ஹஜ் எனும் அதிசயம்

Vinkmag ad

மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ்

“அப்ஸலுல் உலமா”

ஜே. ஏ. நைனார் முஹம்மது பாகவீ

 

உலகில் மூன்று அருளாளன் அல்லாஹ்வின் … நேரடி கண்ட்ரோலில் உள்ளன. ஒன்று பைத்துல்லாஹ்வெனும் கஃபா. இரண்டு கலாமுல்லாஹ்வெனும் குர்ஆன். மூன்று ரஸுலுல்லாஹ் ஹள்ரத் முஹம்மது (ஸல்) அவர்கள். இம்மூன்றும் என்றென்றும் இறைப் பாதுகாப்பில் நிலைத்திருக்கும் அதிசயங்களாகும்.

ஹஜ்ஜுக்குப் போகிற போது என்ன நோக்குடன் போகிறோமோ அது நடக்கிற இடமே புனித கஅபாவாகும்.

இறையன்பர் இப்னுல் மவ்கிஃப் (ரஹ்) அவர்கள் தமது வாழ்நாளில் 55 முறை ஹஜ் கடமையாற்றியவர். ஒருசமயம் தம் ஏழு வயது மகனிடம் நாம் கஅபாவிற்குப் போகிறேன் என்றார்.

“எதற்கு கஅபாவிற்குப் போகிறீர்”

“அது அல்லாஹ்வுடைய ஆலயம்” என தந்தை கூற மகன் “நானும் அல்லாஹ்வை காண வருகிறேன்” என்று கூறி தந்தையுடன் பயணமானார். இருவரும் கஅபாவிற்குச் சென்று கஅபாவை ஏறிட்டு பார்க்கிறார்கள். பார்த்த மாத்திரத்திலேயே மகன் வஃபாத்தாகி விடுகிறார். அன்றிரவு இப்னுல் மவ்கிஃப் (ரஹ்) அவர்கள், கனவில் பெருமானார் (ஸல்) அவர்களைக் காணுகிறார். “உன் மகன் அல்லாஹ்வைப் பார்க்கவே வந்தார். தன்னைப் பார்க்க அல்லாஹ் எடுத்துக் கொண்டான்” என பூமான் நபி கோமான் (ஸல்) அவர்கள் கூறி மறைந்தார்கள். இதிலிருந்து எந்த எண்ணத்துடன் கஅபாவை காணுகிறோமோ அது பிரதிபலிக்கிற புனித ஸ்தலமே கவின்மிகு கஅபா எனப் புலப்படுகிறது.

ஒரு சமயம் புனித கஅபாவிற்கு அருகில் அமர்ந்து நான்கு நபர்கள் துஆ செய்தனர். அங்கு ஹள்ரத் முஸ்அப் இப்னு ஜுபைர் (ரளி) அவர்கள் “யா அல்லாஹ்! என்னை மாண்புமிகு மக்காவின் கவர்னராக ஆக்கிவிடு” என்றும், ஹள்ரத் உர்வத் இப்னு ஜுபைர் (ரளி) அவர்கள் “யா அல்லாஹ்! என்னை மார்க்கச் சட்ட நிபுணராக சிறந்த ஃபகீஹாக ஆக்கி விடு” என்றும், ஹள்ரத் அப்துல் மலிக் இப்னு மர்வான் (ரளி) அவர்கள் “யா அல்லாஹ்! என்னை அரசராக ஆக்கி விடு” என்றும், ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்கள் “யா அல்லாஹ்! என்னை சுவர்க்கவாதியாக ஆக்கிவிடு” என்றும் பேரார்வத்துடன் துஆ கேட்டனர். ரப்புல் ஆலமீன் அல்லாஹ் இந்நால்வரின் நன் நாட்டத்தை ஏற்றருளி அப்பேற்றினை அவர்களின் வாழ்நாளில் வழங்கிச் சிறப்பித்தான் என்பதை சரித்திரம் சான்று பகர்கிறது.

( நூல் : வாகி ஆத்பகீர் )

ஹிஜ்ரி 10 –ல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் மேற்கொள்ளும் அறிவிப்பை சஹாபா தோழர்களிடம் அறிவித்தார்கள். எல்லாரும் பெருமானாருடன் ஹஜ் செய்ய ஆவல் கொண்டனர். ஹள்ரத் அபூபக்கர் (ரளி) தவிர. “நபி அவர்களே ! என் மனைவி நிறை மாத கர்ப்பிணி பிரசவம் பார்க்க ஆளில்லை” என ஹள்ரத் அபூபக்கர் (ரளி) அவர்கள் கண்ணீர் மல்கக் கூற நபி (ஸல்) அவர்களும் அனுமதி வழங்கினார்கள். இதை தம் மனைவியிடம் ஹள்ரத் அபூபக்கர் (ரளி) அவர்கள் எடுத்துக்கூற அவர்களின் மனைவி “நீங்கள் நபியுடன் சேர்ந்து ஹஜ்ஜுக்கு செல்லுங்கள். காரணம் நீங்கள் இங்கு இருப்பினும் உங்கள் உள்ளம் நபியுடன் தான் இருக்கும்”. இதை நபி (ஸல்) அவர்களிடம் கூற நபி (ஸல்) அவர்களும் மகிழ்ந்தார்கள். பிறகு, “நபி (ஸல்) அவர்களுடன் நானும் ஹஜ்ஜுக்கு வருகிறேன். உங்களுக்குள்ள ஆசை எனக்கு இருக்காதா?” என ஹள்ரத் அபூபக்கர் (ரளி) அவர்களின் மனைவி கூறியதால் இருவரும் நபியுடன் ஹஜ்ஜுக்கு புறப்பட்டுச் செல்லும் பொழுது வழியிலேயே குழந்தை பிறந்தது. இதிலிருந்து அக்காலத்தில் ஹஜ் செய்வதில் பெண்களும் எவ்வளவு அவாவும் ஆவலும் கொண்டிருந்தார்கள் என்பதை அறிகிறோம்.

இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபா நீதியரசர் மாமேதை ஹள்ரத் உமர் பாரூக் (ரளி) அவர்கள், ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக நின்று “அல்லாஹ்வின் மீது ஆணையாக ! நீ ஒரு கல்தான். உன்னால் எவ்விதப் பயனுமில்லை என் உயிரினும் மேலான பூமான் நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதால் நானும் உன்னை முத்தமிடுகிறேன்” எனக் கூறினார்கள்.

அப்போது, அறிவின் தலைவாயில் ஹள்ரத் அலீ (ரளி) அவர்கள், “அமீருல் முஃமினீனே அப்படிக் கூறாதீர் இக்கல் பயனுள்ளது. இதில் தான் அல்லாஹ் மனித குலத்தின் முதல் மனிதராக ஹள்ரத் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து அவர்களின் முதுகந்ததண்டிலிருந்து சந்ததிகளின் ஆன்மாக்களை வெளியாக்கி அவற்றிடம், தான் ரப்பு (இரட்சகன்) என்பதை எடுத்துக்காட்டி அதை ஏற்றுக் கொண்டதை ஒரு காகிதத்தில் பதிவு செய்து அப்பதிவை இந்த ஹஜருல் அஸ்வதுக்குள் தான் பத்திரப்படுத்திப் பாதுகாத்து வருகிறான்” என்று தெளிவுபடுத்திய பொழுது ஹள்ரத் உமர் பாரூக் (ரளி) அவர்கள், “எந்த கூட்டத்தில் ஹள்ரத் அலீ (ரளி) அவர்கள் இல்லையோ அக்கூட்டத்தை விட்டும் நான் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன்” என்றார்கள்.

( நூல் : அல் அஸ்ரூகீ )

ஹஜ் அல்லாஹ்வின் நேரடி அழைப்பின் பேரில் போவதாகும். அது அனுமதி அல்ல! இஸ்லாத்தின் பிற கடமைகளை இருக்கும் இடத்தில் உறங்கும் ஊரில் நிறைவேற்றலாம். ஆனால் ஹஜ் என்பது பயணம் செய்து ஆற்ற வேண்டிய பயணக் கடமையாகும்.

இதற்கான பத்து தயாரிப்புகள் சாலச் சிறந்தவை

1.ஷுக்ரு நன்றி கூறல் வேண்டும் !

ஏனெனில், 800 ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் இருந்த முகலாய மன்னர்கள் அக்பர் முதல் அவ்ரங் ஜீப் வரை எவரும் ஹஜ் செல்லவில்லை என சரித்திரம் சாடுகிறது. நமக்கு ஹஜ் பாக்கியம் கிடைத்தமைக்கு ஸலாத்துஷ் ஷுக்ரு இருரகஅத்கள் தொழுது நன்றியை அல்லாஹ்வுக்கு தெரிவிக்க வேண்டும்.

2. ஷிர்க்கை விட்டு முற்றிலுமாக நீங்க வேண்டும் !

ஏனெனில், இணை வைப்பவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் பரிசத்த மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகாமையில் கூட வர வேண்டாம் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.

3. பாவங்களுக்கு மன்னிப்புத் தேட வேண்டும் !

அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் குறைவு ஏற்படின் அல்லாஹ்விடம் மன்னிப்பு தேட வேண்டும். அடியார்களுக்குச் செய்ய வேண்டியவற்றில் குற்றம் ஏற்படின் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு உறவுகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். காரணம் உறவு முறிந்த நிலையில் ஹஜ்ஜில் கேட்கும் துஆவிற்கு பலன் ஏற்படாது.

4. தக்வா – இறையச்சம் வேண்டும்

காரணம் :

“(ஹஜ் பயணத்திற்காக) பயண உணவை முற்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளுங்கள் ! ஆனால் நீங்கள் தயார்ப்படுத்துவதில் மிக மேலானது தக்வா தான் என அல்லாஹ் கூறுகிறான்”

-அல்குர்ஆன் ( 2:197 )

 

எனவே, தொழுகையை ஜமாஅத்துடன் உள்ளச்சத்துடன் மேற்கொள்வது, ஜகாத்தை உடனடியாக நிறைவேற்றுவது. உறவினர்கள், நண்பர்களிடம் உள்ள பகையை ஒழித்துக் கொள்வது இறையச்சத்தை துளிர்க்கச் செய்யும்.

5. இக்லாஸ் தூய உணர்வு வேண்டும்

“ஹஜ் உம்ராவை (உலகாதாய விளம்பரப் பெருமையின்றி) அல்லாஹ்விற்காகவே (அவனது திருப்பொருத்தம் நாடி) நிறைவு செய்யுங்கள்”.

-அல்குர்ஆன் ( 2: 196 )

இது அல்லாஹ்வின் அறை கூவலாகும். எனவே குறிப்பாக ஹஜ் கடமையில் இக்லாஸ் எனும் தூய உணர்வு சற்று மேலோங்கி இருக்க வேண்டும் என்பதே இறை வசனத்தின் சாறாகும்.

6. இஷ்கு ! அல்லாஹ், ரஸுலின் பேரில்

அளவில்லா அன்பு வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் :-

“விசுவாசிகள் அல்லாஹ்வையே அதிகமாக நேசிப்பார்கள்”

-அல்குர்ஆன் 2:165

7. கற்றுக் கொள்ளுதல் வேண்டும் !

நகரங்களின் தாய் புனித மக்கா, மதீனா வரலாறுகளையும், ஹஜ்ருல் அஸ்வத் சிறப்புகளையும், மினா, அரஃபா, முஜ்தலிபா ஆகிய இடங்களில் தங்கும்போது செய்யும் அமல்களையும், ஜம்ராத்தில் கல்லெறியும் முறைகளையும், ஹஜ், உம்ராவின் சட்ட நெறிகளையும் மதீனாவில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை ஜியாரத் செய்யும் ஒழுக்கங்களையும் ஹஜ்ஜுக்குச் செல்லும் போது அறிந்து கொள்வது மிக அவசியமாகும்.

8. பிரயாணப் பொருட்களை தயார்படுத்த வேண்டும் !

பயண சாமான்கள் நம்மிடம் முழுமையாக இருப்பின் பிறரை எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை. சிறப்பான முறையில் நாம் அமல்கள் புரிய காரணியாகவும் இருக்கும்.

9. நல்அமல்கள் செய்யத் தயாராக வேண்டும் !

குர்ஆன் ஓதத் தெரியாதவர் அதை ஓதத் தெரிந்து கொள்ள வேண்டும். காரணம் கஅபாவில் ஒரு குர்ஆன் ஓதி முடித்தால் ஒரு லட்சம் குர்ஆன் ஓதிய நன்மையுண்டு.

10. தர்மம் செய்ய வேண்டும்

தான, தர்மங்கள் பலா முஸீபத்துகளை நீக்கி விடும் என்பது நபி (ஸல்) அவர்களின் கூற்றாகும். முக்கியப் பயணமாக இருப்பதால் அதில் இன்னல்கள் நிகழாமல் நாம் செய்யும் தர்மம் தடுத்திடும்.

ஹாஜிகள் முக்கியமாக ஹரமில் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளவும். ஏனெனில் ஹதீஸில் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்பவருக்கு மூன்று கீராத் நன்மைகள் உண்டு என வந்துள்ளது. ஒரு கீராத் என்பது உஹது மலைக்குச் சமமானது. பொதுவாக ஹரமில் ஆற்றப்படும் அமலுக்கு ஒரு லட்சம் நன்மையுண்டு. இதனடிப் படையில் ஹரமில் தொழுகும் ஒரு ஜனாஸா தொழுகைக்கு மூன்று லட்ச கீராத் நன்மைகள் உண்டு. அதாவது மூன்று லட்ச உஹது மலையளவு நன்மைகள் கிடைக்கின்றன. எனவே ஹாஜிகளே ஹஜ் பயணம் உங்கள் வாழ்வில் மிகப்பெரும் பாக்கியமும் அதிசயமும் என்று உணர்வீர்களாக !

 

நன்றி : குர்ஆனின் குரல்  – அக்டோபர் 2013

News

Read Previous

தமிழ்த்தேர் நண்பர்களின் ஒன்றுகூடல் – துபாய்

Read Next

இலவச கண் சிகிச்சை முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *