அச்சுக்கூடம் இருந்தும் அயலாக்கப் பணியில் அச்சிடப்படும் நூல்கள்!

Vinkmag ad
  • தஞ்சாவூர் சரஸ்வதி நூலகத்தின் முகப்புத் தோற்றம்.
    தஞ்சாவூர் சரஸ்வதி நூலகத்தின் முகப்புத் தோற்றம்.
  • தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் செயலற்றுக் கிடக்கும் அச்சு இயந்திரம்.
    தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் செயலற்றுக் கிடக்கும் அச்சு இயந்திரம்.

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள அச்சுக்கூடம் மூடப்பட்டதால், நூல்கள் பதிப்பித்தல் பணி தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கி.பி. 1535- 1675-ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இந்த நூலகத்தில் சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தைச் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், சுமார் 3 லட்சம் மோடி ஆவணங்கள் போன்றவை உள்ளன. இவற்றில் அரிய வகை மூலிகைகள், மருத்துவக் குறிப்புகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஓலைச் சுவடிகள், காகிதச் சுவடிகளில் உள்ள தகவல்களைப் பதிப்பித்து இதுவரை 500-க்கும் அதிகமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல நூல்கள் மறுபதிப்பும் செய்யப்பட்டுள்ளன.

நூல்கள் பதிப்பிப்பதற்காக நூலக வளாகத்திலேயே அச்சுக்கூடமும் அமைக்கப்பட்டது. அரிய வகை நூல்களை தனியாரிடம் கொடுத்து அச்சிட்டால், குறைந்த விலையில் மக்களுக்கு விற்க முடியாது என்பதால், இவ்வாறு செய்யப்பட்டு வந்தது.

இதன் மூலம், தரமான நூல்கள் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஏறத்தாழ 35 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இந்த அச்சுக்கூடத்தில் தலா ஒரு அச்சிடுபவர், உதவியாளர், இரு புத்தகத் தைப்பாளர், 4 அச்சுக் கோர்ப்பாளர்கள் பணியாற்றி வந்தனர்.

இதனிடையே, 10 ஆண்டுகளுக்கு முன்பு அச்சுப் பணி நவீனமயமாக்கப்பட்டு, டி.டி.பி. முறை அமல்படுத்தப்பட்டது. இதற்காக ஆப்செட் அச்சு இயந்திரம் உள்ளிட்ட சாதனங்கள் அமைக்கப்பட்டன. இந்தக் கூடத்தில் உள்ள பணியாளர்கள் ஒவ்வொருவராக பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, சிலர் தாற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்தக் கூடத்தில் பணியாற்றி வந்த ஓரிருவரையும் நீக்கி, கூடமும் மூடப்பட்டது. இதற்கு மாற்றாக, நூலகத்தில் பதிப்பிக்கப்படும் புதிய நூல்கள், மறு பதிப்பு நூல்கள் போன்றவை அயலாக்கப் பணி மூலம் அச்சிடப்பட்டு வருகின்றன.

இதற்கான செலவுத் தொகையும் அதிகம் எனக் கூறப்படுகிறது. இந்தத் தொகையும் முன்பைவிட இப்போது அதிகரித்துவிட்டதால், முன்பு ரூ.5, 10 என்ற விலையில் விற்கப்பட்டு வந்த நூல்களின் விலை ரூ.70-ஆக உயர்ந்துவிட்டது.

பல லட்ச ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட ஆப்செட் அச்சு இயந்திரம், நுண்படக் கருவி உள்ளிட்ட சாதனங்கள் பயனற்ற நிலையில் இருக்கின்றன.

ஏற்கெனவே, இந்த நூலகத்தில் இயக்குநர், நிர்வாக அலுவலர் போன்ற பிரதான பணியிடங்கள் பல ஆண்டுகளாகக் காலியாக உள்ளன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியரும், அவரது நேர்முக உதவியாளரும் கூடுதலாகக் கவனித்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஏற்கெனவே உள்ள பணிப் பளுவுக்கு இடையே இந்தப் பணியில் முழுக் கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

இதனால், இந்த நூலகத்தில் பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. இதுபோன்ற காரணங்களால் முன்பு 40 ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 22 ஆகக் குறைந்துவிட்டது. இப்போது அச்சக்கூடமும் மூடப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தைப் பாதுகாக்க அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து, இதற்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தையும் உயர்த்தியுள்ளது. ஆனால், மறுபுறம் காலிப் பணியிடங்கள், அச்சுக் கூடம் மூடல் உள்ளிட்ட பிரச்னைகளால் படிப்படியாக அதன் பெருமையை இழந்து வருகிறது இந்த நூலகம்.

News

Read Previous

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சியில் முதல்வர் தனிக்கவனம் செலுத்துகிறார்

Read Next

மாமருந்துமானார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *