அணு ஆயுத நாடுகளின் அகம்பாவம்

Vinkmag ad

அறிவியல் கதிர்

அணு ஆயுத நாடுகளின் அகம்பாவம்
பேராசிரியர் கே. ராஜு

கடந்த மார்ச் மாதக் கடைசி வாரத்தில் ஐ.நா. சபை ஒரு சரித்திரம் படைத்தது. 130 நாடுகளிலிருந்து நியூயார்க் வந்திருந்த தூதர்கள் உலகில் அணு ஆயுதங்களைத் தடை செய்யும் ஒரு சர்வதேச ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்கினர். எந்த நாடும் அணு ஆயுதங்களைத் தயாரிப்பது, வைத்திருப்பது, அவற்றைப் பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்துவது எல்லாமே சட்டவிரோதமானது என அறிவிப்பதுதான் அந்த நாடுகளின் உன்னதமான நோக்கம். ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் இந்த ஆண்டு முடிவதற்குள் உலக நாடுகளின் கையெழுத்துக்குத் தயாராகிவிடும்.
இந்தியா, பாகிஸ்தான் உட்பட உள்ள ஒன்பது அணு ஆயுத நாடுகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது எதிர்பார்த்ததுதான். ஆனால் அணு ஆயுத நாடுகள் எண்ணிக்கையில் பலவீனமாக இருப்பது மற்ற நாடுகள் எடுக்கும் முயற்சிக்குக் கைகொடுக்கும் ஒரு சாதகமான அம்சம். பேச்சுவார்த்தை நடைபெற்ற அரங்கத்திற்கு வெளியே ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி ஒரு புறக்கணிப்புக் கூட்டம் நடத்தினார். ஆனால் அவரால் பெரும்பாலும் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சுமார் 20 நாடுகளின் தூதர்களை மட்டுமே ஒன்றுசேர்க்க முடிந்தது.  ஒரு தாயாக, அணு ஆயுதங்கள் இல்லாத உலகைத் தவிர என்னுடைய குடும்பத்திற்கு வேறு எதுவும் விருப்பமானதாக இருக்க முடியாது. ஆனால் தற்போது அணு ஆயுதங்களைத் தடை செய்வது நம்மையும் நமது நேச நாடுகளையும் பாதுகாப்பற்றவையாக ஆக்கிவிடும் என்று அவர் ஒரு வெற்று ஆரவார உரை நிகழ்த்தினார். எல்லா நாடுகளுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பினை வழங்கிட அவர் தயாராக இல்லை. ஒரு நாட்டுக்கென பிரத்தியேக உரிமை அல்லது சலுகைக்கான மொழிக்கு இன்றைய உலகில் இடமே இல்லை என நிக்கி ஹேலியின் கூற்றை தன்னையறியாமல் இந்தியாவுக்கான தூதர் கிழித்துத் தொங்கவிட்டது ஒரு நகைமுரண்தான். அணு ஆயுதங்கள் தடை குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது அனைத்து நாடுகளுக்கும் சமமான பாதுகாப்பு வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவே. அணு ஆயுத ஆபத்திலிருந்து மனிதர்களை விடுவிக்க வேண்டும் என்று அணு ஆயுத நாடுகளை உலகம் பல ஆண்டுகளாக  வலியுறுத்தி வருகிறது. நாடுகள் வைத்திருக்கும் போர்த்தளவாடங்கள் பட்டியலிலிருந்து அணு ஆயுதங்களை அகற்றிவிடுவதற்கான திட்டத்தை வகுத்திட வேண்டும் என்பதுதான் 1946ஆம் ஆண்டில் ஐ.நா. நிறைவேற்றிய முதல் தீர்மானம். அளவிட முடியாத அளவுக்கு உயிரிழப்புகளையும் துயரங்களையும் அணு ஆயுதங்கள் ஏற்படுத்தக்கூடியவை என்பதை வரலாறு நமக்குத் தெளிவாகவே போதித்திருக்கிறது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பனிப்போர் நடந்துவந்த காலத்தில் உலகம் வாழ்வா, சாவா என்ற யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் அணு ஆயுதங்கள் தவிர்க்க இயலாத தீமை என்று அவ்விரு நாடுகளும் வாதிட்டு வந்தன. உலகமே இரு முகாம்களாகப் பிரிந்து நின்று பேரழிவுக்குப் பதிலடி மற்றொரு பேரழிவுதான் என்ற நெருக்கடி உலகினைப் அப்போது பயமுறுத்திக் கொண்டிருந்தது.
பனிப்போர் முடிவுக்கு வந்தபிறகு ஒரு புதிய தொடக்கம் நிகழும் என உலகம் நம்பிக்கையோடு காத்திருந்தது. ஒரு கட்டத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதன் சட்டபூர்வ நிலை குறித்து தீர்ப்பு வழங்குமாறு சர்வதேச நீதிமன்றத்தை ஐ.நா. கேட்டுக் கொண்டது. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது அல்லது அவற்றைக் கொண்டு அச்சுறுத்துவது, ஆயுத மோதல்களின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சர்வதேசச் சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றம் 1996 ஜூலையில் கருத்துத் தெரிவித்தது. தீர்ப்பு அளிக்கப்பட்ட பிறகு கடந்து சென்ற 20 ஆண்டுகளில் அணு ஆயுத நாடுகள் அந்த தீர்ப்பினை அமுல்படுத்தாதது மட்டுமல்ல, அணு ஆயுதங்களை நவீனப்படுத்துவது, மேலும் மேலும் பல ஆயுதங்களைச் சேகரிப்பது என நேர் எதிர்திசையிலேயே பயணித்து வந்திருக்கின்றன.
அணு ஆயுதங்கள் இல்லாத நாட்டினரும் உலக சமாதான இயக்க ஆர்வலர்களும் தங்கள் பணியை அடிப்படையிலிருந்து தொடங்கினர். அணு ஆயுதங்கள் விளைவிக்கப் போகும் பேரழிவைப் பற்றிய பிரச்சாரத்தைத் தொடங்கினர். உலகின் பெரும்பாலான நாடுகளின் ஆதரவு இயல்பாகவே இந்த இயக்கத்திற்குக் கிடைத்தது. 2014ஆம் ஆண்டு வியன்னாவில் நடந்த மாநாட்டில் 158 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அணு ஆயுதங்களைத் தடை செய்து அவற்றை முற்றாக ஒழிக்கும் நிலை குறித்த சர்வதேச ஒப்பந்தம் வேண்டும். அது அனைத்து நாடுகளையும் சட்டரீதியாகக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஐ.நா. நிறைவேற்றியது. ஆனால் அமெரிக்கா தலைமையிலான அணு ஆயுத வல்லரசுகள் அசைந்து கொடுக்கவில்லை. அணு ஆயுதங்களைக் கைவிடும் முடிவை தாங்களாகவே எடுக்கும்வரை காத்திருக்கும்படி அவை ஐ.நா.வைக் கேட்டுக் கொண்டன. அந்த நாள் என்றுமே வரப்போவதில்லை என மற்ற நாடுகளுக்குத் தெரியும். அடிமைகளை வைத்திருந்த நாட்டு எஜமானர்கள் எல்லாம் முடிவு செய்யும்வரை காத்திருக்க நேர்ந்திருந்தால் அடிமை சமுதாயம் என்றாவது முடிவுக்கு வந்திருக்குமா? இதை நன்கு உணர்ந்துகொண்ட அணு ஆயுதங்களற்ற நாடுகள் விஷயத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டன. அவை எடுத்துவைத்துள்ள முதல் அடிதான் அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் குறித்த நியூயார்க் தீர்மானம். வேதியியல் ஆயுதங்கள், உயிரியல் ஆயுதங்கள் வரிசையில் அணு ஆயுதங்களையும் சட்டரீதியாகத் தடை செய்துவிடவேண்டும் என்ற திசையில் அவை உறுதியாக முன்னேறத் தொடங்கியுள்ளன.
அணு ஆயுதங்களை முற்றாக அழிப்பதற்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணு ஆயுத நாடுகள் முன்வராவிட்டால் மற்ற நாடுகளின் கடுமையான எதிர்ப்பையும் சர்வதேசச் சட்டத்தை மதியாதவர்கள் என்ற கண்டனத்தையும் அவை சந்திக்க வேண்டியிருக்கும்.
(உதவிய கட்டுரை : ஏப்ரல் 13 அன்று தி இந்து ஆங்கில நாளிதழில் ஜியா மியான், எம்வி.ரமணா எழுதிய

News

Read Previous

பளபளக்கும் சருமத்திற்கு….

Read Next

முதுகுளத்தூரில் கலப்படம், காலாவதி பொருட்கள் விற்பனை அமோகம் கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *