ரமலான்

Vinkmag ad

ரமலான்

இச.இ.அ. ஷாஹுல் ஹமீது

ரமலான் மாத பிறையைப் பார்த்து நோன்பைத் தொடங்குங்கள். அதே போன்று ஷவ்வால் மாதப் பிறையைப் பார்த்த பிறகு நோன்பை நிறைவு செய்து கொள்ளுங்கள். ரமலான் மாதப் பிறையைப் பார்ப்பதை உங்கள் மீது வானத்தில் மேகம் சூழ்ந்து மறைத்துக் கொள்ளுமானால் ஷஃபான் மாதத்தை முப்பது நாளாகப் பூர்த்தியாக்கிக் கொள்ளுங்கள். அதற்கு அடுத்த நாள் ரமலான் நோன்பைத் தொடங்குங்கள். காரணம் சந்திர மாதத்தில் முப்பது நாட்களை விட அதிக நாளுடைய மாதமாக எந்த ஒரு மாதமும் வர முடியாது. முப்பது நாட்களாகவும், இருபத்தி ஒன்பது நாட்கள் உள்ளதாகவும் தான் சந்திரனைக் கொண்டு கணக்கிடப்படும் மாதங்கள் வரும் என்பதாக நமது மாநபி முஹம்மது (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்.

புனித மிகு ரமலான் மாதம் தொடங்க இருப்பதை முஸ்லிம்களுக்கு அறிவிக்கும் முகமாக ரமலான் தலைப் பிறை வானில் தென்படுவதைக் கண்ணுரும் ஒவ்வொரு முஸ்லிமும் அகமகிழ்ந்து முக மலர்ச்சியுடன் கண்ணியமிக்க ரமலான் தலைப் பிறையை நம்மைக் காணச் செய்த வல்ல அல்லாஹ்வைப் புகழும் முகமாக ‘அல்லாஹு அக்பர்’ என்று மூன்று முறை கூறிய பிறகு ஓத வேண்டிய துஆ:

‘யா அல்லாஹ் ! இதனை எங்களுக்கு பரக்கத், ஈமான், சாந்தி, இஸ்லாம் ஆகியவற்றைக் கொண்டுள்ள பிறையாக ஆக்கிவிடுவாயாக. இன்னும் நீ விரும்புகின்ற பொருந்திக் கொள்கின்றதைச் செய்வதற்கு எங்களுக்கு நல் உதவி செய்யக் கூடிய பிறையாக ஆக்கிவிடுவாயாக. (பிறையே!) என்னுடைய இரட்சகனும், உன்னுடைய இரட்சகனும் அல்லாஹ்தான். இதனை நன்மையின் நேர்வழியின் பிறையாக ஆக்கிவிடுவாயாக ! யா அல்லாஹ், இந்த மாதத்தின் நன்மையிலிருந்தும் இந்த ஏற்பாட்டின் நன்மையிலிருந்தும் உன்னிடத்தில் நான் கேட்கிறேன். இதனுடைய தீமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இந்த இருளின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். ரமலான் பிறையே ! உன் மீது சாந்தியும், சமதானமும் உண்டாவதாக !” எனக் கூறி வரவேற்க வேண்டும்.

ரமலான் பிறையைக் கண்டு சலாம் கூறி வரவேற்ற பிறகு வழமை போல் மஃக்ரிப் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். மஃக்ரிப் நேரத்திலிருந்தே புனித ரமலான் மாதம் தொடங்கி விடுவதன் காரணமாக ரமலான் மாதத்தின் முதல் பகுதி ரஹ்மத் (அருளாக – கிருபையாக) தாகவும், அதன் நடுப்பகுதி மஹ்பிரத் (பிழை பொறுத்தல், பாவமன்னிப்பு) தாகவும், இறுதிப் பகுதியானது இத்கும் மினன்னாரி (நரக நெருப்பிலிருந்து விடுதலை) அளிப்பதாகவும், ரமலான் மாதம் அமைந்துள்ளது என நமது மாநபி நாயகம் (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள் என ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ரமலான் மாதத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் பொருத்தமான மூன்று வித துஆவை ஐந்துவேளை தொழுகையின் போது ஓதும் துஆவுடன் இவைகளையும் இணைத்து ஓதி வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும்.

ரமலான் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் அடங்கிய முதற்பகுதியில் வழமையான துஆவுடன் இணைந்து ஓத வேண்டிய துஆ:

அல்லாஹும்ம மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்

பொருள் : அல்லாஹ்வே ! கிருபையாளர்களுக்கெல்லாம் மாபெரும் கிருபையாளனே ! உன்னுடைய கிருபையில் நின்று எங்கள் மீது உனது அருளைப் பொழிவாயாக ! என்று ரஹ்மத்தை நாடிய நிலையில் துஆச் செய்ய வேண்டும்.

இரண்டாவது பத்து நாட்கள் அடங்கிய நடுப்பகுதியில் வழமையான துஆவுடன் இணைத்து ஓத வேண்டிய துஆ:

அல்லாஹு மங்ஃபிர்லனா துனூபனா வ க(த்)தாயானா குல்லஹா யாரப்பல் ஆலமீன்

பொருள் : அல்லாஹ்வே ! அகிலத்தாரின் இரட்சகனே ! எங்களுடைய பாவங்களையும், எங்களுடைய தவறுகளையும், குற்றங்களையும் மன்னித்து உமது அருளைப் பொழிவாயாக ! என்று பாவமன்னிப்பை நாடிய நிலையில் துஆ செய்ய வேண்டும்.

கடைசிப்பத்து நாட்கள் அடங்கிய இறுதிப் பகுதியில் வழமையான துஆவுடன் இணைத்து ஓத வேண்டிய துஆ:

அல்லாஹும்ம மஃத்திக்னா மினன்னாரி வ அத் கில்னல் ஜன்னத்தி யாரப்பல் ஆலமின்

பொருள் : அல்லாஹ்வே ! அகிலத்தார் அனைவரின் இரட்சகனே ! எங்களை நரகத்திலிருந்து விடுதலை செய்வதுடன் இன்னும் எங்களை சொர்க்கத்திலும் நுழையச் செய்து அருள் புரிவாயாக ! என்று நரக நெருப்பிலிருந்து விடுதலை பெறுவதை நாடிய நிலையிலும் துஆச் செய்ய வேண்டும். ரமலான் மாதம் தொடங்கும் மக்ஃரிப் தொழுகையிலிருந்து ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் பொருத்தமான இத்துஆக்களை ஒவ்வொரு தொழுகையையும் நிறைவு செய்த பிறகு ஓதி அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொள்ள முயல வேண்டும்.

கடைசிப் பத்து நாட்கள் அடங்கிய இறுதிப் பகுதியில் ஒற்றைப் படையான ஓர் இரவில் 21,23,25,27,29 ஆகிய ஐந்து இரவுகளில் ஓர் இரவில் தான் புனித மிக்க லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்ள வேண்டும். லைலத்துல் கத்ர் இரவு ரமலான் மாதத்தின் இருபத்தேழாம் இரவில்தான் இருக்கிறது என பெரும்பான்மையான ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத்தாபியீன்கள் ஆகியோர்களின் கருத்தும் ஆகும்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நான் நாயகம் ரசூல் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே ! லைலத்துல் கத்ர் எந்த இரவு? என்பதாக எனக்குத் தெரிந்தால் அந்த இரவில் நான் எந்த துஆவை ஓதி அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும் எனக் கேட்டேன். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் அருளிய துஆ,

அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ

பொருள் : யா அல்லாஹ் ! நீ மன்னிப்பாளன், நீ மன்னிப்பை விரும்புகிறாய். ஆகையால் நீ என்னை மன்னித்து அருள்புரிவாயாக ! என அல்லாஹ்விடம் லைலத்துல் கத்ர் இரவில் இந்த துஆவை இணைத்து இறைஞ்சுதல் ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒன்றாகும்.

 

( நர்கிஸ் – ஜுன் 2015 இதழிலிருந்து )

News

Read Previous

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

Read Next

என்ன செய்யலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *