அடையாளம்

Vinkmag ad

அடையாளம்

 

 

  1. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் & மனநல ஆலோசகர்

 

அடையாளம்

வாழ்வியல் பட்டறையில் அதிகம் அலசப் படும் ஒரு ஆய்வு ‘உங்கள் வாழ்வின் மகிழ்ச்சிக்கு நீங்கள் யாரை முன் மாதிரியாக எடுத்துக் கொள்வீர்கள்’ என்பதுதான்.

அதில் முக்கியமாக கேட்கப் படும் கேள்விகள்…

1- நல்ல ஒரு நிறுவனத்தில் சேர்ந்து கடினமாக உழைத்து படிப்படியாக உயர் பதவிக்கு வருபவர்கள்

2- சொந்தமாக வியாபாரம் செய்து கஷ்ட நஷ்டங்களைத் தாண்டி ஒரு தொழில் நிறுவனத்தை உருவாக்குபவர்கள்

3- தனி வீட்டில் வாழ்பவர்கள் 

4- அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்பவர்கள்.

இப்படி எதிரும் புதிருமான பல விஷயங்களைக் குறிப்பிட்டு பதில்களை எழுதச் சொல்வார்கள்.

இதில் எது சரியான பதிலாக இருக்கக் கூடும் என நீங்கள் கருதுகிறீர்கள். உங்களுக்கு தெரியுமா. இதில் எதையுமே சரியானதென்று குறிப்பிட்டு சொல்ல முடியாது என்பதே சரியான பதில்.

உண்மையில் மகிழ்ச்சி எதில் உள்ளது என்பது எல்லோருக்கும் பொதுவானது அல்ல. மகிழ்ச்சியாக இருப்பது என்றால் இப்படியெல்லாம் அல்லது இவையெல்லாம் இருக்க வேண்டும் எனும் சமுகத்தின் பொதுவான கோட்பாடே பெரும்பாலானோரை தாங்கள் தோற்று விட்டதாக நினைக்க வைக்கிறது.

அனைவருக்குமே தான் எப்படி இருக்க வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்று ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். சிலருக்கு சொந்தமாக வியாபாரம் செய்ய பிடிக்கும். சிலருக்கு பெரிய நிறுவனத்தில் வேலை செய்யப் பிடிக்கும். அவரவர்களின் விருப்பத்தைப் பொறுத்து அவர்கள் அதில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இது தான் மகிழ்ச்சியான வேலை என்று பொதுவாக ஒன்றை  நிர்ணயிக்க முடியாது அது ஒருவரின் மனநிலையைப் பொறுத்தே இருக்கிறது. 

பொதுவாக இன்றைய காலத்தில் வரையறுக்கப் பட்ட சில விஷயங்களே வாழ்க்கையின் வெற்றியாகவும், மகிழ்ச்சி தரக் கூடியவையாகவும் வலிந்து திணிக்கப் படுகின்றன. மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் படும் விஷயங்கள் உங்களை அறியாமலேயே உங்கள் ஆழ்மனதில் பதிந்து நீங்களும் அதுதான் சரி என்று நினைக்கத் தொடங்கி விடுகிறீர்கள். இந்த மாயையில் விழாமல் தற்காத்துக் கொள்ளவில்லை என்றால் உங்கள் வாழ்க்கையை, உங்களுக்காக, நீங்கள் விரும்பியபடி மகிழ்ச்சி மிக்கதாக வாழ முடியாமல் போய் விடும்.

உங்களுக்கு வெகு அத்தியாவசியமாகத் தேவைப் படும் ஒன்று வேறு ஒருவருக்கு எந்த பிரயோஜனமும் இல்லாததாக இருக்கக் கூடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதேபோல் இன்னொருவருக்குத் தேவையான ஒரு பொருளால் உங்களுக்கு எந்த உபயோகமும் இல்லாமல் இருக்கலாம்.

வாழ்வியலையும் சூழலையும் பொறுத்தே எந்த பொருளும் அத்தியாவசியமானதாகவோ அனாவசியமானதாகவோ ஆகிறது. முதலில் உங்கள் தேவை என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வற்றாத நதிக்கரையில் வாழும் மக்களுக்கு நீச்சல் குளங்களால் என்ன பயன் இருக்கப் போகிறது.

இன்று பெரும்பாலானவர்கள் தங்களின் வாழ்வியல் சூழல் கொண்ட தேவைகளைத் தேடாமல் விளம்பரங்களைப் பார்த்தும் மற்ற மனிதர்களைப் பார்த்தும் தங்களிடம் உள்ளவற்றை ஒப்பிட்டு யாரோ ஒருவரின் அடையாளத்தை தங்கள் அடையாளமாக்கத் துடிக்கிறார்கள். இவர்களுக்கு, தங்களுக்கு என்ன தேவை என்ற தெளிவான பார்வை இருக்காது. அதன் காரணமாகவே அவர்கள் வேண்டியது கிடைத்தாலும் அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. ஏனென்றால் உண்மையில் அது அவர்களின் தேடலோ விருப்பமோ அல்ல. அது மற்றவரை பார்த்து அது போல் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற கண் ஆசை மட்டுமே. 

அதே சமயம் உங்கள் தேவைகள் என்ன என்பதை புரிந்து கொண்டு அவற்றை அடைவதற்கான கால அளவுகளையும் ஓரளவு கணித்து அதற்கான முயற்சிகளையும் மகிழ்ச்சியாக அனுபவித்து செய்து கொண்டிருந்தீர்கள் என்றால் உங்கள் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் ஏறுமுகமாகவே இருக்கும். உங்கள் வாழ்வியல் முறையை மேம்படுத்தும் செயல் என்பது ஒரு செடி மரமாவதைப் போல் இருக்க வேண்டும். அது ஒரு இயல்பான வளர்ச்சி. 

மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உங்கள் வாழ்க்கை முறைக்கு என்ன தேவை உங்கள் நடைமுறைக்கு எது சாத்தியம் என்ற தெளிவான சிந்தனையே  விரயமற்ற நிறைவான மகிழ்ச்சி தரும்.

அது ஸ்பெயின் நாட்டின் தெற்கு மூலையில் உள்ள ஒரு அழகிய கடற்கரை கிராமம். அங்கு பிடிக்கப் படும் இறால் மீன்கள் சுவைக்குப் பேர் பெற்றவை. ஒரு நாள் அங்கு ஒரு அமெரிக்க வங்கி அதிகாரி விடுமுறையை கழிப்பதற்காக வருகிறார். அந்த கிராமத்தின் அழகும் அமைதியும் அவரது மனதிற்கு மிகவும் இதமாக இருக்கிறது. 

இத்தனை காலம் வேலைப் பளுவால் ஏற்பட்டிருந்த மன அழுத்தமும் சோர்வும் ஓரிரு நாட்களிலேயே விடை பெற்றுச் செல்ல மனதில் நிம்மதி பரவுகிறது. அமைதியாக விடியும் அந்த கிராமத்தின் அழகைப் பருகியபடி தினமும் மதிய வேளைகளில் அங்குள்ள கடற்கரைக்குச் சென்று மீன் பிடிக்கச் சென்ற படகுகள் திரும்ப வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது அவருக்கு ஒரு விசயம் வினோதமாகப் படுகிறது. அது என்னவென்றால் ஒவ்வொரு நாளும் அந்த மீனவர்கள் பிடித்துக் கொண்டு வரும் மீன்களின் அளவு சற்றேரக்குறைய ஒரே அளவாகவே இருக்கிறது. ஆச்சர்யம் அடையும் அவர், ஒரு நாள் அங்கு வரும் மீனவர்களில் ஒருவரிடம் தனது சந்தேகத்தைக் கூறி விளக்கம் கேட்கிறார்.

அதற்கு அந்த மீனவர் அந்த கிராமத்தில் இருக்கும் மீனவர்கள் காலையில் மீன் பிடிக்கச் சென்று விட்டு மதியத்திற்குள் திரும்பி விடுவார்கள் என்றும் அன்றைய தேவைக்கான அளவு போக அதிகம் மீன்கள் வலையில் மாட்டினால் அவற்றை மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார்கள் என்றும் கூறுகிறார். மேலும் மதியத்திற்கு மேல் Siesta எனப்படும் ஒரு சிறு ஓய்வு எடுத்துக் கொண்டு பின் மாலையில் நண்பர்கள் குடும்பத்தினருடன் கலந்துரையாடிப் பொழுது போக்குவார்கள். இதுதான் காலங்காலமாக இங்குள்ள வாழ்வு முறை என்று கூறுகிறார். புதிருக்கான விடை இன்னுமொரு புதிரை வினாவாக்கிச் செல்கிறது.

மீனவரின் பதிலால் மேலும் ஆச்சரியமடைந்த அந்த வங்கி அதிகாரி அந்த மீனவரிடம். மேலதிக மீன்களை ஏன் மீண்டும் கடலில் விடுகிறீர்கள். அவற்றை ஏற்றுமதி செய்தால் அதிகம் சம்பாதிக்கலாமே என்று வினவுகிறார்.

அதிகம் பணம் சேர்த்து என்ன செய்வது என்று அந்த மீனவர் கேட்க, இன்னும் பல படகுகள் வாங்கலாம். அதன் மூலம் இன்னும் அதிகமான மீன்களைப் பிடிக்கலாம். அவற்றை ஏற்றுமதி பண்ண ஒரு நிறுவனம் ஆரம்பிக்கலாம். அதன் மூலம் நிரந்தரமான வருமானத்தை ஏற்பாடு செய்து விட்டு நிம்மதியாக நண்பர்கள் குடும்பத்தினருடன் ஜாலியாக பொழுதைக் கழிக்கலாம் என்று கூறுகிறார்.

அதைக் கேட்டு சிரிக்கும் மீனவர். அதைத்தானே இப்போது செய்து கொண்டிருக்கிறேன் என்று கூற அந்த வங்கி அதிகாரி பேச்சற்றுப் போகிறார்.

ஒரே விதமான பொருட்களோ, ஒரே விதமான வாழ்க்கை முறையோ அனவருக்கும் பொருந்தாது. அதே சமயம், எந்த ஒரு வாழ்வியல் முறையும் மற்றொன்றை விட உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. ஒவ்வொன்றும் அதனதன் வகையில் அதற்கான சிறப்புக்களைப் பெற்றிருக்கிறது. உண்மையில் உங்களுக்கானதல்லாத ஒன்று யாரோ ஒருவரிடம் இருக்கிறது என்பதற்காக அதை அடைவது உங்கள் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யாது. எத்தனை கடினமான முயற்சிகள் செய்து நீங்கள் அதை அடைந்தாலும் அதனால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. உங்கள் மனம் உங்கள் உண்மையான விருப்பத்திற்கே மகிழ்ச்சி கொள்கிறது. அதுவே ஆத்ம திருப்தி தருகிறது. 

 

எந்த ஒன்றையும் அது கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்குமே எனும் ஏக்கம் எழும் போது, அது இல்லாமல் உங்களிடம் இருப்பது எதுவுமே மகிழ்ச்சி தரவில்லையா என உங்கள் மனதிடம் எதிர் கேள்வி கேளுங்கள். இப்படி ஏங்கி கிடைத்தவற்றின் மகிழ்ச்சி எத்தனை நாள் நீடித்தது என சிந்தித்து பாருங்கள். மகிழ்ச்சி என்பது எங்கோ இல்லை என்பதை புரிந்து கொள்வீர்கள்.

 

எந்த சூழலிலும் மகிழ்ச்சியான மன நிலைக்கான ஆலோசனைகளையும் யுக்திகளையும் விரிவாக தெரிந்து கொள்ள,, watch dr.Fajila Azad, International Lifecoach & Hypnotist on her youtube channel. Kindly click the given link. Like, share & Subscribe for her daily uploads. 

https://www.youtube.com/FajilaAzad

https://www.instagram.com/fajilaazad.dr/

https://www.facebook.com/FajilaAzad.dr/

News

Read Previous

சத்தியம் [Ethics] என்பதற்குத் தமிழ்ச்சொல்

Read Next

கோடரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *