அமெரிக்கப் பன்மைத்தன்மையின் வெற்றி!

Vinkmag ad

அமெரிக்கப் பன்மைத்தன்மையின் வெற்றி!

இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் வெளிநாடுகளில் சாதனைகளை நிகழ்த்தும்போதோ, உயர்ந்த அந்தஸ்துக்கு அவர்கள் வரும்போதோ இயல்பாகவே பெருமிதம் அடைகிறோம். இந்திரா நூயி, சுந்தர் பிச்சை போன்றோரை எடுத்துக்காட்டலாம். அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய-ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை அறிவித்த பிறகு தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகெங்கும் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர்களுள் ஒன்றாக கமலா ஹாரிஸ் ஆகிப்போனது.

2020 அவருக்கு வேறு பல செய்திகளை வைத்திருந்தது. கரோனா பெருந்தொற்றை ட்ரம்ப் எதிர்கொள்ளும் விதத்தை கமலா  ஹாரிஸ் கடுமையாக விமர்சித்தார். கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல் துறையினரால் கொல்லப்பட்டது கமலா ஹாரிஸுக்குக் கூடுதல் விசையை அளித்தது. சற்றே இனவாதக் கருத்துகள் கொண்ட ஜோ பிடன் கறுப்பினத்தோர், புலம்பெயர்ந்தோர்களைத் தனது வாக்கு வட்டத்துக்குள் ஈர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜோ பிடனின் அரசியல் கணக்குகளுக்கு கமலா ஹாரிஸ் பொருந்திவந்தார். அமெரிக்கச் சரித்திரத்தில் ஒரு பெருங்கட்சியின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க, முதல் இந்திய-அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளர் என்று பல முதல்களுக்கு கமலா ஹாரிஸ் சொந்தமாகியிருக்கிறார். இந்த இணை வெற்றிபெற்றால் இன்னும் பல முதன்மைகளுக்கு கமலா ஹாரிஸ் சொந்தக்காரர் ஆவார்.

கமலா ஹாரிஸின் துணை அதிபர் தேர்வு என்பது அமெரிக்கா தன் உயிர்நாடியாகக் கொண்டுள்ள பன்மைத்தன்மையின் பிரதிபலிப்பு. கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பூரித்துப்போயிருக்கும் இந்தியர்கள் பலரும் சோனியா காந்தி குறித்து என்ன கருத்து கொண்டிருந்தனர் என்றும், அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருந்தபோது எத்தகைய எதிர்வினைகளை ஆற்றினார்கள் என்பதையும் யோசித்துப்பார்க்க வேண்டும். கமலா ஹாரிஸை ‘வந்தேறி’ அடையாளம் சூட்டி விலக்கிவைக்காமல் தனது இனவெறி வரலாற்றின் பாவக் கறையைக் கழுவக் கிடைத்த மற்றொரு வாய்ப்பாக (முதல் வாய்ப்பு ஒபாமா) அமெரிக்கா கருதுகிறது. உலகின் மூத்த ஜனநாயகம் இவ்வாறாக உலகுக்கே வழிகாட்டுகிறது.

– நன்றி : ஆகஸ்ட் 17 தமிழ் இந்துவில் ஆசை எழுதிய கட்டுரையிலிருந்து..

News

Read Previous

வீட்டுக்குள்ளே நூலகம்

Read Next

புதுமையான பாடத்திட்டம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை வழங்கும் தமிழ் இலக்கியப் படிப்புகள்

Leave a Reply

Your email address will not be published.