ஹஜ் வழிமுறைகள்

Vinkmag ad
அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
20     ஹஜ் வழிமுறைகள்
துல் ஹஜ் மாதத்தின் 7-ம் நாள் முதல் 12-ம் நாள் வரை புனித கஅபாவைச்  சுற்றி (தவாப்) வருதல், ஸபா- மர்வா குன்றுகளுக்கு இடையே ஓடுதல், மினா, அரபா, முஸ்தலிபா ஆகிய இடங்களில் தங்கி வழிபாடு செய்தல், சாத்தான் மீது கல்லெறிதல்,  குர்பானி கொடுத்தல் உள்ளிட்ட வழிமுறைகளைச் செய்வது ஹஜ்ஜின் முக்கிய அம்சங்களாகும்.
‘தவாப்’ என்பதற்குச் ‘சுற்றி வருதல்’ என்று பொருள். புனித கஅபாவை நபி வழிப்படி சுற்றி வரும் ஒருவகை வழிபாடு இதுவாகும்.
துல்ஹஜ் 7-ம் நாளன்று, ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக நின்று, கஅபாவைத் தமது இடது பக்கமாகக் கொண்டு வலம் வருதலைத் தொடங்க வேண்டும். இவ்வாறு ஏழு முறை வலம் வர வேண்டும்.
‘தவாப்’ முடிந்தவுடன் மகாமே இப்ராகீமுக்கு (நபி இப்ராகீம் நின்ற இடம்) அருகிலோ, பள்ளிவாசலின் எப்பகுதியிலோ இரண்டு ‘ரக்அத்’ தொழ வேண்டும். இதன் பிறகு ‘ஸம் ஸம்’ நீரை அருந்த வேண்டும். இவை நபி வழியாகும்.
”அது (ஸம் ஸம்) அருள் வளம் மிக்கதாகும். உணவுக்கு உணவாகவும், நோய்க்கு மருந்தாகவும் உள்ளது’ என்பது நபி மொழியாகும்.
இதன் பிறகு ‘ஸயீ’ எனப்படும் ‘தொங்கோட்டம்’ ஓட வேண்டும். ஸபா-மர்வா குன்றுகளுக்கு இடையே ஏழு முறை ஓட்டமும் நடையுமாகச் செல்வது ‘ஸயீ’ எனப்படும். இதுவும் ஹஜ் வழிமுறைகளில் ஒன்றாகும்.
துல் ஹஜ் மாதத்தின் 8-ம் நாள் ஹஜ் பயணிகள் ‘மினா’ என்ற இடத்திற்குச் செல்வார்கள். அங்கு அவர்கள் இரவு பிரார்த்தனைகளில் (துஆ) ஈடுபடுவார்கள்.
ஹஜ் பிறை 9-ம் நாளன்று அரபா பெருவெளியை நோக்கிப் புறப்படுவார்கள். மக்காவுக்குக் கிழக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திறந்தவெளி, அரபா.
துல் ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் அரபாவில் தங்க வேண்டும். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதிச் சொற்பொழிவு நிகழ்த்திய இடம். இதனால் இந்த இடத்தில் முஸ்லிம்கள் தனது இறைவனுக்கு முன்னால் கட்டுப்பட்டவனாக, அவனுக்கு அடிபணிந்தவனாக, அவனுடைய அருளையும், பாவ மன்னிப்பையும் எதிர்பார்த்தவனாக நடந்து கொள்ள வேண்டும். சூரியன் மறையும் வரை அரபா வில் இருந்து மனக்கட்டுப்பாட்டுடன் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும்.
சூரியன் மறைந்த பிறகு அமைதியாகவும், கம்பீரமாகவும், ‘தல்பியா’ கூறியவர்களாக முஸ்தலிபா நோக்கிச் செல்ல வேண்டும். இங்குஅந்தி நேரத் தொழுகை (மக்ரிப்), இரவு நேரத் தொழுகை (இஷா) ஆகியவைகளைத் தொழுத பிறகு திறந்த வெளியில்  இரவைக் கழிக்க வேண்டும்.
துல் ஹஜ் 10-ம் நாள் காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னர் மினாவுக்குப் புறப்பட வேண்டும். செல்லும் வழியில் அதிகமதிகமாக ‘தல்பியா’ கூற வேண்டும். மினாவில் ‘ஜம்ரத்துல் அகபா’ என்ற இடத்தில் நின்று கொண்டு சாத்தான் மீது  கற்களை எறிய வேண்டும். இப்ராகீம் நபி இறைவன் கட்டளையை ஏற்று தன் மகனை பலியிடத் தயாராகும்போது சாத்தான் குறுக்கிட்டு இடையூறு செய்ததை நினைவு கூரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது முடிந்த பிறகு ஹாஜிக்கள், விலங்குகளை அறுத்து ‘குர்பானி’ கொடுப்பார்கள். இஸ்மாயிலுக்குப் பதிலாக இப்ராகீம் நபி ஒரு செம்மறி ஆட்டை பலியிட்டதன் நினைவாக இது நிகழ்த்தப்படுகிறது. இதன் பிறகு ஹாஜிக்கள் தங்கள் தலை முடியை மழித்துக் கொள்வார்கள். அல்லது குறைத்துக் கொள்வார்கள். இதைத் தொடர்ந்து ஹாஜிக்கள் மக்காவுக்குச் சென்று மீண்டும் கஅபாவைச் சுற்றி (தவாப்) வருவார்கள்.
பிறகு ‘மினா’வுக்கு திரும்பி வந்து அன்றிரவு அங்கு தங்க வேண்டும். துல்ஹஜ் 11, 12 ஆகிய தினங்களில் ஜம்ரயே ஊலா, உஸ்தா, அகபா ஆகிய 3 இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் 7 கற்கள் வீதம் எறிய வேண்டும். பின்னர் கஅபாவை நோக்கி துஆ (பிரார்த்தனை) செய்ய வேண்டும். இதன் பிறகு மக்காவுக்குத் திரும்பி விடைபெறும் வகையில் கஅபாவை சுற்றி (தவாப்) வர வேண்டும். இத்துடன் ஹஜ் வழிமுறைகள் நிறைவடைகின்றன.
(தொடரும்)
‘தொங்கோட்டம்’
நபி இப்ராகீம் (அலை) அவர்கள் தனது இளைய மனைவி ஹாஜராவையும், பால்குடி பருவத்தில் இருந்த மகன் இஸ்மாயிலையும் அழைத்து வந்து கஅபாவுக்கு அருகே குடியமர்த்தினார்கள். அன்று மக்காவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. தண்ணீரும் கிடையாது. பேரீத்தம் பழங்கள் கொண்ட ஒரு தோல் பாத்திரத்தையும், தண்ணீர் நிறைந்த மற்றொரு பாத்திரத்தையும் ஹாஜரா அருகே வைத்தார்கள். உடனே ஹாஜரா, ‘மனிதர்களோ இன்ன பிற பொருட்களோ ஏதுமற்ற இந்தப் பள்ளத்தாக்கில் எங்களைத் தனியாக விட்டு விட்டு நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?’ என்று கேட்டார். பலமுறை கேட்டும் இதற்கு நபி இப்ராகீம் பதில் அளிக்க வில்லை. அவர் திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டே இருந்தார். இதனால் ஹாஜரா, ‘இவ்வாறு செய்யுமாறு இறைவனா உங்களுக்கு உத்தரவு பிறப்பித்தான்?’ என்று கேட்டபோது, அவர்,  ‘ஆம்’ என்று கூறினார். உடனே ஹாஜரா, ‘அவ்வாறெனில் அவன் (இறைவன்) எங்களைக் கை விட மாட்டான்’ என்றார்கள்.
நபி இப்ராகீம் கொடுத்துச் சென்ற தண்ணீர் தீர்ந்தது. பாலகன் பசியால் துடிப்பதைப் பொறுக்காத ஹாஜரா, ஸபா மலைக்குன்றை நோக்கிச் சென்றார். அதன் மீது ஏறி எவராவது தென்படுகிறார்களா என்று பள்ளத்தாக்கை நோக்கி பார்வையைச் செலுத்தினார். எவரும் தென்படவில்லை. இதனால் ஸபா மலையில் இருந்து இறங்கினார்.
பள்ளத்தாக்கில் இறங்கியவுடன் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடி மர்வா குன்றை அடைந்தார். அதன் மேல் ஏறி யாராவது தென்படுகிறார்களா என்று நோக்கினார். யாரும் தென்படவில்லை. இப்படி ஸபா-மர்வா குன்றுகளுக்கு இடையே அவர் ஏழு முறை ஓடினார். இதுவே ‘ஸயீ’ (தொங்கோட்டம்) எனப்படுகிறது.

News

Read Previous

பள்ளி ஆண்டு விழா

Read Next

பாஸ்போர்ட் வாங்கலாம் வாங்க!

Leave a Reply

Your email address will not be published.