அணு ஆயுதங்களற்ற உலகை நோக்கி…

Vinkmag ad

அறிவியல் கதிர்

அணு ஆயுதங்களற்ற உலகை நோக்கி…
பேராசிரியர் கே. ராஜு  

கடந்த 10 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அணு ஆயுதங்களற்ற உலகு என்ற உன்னத நோக்கத்திற்காக இந்த ஆண்டின் நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன் 2009-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு இப்பரிசு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு  அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்ற சர்வதேசப் பிரச்சாரக் குழுவிற்கு (International Campaign to Abolish Nuclear Weapons – ICAN) அளிக்கப்பட்டிருக்கிறது. அணு ஆயுதங்களின் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஐகேன் அமைப்பு சோர்வின்றி செயல்பட்டு வருகிறது. 1945 ஆகஸ்டில் ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகள் விளைவித்த பேரழிவை – மனிதகுல வரலாற்றில் குத்தப்பட்ட கரும்புள்ளியை – யாரால் மறக்க இயலும்? அன்று குண்டுவீச்சில் உடனடியாக இறந்தவர்கள் பாக்கியசாலிகள். உயிர் பிழைத்தவர்கள் புற்று நோய் வந்து அணுஅணுவாக சித்திரவதைப்பட்டு குரூர மரணம் அடைந்தனர். அங்கே குழந்தைகள் பல ஊனங்களுடன் பிறப்பது இன்று வரை நீடிக்கிறது.
இந்த வரலாறு மீண்டும் ஒரு முறைகூட திரும்பக்கூடாது என்ற நற்சிந்தனை உள்ள பல நாடுகள் உலகிலிருந்து அணுஆயுதங்களை முற்றாக ஒழித்துவிட வேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டுள்ளன. அதைப் பிரதிபலிக்கும் வகையில் ஐகேன் அமைப்பின் முன்முயற்சியினால் ஐ.நா. பொதுக்குழுவில் அணுஆயுதங்கள் தடை பற்றிய ஒப்பந்தம் 2017 ஜுலை 7 அன்று நிறைவேற்றப்பட்டது. 122 நாடுகள் ஆதரவு அளித்தன.  நெதர்லாந்து எதிர்த்து வாக்களித்தது. சிங்கப்பூர் வாக்களிக்கவில்லை. முன்னர் அணு ஆயுதங்களை வைத்திருந்து பின்னர் தாமாகவே அவற்றைத் துறந்துவிட்ட தென்அமெரிக்காவும் கஜகஸ்தானும் தீர்மானத்தை ஆதரித்தன. ஈரானும் சவூதி அரேபியாவும் கூட ஆதரித்தன. அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள், நேட்டோ நாடுகள் உட்பட மொத்தம் 69 நாடுகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. “செம்மறி ஆடுகள் எல்லாம் கூடி எல்லாப் பிராணிகளும் சைவத்திற்கு மாற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின. ஆனால் அந்தக் கூட்டத்தில் புலிகள், ஓநாய்கள், சிங்கங்கள் எல்லாம் கலந்து கொள்ளவில்லை” என்று ஒரு கதை சொல்வார்கள். உலக நடப்பும் அப்படித்தானே இருக்கிறது?
அணு ஆயுதப்பரவல் தடையை ஆதரிப்போருக்கு இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதே பரவசம் அளிக்கும் தருணம்தான். ஆனால் இந்த பரவசத்துடன் அவர்கள் நின்றுவிடக் கூடாது. இந்தத் திசையில் மேற்கொண்டு முன்னேற்றம் ஏற்பட அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கத் தேவையான அடுத்தடுத்த நடவடிக்கைகளில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் தடை ஒப்பந்தம் ஒரு தார்மீக வெற்றி என்ற அளவோடு நின்று விடும்.
அணுஆயுதப் போர் மனிதர்களுக்கு விளைவிக்கும் தாங்கொணா துயரங்களைத் தவிர்க்க அணு ஆயுதங்கள் பயன்பாட்டை சட்டவிரோதமாக ஆக்கவேண்டுமென இந்த ஒப்பந்தம் கோருகிறது. 2009-ல் ஒபாமாவுக்கு பரிசு அளிக்கப்பட்ட பிறகு அணுஆயுத ஆபத்து அதிகரித்திருக்கிறது என்பது ஒரு நகைமுரண். பல நாடுகளின் அணுஆயுத படைபலமும் கூடியிருக்கிறது. சதாம் உசேன் மாதிரி ஏமாளியாக இருந்து அமெரிக்காவின் கைகளில் சிக்கி மடிய கிங் ஜாங் உன் தயாராக இல்லை. அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையேவோ இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேவோ பரஸ்பர அச்சுறுத்தல்களும் சவால்களும் இல்லாத நாளோ இருப்பதில்லை.
அணுஆயுத ஆபத்தை எதிர்நோக்கும் நாடுகளுக்கு தற்காப்புக்காக அணுஆயுதங்களை தாங்களும் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாகவே இருக்கிறது. உதாரணமாக, தென்கொரியாவில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டபோது 60 சதவீத மக்கள் வடகொரியாவிலிருந்து வரும் ஆபத்தை எதிர்கொள்ள தென்கொரியாவும் அணு ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தனர். அணுஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், சீனா, வடகொரியா போன்ற நாடுகள் தங்களது அணுஆயுத பலத்தை நவீனப்படுத்துவதில் முனைந்துள்ளன. இம்மாதிரியான போக்குகள் அணுஆயுதத் தடை ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவேண்டும் என விரும்புவோருக்கு சவால்களாக இருக்கின்றன.
தற்காப்புக்காக  என்ற காரணத்தைச் சொல்லி எல்லையற்ற விதத்தில் அணுஆயுத நாடுகள் தங்கள் படைபல சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொண்டே போவதை தடை ஒப்பந்தத்திற்கு ஆதரவானோர் வலிமையாக எதிர்க்க வேண்டும். அணுஆயுதமற்ற நாடுகளில் பாதுகாப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைக் குறைக்க உதவும் கொள்கைகளையும் நடைமுறைகளையும் அவர்கள் ஊக்குவிக்க வேண்டும். அணுஆயுதங்களைத் தடை செய்ய வேண்டும் என்போருக்கும் தற்காப்புக்காக அணுஆயுதங்களை வைத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்போருக்கும் இடையே உள்ள பொதுத்தளத்தை விரிவுபடுத்தி பயணிக்க வேண்டிய சவாலான பாதை சமாதான ஆர்வலர்கள் முன் நீண்டு நெடிதாகக் கிடக்கிறது.
இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம்,
             (உதவிய கட்டுரை : அக்டோபர் 16 ஆங்கில இந்து நாளிதழில் டோபி டால்டன் எழுதிய கட்டுரை)

News

Read Previous

தீபாவளி வாழ்த்துகள்!

Read Next

எஸ். ராமகிருஷ்ணனுடன் கலந்துரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *