”முத்துக் கவிஞருடன்” – முத்தான சந்திப்பு……

Vinkmag ad

முத்துப்பேட்டையில் 15.8.1922 ல் பிறந்த முத்துக்கவிஞரும், சுதந்திர போராட்ட தியாகியுமான ஜனாப். முகம்மது ஷேக் தாவூது அவர்களை, குட்டியார் பள்ளி வாசல் அருகேயுள்ள அவருடைய இல்லத்தில் அந்தி சாயும் வேளையில் சந்திக்கும் வாய்ப்பினை ஏக இறைவனாகிய அல்லாஹ் எனக்கு ஏற்படுத்தி தந்தான். எல்லாப்புகழும் இறைவனுக்கே..

அவருடைய குடும்பம் பற்றி.. முத்துக்கவிஞருக்கு இரண்டு ஆண் மகனாரும், நான்கு பெண் மகள்களும் உள்ளனர். பேரன்கள் நான்கு பேரும், பேத்திகள் இரண்டு பேரும் உள்ளனர். அத்துடன் கொள்ளு பேத்தி இரண்டும் உள்ளார்கள்.

அவருடைய வாழ்க்கை பயணத்தின் சிலவற்றிலிருந்து…  

உணவு பொருள் பதப்படுத்தும் நிறுவனத்தினை இவருடைய மாமா அவர்கள் பர்மாவில் நடத்திக்கொண்டு இருந்தார். அவருக்கு உதவியாக இருப்பதற்காக தன்னுடைய 20ம் வயதில் இவர் பர்மா சென்றார். பர்மாவானது அப்போது பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களுக்கு உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யும் பொறுப்பினை மாமாவுடன் சேர்ந்து முத்துக்கவிஞர் அவர்களும் செய்துக்கொண்டு இருந்தார்.

அந்த வேளையில், யுத்த நிதி மற்றும் தேசிய இராணுவப்படை அமைப்பதற்காக பர்மா வந்த சுபாஷ் சந்திர போஸ் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சுதந்திரம் பற்றி பேசினார். இதில் கவரப்பட்ட முத்துக்கவிஞர் அவர்கள் 1943ல் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தார்.

சுதந்திர நாடகம் போடுதல், பிரசார பாடல்களை எழுதி பாடுவது இவரின் சதந்திர போராட்ட தாகமானது ஆரம்பானது. இவருடைய இத்தகைய செயல்களை கண்ட சுபாஷ் சந்திர போஸ் இவரை பாராட்டி முதுகில் தட்டினார். சுபாஷ் சந்திர போஸ் தட்டிய அந்த தருணத்தினை எண்ணி இன்றும் மகிழ்ச்சியாக இருக்கிறார் முத்துக்கவிஞர் அவர்கள். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கமானது இவரை, பர்மாவில் உள்ள பைனகோம், மாதர்பஸ்தி, கடோ போன்ற சிறைச்சாலைகளில் இவருக்கு தண்டனை கொடுத்து இருந்தது. அங்கு 16 மாதங்கள் சிறையில் இருந்தார்.

தமிழ், இந்தி, உருது, பர்மா மொழி, கிரேன் மொழி (பர்மாவில் ஒரு பகுதியில் உள்ள மொழி) சிங்களம் போன்ற மொழிகளை இவர் பேசுவார். இந்தி மற்றும் உருது மொழியினை சரளமாக பேசுவார். மற்றும் சீனா மொழி சிறிய அளவிற்கு இவருக்கு தெரியும்.

தமிழ்ப்பத்திரிகை, சிங்கள பத்திரிகை, உருது பத்திரிகை போன்றவற்றில் இவருடைய படைப்புகள் வெளிவந்து உள்ளன. 1943 ஆண்டு டிசம்பர் மாதத்தில் பர்மா ரங்கூனிலிருந்து வெளி வந்த ”ரசிக ரஞ்சனி” என்ற இதழில் இவர் எழுதிய ”வென்று கூடி வாழுவதே” என்ற சுதந்திரப்பாடலானது மிகவும் பிரபலமாக இருந்தது அப்போது.

பல சஞ்சிகைகள் இவர் இல்லத்திற்கு வருகிறது, உதாரணத்திற்கு ரஹ்மத் என்ற இதழும், திருநெல்வேலியிலிருந்து, இஸ்லாமிய கலைஞரான திங்கள் வெளியிட்டின் அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமிய புனித பயணம் என்ற இதழும் தொடர்ந்து இவரின் வீடு தேடி வருகிறது.

எழுத்து, முதலெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, குறில், நெடில், வல்லெழுத்து, மென்னெழுத்து, இடையெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து, சுட்டெழுத்து, வினாவெழுத்து போன்றவற்றிற்கு ”இன்பத்தமிழ் இலக்கணம்” என்ற நூலை எழுதியதற்காக அமெரிக்க கலிபோர்னியாவில் உள்ள உலக கலை பண்பாட்டு அமைப்பானது கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. 5.1.68 ஆண்டில் ”இந்திய தூதன்”; என்ற பத்திரிகையில் இவருடைய இன்பத்தமிழ் இலக்கணமானது தொடராக வெளிவந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்பத்தமிழ் இலக்கண நூலானது இனம், நிறம், மதபேதமின்றி தமிழை பேசுவோர் கற்போர் அனைவருக்கும் மிகுந்த பயனை நல்கியது.

சிறந்த நாட்டு பற்று, தேசிய உணர்வு, தமிழ் பற்று, மொழி பற்று மிக்க இவரை பாராட்டி மத்திய அரசும் மாநில அரசும் பல பட்டயங்களையும், கேடயங்களையும், பாராட்டு பத்திரங்களையும், சான்றிதழ்களையும்  முத்துக்கவிஞருக்கு மனமுவந்து வழங்கி உள்ளது.

27.11.99 மற்றும் 28.11.99 அன்று முத்துப்பேட்டை புதுத்தெருவில் நடத்த இஸ்லாமியத்தமிழ் இலக்கிய கழகத்தின் மாநாட்டிலும் முத்துக்கவிஞருக்கு சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல அறிஞர்கள் பெருமக்கள் கலந்துக்கொண்டனர். குறிப்பாக இலங்கையைச் சார்ந்த பன்னூல் ஆசிரியர் மானா மக்கீன் அவர்களும் கலந்துக்கொண்டார். மானா மக்கீன் அவர்கள் ”முத்தான முத்துப்பேட்டை” என்ற புத்தகத்தினை வெளியிட்டு உள்ளார் என்பதினை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இவரும் முத்துக்கவிஞரினை தனிப்பட்ட முறையில் பாராட்டி கடிதம் ஒன்றும் கொடுத்து உள்ளார்.

இலக்கிய மன்றங்களும், மூத்த குடிமக்கள் இயக்கமும், மற்றும் உள்ள தொண்டு நிறுவனங்களும் இவரை பாராட்டி பல சான்;றிதழ்களை வழங்கி வருகிறது. இன்னும் பல விருதுகளையும், சிறப்புகளையும் முத்துக்கவிஞர் அவர்கள் பெற்று முத்துப்பேட்டைக்கு சிறப்பினை சேர்க்க வேண்டி இறைவனிடம் பிராத்தனை செய்வோமாக.. 
அபு ஆஃப்ரின்     
najiraf@gmail.com, najiraf@yahoo.com

News

Read Previous

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால்…சிக்கல்

Read Next

வெளிச்ச வாசல்

Leave a Reply

Your email address will not be published.