மரணதண்டனை மனித உரிமை மீறலா?

Vinkmag ad

 

-மவ்லவீ ஹாஃபிழ் அ. சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ

 

இன்றைய உலகில் மரணதண்டனை தேவைதானா? என்பது உலக விவாதப்பொருளாக விளங்குகிறது. கொடுமையான குற்றம் புரிந்த குற்றவாளிக்கு உலகம் முழுவதும் மரணதண்டனையானது தூக்கு தண்டனையின் மூலமாகவோ, விஷ ஊசியின் மூலமாகவோ, மின்சார நாற்காலியின் மூலமாகவோ, கழுத்தை துண்டிப்பதின் மூலமாகவோ, விஷ வாயுவின் மூலமாகவோ, பண்டைய கால மரபுகளின் மூலமாகவோ நிறைவேற்றப்படுகிறது. இவை யாவும் மரணதண்டனைகளின் குறியீடுகளாக அமைந்திருக்கின்றன.

திருமணமான ஆணோ, பெண்ணோ விபச்சாரம் புரிந்து விட்டால், அவர்களை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. ‘கல்’ என்பது இங்கே மரணதண்டனையின் குறியீடாக அமைந்திருக்கிறது.

இத்தகைய மரண தண்டனைகள் தேவை தானா?

உயிரை கொடுத்த இறைவன் தானே உயிரை எடுப்பது நியதி. மரண தண்டனையால், மனித உரிமைகளை பறிப்பது நியாயமா? மனித நேயமாகுமா? மனித உரிமை மீறலாகாதா? போன்ற கேள்விக்கணைகள் நம் காதுகளை துளைக்கின்றன.

2007ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மன்றம் மரண தண்டனையின் குறியீடாகிய தூக்கு தண்டனைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை முன் வைத்த போது, அதை 104 நாடுகள் ஆதரித்து கையெழுத்திட்டன. இந்தியா உட்பட 39 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. ஐ.நா. தீர்மானத்தின் படி உலகின் 90 சதவீத நாடுகள் தூக்கு தண்டனையை ரத்து செய்து விட்டன.

கடுங்குற்றவாளிக்கு வழங்கப்படும் தூக்கு தண்டனை அது தண்டனையாகவே அமையாது. ஏனெனில் தூக்கின்போது ஒரு சில நிமிடங்களில் குற்றவாளியின் உயிர் பிரிந்து விடுகிறது. அதிலே வேதனையும் சீக்கிரம் அடங்கி விடுகிறது. எனவே அவனை வாழ்நாள் முழுவதும் தனிமைச் சிறையில் அடைக்க வேண்டும்; அதனால் அவன் அனுதினமும் அணு அணுவாக வேதனையை அனுபவிப்பான். இதுதான் தூக்கு தண்டனையை விடவும் மிகக் கொடியது. ஆதலால், தூக்கு தண்டனையை ரத்து செய்து விட்டு, ஆயுள் முழுவதும் தனிமைச் சிறையில் அடைக்க வேண்டும் என சில அறிவு ஜீவிகள் அறிக்கை விடுகின்றனர்.

இஸ்லாம் வழங்கும் மரண தண்டனை முதல் மற்ற தண்டனைகள் வரைக்கும், குற்றவாளிகளை தண்டிப்பதற்கும், அவனால் பாதிக்கப்பட்டவர்களை மன ஆறுதல் படுத்துவதற்கும், மற்றவர்களை திருத்துவதற்கும் தான் நிறைவேற்றப்படுகின்றன.

கொடுங்குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பதில் இஸ்லாம் தயக்கம் காட்டுவது கிடையாது. மரணதண்டனையை இஸ்லாம் ஆதரிப்பதன் மூலம் மனித நேயத்தை காப்பாற்றுகிறது. இஸ்லாம் வழங்கும் மரணதண்டனையின் மூலம் ஒரு மனித உயிரைக் கொல்வது நோக்கமல்ல. பல உயிர்களை பாதுகாப்பது தான் பிரதான நோக்கமாகும். ஓர் உயிரைப்பற்றி கவலைப்படும் அறிவு ஜீவிகள், அதனால் பல உயிர்கள் பறி போவதைப்பற்றி கவலைப்படுவதில்லை. ஓர் உயிரைப் பறிப்பது பற்றி இஸ்லாம் கவலைப்படுவதில்லை.

இஸ்லாம் மனித உயிர்களை மதித்துப் போற்றியது போன்று வேறெந்த மதமும் போற்றியது கிடையாது.

ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள், வாழ்வில் ஒரே தடவை ஹஜ் செய்தார்கள். அதற்கு ‘ஹ்ஜ்ஜதுல்வதாஃ’ உலகை விட்டு விடைபெறும் ஹஜ் என்று சொல்லப்படுகிறது. அந்த ஹஜ்ஜில் துல்ஹஜ் 10 ஆம் நாள் அன்று மக்களுக்கு இறுதிவரையும், பேருரையும் நிகழ்த்தினார்கள். “இது எந்த ஊர்? இது எந்த மாதம்? இது எந்த நாள்?” எனத் தோழர்களிடம் கேட்க, இம்மூன்றுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேறெந்த பெயர்களையாவது சூட்டப் போகிறார்களோ, என்னவோ என நினைத்த தோழர்கள் இம்மூன்றைப் பற்றியும் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் திருத்தூதரும் நன்கறிவர் என பதிலுரைத்தார்கள். “இது புனித மக்கா ஊர்; இது புனித துல் ஹஜ் மாதம்; இது புனித 10 ஆம் நாள் ஆகும். இந்த ஊரில், இந்த மாதத்தில், இந்நாளில் போர் செய்து, இரத்தம் சிந்துவதை தடுக்கப்பட்டிருப்பது போன்றும், அவை கண்ணியப்படுத்தப்பட்டிருப்பது போன்றும், உங்களுடைய உயிர்களும், உடைமைகளும், மானங்களும், கண்ணியம் வாய்ந்தவை. அவற்றை உரிய காரணமின்றி பாழ்படுத்துவதை இறைவன் தடை செய்திருக்கிறான்” என நபி (ஸல்) அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார்கள். மனித உயிர்களையும், உடைமைகளையும், மானங்களையும் புனிதமாக்கி, புனித மக்காவுடனும், புனித மாதத்துடனும், புனித பெருநாள் தினத்துடனும் உயர்வாக உவமைப்படுத்தியிருக்கிறார்கள்.

“(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க, நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்”

-அல்குர்ஆன் (17:33)

மரண தண்டனை நிறைவேற்றப்படும் குற்றங்களில், விபச்சாரத்தை தவிர மற்றவையில் குற்றவாளிக்கு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மன்னித்தும் விடலாம் அல்லது நஷ்ட ஈடு வாங்கிக் கொண்டும் விட்டு விடலாம் என இஸ்லாம் சட்டத்தை கொஞ்சம் தளர்த்தி விடுகிறது.

“ஈமான் கொண்டோரே ! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவனுக்குச் சுதந்திரமானவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கி)ய கொலையுண்டவனின் வாரிசுகளால் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப்பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திட வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த சலுகையும், கிருபையும் ஆகும்.”

-அல்குர்ஆன் (2 :178)

“எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்.”

-அல்குர்ஆன் (5: 45)

“எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவரின் வாரிசுக்கு (பதிலுக்குப் பதிலோ, மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம். ஆனால் கொலையி(ன் மூலம் பழி வாங்குவதி)ல் வரம்பு மீறக் கூடாது. நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப்பட்டவராவார்.”

மரண தண்டனையை நிறைவேற்றுவதின் அவசியம்

“அல்லாஹ்வுடனும், அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்கு தண்டனை இது தான்; (அவர்கள்) கொல்லப்பட வேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும் அல்லது மாறுகால் மாறுகை வாங்கப்பட வேண்டும் அல்லது நாடு கடத்தப்பட வேண்டும்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுண்டு”.

-அல்குர்ஆன் (5 :33)

“அவர்களுக்கு நாம் அ(தவ்ராத்)தில், உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு (ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாகப் பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்”.

-அல்குர்ஆன் (5 :45)

சரி: அல்குர்ஆன் கூறும் கண்ணுக்குக் கண் போன்றவற்றிற்கு பழி வாங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்வோம். உயிருக்கு உயிர் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என சில அறிவு ஜீவிகள் கேட்கிறார்கள். இந்த தண்டனையின் மூலம் இழந்த உயிரை மீட்க முடியுமா? முடியாதே, பிறகு ஏன் மரண தண்டனை? இழந்ததை மீட்பது இஸ்லாமியக் குற்றவியல் தண்டனையின் நோக்கமல்ல. இருக்கும் உயிரை இழக்காமலிருக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும். தண்டிக்கப்பட வேண்டியதின் காரணங்கள்.

1.குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனை தடுக்க வேண்டும்.

2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு  மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.

3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும், அவன் மன நிறைவு அடைய வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது. விபச்சாரக் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையை பிற மக்கள் நேரில் பார்த்து, திருந்த வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.

“இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்”.

-அல்குர்ஆன் (24 :2)

மரணதண்டனை கைதி விஷயத்தில் மனித உரிமை

மீறாத மாமனிதர்

ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தான் விபச்சாரம் புரிந்து விட்டதாக சுயவாக்கு மூலம் அளித்தாள். மேலும் அதற்குரிய மரண தண்டனையை தமக்கு வழங்குமாறும் முறையிட்டாள். அவள் கர்ப்பிணி என்பதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் குழந்தையை பெற்றெடுத்து விட்டு வரும்படி வேண்ட, குழந்தையை பெற்றெடுத்த கையோடு அண்ணலாரின் அவைக்கு வந்தாள். குழந்தையின் பால்குடியை மறக்கடித்து வரும்படி நபி (ஸல்) அவர்கள் வேண்ட, குழந்தை பாக்ல்குடியை மறந்து, கையில் ரொட்டித் துண்டை வைத்து கடித்து சாப்பிடும் நிலையில் அப்பெண் வந்தாள் குழந்தையை அனாதையாக விட முடியாது என நினைத்த கருணை நபி (ஸல்) அவர்கள் குழந்தையை பொறுப்பேற்கும் நபர் யார்? எனக்கேட்க, ஓர் அன்சாரித்தோழர் அதை ஏற்றுக் கொண்டார். பிறகு அப்பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. எவ்வளவு கால அவகாசங்களை வழங்கி மனித உரிமைகளை நபி (ஸல்) அவர்கள் பேணினார்கள். இஸ்லாம் கூறும் தண்டனைகள் மனிதர்களை நல்வழிப்படுத்துகின்றன என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

நன்றி :

குர்ஆனின் குரல்

ஏப்ரல் 2013

 

News

Read Previous

நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

Read Next

ஆப்ரஹாம் லிங்கனின் கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *