ஷைத்தானின் விரோதி

Vinkmag ad

ஷைத்தானின் விரோதி

-பேராசிரியர் ஹாஜி. T.A.M. ஹபீப் முஹம்மது

மனிதரிலும் ஜின்களிலும் தீய எண்ணங்களை மனதில் உண்டு பண்ணுவதே ஷைத்தானின் வேலையாகும். கல்பு என்பது நல்லவற்றை விட்டுவிட்டுத் தீயவற்றிற்கும், தீயதை விட்டு நல்லவற்றிற்கும் மாறிக் கொண்டிருக்கும். இவ்வாறு ஷைத்தான் ஈமானை அபகரிப்பதால் கன்னாஸ் என்றும் அவனுக்குப் பெயர் உண்டு. ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தானுக்கு இப்லீஸ் என்றும் பெயர் உண்டு. ஆக ஷைத்தான் மனிதருக்கும் ஜின்களுக்கும் விரோதி.

ஷைத்தான் உங்களை (நல்வழியைவிட்டு)த் தடுத்து விடாதிருக்கட்டும். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்க விரோதியாவான். (43:62)

ஆன்மாவைக் கட்டுப்படுத்தி நல்லவற்றையும் தீயவற்றையும் பகுத்தறிந்து நற்செயல் புரியும் ஆற்றலை அல்லாஹ் மனிதனது பெருமூளையின் முன்பகுதிக்குக் கொடுத்திருக்கிறான். அப்படியிருந்தும் தீமையைச் செய்யத் தூண்டுவது நஃப்சே அம்மாராவாகிய ஷைத்தான் (காஃபிர்) ஆகும். அதேசமயம் நன்மையானவற்றையே செய்யும் ஆன்மா நஃப்சே முத்மஇன்னா (முஃமின்) ஆகும். எனவே காஃபிராகிய ஷைத்தான் முஃமினுக்குப் பகிரங்க விரோதி ஆவான்.

அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டிருக்க வேண்டுமானால் பேராசை பிடித்த நஃப்சே அம்மாராவாகிய ஷைத்தான் மீது நேசம் கொள்ளக்கூடாது. ஷைத்தானின் அலங்காரமான பேச்சு மனிதனை மயக்கித் தீயவற்றைச் செய்ய வைத்து நரக நெருப்பிற்கே அழைத்துச் செல்லும். இதையே திருக்குறளில் 202 ஆம் குறள், “தீய செயல் தீயினும் கொடியது” என்று சுட்டிக்காட்டுகிறது. இந்த விரோதியைப் பகைத்துக்கொண்டு ஈமானுடன் நேர்வழியில் நல்ல அமல்களைச் செய்து வாழ்ந்தால் மிகப்பெரிய நற்கூலியான சொர்க்கம் உண்டு.

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவன். எனவே அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள். அவன் (தன்னைப் பின்பற்றும்) கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் (நரக) நெருப்புக்குரியவர்களாக இருப்பதற்கே. (35:6)

ஷைத்தான் அலங்காரமான பேச்சு வழிதவறவும் வைக்கும். வேதனையையும் கொடுக்கும் என்பதை, “நிச்சயமாக என்னை ஷைத்தான் துன்பத்தையும் வேதனையையும் கொண்டு தீண்டிவிட்டான்” (38:41) என அய்யூப் (அலை) கூறியதைக் கொண்டு உணரலாம்.

ஷைத்தானின் நெருங்கிய நண்பர்களைப் பற்றிய நிலையைக் குறித்து, :எவனொருவன் அர்ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டு கண்ணை மூடிக்கொள்வானோ அவனுக்கு ஒரு ஷைத்தானை ஏற்படுத்திவிடுகிறோம். அவன் இவனது நெருங்கிய நண்பனாகிவிடுகிறான்” (43:36) என்று கூறப்படுகிறது.

ஷைத்தானை நண்பனாக்கிக் கொண்டவன் ஈமானை இழந்துவிட்ட ஃபாசிக் ஆவான். மறுமையில் ‘நீ கெட்ட நண்பன்’ என்று அவனே ஷைத்தானிடம் கூறுவான். ஏனென்றால் ஷைத்தான் நரக வேதனையின் கூட்டாளி. இதைக் கீழ்வரும் வசனங்கள் விளக்குகின்றன.

மேலும் அந்த ஷைத்தான்கள் அவர்களை நேர்வழியிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும் தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணுகின்றனர். (43:37)

எதுவரையென்றால் முடிவில் அவன் நம்மிடம் வரும்போது எனக்கும் உனக்குமிடையே கிழக்குத் திசைக்கும் மேற்குத் திசைக்கும் இடைப்பட்ட தூரமாக இருந்திருக்கக்கூடாதா? நீ கெட்ட நண்பன் என்று (ஷைத்தானிடம்) கூறுவான். (அப்பொழுது) நீங்கள் அநீதியிழைத்ததால் இன்றைய நாள் உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது. நீங்கள் வேதனையின் கூட்டாளிகள் (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்) (43:38-39)

அல்லாஹ்வுடைய படைப்புகளின் கோலங்களை மாற்றுவது ஷைத்தானுடைய வேலையாகும். “அல்லாஹ்வின் படைப்புகளின் கோலங்களை மாற்றும்படி ஏவுவேன் என்று கூறும் ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக்கொள்கிறவன் நிச்சயமாகப் பகிரங்கமான பெரும் நட்டத்தை அடைந்தவன் ஆவான்” என்று அந்நிசா அத்தியாயத்தின் 119 ஆம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ள படைப்புகளின் கோலங்களை மாற்றுவது என்பது இறைவன் வகுத்திட்ட இயற்கையின் விதிப்படி ஆண் பெண் இனச் சேர்க்கையின் மூலம் ஆடு, மாடு போன்ற வீட்டுப் பிராணிகளும் மனிதனும் உருவாகாமல் குளோனிங் முறையில் ஷைத்தானுடைய வேலையைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. இம்முயற்சியில் 1996 ஆம் ஆண்டிலேயே ஸ்காட்லாண்டில் விஞ்ஞானிகள் ஈடுபடத் தொடங்கினர். எப்படியென்றால் ஒரு பெண் ஆட்டின் அண்டக் குழாயிலிருந்து ஒரு முட்டையை எடுத்து அதிலுள்ள உட்கருவை நீக்கிவிட்டு அவ்விடத்தில் அந்த ஆட்டின் பால் சுரக்கும் மடுவிலுள்ள ஒரு செல்லிலிருந்து எடுக்கப்பட்ட உட்கருவை இணைத்தனர். இந்த உட்கருவில் ஆண், பெண்ணின் குரோமசோம்கள் இணைந்தே இருப்பதால் இது கருவாக வளர்ச்சியடையத் தொடங்கியது. உடனே அதை எடுத்து அந்த ஆட்டின் கருவறையில் பதித்துவிட்டனர். அது ஆட்டுக் குட்டியாகக் கருவறையில் வளர்ந்து பிறந்தது. டாலி எனப் பெயர் சூட்டப்பட்ட அந்த ஆடு பின்னர் நோயால் பீடிக்கப்பட்டு இறந்தது. இதுபோல் மனிதனையும் குளோனிங் முறையில் உருவாக்க முயன்றனர். உடனே அமெரிக்க அரசு அதற்குத் தடை விதித்தது. குளோனிங் முறையில் மனிதனை உருவாக்குவதில் வெற்றி காண்பதாக வைத்துக்கொண்டாலும் குளோனிங் மனிதர்கள் ஒரே வித முகச் சாடையுடன் இருப்பர். அவர்களை வேறுபடுத்தி அறிய முடியாது. அது மட்டுமா? இனச் சேர்க்கை மூலம் அவர்களால் கருத்தரிக்கவும் முடியாது. ஆக அவர்களுக்குச் சந்ததிகள் இருக்காது. அவர்களுக்குச் சமூகத்தில் அவல நிலைதான்.

படைப்பின் கோலத்தை அலங்கோலமாக மாற்றும் ஷைத்தானுடைய வேலை பகிரங்கமான நட்டத்தையே தரும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும் தற்போது இலண்டனில் ஷைத்தானுடைய வேலை நடைபெறுகிறது. இயற்கையாகக் குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் தங்களுடைய டி.என்.ஏ.வுடன் மற்றொரு பெண்ணின் டி.என்.ஏ.வையும் பெற்று, குழந்தையை உருவாக்கும் செயற்கை முறைக் கருவூட்டல் முயற்சி இலண்டனில் செய்யப்படுகிறது. இந்த செயற்கை முறைக் கருவூட்டல் சட்டத் திருத்தம் வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தற்பொழுது வாக்கெடுப்பு நடைபெறுகிறது என்பதைச் செய்தித்தாள்கள் வாயிலாக அறிகிறோம்.

மனதைத் தடுமாறவைக்கும் ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் பாதுகாப்பில் வாழ அல்லாஹ்விடம் நாம் பாதுகாவல் தேடிக்கொள்ள வேண்டும்.

மனிதரிலும் ஜின் வர்க்கத்திலும் உள்ள ஈமானை அபகரிக்கும் ஷைத்தான் (கன்னாஸ்) மனஞ் சஞ்சலங்களையும் கெட்ட எண்ணங்களையும் உண்டு பண்ணி விடுகின்றான். இத்தகைய தீங்கை விட்டு வணக்கத்துக்குரிய அல்லாஹ்விடம் காவல் தேடுகிறேன் எனப் பிரார்த்தனை செய்யுமாறு அந்நாஸ் அத்தியாயத்தில் இறைநம்பிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்களுக்கு ஷைத்தானிடமிருந்து ஏதேனும் தீமை செய்ய (சஞ்சலம்) உம்மைத் தூண்டுமாயின் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக. அவன் செவியேற்பவன். நன்கறிபவன். (41:36)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வே, என்னை ஆன்மாவின் இச்சையிடம் கண் இமைக்கும் நேரம் கூடச் சாட்டிவிடாதே (அல்லாஹும்ம வலா தகில்னீ இலா நஃப்சீ தர்ஃபத்த அய்னின்) என்று பிரார்த்தனை செய்வார்கள். நாமும் அவ்வாறே பிரார்த்தனை செய்வோம்.

நபியே ! நீர் குர்ஆனை ஓதுவீராயின் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக! (16:98) இந்த வசனத்தின்படி திருக்குர்ஆனை ஓதத் தொடங்குமுன், “அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்” என்று கூறி அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொண்டு, “பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்” என்று அல்லாஹ்வின் திருப்பெயரை மொழிகிறோம்.

ஹாஜிகள் ஹஜ் செய்யும்போது ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து அதாவது தீய எண்ணங்களிலிருந்து முற்றிலும் விடுபட ஷைத்தான்கள் மீது, பிஸ்மில்லாஹ், அல்லாஹ் அக்பர் என்று கூறிக் கல்லெறிந்து அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்று மனத்தூய்மையுடன் ஹஜ் பயணத்தை முடித்து ஊர் திரும்புகிறார்கள். இதுபோல் புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கும்போது நஃப்சின் ஆசைகள் அடக்கப்பட்டு ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டு நோன்பு தூய்மையாகிறது.

இறுதியாக, அல்லாஹ்வை அஞ்சி லாயிலாஹ இல்லல்லாஹ் என மொழிந்து தீங்கு ஏற்படுத்தும் நஃப்சே அம்மாரா என்னும் ஷைத்தானை அடக்கி இறைக்கட்டளைக்குப் பணிந்து தன்னை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டால் ஆன்மா சாந்தியடையும்.

எவர்கள் ஈமான் கொண்டு தம் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள்மீது நிச்சயமாக (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமும் இல்லை. (16:99)

 

( இனிய திசைகள் – மார்ச் 2015  )

News

Read Previous

புனித நோன்பே வருக !

Read Next

ஞானாலயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *