”வரதட்சணை ஓர் சமூகக் கேடு”

Vinkmag ad

 

( மெளலானா அல்ஹாஜ் M. சதீதுத்தீன் பாகவி MFB, AU. )

தலைமை இமாம், அடையார் பெரியபள்ளி – சென்னை 20 )

 

இஸ்லாமியத் திருமணங்களின் மேன்மை :-

உலகில் தோன்றிய மதங்கள் – மார்க்கங்கள் பலவும் திருமணம் புரிந்து வாழ்வதை வற்புறுத்தினாலும் திருமணத்தின் பல்வேறு உட்பிரிவுகளையும் சட்டங்களையும் தெளிவுற வகுத்துத் தந்த பெருமை இஸ்லாத்தை மட்டுமே சாரும். ஒரு பெண்ணைப் பெற்றவன் அவளை மணமுடித்து தருவதற்குள் சக்கையாய் பிழியப்படுகின்ற இன்றைய வரதட்சணை உலகில் நின்று கொண்டு இஸ்லாம் கூறும் திருமணக் கூறுகளை சற்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

 

திருமணம் முடிக்க பெண்ணுக்கு மஹர் தரவேண்டியது – கணவன் பொறுப்பு முடிந்த பின் “வலிமா” விருந்து தரவேண்டியது – கணவன் பொறுப்பு இல்லற வாழ்வில் மனைவிக்கு தேவையான அனைத்து செலவுகளும் – கணவன் பொறுப்பு உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை – கணவன் பொறுப்பு இல்லறம் கூடி ஒரு குழந்தை உருவானால் பாலூட்டும் செலவு கூட – கணவன் பொறுப்பு பிறந்த குழந்தைக்கு “அகீகா” – கொடுப்பதும் – கணவன் பொறுப்பு

 

இப்படியே வாழ்வு முடியும் வரை தொடர்கிறது கணவனின் பொறுப்புகள் சுருங்கக் கூறின் – இஸ்லாமியத் திருமணங்களின் எந்த ஒரு இடத்திலும் “பெண் அல்லது பெண் வீட்டாருக்கு செலவு “ என்பதே கிடையாது. இவ்வனைத்து செலவுகளும் பொறுப்புகளும் ஆண்மகனை பெற்றவர்களையே சாரும். ஆனால் நமது சத்திய மார்க்கத்தின் இந்த மிக்குயர்ந்த தத்துவம் இன்று தலைகீழ் வடிவம் பெற்றுவிட்டதை நாம் வேதனையோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

வரதட்சணையின் சமூகச் சீர்கேடுகள் :-

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளைப் பெற்று ஒழுக்கம் கற்பித்து, வளர்த்து ஆளாக்கும் தந்தையர்கள் சுவனத்தில் என்னுடன் இப்படிச் சேர்ந்திருப்பர் என்று தங்கள் கைவிரல்களைச் சேர்த்தும் கோர்த்தும் காட்டினார்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்கள்.

 

பெண் குழந்தைகளைக் கொல்லும் கொடிய பாவம் பெருமானார்    (ஸல்) அவர்களால் இப்புவியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டும் – இன்று பெண் சிசுக்களை வயிற்றிலேயும் – அல்லது பிறந்தபின் கள்ளிப்பால் கொடுத்தும் நெல்மணிகளை வாயிளிட்டும் கொலை செய்கின்ற மாபாதகம் அரங்கேறிக் கொண்டிருப்பதை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் செய்திகளில் கண்டும், கேட்டும், படித்தும் வருகிறோம்.

 

இக்கொடிய கொலையை செய்யும் பெற்றோர் முதன்மைக் குற்றவாளிகளெனினும் – சப்தமில்லாமல், சமுதாயத்தில் வரதட்சணையை வளர்த்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளைகளும், அவர்கள் பெற்றோர்களும் கூட “சிசுக்கொலைக்குக் காரணம் என்ற கருத்தில் மிகையில்லை.

சிசுக்கொலை மட்டுமா? – வண்டி வண்டியாய் வரதட்சணை கொடுத்து விட்டு வாழ வரும் பெண் கணவனை மதிப்பதில்லை – எனும் பிரச்சனை தோன்றி, குடும்ப அமைதி குலைந்து, சந்தி சிரிக்கும் வண்ணம் – விவாகரத்தாக விசுவரூபமெடுப்பதைப் பார்க்கிறோம். வரதட்சணை – இன்று ஓர் வியாபாரமாகிவிட்டதை மறுக்க முடியாது. சரக்குகளின் விலைப் பட்டியல் போல – படித்த மாப்பிள்ளைக்கும், சொந்தத் தொழில் சார்ந்தோருக்கும் தனித்தனியே “விலை” நிர்ணயம் செய்யப்படுகிறது படித்தவர்கள் இங்கே “படித்தமுட்டாளாக” – மாறுகின்றனர்.

இந்தியாவில் எல்லா மதங்களிலும், எல்லா ஜாதிகளிலும் எல்லா இன, நிற, மொழிகளிலும் வேறுபாடகளற்றுப் பரவியுள்ள ஒரே விஷயமாய் வடதட்சணை இருப்பதைப் பார்க்கிறோம். சுருங்கக் கூறின் வரதட்சணை தேசிய அடையாளங்களில் ஒன்றாகி விட்டதெனலாம்.

 

இப்பொழுதெல்லாம் – ஆண்மகனைப் பெற்றெடுத்தவர்கள் ஒரு பெரிய சொத்துக்குச் சொந்தக்காரர்களாகி விட்ட மகிழ்வைப் பெறுவதும் இந்த வரதட்சணையால் தான் – ஒரு பங்களா, ஒரு கார், ஒரு தோட்டம் … இந்த வரிசையில் தான் ஒரு மகன் என்பதும் சேர்ந்து விட்டது. வீட்டை விற்பது போல், வாகனத்தை விற்பது போல் திருமண நேரத்தில் மகனையும் விற்கிறார்கள். என் மகனுக்கு விலை “ஐந்து இலட்சம்” என பேரப்பொருளாக மாறும் அவலத்தை எப்படிச் சொல்வது..?

தன்மானமும் சுய கெளரவமும் இருந்தால் இளைஞர் சமுதாயம் சிந்திக்கட்டும், மந்தையிலும் சந்தையிலும் ஆடுமாடுகள் விற்கப்படுவது போல் திருமணச் சந்தையில் நீங்களும் விற்கப்படுவதை உங்களின் தன்மானம் அனுமதிக்கிறதா?

”நாங்கள் வேண்டாம் என்று தான் சொல்கிறோம். என்ன செய்ய முடியும்? – எங்கள் பெற்றோர்கள் தான் எங்களை நிர்பந்திக்கிறார்கள்     – என்று தேய்ந்து போன பழைய ரிகார்டை திரும்பத்திரும்ப இந்த நாகரீக உலகத்தில் கூறிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

 

இளைஞர் சமுதாயம் மனம் வைத்தால் வரதட்சணைக்கு மூடுவிழா நடத்த முடியும். கடந்த ஓராண்டில் மட்டும் நாட்டில் வரதட்சணையால் ஏற்பட்ட கொலை மற்றும் தற்கொலைகளின் எண்ணிக்கை 9,500 – என்று கணக்கெடுப்பும் புள்ளி விபரங்களும் தெரிவிக்கின்றன. குடும்பத்தோடு விஷம் குடித்து கொலை – எனும் பெயரால், தூக்கில் தொங்கி தற்கொலை எனும் பெயரால், விஷ ஊசிகளால், ஸ்டவ் வெடிப்புகளால் – இன்னபிற வழிகளால் எத்தனையோ ஆயிரமாயிரம் உயிர்களை சிதைத்தது இந்த வரதட்சணை தான். இத்தீய அரக்கனை அழிக்கப்படாதவரை சமூகத்தில் பெண் குழந்தையைப் பெற்ற எவருக்கும் நிம்மதியில்லை.

 

மணப்பெண் தேர்வு :-

அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள் :-

எவர் ஒரு பெண்ணை அவளின் கண்ணியத்திற்காக மட்டும் மணமுடிப்பாரோ அவருக்கு இழிவையும், பொருளுக்காக மட்டும் மணமுடிப்பாரோ அவருக்கு வறுமையையும், குடும்பம் மற்றும் குலப் பெருமைகருதி ஒரு பெண்ணை மணமுடித்தால் அவருக்கு தாழ்வையும் தவிர வேறு எதையும் அல்லாஹ் அதிகப்படுத்துவதில்லை. (ஆனால்) ஒரு பெண்ணை – தன் பார்வையை (ஹராமை விட்டும்) தாழ்த்திக் கொள்ளவும், தன் மர்மத்தைக் காக்கவும், தன் உறவோடு ஒட்டி வாழவும், மணமுடித்தால் அல்லாஹ் அவருக்கு அப்பெண்ணிடமும், அப்பெண்ணுக்கு அவரிடமும் பரக்கத் செய்கிறான்.

( அறிவிப்பு : அனஸ் (ரலி) நூல் : தப்ரானீ )

 

-ஆக, மார்க்கப் பேணுதலை மையமாகக் கொண்டு மண ஒப்பந்தங்கள் இறைவனின் நற்பாக்கியத்துக்குரியவை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அருமை நாயகத்தின் கருத்தாழமிக்க இந்த வசனங்களை அவர்களின் பொன்மொழிகளாக மட்டும் கருதிவிடக் கூடாது. இறைவனின் அருளுரையும் அதுவேயாகும்.

 

“ நபி (ஸல்) அவர்கள் தங்கள் மனவிருப்பப்படி எந்தக் கருத்தும் கூறவில்லை. அது (அவர்களுக்கு) அருளப்பட்ட “வஹீ” யெனும் இறை அறிவிப்பேயாகும்.                  (அல்குர்ஆன் : 53 : 3,4)

 

இந்த அறிவுரைகள் ஆணைப் பெற்றோருக்கு மட்டுமல்ல பெண்ணைப் பெற்றோருக்கும் நாயகம் இதுபோன்ற நல்லுரை வழங்குகின்றார்கள். தேர்வு செய்கின்ற மாப்பிள்ளைகளை உலகியல் ஆதாய நோக்கில் தேடுவதைத் தவிர்த்து மார்க்கப்பற்றுடையவரையே தேர்வு செய்ய வேண்டும்.

அருமை நாயகம் (ஸல்) கூறினார்கள்.

யாருடைய மார்க்கப் பற்றைக் குறித்தும் ஒழுக்கப் பண்பாட்டைக் குறித்தும் உங்களுக்குத் திருப்தியாக உள்ளதோ அவர் திருமணச் சம்பந்தம் செய்ய முன் வந்தால் அவருக்கு மணமுடித்துத் தாருங்கள். இல்லையெனில் பெரும் குழப்பமும் சீர்கேடும் தான் ஏற்படும்.

அறிவிப்பு : அபூஹுரைரா (ரலி)

நூல் : மிஷ்காத்

 

மாப்பிள்ளை பெண் இருவீட்டினரும் திருமணத்தின் அளவுகோலாகக் கொள்ள வேண்டியது “மார்க்கப்பற்றை” – மட்டுமே என்பது இவ்வமுத வார்த்தைகளிலிருந்து புரிய முடியும். ஆனால் இன்று “வரதட்சணை” – மண வாழ்வின் அளவுகோலாக மாறி, குமர்களின் கண்ணீர் மெளனமாய் கரை புரளுகிறது. பொருள் வலிமை இல்லாத வீடுகளின் கதவுகளுக்குப் பின்னால் குமுறும் குமர்களின் வேதனைகளை விவரிக்கவும் சமூகத்திற்கு தெரிவிக்கவும் வார்த்தைகளுக்கே வலுவில்லை. அப்பெண்களின் ஆழ்மனதில் வெளிப்படும் ரணம் மிகுந்த எண்ணங்களை ஒரு கவிஞன்,

பூப்பெய்தும் முன் திருமணம்

வேண்டாமென்றீர்கள் – எங்களுக்கு

மூப்பெய்தும் முன்பாவது திருமணம் நடக்குமா?

-என்றும் கேட்பது பல குடும்பங்களின் எதார்த்த நிலையாகும்.

 

ஃபாத்திமா (ரலி) அவர்களின் சீரிய திருமணம் :-

உலக முஸ்லிம்களின் அனைவரும் தங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் பின்பற்றியொழுகும் நபிகளாரின் வாழ்வில் “திருமணம்” செய்தல் – செய்வித்தலுக்கும் அழகிய முன்மாதிரி உண்டு. ஹள்ரத் ஃபாத்திமா (ரலி) அவர்களின் திருமண நிச்சயம், மஹர்தொகை, அன்பளிப்புகள் ஆகியவை குறித்து முஹத்திஸ் ஷைகு திஹ்லவீ (ரஹ்) அவர்கள் தங்களின் “மதாரிஜூன் நுபுவ்வத்” – நூலில் விளக்குகிறார்கள்.

ஹள்ரத் ஃபாத்திமா (ரலி) அவர்கள் பருவமெய்தி, பதினைந்து வயது பூர்த்தியான போது, முதலில் ஹள்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் நபிகளாரிடம் “தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி பெண் கேட்டார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் பதிலி “இறைவனின் முடிவை எதிர்பாருங்கள்” – எனக் கூறிவிட்டனர். இவ்வாறே இதன்பின் ஹள்ரத் உமர் (ரலி) அவர்களும் “தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி”- வேண்டினார்கள். நாயகம் (ஸல்) அதே பதிலைக் கூறிவிட்டனர். இதன் பின்னர் தான் ஹள்ரத் அலீ (ரலி) அவர்களின் குடும்பத்தினரில் சிலர், அலி (ரலி) அவர்களுக்கு “நீங்கள் பெண் கேளுங்கள் நாயகம் மணமுடித்துத் தருவார்கள்” – என ஆலோசனை வழங்கினர். ஒரு சில அறிவிப்புகளில் அலி (ரலி) அவர்களுக்கு இந்த ஆலோசனையை  ஹள்ரத் அபூபக்கர் உமர் (ரலி) இருவருமே வழங்கியதாகவும் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் “அவர்களை விட பொருள் வலிமை மிகவும் குன்றிய நிலையில் உள்ள நம்மை நாயகம் தேர்வு செய்ய மாட்டார்கள். எனும் சிந்தனையில் இருந்தார்கள். எனினும் பால்யப் பருவத்திலிருந்தே நாயகத்தோடு மார்க்க ரீதியான தொடர்பு இருப்பதாலும், நாயகத்தின் பெரிய தந்தையின் மகன் என்ற வகையில் சகோதர உறவு முறை இருப்பதாலும் நிச்சயமாய் நாயகம் மணமுடித்துத் தருவார்கள் – என்று தூண்டப்பட்டதால் பெண் கேட்க முடிவு செய்தார்கள்.

ஒன்றிரண்டு முறைகள் நபிகளாரின் திருச்சமூகம் வருவதும், வெட்கத்தால் வார்த்தைகள் வெளிவராது திரும்பிச் செல்வதுமாயிருந்த ஹள்ரத் அலி (ரலி) அவர்களின் இந்த வித்தியாசமான நிலையை – முகத்தை வைத்தே அகத்தை அறிவதில் பேராற்றல் பெற்ற பெருமானார் (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டதில் வியப்பில்லை.

 

“அலியே” திருமண சம்பந்தம் கேட்க வந்துள்ளீர்களோ?” – என நாயகம் கேட்டபோது வெட்கத்தின் விளிம்பில் முகம் சிவந்து “ஆம்” – என்றார்கள் அலியவர்கள் அப்போது …

 

ஃபாத்திமாவை மணம்புரிய உங்களிடம் ஏதேனும் மஹர் உண்டா? என்று நபி (ஸல்) வினவினார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! என்னிடம் ஏதுமில்லை – என்றார்கள். உங்களிடமிருந்த உருக்குச் சட்டையை என்ன செய்தீர்கள்? – என்று கேட்டார்கள் நபியவர்கள். அதற்கு அலியவர்கள் “ அது உடைந்த பொருள் அது நான்கு திர்ஹம் கூட விலை மதிப்புப் பெறாதது – என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் ஃபாத்திமாவை உனக்கு அந்த உருக்குச் சட்டை (விலைக்) கே மணமுடித்துத் தருகிறேன் இந்நிகழ்ச்சி ஒரு சில அறிவிப்புகளில் இன்னமும் நீள்கிறது.

 

அந்த கவசச் சட்டையை அலி (ரலி) அவர்கள் விற்பனைக்கு சபையில் முன் வைத்தபோது – அப்போது ஓரளவு செல்வமும் ஹள்ரத் அலீ (ரலி) அவர்களின் திருமணத்தில் அக்கறையும் கொண்டிருந்த ஹள்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் சுமார் 450 திர்ஹம் கொடுத்து அதை வாங்கினார்கள். பின்னர் அதே உருக்குச்சட்டையை திருமண அன்பளிப்பாய் வழங்கிக் கூறினார்கள்

 

“ஹஸனின் தந்தை (அலி) அவர்களே ! உம்மைவிட இந்த உருக்குச் சட்டைக்கு நான் தகுதியற்றவனில்லை. மேலும் என்னைவிட நீங்களே திர்ஹத்திற்கு தகுதியானவர்கள்”.

இவ்வார்த்தைகளில் முன்னர் அதை வாங்கிக்கொண்டு பணம் வழங்கியதற்கும் பின்னர் – வாங்கிய பொருளை திருப்பி வழங்கியதற்கும் காரணத்தை அழகுற விளக்கி விட்டார்கள்.

 

இத்தொகையை மஹராகப் பெற்ற நபி (ஸல்) அவர்கள் அதில் சொற்பத்தொகையை ஹள்ரத் பிலால் (ரலி) அவர்களிடம் கொடுத்து நறுமணப் பொருட்களை வாங்கி வரும்படியும், மீதத்தை ஹள்ரத் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் வழங்கி, பாத்திமாவின் விட்டுச் சாமான்கள், உணவு, உடை, உறையுளுக்குத் தேவையான பொருட்களை வாங்குமாறும் கூறினார்கள். பின் நாயகமே திருமணத்தை நடத்திவைத்து, முடித்தார்கள்.

( நூல் : மதாரிஜுன் நுவுவ்வத் )

 

இதுவே அகில உலகின் வழிகாட்டியான அருமை நாயகத்தின் இல்லத் திருமணம் இத்திருமணத்தின் பெண் பார்க்கும்  நிகழ்விலிருந்து திருமண முடிவு வரை எந்த ஒரு இடத்திலும் பெண் வீட்டினர் எந்த ஒரு செலவையும் ஏற்கவில்லை – என்பது நன்கு கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.

சீர்வரிசைச் சீர்கேடுகள் :-

ஒரு காலத்தில் “சீர்வரிசை” – எனும் பெயரில் பெண்ணுக்கு சில அத்தியாவசிய பொருட்களை வழங்கி அனுப்பும் பழக்கம் இன்று “சீதனப்பேய்” – எனுமளவுக்கு கட்டாயச் செலவாய் உருமாற்றப்பட்டிருக்கிறது.

மேலும் அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கும் தங்கள் மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு “சீதனப் பொருட்கள்” – வழங்கினார்கள் என்று கூறப்படுவதும் சரியல்ல. அது சீதனமல்ல எனும் கருத்து பல நூற்களில் இடம் பெற்றுள்ளது.

 

ஹள்ரத் அலி (ரலி) அவர்களின் இரும்புக் கவசத்தை விற்று வந்த தொகையில் சில பொருட்களை வாங்கிக் கொடுத்து தம்பதிகள் இருவரையும் நாயகம் குடியமர்த்தினார்கள். காரணம் ஹள்ரத் அலி (ரலி) சிறிய வயதிலிருந்தே நாயகம் (ஸல்) அவர்களோடு எல்லா நிலைகளிலும் தொடர்பு கொண்டவர்கள். குறிப்பாக, அலியவர்களின் தந்தை அபூதாலிப் அவர்களின் மரணத்திற்குப் பின் நாயகம் (ஸல்) அவர்கள் தான் அலி (ரலி) அவர்களுக்கு சகல நிலைகளிலும் பொறுப்பாளராய் இருந்தார்கள். எனவே ஃபாத்திமாவுக்காகப் பெற்ற மஹரில் ஒரு குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை நாயகம் வழங்கியது அலி (ரலி) அவர்களின் பொறுப்பாளர் என்ற முறையில் தான். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டால் – நாயகம் “பெண் வீட்டார்” – என்ற ரீதியில் எந்த சீரோ, சீதனமோ செய்யவில்லை என்பது புலனாகும்.

 

இது மட்டுமல்ல இஸ்லாமிற்கு முன்பும் அரபு மக்களிடையே பெண்ணுக்கு சீதனம் கொடுக்கும் பழக்கம் இல்லை. மாறாக இஸ்லாம் வலியுறுத்துவதற்கு முன்பிருந்தே அரபுலகத்தில் மணப்பெண்ணுக்கு மஹர் தொகை வழங்கி வந்துள்ளனர் என்று வரலாற்று நூற்கள் கூறுகிறது. ஒருவேளை ஃபாத்திமா (ரலி) அவர்களின் திருமணத்தின் போது வழங்கப்பட்ட பொருட்கள் சீதனமாக இருந்திருந்தால் ஃபாத்திமாவுக்கு மூத்த சகோதரிகளுக்கும் நாயகம் (ஸல்) ஏதேனும் சீதனம் வழங்கியிருப்பார்கள். ஆனால் நபிமொழிகளிலும், வரலாறுகளிலும் அவ்வாறு வழங்கியதாக சான்றுகள் இல்லை.

 

ஆனால் இன்றைய சீர்வரிசைகளை எண்ணிப் பாருங்கள். கரண்டியில் தொடங்கி கட்டில் மெத்தை வரை, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், சில வீடுகளில் மாப்பிள்ளைக்கு வாகனம், இன்னும் சில வீடுகளில் குடித்தனம் நடத்த வீடு என வசதிகளுக்கேற்ப சீதனப்பட்டியல் நீள்கிறது. இது மட்டுமின்றி, “வைத்துக் கொடுக்கப்படும் ரொக்கப்பணம்” வேறு தினக்கூலிகளுக்குக் கூட பதினைந்தாயிரம் இருபதாயிரம் எனத் துவங்கி படித்தவர்களாக இருப்பின் அவர்களின் பட்டங்களுக்கேற்ப இலகரங்களாகவும் கோடிகளாகவும் பேரம் பேசப்படும் இழிநிலை தொடர்கிறது.

 

இஸ்லாத்தின் மிக உயர்ந்த கொள்கை கோட்பாடுகளை பிற சமயங்கள் பார்த்து வியந்து அதன் வழியில் செயல்படுகிறார்கள். ஆனால் உலகில் சிறந்த பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை தன்னகத்தே கொண்டுள்ள இஸ்லாமிய மார்க்கத்தின் இளவல்கள் பிற சமயங்களில் கூட ஒதுக்கப்பட்ட சில “சாக்கடை” – விஷயங்களை ஏற்றுச் செயல்படுகிறார்கள் என்பது தான் வேதனைக்குரிய விஷயம். கொடுமை என்னவெனில், நாட்டின் சில ஊர்களில் பள்ளிவாசல்களுக்கு நன்கொடை எனும் பெயரில் வரதட்சணை பணத்திலிருந்து ஒரு சதவீதத்தை மாப்பிள்ளை வீட்டாரிடம் வசூலித்து – இந்த பணத்தை பள்ளிவாசலுக்குச் சேர்த்து, பள்ளியின் பரிசுத்தத்தை களங்கப்படுத்துவதும் நடக்கிறது.

 

பெருகும் தற்கொலையும் சிசுக்கொலையும் :-

வரதட்சணைக் கொடுமையால் ஒரு குடும்பம் ஒன்றாய் தற்கொலை செய்து கொள்வதையும், வளர்ந்தால் வரதட்சணை தரவேண்டுமே என்றெண்ணி கர்ப்பத்திலுள்ளபோதும், பிறந்த பின்பும் கூட சிசுக்களை கொல்லும் கொடூரமும், இன்றளவும் தொடர்வதைக் காண்கிறோம்.

 

நாயகம் (ஸல்) வருகைக்கு முன்பிருந்த பெண் குழந்தையை “உயிருடன் புதைத்தல்” – எனும் கொடிய பாவம் இன்றும் ஒரு சில மாற்றங்களுடன், புதிய யுக்திகளுடன் நடைபெற்றுக் கொண்டு தானிருக்கிறது. 1500 ஆண்டுகட்கு பின்னரும் இன்னும் மெளட்டீகம் தொலைந்த பாடில்லை.

 

ஊரே உறங்கும் நள்ளிரவிலும் பெண்ணைப் பெற்ற தாயொரு பக்கம், தந்தையொரு பக்கம், உறக்கமின்றி மன உளைச்சலாலும் சுமைகளாலும் தவிக்கின்றனர். தன் மகள் வயதை ஒட்டிய பல பெண்களுக்கு திருமணமாகும்போது இவர் வீட்டில் தேங்கி நிற்கிறாளே எனும் பெருங்கவலை வயது அதிகமாகிக் கொண்டே போவதின் துக்கம், இவையெல்லாம் மனதில் பாரமாய் அழுத்தும் ஒரு குடும்பத்திற்கு உறக்கம் எங்கிருந்து வரும்.

 

கண்ணீரை வரவழைத்த கடிதம் :-

லக்னோவிலுள்ள நத்வதுல் உலூம் அரபிக் கல்லூரியின் முன்னால் முதல்வரும் அகில  இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் முதுபெரும் தலைவருமான அல்லாமா அபுல்ஹஸன் அலி நத்வி             ( அலிமியான் ) அவர்கள் தமக்கு வந்த கடிதமொன்றை படித்து முடித்து அழுவார்கள். அவர்களை அழவைத்த கடிதம் நான்கு குமர்களை வீட்டில் வைத்திருந்த ஒரு தந்தை எழுதியது.

 

“கண்ணியமிகுந்த முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர் அவர்கட்கு எனக்கு நான்கு பெண்மக்கள். நால்வருமே பருவமெய்தி திருமணத்திற்கு காத்திருக்கிறார்கள். உணவுக்கே சிரமப்படும் என்னிடம் ஒரு குமர் அல்ல பாதிக் குமருக்குத்தான் பணமுண்டு. வரதட்சணை வளர்ந்து வரும் இந்நாளில் எல்லோரையும் மணமுடித்துக் கொடுக்க முடியும் எனும் நம்பிக்கை முற்றாக தளர்ந்து விட்டது. எனவே எங்களுக்கு என்ன வழி என்று தெரிவியுங்கள். தாங்கள் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைவராக இருப்பதால் ஷரீஅத் நூல்களை ஆராய்ந்து “எங்கள் குடும்பத்தின் தற்கொலைக்கு அனுமதி உண்டா? என்று தயை கூர்ந்து தெரிவியுங்கள் – எனும் வாசகத்தையுடைய இக்கடிதம் – இச்சமுதாயம் தீவிரப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய அவசரமும் அவசியமும் நிறைந்ததாகும்.

 

தீர்வைத் தேடுவோம் :-

இஸ்லாமியத் திருமணங்களில் முற்றிலுமாக வரதட்சணை களையப்பட வேண்டுமானால் மார்க்கத்தின் முதுகெலும்புகளான இளைஞர்கள் மனம் வைத்து களமிறங்கினால் நிச்சயம் இது ஒழிக்கப்படும். ஆங்காங்கே நாட்டின் சில பகுதிகளில் வரதட்சணை இல்லாத “சீர்திருத்தத் திருமணங்கள்” – நடைபெறுவது செவிக்கினிய செய்தியாகும்.

 

இதுபோன்ற திருமணங்கள் தொடரும் பட்சத்தில் பிற சமயங்களைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவ இது ஓர் பெருங்காரணமாக அமையும்.

வரதட்சணை ஒழிப்போம் ! இஸ்லாமிய மேன்மையை உணர்த்துவோம் !

 

 

News

Read Previous

இது விற்பனைக்கு அல்ல !

Read Next

சுன்னத் செய்வதன் நன்மைகள் ஆய்வு முடிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *