வந்தவர்

Vinkmag ad
வந்தவர் 
எஸ் வி வேணுகோபாலன் 
வரை நேரில் பார்க்க வேண்டும் என்று இரண்டு நாட்களாகத் தோன்றிக் கொண்டே இருக்கிறது. நாங்கள் இல்லாத போது வந்து போயிருந்தார் வீட்டுக்கு.
ஆயிற்று, அது ஒன்றரை ஆண்டுகளுக்கு முந்தைய கதை. வீடு தேடி வந்த மனிதர் கைப்பொருள் ஒன்றை வைத்துவிட்டுப் போயிருந்தது அப்புறம் கண்ணில் பட்டது,  எடுத்து வைத்த இடத்தில் அப்படியே இருக்கிறது. – பார்த்தால், அவரது உபயோகத்திற்கு அவரிடமே அதைச் சேர்த்து விடலாம். எப்படி அவரைத் தேடுவது.
அவரை இதற்குமுன் பார்த்தது இல்லை. நம்மைத் தேடி வரும் பலரையும் நாம் அதற்குமுன் பார்த்திருக்கிறோமா என்ன… கொள்ளுப் பாட்டி சொல்லிக் கொண்டிருப்பாள் அந்தக் காலத்தில், எமன் வந்து, ‘என்னம்மா போகலாமா’ என்று கேட்டதாகவும், ‘அட போடா, என்ன அவசரம், யாரும் கெடைக்கலன்னு இங்க வந்தியான்னு’ விரட்டி அனுப்பியதாகவும். அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கல்லு மாதிரி இருந்தாள், சட்டென்று போய்விட்டாள் என்றும் அப்பா பின்னர் அடிக்கடி சொன்னதுண்டு. ஆனால், இப்படி முன் தகவல் எதுவும் கொடுக்காமல் என் அம்மா இளவயதில் இறந்தது பற்றிய செய்தியை  ஓர் இலக்கியத் தரத்தில் அப்பா சொல்லும்போது கேட்கும் யாருக்கும் கண் கலங்கும்.
வீட்டுக்கு வந்தவர் கதையைப் பேசும்போது எமன் நினைவுக்கு வருவானேன் என்றால், ‘சரியான எமன் சார் அவரு’ என்று பக்கத்து அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன் பழனி  சொன்னது ஒருவேளை காரணமாக இருக்கக் கூடும். வந்தவர் அவரிடமும் பிடி கொடுக்கவில்லை.
இது பத்தாவது முறை வீடு மாற்றிக் குடி புகுந்த இடம். ஏதாவது காரணம் கிடைக்கிறது, வீடு மாற்றுவதற்கு. முன்பு திருவான்மியூரில் இருக்கும்போது கூட இதே போல் தான் வீட்டில் நாங்கள் இல்லாத சமயம் யாரோ வந்து போனார் என்றார்கள். இங்கே இந்த வீட்டுக்கு வந்து போனவர் தானா அவர் என்று தோன்றியது.
திருவான்மியூரில் வசித்தது, பஸ் ஸ்டேண்டு அருகே பழைய காலத்து ஹவுசிங் போர்டு குடியிருப்பில் இருந்த ஒரு வீடு. நாங்கள் இருந்தது கீழ்த்தளம். தண்ணீருக்கு மிகவும் கஷ்டப்பட்ட காலத்தில் தான் அங்கே வாழ்ந்தது.
நாங்கள் இருந்த பிளாக்கில் கிட்டத்தட்ட எல்லாம் பகலில் பூட்டியிருக்கும் வீடுகள் தான். வீட்டில் எல்லோரும் வேலைக்கோ, கல்விக்கோ அலைந்து கொண்டிருந்தவர்கள். எங்கள் வீட்டுக்கு அருகே மாடிப் படிக்கட்டு இருக்கும். முதல் மாடியில்  எங்கள் தலைக்குமேல் உள்ள வீட்டில் தான் இந்திரா குடும்பம் குடியிருந்தது. மிகவும் எளிமையான, துடியான மனிதர் இந்திரா வீட்டுக்காரர். இந்து பேப்பரை,எடுத்தால் முதலில் குறுக்கெழுத்துப் போட்டி வந்திருக்கும் பக்கத்தைத்தான் எடுத்துப் பிரிப்பார். கொஞ்சம் துணிச்சல்கார மனிதர். என்றோ ஒரு நாள் வழக்கம் போல் அலுவலகத்திற்குச் சென்றவர் எதையோ எடுக்க  தற்செயலாக வீடு திரும்பி இருக்கும் வேளையில் தான் அவரைப் பார்த்திருக்கிறார்.
குழந்தைங்க படிப்புக்காக அங்கிருந்து மாம்பலத்திற்கு மாறி, அடுத்து கோடம்பாக்கத்திற்கு வந்து குடி புகுந்து இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. அங்கே திருவான்மியூரில் பார்க்க விட்டவரா இங்கே வந்தவர் என்று தெரியவில்லை. ஏதோ தோன்றியது, இந்திரா வீட்டுக்காரர் சொன்ன சாயலும், வெகுளித் தனமும், அப்படியே இங்கே பழனி வருணித்த அடையாளமும் ஒத்துப் போவது மாதிரி தான் தெரிந்தது.
வாட்ச்மேன் பழனி வீட்டுக்கு வந்தவர் முகத்தைச் சரியாகப் பார்க்கவில்லை.  இருட்டில் முகம் சரியாகத் தெரியவில்லை அவருக்கு. அதெப்படி அங்கே பகல் நேரத்தில் வந்தவர் இங்கே இருட்டு கலையாத விடியலுக்கு முந்தைய பொழுதில் வந்திருப்பார் என்று கேட்க முடியாது. அவரவர்க்கு அவரவர் அவசரம். நாம் என்னத்தக் கண்டோம்.
ன்று காலையில் எழுந்திருக்கும் போதே மீண்டும் கண்ணில் பட்டது, வீட்டுக்கு அவசர அவசரமாக வந்துவிட்டுப் போனவர் விட்டுவிட்டுப் போன கைப்பொருள். முறுக்கேறிய நல்ல தடித்த இரும்புத் துண்டு, முனையில் கொஞ்சம் மழுங்கிப் போயிருந்தது.
வெளியே வெளிச்சத்தில் பார்க்கலாம் என்று வாசல் பக்கம் வந்து நிற்கையில், பேப்பர் பையன் பக்கத்து அப்பார்ட்மெண்ட் உள்ளிருந்து இங்கே வழக்கம்போல் வீசப் பார்த்தவன், என்னைப் பார்த்ததும் மதிலுக்குக் குறுக்கே பேப்பரைக் கையில் கொடுத்துவிட்டுப் போனான்.
நல்ல பையன். முன்பெல்லாம், வெளியூர் போகும்போது நாலு நாளைக்கு பேப்பர் வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போவது உண்டு. ஆனால், நண்பர் ஒருவர், நாம் ஊருக்குப் போவது ஊர் முழுக்கத் தெரிய வேண்டாம், அப்படியே ஆள் மாறி ஆள் காதுக்குப் போய், பூட்டின வீட்டுல கைவரிசை காட்டுறதுக்குன்னு அலையுற  ஆளுங்களுக்குத் துப்பு போயிரும் என்று ஆலோசனை சொல்லி இருந்தார். அந்த முறை பெங்களூர் போகும்போது சொல்லவில்லை. மூன்று நான்கு நாள் பேப்பர் வாசல் நடையில் விழுந்தது விழுந்த மாதிரியே இருந்திருக்கிறது. அதுவும் ஒரு க்ளூ தானே, வீட்டில் ஆளு இல்லன்றதுக்கு !
பொதுவாக பெங்களூர் பயணம் ரயிலில் தான். முன் கூட்டியே ரிசர்வ் செய்யாமல் புறப்படுவது கிடையாது. அங்கே மைத்துனர் வீட்டுக்குத்தான் போய்வருவது. அந்த முறை ஆர் ஏ சி தான், கடைசி நாள் எப்படியும் கன்ஃபார்ம் ஆகிவிடும் என்று நினைத்தது எனக்கு மட்டும் கவிழ்த்துவிட்டது,  ராஜிக்கும், மகன் நந்தாவுக்கும்  பெர்த் கிடைத்து, எனக்கு பக்கத்து பெட்டியில் வேறொரு பயணியோடு பகிர்வு இருக்கை தான் வாய்த்தது. அதுவும் நல்லதுக்குத் தான் என்று விடியற்காலை வாட்ச்மேன் மூன்று மணிக்கு அழைத்தபோது தான் தெரிந்தது.
வீட்டுக்கு வந்தவரைப் பற்றி பழனி அசராமல் அழைத்துச் சொன்னார். அப்போது வண்டி திருவள்ளூரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அந்த விடியற்காலையில் வீட்டுக்கு வந்தவரை பக்கத்து அப்பார்ட்மென்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் ஏதோ சத்தம் கேட்டுத்தான் வந்து பார்த்துப் பேசி அனுப்பி இருக்கிறார். அப்படியே எனக்கும் மிகுந்த பொறுப்போடு அழைத்து தாக்கல் கொடுத்தார்.
“பெங்களூர்ல இருக்கீங்களா, ஊருக்கு எப்ப வருவீங்க அய்யா?” என்றார்.
“இல்ல பழனி, சென்னைக்குத் தான் வந்துட்டிருக்கோம், இன்னும் ரெண்டு மணி நேரத்துல வீட்டுக்கு வந்துருவேன், ஒண்ணும் பிரச்சனை இல்லியே…வந்து பேசிக்கலாம்” என்று சொல்லி முடித்துக் கொண்டேன்.
பெரம்பூரில் இறங்கி ஆட்டோவில் சீக்கிரம் போயிரலாம் என்று பக்கத்துப் பெட்டியில் இருந்த மனைவியை அலைபேசியில் அழைத்துச் சொன்னேன். எந்த அவசரத்திலும் அப்படி இறங்கியதில்லை. அன்று ஏதோ தோன்றியது, பேசின் பாலத்தில் வண்டி கொஞ்சம் நின்னு தாமதம் ஆகலாம் என்று சொன்னதை, பெரம்பூரில் இறங்கி வெளியே வரும்போது நந்தா ஏற்றுக் கொள்ளவில்லை.
“மெயில் எப்பவும் கரெக்ட் நேரத்துக்குப் போயிரும் பா… அழகா அங்கே போய் ஓலா புக் பண்ணிப் போயிருக்கலாம்” என்று சலித்தபடி எனது பெட்டியையும்  வாங்கிக் கொண்டு படிக்கட்டுகளில் வேகமாக ஏறலானான். ஒன்றும் சொல்லிக் கொள்ள நேரமில்லை.
ஸ்டேஷன் வாசலில்  நாங்களாகத் தேடுமுன் தாமாக வந்து நின்ற ஆட்டோக்காரர் ‘இருநூற்று ஐம்பது கொடுங்க சார், போதும்’ என்று அழைத்து மூவரையும் ஏற்றுக் கொண்டு வேகமாகப் பறந்தார். நான் யோசித்துக் கொண்டே இருந்தேன், வீட்டுக்கு வந்தவரைப் பற்றி.
பூந்தமல்லி நெடுஞ்சாலை புகுந்து, சேத்துப்பட்டு வழியாக ஸ்டெர்லிங் ரோடு திரும்புகையில், பழனி மீண்டும் அழைத்தார்.
“தோ….இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவோம்…அவங்க இருக்காங்களா இன்னும்?” என்று கேட்டேன்.
“பொறுமையா வாங்க, அவங்க போயிட்டாங்க, நீங்க வந்ததும் கால் பண்ணச் சொன்னாங்க ” என்றார் பழனி மறுமுனையில்.
கவனித்த ராஜி, “யாரு இத்தனை காலையில…?” என்றாள்.
“சொல்றேன். யாரோ வீட்டுக்கு வந்துட்டுப் போயிருக்காங்க…பழனி தான் பாத்திருக்கார்…சொல்றேன்” என்றேன்.
ஆட்டோ வீட்டு வாசலில் நின்றபோது, வீட்டு வாசலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. எப்போதும் ஊருக்குப் போகும்போது வாசல் விளக்கு எரியவிட்டுப் போவது வழக்கம்தான். எங்கள் வீடு, தெருவில் இருந்து சற்று உள்ளடங்கிய தனி வீடு. அறுபது அடி நீள் பாதை கடந்து தான் வீடு. வெளி வாசல் கதவு திறந்தே இருந்தது.
பைகள், பெட்டியெல்லாம் ஆட்டோவில் இருந்து இறக்கி எடுத்துக் கொண்டு நுழையும்போது, “இத்தனை வருஷத்தில் ஊரிலிருந்து திரும்பறப்ப சாவி யார் கிட்ட இருக்குன்னு இருட்டில் துழாவித் தேடித் திறந்து போகும் கஷ்டம் இன்னிக்கு இல்ல, நல்ல மனுஷன் கதவைத் திறந்து கொடுத்துட்டுப் போயிருக்கார்” என்று சொன்னேன் ராஜியிடம்.
அதைக் கவனிக்காமல் அம்மாவும் மகனும் வேகமாக வீட்டை நோக்கி உள்ளே செல்லவும், உள்ளே எல்லா விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தது, வீட்டினுள் பழனி நின்று கொண்டிருந்தார்.
“ஒண்ணும் போகல சார்….போயிருக்காது….சத்தம் கேட்டு நான் குரல் கொடுத்தேன்….ஆளு உஷாராயிட்டான்…ஓடிட்டான்…எதுக்கும் உள்ள ஏதாவது எடுத்திருக்கானா என்னன்னு பாக்கச் சொன்னாரு போலீஸ்காரு….வந்து பாத்துட்டு இப்பதான் போனாங்க…இந்த நம்பர் கொடுத்துக் கூப்பிடச் சொன்னாரு…ரெண்டு போலீஸ் வந்தாங்க, வாசல்ல வண்டி ரவுண்ட்ஸ் போச்சு, சட்டுன்னு குரல் கொடுத்து நான் தான் கூப்பிட்டு எல்லாம் சொன்னேன்…” என்றார் பழனி.
“ஓஹோ…இது தான் உங்க பாஷையிலே வீட்டுக்கு ஒருத்தர் வந்திருக்கார்னு சொன்னதா” என்று கடிந்து கொண்டு உள்ளே போய்ப் பார்த்தாள் ராஜி. எல்லாம் போட்டது போட்ட மாதிரி இருந்தது. எதுவும் மிஸ் ஆகவில்லை என்றாள். நானும் ஒரு தடவை இரண்டு அறைகளையும் உள் சென்று மெதுவாக எல்லாம் பார்த்து உறுதி செய்து கொண்டேன், வந்தவர் ஓர் அறைக்குள் தான் சென்று ஒன்றும் எடுக்குமுன் வெளியேறி இருக்கிறார்.
“எதுவும் போகல பழனி….எல்லாம் பத்திரமா இருக்கு” என்றேன்.
“நான் தான் சொன்னேனே, குரல் கொடுத்ததும் ஆள் எஸ்கேப் “என்று சிரித்தார் பழனி.
காவல் துறையினர் கொடுத்த எண்ணுக்கு அழைத்து, “சார், வந்துவிட்டோம்…நான் தான்..ஆமாம்..ஆமாம்.. அந்த வீடு தான்…நீங்க வர்றீங்களா?” என்றேன்.
வாசலில் பால் பாக்கெட் வந்துவிட்டது அதற்குள்.
“பழனிக்கு காஃபி போட்டுத் தர்றேன், எவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்காரு…என்னா துணிச்சல்…” என்று சமையலறைக்குள் போனேன்.
பழனி அதற்குள் நடந்ததை இரண்டாவது முறையாக விவரிக்க ஆரம்பித்தார். இரண்டரை, மூன்று மணி இருக்கும், ஆள் முன் கதவுப் பூட்டை இலகுவாகக் கழற்றி எடுத்துவிட்டு, உள்ளே கிரில் கேட் பூட்டையும் பதம் பார்த்து, தேக்கு மரக்கதவை இரும்புக் கம்பி கொடுத்து நெம்பி அரித்து, நைட் லேட்ச் பூட்டை அழகாக விலக்கித் திறந்து கொண்டு உள்ளே போயிருக்கிறார். படுக்கை அறையினுள் அலமாரி திறக்க எத்தனிக்கையில் ஆயுதம் பட்டு அதில் பதித்திருந்த நிலைக் கண்ணாடி படாரென்று உடைந்து சத்தம் கொடுத்து, பக்கத்து அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன் பழனியை உசுப்பி விட்டது. அவரும் அந்த நேரம் பார்த்துத்தான் குறுக்கும் நெடுக்கும் அங்கே நடந்திருக்கிறார், அவரது படுக்கையில் படுத்திருந்த நேரமென்றால்  நிச்சயம் காதில் விழுந்திருக்காது.
இதெல்லாம் விஷயமில்லை. சத்தம் கேட்டு, பழனி அங்கிருந்தே குரல் கொடுத்திருக்கிறார். டார்ச் அடித்துப் பார்த்தால், கதவு திறந்திருப்பது கண்ணில் பட்டிருக்கிறது…. ஆஹா…திருடன்…அச்சத்தில் கத்தவும் முடியாமல், உள்ளே சுவர் ஏறி வரவும் துணியாமல் சாமர்த்தியமாகக் குரல் மட்டும் கொடுத்திருக்கிறார். யாரோ எவனோ எத்தனை பேரோ… என்னென்ன ஆயுதம் வச்சிருப்பானோ என்று சட்டென்று சுதாரித்துக் கொண்டிருக்கிறார்.
“சார்….நான் ரெண்டு தடவ சத்தம் கொடுத்ததும், ஆளு வெளியே வந்தான்…இருட்டுல ஒண்ணும் புரியல…கருப்பா செவப்பா தெரியல…..நீ யாருன்னு என்னைக் கேக்கறான்…பார்றா….யோவ் நான் இங்க வாட்ச்மேன் அப்படின்னேன்…நானும் வாட்ச்மேன் தான் புதுசா போட்ருக்காங்க அப்டின்னான்…அப்புறம் உதட்ல கைய வச்சு உஷ் அப்டின்னு ஜாடை காமிச்சான்…’சத்தம் கொடுக்காத…விசில் கொடுக்காத…நானே கொடுக்கறேன்’ அப்டின்னு…உஸூ …உஸூ ன்னு விசில் கொடுக்கிற மாறி நடந்து உங்க வீட்டு சைடு பக்கம் எங்கோ இருட்ல மறைஞ்சிட்டான் சார்..எந்தப் பக்கம் போனான், எங்க குதிச்சி காணாம போனான்னு தெரியல சார்” என்றார் பழனி.
ராஜி பிரமித்துப் போய்ப் பார்த்தாள் அவரை….குட்டையான இந்த மனிதர், மெலிய உடல், இலேசான வழுக்கை, பெரிய மீசை….அசாத்தியமாக எப்படி இன்றைய பொழுதை நமக்கு காப்பாற்றிக் கொடுத்து விட்டார்….
அதற்குள் காவல் துறையினர் இருவர் வந்து நிறைய கேள்விகள் கேட்டனர்.
‘சார் ஓண்ணும் போகல இல்ல…அத மட்டும் எழுதிக் கொடுத்துருங்க எஸ் ஐ கேப்பாங்க… கம்ப்ளெயிண்ட் எல்லாம் வேஸ்ட்…எதுவும் மிஸ் ஆகலேன்னா விட்ருங்க அப்படியே’ என்றனர். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போய்விட்டனர் இருவரும்.
அறையினுள் மீண்டும் போய் எல்லாம் பார்த்துவிட்டு வெளியே வருகையில் ‘பெட் மேலே இந்த இரும்பு இருந்துதுப்பா’ என்று நந்தா கொண்டு வந்து கொடுத்தது தான் அந்த முறுக்கேறிய முனை மழுங்கிய தடித்த கம்பி.  வந்த ஆசாமியை நினைத்தால் மிகவும் வெகுளியான, இன்னும் நேர்த்தி பழகாத, ஆனால் நெடுநாளாகத்  தொழிலில் இருப்பவராக ஒரு சித்திரம் தோன்றியது.
இந்திரா வீட்டுக்காரர் இப்படியான ஆளைத்தான் திருவான்மியூர் வீட்டில் பிடித்தது. கீழே எங்கள் வீட்டுக்கு வந்து நெம்பிப் பார்த்துத் திறக்க முடியாமல், மாடி வீட்டுக்குப் போய், தப்புந் தவறுமாகக் கம்பியைக் கைப்பிடித்து பூட்டை நெம்புகையில் தனது கையில் தானே குத்தி இரத்தம் சிந்துவது கூட அறியாமல் வேலையில் முனைந்து இருந்த அந்த பகல் நேரத்தில்தான் பிடிபட்டார் அவர். பின்னர் இந்திரா வீட்டுக்காரர்  காவல் நிலையத்திற்கு ஆட்டோ பிடித்து ஆளைக்  கொண்டு தள்ளியபோது, அன்று முற்பகலில் தான் விடுதலை ஆனவர், எங்கோ போய்த் தண்ணி அடித்துவிட்டுத் தனது தொழிலில் உடனே இறங்கவும் பிடிபட்டு விட்டார் என்று தெரிந்தது.
யாராக இருக்கும், பரிதாபத்திற்குரிய அந்த நபர்….ஒரு போதும் தொழிலில் வெற்றி பெறும் நேர்த்தியற்ற தடுமாற்றத்தில் பாதிவேலையில் சிக்குவது அல்லது தோற்றுப் பின்வாங்கி ஓடுவதுமான வாழ்க்கை என்ன வாழ்க்கை…இதற்கும் மோசமான ஒரு நிலையில் இருந்து தானே அந்த கதிக்கு வந்து விழுந்திருப்பார் மனிதர்…
வெளிச்சத்தில் மீண்டும் கம்பியை உற்றுப் பார்த்தேன். எப்போது எழுந்தாள் என்று தெரியவில்லை, திரும்பிப் பார்த்தால் ராஜி நின்று கொண்டிருக்கிறாள் அருகில்.
“என்ன தர்மதுரை அவர்களே, என்ன யோசனை காலையிலேயே? ” என்றவள், கையில் இருக்கும் பொருளைப் பார்த்ததும், “என்ன, அந்த நல்லவனைத் தேடிக்கண்டு பிடித்து அவன் சொத்தை அவன் கிட்டே ஒப்படைக்கணும் அதானே?” என்றாள்.
ஒன்றும் பதில் சொல்லவில்லை நான்.

News

Read Previous

வாக்காளர்களை ஏமாற்றும் தேர்தல் முறை

Read Next

பரிவினால் பாரினில் பரிமளிக்கும் பாங்குடை தாதியர் தினம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *