அணுவிலிருந்து ஆற்றல்

Vinkmag ad

2006-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை.. மீண்டும் உங்கள் முன்

அணுவிலிருந்து  ஆற்றல்

ஒவ்வொரு பொருளும் அணுக்களால் ஆனது என்று நமக்குத் தெரியும். அணுவைப் பிளக்க முடியாது என்றே விஞ்ஞானிகள் கருதி வந்தனர். பின்னர், பிளக்க முடியும் என்பது மட்டுமல்ல, அப்படி பிளக்கும்போது ஏராளமான சக்தி வெளிப்படும் என்பதும் சென்ற நூற்றாண்டில் நடந்த இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.  பொருள் அழியும்போது வெளிப்படும் சக்தி எவ்வளவு என்பதை ஐன்ஸ்டீனின்  E = mc2  என்ற சமன்பாடு தெளிவாக்குகிறது. இங்கு E என்பது சக்தியையும், m என்பது பொருளின் எடையையும், c என்பது ஒளியின் வேகத்தையும் குறிக்கும். ஒளியின் வேகம் நொடிக்கு 300,000 கிலோ மீட்டர்கள். எனவே, சிறு துகள் அளவு பொருள் அழிந்தாலும் ஏராளமான சக்தி வெப்பமாகவும் கதிர்வீச்சாகவும் வெளிப்படும்.

யு-235 என்ற யுரேனியம் அணுவின் கரு மீது ஒரு நியூட்ரான்  மோதும் போது யுரேனியம் அணு கிரிப்டான், பேரியம் என்ற இரு துகள்களாகப் பிரிகிறது. கூடவே, மூன்று நியூட்ரான்களும் வெளியிடப்படுகின்றன. இந்த அணுப்பிளவின்போது (nuclear fission) இறுதியில் கிடைக்கும் துகள்களின் எடை, யுரேனியம்  அணுவின் எடையைவிட சற்றே குறைவாக இருக்கிறது. இந்த காணாமல் போகும் எடையே சக்தியாக மாறுகிறது. இலக்கு கரு (Target nucleus)   என்பது இப்படி இரு கூறாகப் பிளக்கக் கூடிய யுரேனியம், புளூட்டோனியம், தோரியம் போன்ற பொருட்களின் அணுக்களைக் குறிக்கிறது. பிளவுக்குப் பிறகு கிடைக்கும் மூன்று நியூட்ரான்களில் ஒவ்வொன்றும் இன்னொரு இலக்கு கரு மீது மோதினால் இறுதியில் 9 நியூட்ரான்கள் கிடைக்கும்  அல்லவா? அந்த 9 நியூட்ரான்களில் ஒவ்வொன்றும் இன்னொரு இலக்கு கரு மீது மோதினால்…? கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த  அணுப்பிளவுகள் நடப்பதற்கு சங்கிலித் தொடர் மாற்றம் (chain reaction)  என்று பெயர். ஓர் அணுகுண்டு வெடிக்கும்போது இதுதான் நடக்கிறது. இது மனிதகுலத்தை அழிப்பதற்கான பாதை. நொடிப் பொழுதில் இலட்சக்கணக்கான மனிதர்களைக் கொன்று குவிக்கக் கூடிய பயங்கரமான ஆயுதமே அணு குண்டு. மனிதனை அழிக்க மனிதன் கண்டுபிடித்த ஆயுதங்களிலேயே கொடுமையானது. 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 தேதிகளில் ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் போடப்பட்ட அணுகுண்டுகள் விளைவித்த நாசத்தை மனிதகுலம் மறக்க முடியாது. மன்னிக்கவும் முடியாது.

அணுசக்தியை அடக்கி வாசித்தால்..

மேற்கண்ட செயலைக் கட்டுப்படுத்தி ஆற்றலை வெளிப்படுத்த வைக்கும்போது மின் உற்பத்தி போன்ற ஆக்க பூர்வ பலன்களையும் அணுசக்தியிலிருந்து பெறலாம். நெருப்பினை அளவோடு பயன்படுத்தினால் சமையலுக்குப் பயன்படுத்தலாம் ; அளவுக்கு அதிகமாக நெருப்பு பரவினால், அது ஒரு வீட்டினையோ, ஊரையோ கூட அழித்துவிடுமல்லவா, அது போல என இதைப் புரிந்து கொள்ளலாம்.

நிலக்கரி ஆலையில் நிலக்கரி எரிபொருளாக இருக்கிறது ; பெட்ரோல்-டீசலினால் இயக்கப்படும் நிலையத்தில் பெட்ரோல்-டீசல் எரிபொருளாக இருக்கிறது ; அது போல, அணு உலையில் யுரேனியம் (அல்லது தோரியம் அல்லது புளூட்டோனியம்-239) எரிபொருள். மற்றபடி வெளிப்படும் வெப்பசக்தியைக் கொண்டு நீரைக் கொதிக்க வைத்து நீராவியின் சக்தியைப் பயன்படுத்தி டர்பைன்களைச் சுழலவிட்டு மின்சாரம் தயாரிப்பது என்ற நடைமுறை இவைகளுக்கெல்லாம் பொதுவானது. வெப்பசக்தியை எப்படி உருவாக்குவது என்பதில் மட்டுமே வித்தியாசம்.

ஒரே அணுவில் நியூட்ரான்களின் எண்ணிக்கை வித்தியாசமாக இருப்பின் கருவின் எடையும் வேறுபடும். உதாரணமாக யுரேனியம் கருவில் நியூட்ரான்கள், புரோட்டான்கள் இரண்டும் சேர்ந்து 235 எடையளவும் 238 எடையளவும் உள்ள இரண்டு அணுக்கள் உள்ளன. இரண்டுமே அணு எண் 92 உள்ள ஒரே அணுதான். இரண்டிற்கும் யுரேனியத்தின் ஐசடோப்புகள் என்று பெயர். இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் இந்த யு-235    ஐசடோப்  0.7% அளவே உள்ளது. மீதி 99%-க்கு மேல் யு-238  ஐசடோப் உள்ளது. இதில் யு-235 மட்டுமே அணுப்பிளவின் காரணமாக சக்தியை வெளிப்படுத்தக் கூடியது என்பதால், இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்திலிருந்து யு-238 ஐப் பிரித்து அகற்றி  யு-235 இன் அளவைக் கூட்டிக் கொண்டே வர வேண்டியுள்ளது. இந்த நடைமுறைக்கு செறிவூட்டுதல் (enrichment)) என்று பெயர்.  2% அல்லது 3%   செறிவூட்டினாலே சிவில் அணு உலைக்குப் போதுமானது ; அணு ஆயுதம் தயாரிக்க வேண்டுமெனில், 90%-க்கு மேல் செறிவூட்ட வேண்டும். ஆக, ஒரு அணு உலை மின்சாரம் தயாரிக்கிறதா, அணு குண்டு தயாரிக்கிறதா என்பது யுரேனியம் எந்த அளவுக்கு செறிவூட்டப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தது.

அணு உலையிலும் விபத்துகள் நடந்திருக்கின்றன. எனவே அந்த ஆபத்து பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

News

Read Previous

சந்தன தமிழறிஞர்

Read Next

விட்டுக் கொடுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *