் நினைவிருக்கிறது…

அம்மாவிற்கு தமிழ் மாதம் தான் கணக்கு அதனால் சில நேரம் மெஸ் பில்லை இரண்டு தரம் கட்ட வந்து விட்டு
ஏப்பா சாப்பிட்டு காசு கொடுக்காட்ட படிப்பு எப்படி வரும் என்று விடுதி வேப்பமரத்தின் கீழ் வெள்ளந்தியாக சிரிக்கும் அம்மாவின் அழகு தனி….

விடுதியில் ஒரு முறை என் அறையில் தங்கியிருந்த நண்பர்கள் அனைவரும் ஒரே சீப்பு வைத்து இருப்பதை பார்த்து அடுத்த மாதம் ஐந்து சீப்புகளோடு அனைவருக்கும் தந்து சுகாதாரத்தை சொல்லாமல் சொல்லிக் கொடுத்த அம்மாவின் பக்குவம் அபாரம்…

விடுமுறையில் கிராமத்திற்கு சென்றால் தட்டில் சோறு போட்டு விட்டு யாரும் கண் வைத்து விட கூடாதென தலைவாசல் கதவை பாதி மூடும் அம்மாவின் அக்கரை ஈடில்லாதது…

2009 ல் ஊர்த்திருவிழாவில் ஊரே நிறைந்திருக்க சென்னை செவிலிய கல்லூரி பல்கலைக்கழக தேர்வால் நான் செல்ல முடியவில்லை…காலை ஏழு மணிக்கு தொலைபேசி ஏம்பா நீ வந்துருவ தான …இல்லம்மா பரீட்சை வரமுடியாது…ஒரு வாரம் கழித்து வருகிறேன்…ஒரு வாரம் கழித்தா என்ற வார்த்தை தான் கடைசி வார்த்தை என்று அப்போது தெரியாது….

பிள்ளை திருவிழாவிற்கு வரவில்லை என்றால் பெத்த மனம் எப்படி தவிக்கும் என்று நான் பின்புதான் தெரிந்தேன்..

வீட்டுக்கும் ரோட்டுக்கும் நடந்து நம்பிக்கையிழந்து துவண்ட அம்மா பத்து மணிக்கு உயிரிழந்தார்.. ஊர்த்திருவிழா நிறுத்தப்பட்டது…

தேர்வை ரத்து செய்து
தெய்வத்தை நோக்கி நானும் சென்றேன்…

அம்மா …

நீ சொல்லிக் கொடுத்தில்

பாதி போதும் எனக்கு…

வாழ்ந்து காட்டினாய் அம்மா..

நீ இல்லாத நமது கிராமத்திற்கு

இப்போது நான் சென்று வருவது

தெய்வமில்லாத ஆலயத்திற்கு

சென்று வரும் உணர்வு எனக்கு..

நான் பிறந்து நாற்பது ஆண்டுகளுக்கு

மேலாகிவிட்டது , ஊரில்

என்னை அறிமுகபடுத்த எனது பெயர்

படிப்பு பதவி ஏதும் தேவையில்லை

அழகம்மாள் மகன் என்ற ஒரு

அடைமொழி போதும்…

உனது

ஓய்ந்து விடாத உழைப்பையும்

ஓங்கி ஒலிக்கும் சிரிப்பையும்

ஒரு சேர பெற்றுக் கொண்டதில்

மட்டற்ற மகிழ்ச்சி அம்மா..

நீ என்னை விட்டு

பிரிந்ததாக நினைக்கவில்லை

காரணம்

நீ தானே அம்மா நான்….

இந்த அன்னையர் தினத்தில்

மட்டுமல்ல என்றென்றும் உனை

வணங்குகிறேன் அம்மா….

பா.திருநாகலிங்க பாண்டியன்

Nursing Tutor

மதுரை

News

Read Previous

மே 12 செவிலியர் தினம்

Read Next

ஆட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *