மறை நீர்

Vinkmag ad
marai neer.JPG
நீரின்றி அமையாது உலகு,  மூன்றாம் உலகப்போர் நீருக்காக ஏற்படும்….
இப்படி யாரோ சொன்ன, எங்கோ படித்தவற்றை சொல்லிக் கொண்டிருக்கும் நமக்கு நீரைப்பற்றி என்ன தெரியும்? நீரைப்பற்றி நமக்கிருக்கும் அறிவின்மையை, அறிதலின் போதாமையை நமக்கே காட்டி அதிரவைக்கும் நீர்க்கண்ணாடி இது.
ஒரு கப் காப்பி தயாரிக்க எவ்வளவு தண்ணீர் தேவை? அதற்கான பதிலில் நாம் அறிந்து கொள்ளலாம் நீர் குறித்த நம் புரிதலை.
கோ.லீலா.. நீர் ஆதாரப் பொறியாளராக, தமிழ்ப் பற்றாளராக, சமூக நீதி காப்பவராக, காடுகளின் அக்கறையாளராக, அழகியல் உணர்வு கொண்ட கவிஞராக..இப்படி இவரைப்பற்றிய குறிப்பு விரிகிறது. அதில் என்னை ஈர்த்த இரண்டு .. இவர் தஞ்சாவூர் என்பதும், நீர்வளத் துறையில் பெரும் பொறுப்பில் இருப்பவர் என்பதும்.
தஞ்சையில் ஏழெட்டு ஆண்டுகள் இருந்த எனக்கு இன்றைய தஞ்சையை, காவிரியைக்காண கண்ணீர் வருகிறது.  தஞ்சைக்காரருக்கு எப்படி இருக்கும்..நம்மைப் போன்றவர்கள் கவிதை எழுதலாம். பொறுப்பில் இருக்கும் இவரைப் போன்றவர்களால்தான் செயல்படுத்த முடியும். நல்ல வேலை, கைநிறைய சம்பளம் என்று இருந்துவிடாமல், பிரச்சினையின் தீவிரம், தீர்வு என்று ஆக்கபூர்வமாக செயல்படும் லீலா அவர்களுக்கு வாழ்த்துகள்.
16அத்தியாயங்கள், 120பக்கங்கள்.. மறைநீர் என்றால் என்ன, நீர்த்தடங்கள், பழந்தமிழரின் நீர்மேலாண்மை, தண்ணீரை எப்படியெல்லாம் வீணாக்குகிறோம், நுகர்வு கலாச்சாரம் அதன் அரசியல் என படிக்கும்போது ஒருவித பதைபதைப்பு நம்மை பற்றிக் கொள்கிறது.
பழைய திரைப்படங்களில் நாயகனோ, நாயகியோ கொளுத்தும் வெயிலில் களைத்து வருபவர்கள் ஆற்றிலோ, குளத்திலோ தண்ணீரை அள்ளிக் குடிப்பார்கள்..இன்று அதை நினைத்து பார்க்க முடியுமா..கால் வைக்கக்கூட முடியாதபடி கழிவு நீராக மாறிக்கிடக்கிறது.
சேலத்தின் திருமணிமுத்தாறு..ஒருகாலத்தில் அதன் கரையிலுள்ள அழகிரி நாத பெருமாளுக்கு அபிஷேக நீராக இருந்தது என்பதை இன்றையத் தலைமுறை நம்பாது. திருமணிமுத்தாறின் அவலம் பார்த்து கவிஞர் சேலம் தமிழ்நாடன் “நாயைக் கொன்றவனுக்கு தண்டனையுண்டு நதியைக் கொன்றவனுக்கு தண்டனையில்லையா?” என்பார்.தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்பது தமிழ் மரபு. இன்று அந்த உணர்விலிருந்து விலகி குடிமராமத்தில் அந்தந்த பகுதி மக்களின் பங்களிப்பின்றி அரசுக்கானதாக மாறியதில் நீர்நிலைக்கும் மக்களுக்குமான பிணைப்பு, நெருக்கம் இல்லாமல் போனதை சுட்டிக்காட்டுகிறார். தஞ்சாவூரில் எங்கள் பகுதியில் காவிரியில் நீர் திறந்துவிடும்போது அவரவர் வீட்டிற்கு எதிரில் இருக்கும் வாய்க்கால்களில் முள்செடிகள் அகற்றி, தூர்வாரி, கரையை பலப்படுத்தி வைப்பார்கள். இன்று காவிரியே காட்டும் குழியுமாக காணப்படுகிறது.
எதிர்காலத் தலைமுறைக்கு நாம் கையளிக்கவேண்டியது பணமோ, பொருளோ அல்ல. இயற்கை வளத்தை, வாழத்தகுந்த பூமியை என பொட்டிலடித்தாற்போல சொல்கிறது இந்நூல்.
படைப்பு-சமூகத்தின் இணைப்பு என சமூகத்துடன் தன்னைப் பிணைத்துக் கொண்ட படைப்பு குழுமம் வெளியிட்ட இந்நூல் இதன் முக்கியத்துவத்தை உணர்த்துவது போல பரவலான கவனத்தை,விருதுகளைப் பெறுவது மகிழ்ச்சி தருகிறது.
பொருள் படைத்தவர்கள் இந்நூலை வாங்கி பள்ளிமாணவர்களுக்கு பரிசளிக்கலாம்.படித்தவர்கள் ஆசிரியர் குறிப்பிடும் தீர்வுகளை முடிந்தவரை கடைபிடிக்கலாம்.
வெளியீடு:
*****
படைப்பு பதிப்பகம்,
8,மதுரைவீரன் நகர்,
கூத்தப்பாக்கம்,
கடலூர்,தமிழ்நாடு
607 002.
விலை-₹150/-
பேச:94893 75575.

News

Read Previous

முதுகுளத்தூர் ஆஸ்பத்திரியில் ஆய்வு

Read Next

அவமானம் ஒரு மூலதனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *