வாசிப்போம்.. விவாதிப்போம்…!

Vinkmag ad
வாசிப்போம்.. விவாதிப்போம்…!
மனித வாழ்வும் அறிவியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. இத்தகைய அறிவியலில் அனுதினமும் புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள் என பல மாற்றங்களும் வளர்ச்சிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அத்தகைய தொழில்நுட்பங்களைப் பற்றிய நமது அறிவை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். நிலத்தில் ஏர் பிடித்து உழுவும் விவசாயிக்கு உதவும் கண்டுபிடிப்பு முதல் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து பணி புரியும் ஐடி ஊழியருக்கு உதவும் தொழிநுட்பம் வரை அனைத்தும் இந்த அறிவியல் வளர்ச்சிக்குள் ஒளிந்து கிடக்கின்றன. இப்படிப்பட்ட பல அறிவியல் தகவல்களை சிறுங்கட்டுரைகளாய் பேராசிரியர் கே. ராஜூ தனது அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும் என்ற நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். இதோ இந்நூலில் என்னைக் கவர்ந்த ஒரு சில கட்டுரைகளின் சாராம்சம் :
உணவளிக்கும் உழவனுக்காக

நாம் வளர்க்கும் செடிகொடிகளோ, பயிர்களோ பூச்சிகள் தாக்கி நோய்வாய்ப்பட்டால் அவற்றை எடுத்துக்கொண்டு ஏதேனும் மருத்துவமனைக்கு போக முடியுமா? தற்போது இது சாத்தியமே! ஆம், MSSRF எனும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையும் CABI எனும் சர்வதேச அமைப்பும் இணைந்து தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தாவர மருத்துவமனை தொடங்கியுள்ளன. பூச்சிகள் தாக்கியுள்ள பயிரின் நோயைக் கண்டறிந்து அதிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகளை விவசாயிகளுக்கு அளிப்பதுதான் இதன் நோக்கம். தொழில் நுட்பரீதியாக பல தீர்வுகளை விவசாயிகளிடம் மருத்துவமனை முன்வைக்கிறது. விவசாயப் பின்னணி உள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தாவர டாக்டர்கள் ஆவதற்கான பயிற்சியை CABI அவர்களுக்கு அளிக்கிறது. கூடுதல் தகவல் வேண்டுவோர் தரமணியில் உள்ள திருமிகு நான்சி அனபெல் அவர்களை (செல்: 9444391467) அணுகலாம்.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகள் சூரிய சக்தியையும் தண்ணீரையும் மேலான திறனுடன் பயன்படுத்தி வருகின்றனர். வேளாண் துறையின் முன்முயற்சியினால் சூரிய சக்தியினால் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரங்களை அவர்கள் வாங்கி தங்கள் வயல்களில் பொருத்தியுள்ளனர். சொட்டுநீர்ப் பாசனத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தோள் கொடுக்கும் தொழில்நுட்பங்கள்
எக்ஸ் கதிர்கள் (X-rays) என்றால் என்ன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த எக்ஸ் கதிர்கள் மின்காந்தக் கதிர்களில் ஒரு குறிப்பிட்ட வகை ஆகும். மைக்ரோவேவ், அப்பாற் சிவப்பு (Infrared rays) ஆகிய இரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் அலைநீளம் உடையவை டி-கதிர்கள் (Terahertz rays) என அழைக்கப்படுகின்றன.  உடலில் தோன்றும் கட்டிகளையும் புற்று நோயையும் கண்டுபிடிக்க அவை பயன்படத் தொடங்கியுள்ளன. பற்கள் சொத்தையாவதையும், உணவிலோ குளிர்பானத்திலோ பூச்சி மருந்து சிறிதளவு கலந்திருப்பதையும் கூட டி-கதிர் சோதனை மூலம் கண்டுகொள்ள முடியும். தற்போது விமானநிலையங்களிலும் துறைமுகங்களிலும் பயணிகளைச் சோதனையிட டி-கதிர் சோதனை நடத்தப்படுகிறது. வருங்காலத்தில் இன்னும் பல துறைகளில் டி-கதிர்கள் பயன்படும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சுற்றுச்சூழலை பேணிட 
ஆர்சினிக் நிலத்தடி நீரிலுள்ள விஷத்தன்மையுள்ள ஒரு பொருள் என்பது நமக்குத் தெரியும். இதன் விஷத் தன்மை காரணமாக வங்க தேசம், இந்தியா மற்றும் வேறு சில நாடுகளிலும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின் றனர். மனிதர்களைக் கொல்லக் கூடிய விஷமாக கொலைகாரர்களால் ஆர்சினிக் உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. 70 க்கும் மேலான நாடுகளில் உள்ள 13.7 கோடி மக்கள் குடிநீரில் உள்ள ஆர்சினிக்கின் விஷத்தன்மை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக 2007ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக உறிஞ்சி எடுப்பதின் காரணமாகவே நிலத்தடி நீர் இப்படி மாசுபடுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இயற்கையின் பேரிடர்களிலிருந்து பாடம் கற்கிறோமா? என்பதில் தொடங்கி, பருவநிலை குறித்த பாரிஸ் மாநாடு  என்பது வரை இயற்கை, மாற்று விவசாயம், நானோ தொழில்நுட்பம், புகையில்லா உலகம், நியூட்ரினோ, அணு உலைகள், திப்பு சுல்தானின் ராக்கெட் போர்.. என 52 வெவ்வேறு தலைப்புகளில் விஞ்ஞானம் அறியாத சாமானியன் கூட  புரிந்துகொள்ளும் வகையில் பேராசிரியர் ராஜூ எளிமையாக, சுவாரஸ்யமாக இந்த புத்தகத்தை தொகுத்துக் கொடுத்துள்ளார். இவையனைத்தும் தீக்கதிர் நாளிதழில், 2015 – ம் ஆண்டு குறுங்கட்டுரைகளாக வந்தவை. அனைவரையும் படிக்கத்தூண்டும் புத்தகம்.                                                                                 
-மனோஜ்
வெளியீடு: மதுரை திருமாறன் வெளியீட்டகம், ப.எண் 35, பு.எண்.21, சாதுல்லா தெரு, தி.நகர், சென்னை -600017, விலை : 120/
செல்பேசி :  78717 80923 / 7010984247

                  (காப்பீட்டு ஊழியர் ஜூலை மாத இதழில் வெளிவந்த நூல் அறிமுகம் இங்கே சுருக்கித் தரப்பட்டுள்ளது).

News

Read Previous

மதுரை

Read Next

பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி வெற்றிபெற…

Leave a Reply

Your email address will not be published.