அஞ்சலி: நீலு திரையை நடிப்பால் நிறைத்தவர்

Vinkmag ad

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23916226.ece

அஞ்சலி: நீலு

திரையை நடிப்பால் நிறைத்தவர்

 எஸ் வி வேணுகோபாலன்

‘கௌரவம்’ படத்தில் ‘மேஜர்’ சுந்தர்ராஜன், நீலு, சிவாஜி கணேசன்.

கொண்டாட்டமான பாங்கில் கேலிச் சித்திரம் வரைய ஏற்றது போன்ற முகவாகு. திரையை நிறைக்கும் பருத்த உடல், அதைவிட கனத்த உடல்மொழி. வசனத்தை உச்சரிப்பதில் ரசனையுடன் கூடிய தனித்துவ பாணி. ஏற்ற கதாபாத்திரம் எதுவும் சோடை போகாத வகையில், மேடை, திரை, சின்னத்திரை ஆகிய மூன்று தளங்களிலும் ஈர்க்கக்கூடிய நடிப்பை வழங்கிவந்த தேர்ச்சிமிக்க கலைஞரான நீலு என்னும் நீலகண்டன் மறைந்துவிட்டார்.

துக்ளக் ஆசிரியர் ‘சோ’ ராமசாமியின் நீண்ட கால நண்பர். விவேக் ஃபைன் ஆர்ட்ஸ் குழுவில் முக்கிய நடிகர். ‘நேர்மை உறங்கும் நேரம்’ எனும் நாடகத்தில் நீலு முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்தார். மாநில முதல்வரின் திடீர் மரணத்தை மறைத்து, தோற்றத்தில் அவரைப் போலவே இருக்கும் பேட்டை ரவுடி நீலுவை முதல்வராகத் தொடர வைத்துவிடுவார் கட்சியின் செயலாளர் சோ. முதல்வராக இருக்கையில் இலக்கணத் தமிழ், பேட்டை ரவுடியாகச் சென்னைத் தமிழ் என ‘இரட்டை’ பரிமாணத்தில் வெளுத்துக் கட்டினார்.

“யோவ் உனக்கு நல்ல ராசியான ஜாதகம்… அன்னிக்கு சட்டமன்றத்தில நீ பாட்டுக்குத் தூங்குற, ‘தலைவர் சிந்தனையில் இருக்காருப்பா’ அப்படின்றான். ஒரு கூட்டத்துல நீ உளறினே… ஆனா ‘தலைவரு தத்துவம் சொல்றாருன்றான்’…” என்று சோ, அந்த நாடகம் முழுவதும் அடிக்கும் நக்கல்களுக்குக் கச்சிதமான நடிப்பை வழங்கினார்.

விரிவடையும் நகைச்சுவை

திரையில் கள்ளத்தனம் துளியுமின்றி, குழந்தைத்தனம் ஒளிரும் தமது பெரிய கண்களை மேலும் அகலமாக்கிக்கொண்டு, புருவம் உயர்த்தி அவர் பேசும் வசனம் அந்தக் காட்சியின் நகைச்சுவை தளத்தை மேலும் விரிவாக்கிவிடும்.

‘கௌரவம்’ திரைப்படத்தில், நீலுவும் நாகேஷும் அடிக்கும் லூட்டி கொஞ்ச நஞ்சமில்லை. சிவாஜி வீட்டுக்கு விருந்தினராக வந்து அங்கேயே ‘செட்டில்’ ஆகி இருப்பார் நீலு. “நீர் என்ன மூக்குக்குப் பொடி போடுறீரா, இல்ல பீரங்கிக்கு மருந்து இடிக்கிறீரா?” என்ற வசனம் பிரபலம். அதில் நாகேஷ் நீலுவைப் பார்த்து: “ஏங் காணும்… மெட்ராஸைச் சுத்திப் பார்க்கிறேன்னு வந்தீர். வந்து வருஷக் கணக்காச்சு. இன்னும் சுத்திப் பாத்திண்டிருக்கீர்” என்று நக்கலாகக் கேட்பார். அதற்கு நீலு, “அதான் நாளுக்கு நாள் டெவலப் ஆயிண்டிருக்கே… அப்படி இருக்கச்சே எப்படி முழுசா சுத்திப் பார்த்துட முடிக்கிறது?” என்று சமர்த்தாகப் பதில் சொல்லிச் சமாளிப்பார்.

‘பம்மல் கே.சம்பந்தம்’ படத்தில்

இசையில் நுட்பமான ரசனையும் தேர்ச்சியும் நீலுவுக்கு இருந்தது. ‘ததரின்னா…னன்னா…’ என்று ரசனையுடன் ராக ஆலாபனை பாடிக்கொண்டு அவர் ‘என்ட்ரி’ கொடுக்கும்போதே, நீலு கொளுத்தவிருக்கும் நகைச்சுவை வெடிக்கு ரசிகர்கள் தயாராகிவிடுவார்கள். அந்தத் ‘ததரின்னா…னன்னா…’ அவரை நினைவில் நிறுத்திக்கொள்ள ஒரு பிடிமானம்.

எவ்விதக் கதாபாத்திரமானாலும் அதன் நடையுடை மொழிக்குத் தம்மை மாற்றிக்கொண்டுவிடுவார். அவஸ்தையை முகத்தில் காட்ட முடியாமல் அவஸ்தைப்படும் நடிகர்கள் மத்தியில், அப்படியான உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தி விடுவதில் நீலு கெட்டிக்காரர்.

கலையுடனான பிடிப்பு

‘பம்மல் கே. சம்பந்தம்’ படத்தில் திடீர்த் திருமணங்களைக் கரிசனத்தோடு காவல்நிலையத்தில் வைத்து அவர் நடத்திக் கொடுக்கும் காட்சிகள் நகைச்சுவையால் அதிரும். இறுதிக் காட்சியில் “இதுல யாரு பிள்ளை?” என்று அவர் கேட்க, “இங்க யாருமே பிள்ளை இல்லியே நான் முதலியாரு” என்பார் கமல். நான் நாயர் என்பார் என்பார் இன்னொருவர். “அய்யோ…! நான் கல்யாணப் பிள்ளையக் கேட்டேன் ” என்று தலையில் அடித்துக்கொள்ளும் நீலு, தாமே ‘மாங்கல்யம் தந்துனானே’ மந்திரத்தையும் இலவச இணைப்பாகச் சொல்லித் திருமணத்தை முடித்துவைக்கும் காட்சி நகைச்சுவையின் உச்சமாய் வளர்ந்துகொண்டே செல்லும். அந்தக் காட்சியின் இறுதியில் அவசரத்தில் நீலுவின் கழுத்தில் கமல் தாலியைக் கட்டிவிட, குனிந்தபடியே “இது சரியில்லையே” என்று நீலு முணுமுணுக்கும்போது காட்சியின் நகைச்சுவை உணர்வு உச்சத்தை அடைந்துவிடும்.

மேடை, திரை இரண்டிலுமே அவரது உடல்மொழியும் பேச்சு மொழியும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதைக் காண முடியும். குழந்தை உள்ளம், இனிய சுபாவம், கடைசிவரை கலையோடு கலையாதிருந்த பிடிப்பு ஆகியவற்றோடு திரையில் அவர் தோன்றும் தருணங்களுக்காக என்றென்றும் நினைவில் நிற்பார் நீலு.

தொடர்புக்கு: sv.venu@gmail.com

News

Read Previous

அனைவருமே பணிந்து நிற்போம் !

Read Next

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *