அடுத்தவர் நகலாய் மாறி விடாதீர்கள்!*

Vinkmag ad

அடுத்தவர் நகலாய் மாறி விடாதீர்கள்!*

ஒரு தாயிற்கும் தந்தைக்கும் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு இருந்தால் கூட அவர்கள் குழந்தைகளில் ஒன்றைப் போலவே எல்லா விதங்களிலும் இன்னொரு குழந்தை இருக்க முடியாது” என்று உயிரியல் விஞ்ஞானி ஒருவர் எழுதியிருந்தார்.

இறைவனின் சிருஷ்டிகளில் தான் என்னவொரு அற்புதம் இது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.
ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி அற்புதம். கடந்து சென்ற கோடானு கோடி காலங்களிலும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் பிறந்ததில்லை. இனி வரப் போகும் கோடானு கோடி காலங்களிலும் உங்களைப் போன்ற மனிதன் பிறக்கப் போவதில்லை. இறைவனின் படைப்பில் நகல்கள் இல்லை. எல்லாம் தனித்தன்மை வாய்ந்த அசல்களே. ஆனால் மனிதர்கள் அசல்களாக வாழ்ந்து பிரகாசிப்பதற்கு பதிலாக நகல்களாக வாழ்ந்து பொலிவிழந்து போகும் கொடுமை தான் எல்லா இடங்களிலும் அதிகம் நடக்கிறது.

நம்மில் பெரும்பாலோருக்கு வெற்றிகரமான ஆட்களைப் போலவே நடந்து கொள்ள ஒரு உந்துதல் இருக்கிறது. முடிந்தால் அவர்களைப் போலவே ஆகி விடவும் முயற்சிக்கிறோம்.

சார்லி சாப்ளினை அறியாதவர்கள் இருக்க முடியாது. மிகவும் ஏழ்மையிலிருந்து வாழ்க்கையை ஆரம்பித்து உலகப் பெரும் பணக்காரராக ஆனவர் அவர். தெருக்கோடி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு காலப்போக்கில் சினிமாவில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. சினிமா சந்தர்ப்பம் ஏழை சாப்ளினிற்கு கிடைத்தற்கரிய சந்தர்ப்பம். அதைத் தக்க வைத்துக் கொள்ள முதல் சினிமாவில் அந்தக் காலத்தில் கொடிகட்டிப் பறந்த பிரபல சிரிப்பு நடிகரைப் போலவே நடிக்க முயற்சி செய்தார் சார்லி சாப்ளின்.
அந்த சினிமா டைரக்டர் அதைக் கவனித்து சார்லி சாப்ளினை அழைத்து சொன்னார். “நீ அந்த பிரபல நடிகரைக் காப்பி அடிப்பது போலத் தெரிகிறது. எனக்கு அவரைப் போன்ற நடிப்பு தேவை இருந்திருந்தால் நான் அவரையே என் படத்தில் நடிக்க வைத்திருப்பேன். நீ உன்னைப் போல் நடி. அது தான் என் தேவை. இன்னொன்றையும் நினைவு வைத்துக் கொள். நீ என்ன தான் தத்ரூபமாக அந்த நடிகரைப் போல் நடித்தாலும் நீ அவரின் நகலாகவும், இரண்டாம் தரமாகவும் தான் இருக்க முடியும். நீ உன் நடிப்பில் தான் அசலாகவும், முதல் தரமாகவும் இருக்க முடியும்”
அந்த அறிவுரை சார்லி சாப்ளினிற்கு பெரும் ஞானோதயத்தை ஏற்படுத்தியது. அவர் தன் இயல்பான நடிப்பையே அன்றிலிருந்து நடிக்க ஆரம்பித்தார். ஆங்கில சினிமாவில் அவர் ஒரு சகாப்தமாகவே இருந்தார். இன்றும் சினிமா வரலாற்றில் அவருக்குத் தனி இடம் இருக்கிறது.

அப்படி அவர் இடம் பிடிக்கக் காரணம் அடுத்தவர் நகலாகும் முயற்சியை ஆரம்பக் கட்டத்திலேயே அவர் கை விட்டது தான்.

வெற்றியாளர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன. அவர்களிடமிருந்து கடைபிடிக்கவும் நிறையவே இருக்கின்றது. அதற்கென்று யாரும் அவர்களுடைய நகலாகி விட முயற்சிக்கக் கூடாது. ஒருவருடைய நகல் ஆக முயற்சிக்கையில் உங்களுடைய தனித்தன்மையை அழித்தே அதை சாதிக்க வேண்டி இருக்கிறது. அப்படி அந்த தனித்தன்மையை முழுமையாக அழிப்பதும் முடியாத காரியமே. கடைசியில் பாசாங்குகளும், நடிப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தன்னம்பிக்கை நம்மை விட்டு விலக ஆரம்பிக்கின்றது. என்ன தான் முயற்சித்தாலும் அடுத்தவராய் மாறி விட முடிவதில்லை. இயற்கை அதற்கு ஒத்துழைப்பதில்லை. அரைகுறையாய் எப்படியோ மாறி நாம் உண்மையில் என்ன என்பதை அறியாமல் வாழ்வது கொடுமையிலும் கொடுமை.

உலக வரலாற்றின் அனைத்து பெரும் சாதனைகளும் தங்கள் தனித்தன்மைகளை தக்க வைத்துக் கொண்டவர்களாலேயே நிகழ்த்தப் பட்டிருக்கின்றன. அடுத்தவரிலிருந்து வித்தியாசப்படுவது எல்லா சமயங்களிலும் வரவேற்கப்படுவதில்லை. ஏளனமும், கேலியும், கோபமும், வெறுப்பும் தான் பல நேரங்களில் சமகாலத்து சமூகத்தால் காட்டப்படுகின்றன என்ற போதும் அதில் பாதிக்கப்படாமல் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

சமூகம் எல்லோரையும் ஒரே வார்ப்பில் வார்த்தெடுக்க முயலும் முயற்சி சிலரிடம் வெற்றி பெறுவதில்லை. அந்த சிலர் தான் சமூகத்தின் அடுத்த மாற்றத்திற்குக் காரணமாகிறார்கள். எனவே உங்கள் தனித்தன்மையை இழந்து விடாதீர்கள்.

இப்படிச் சொல்கையில் ஒரு மிக முக்கிய கேள்வி பலர் மனதிலும் ஏற்படுவது இயற்கை. “என் தனித்தன்மை எது என்றே எனக்குத் தெரியவில்லையே. நான் அதை எப்படி அறிந்து கொள்வது?”. இதற்குப் பதிலை ஒரு சிறிய கட்டுரையில் அடக்கிவிட முடியாது, ஒரு புத்தகமும் கூட போதாமல் போகும் என்றாலும் சில ஆலோசனைகள் உங்கள் தனித்தன்மையை அறிந்து கொள்ள ஆரம்ப விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடும்.
பல நேரங்களில் நாம் நம்மை அறியாமல் இருக்கக் காரணம் வாழ்க்கையின் அவசர ஓட்டத்தில் நாம் எந்திரமாக மாறி விடுவது தான்.

அந்த ஓட்டத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். அது முடியாவிட்டாலும் ஒரு நாளில் சிறிது நேரத்தையோ, இல்லை ஒரு வார இறுதியில் சில மணி நேரங்களையோ உங்களை அறிவதற்கு அல்லது அலசுவதற்கு ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பாருங்கள். எல்லாம் உண்மையில் திருப்திகரமாக இருக்கிறதா, மற்றவர்களில் இருந்து எங்கேயாவது வித்தியாசப்படுகிறீர்களா, இல்லை வித்தியாசப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று யோசியுங்கள். அந்த பதிலில் கூட உங்கள் தனித்தன்மையின் நூலிழை உங்களுக்குக் கிடைக்கலாம்.

சில சமயம் நம் தனித்தன்மை நம்மை விட மற்றவர்கள் எளிதில் கண்டு பிடித்து விடுவதும் உண்டு. நீங்கள் எதையாவது மற்றவர்களை விட வித்தியாசமாகவும், திறமையாகவும் செய்கிறீர்கள் என்று அவர்கள் நினைத்துப் பாராட்டினால் அதில் கூட உங்கள் தனித்தன்மையின் நூலிழை உங்களுக்குக் கிடைக்கலாம். வித்தியாசமாக எதையாவது செய்தோ, வித்தியாசமாக இருந்தோ அதில் ஒரு நிறைவை நீங்கள் உணர்ந்தீர்களானால் உங்கள் தனித்தன்மையின் நூலிழை உங்களுக்குக் கிடைக்கலாம்.
அப்படிக் கிடைப்பது நூலிழை தான். ஆனால் அதை வைத்து மீதியை நீங்கள் சிறிது சிறிதாக இழுத்துக் கொள்ளலாம். அப்படி உணரும் தனித்தன்மையைக் கௌரவியுங்கள். வளர்த்துக் கொள்ளுங்கள். மெருகேற்றுங்கள். அந்தத் தனித்தன்மை உங்களுக்கு மேலும் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும்.

ஒரு முறை உங்கள் தனித்தன்மையை, திறமையை, வித்தியாசத்தை நீங்கள் தெளிவாக உணர்ந்து விட்டால் அடுத்தவரிடம் இருந்து கற்றுக் கொள்வீர்களே தவிர அவர்களின் நகலாக மாட்டீர்கள். அதற்கு அவசியமும் இருக்காது.

News

Read Previous

இனிக்கும் உறவுகள் என்றும் தொடர்ந்து வர….

Read Next

ஹிரா முதல் இஸ்தான்பூல் வரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *