மனிதம் போற்றும் நாகூர் தர்கா !

Vinkmag ad

மனிதம் போற்றும் நாகூர் தர்கா !

மனிதம் போற்றும் ஆன்மீகத் தலங்கள் இன்றளவும் சிறப்புற்று விளங்கி வருகின்றன என்பதற்கு முதன்மைச் சான்று, மதநல்லிணக்க தலமான நாகூர் தர்கா ! மும்மத வழிபாட்டுத் தலங்களை கொண்டுள்ள நாகை மாவட்டத்தின் தலைநகருக்கு அருகே புகழ்ப் பெற்ற நாகூர் தர்கா அமைந்துள்ளது.

அற்புதங்களை நிகழ்த்திய மனிதப் புனிதர், மதங்களைக் கடந்து அருட்சேவையாற்றிய அருளாளர் மீரான் சாகிபு ஆண்டவர் என்னும் அப்துல் காதிறு ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகமான நாகூர் ஆண்டவர்.

அப்துல் காதிறு ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகமான நாகூர் ஆண்டவர், அயோத்திக்கு அருகே உள்ள மாணிக்காப்பூரில் செய்யது ஹசன் குத்தூஸ் – செய்யிதத்து பாத்திமா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். நாயகம் அவர்கள் வளர, வளர அவரது ஆன்மிகச் சிந்தனையும், அவரால் நிகழ்த்தப்படும் அற்புதங்களும் வளர்ந்து கொண்டே வந்துள்ளது. தமது 18-வது வயதில் குருவைத் தேடி குவாலியர் நகரை அடைந்த அவர், சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின்னர், மகான் முகமது கெளது அவர்களிடம் சீடராக சேர்ந்து, ஞான உபதேசம் பெற்றார். மகான் முகமது கெளது, தன்னுடைய சீடர்களுக்கும் உபதேசிக்கும் தலைமைப் பதவியை பாதுஷா நாயகத்துக்கு வழங்கினாராம்.

நாயகம் அவர்கள் தஞ்சை வந்த போது, அப்போதைய தஞ்சை மன்னன் அச்சுதப்ப நாயக்கன் (விஜய நகரப் பேரரசு காலம்) நோய் வாய்ப்பட்டிருந்தார். நாயகத்தின் வருகையை அறிந்த மன்னன், அவரை வரவேற்று அழைத்து வரச் செய்தார். தனது தவ வலிமையால் மன்னனின் நோயைப் போக்கினாராம் நாயகம்.

குணமடைந்த மன்னன் அளவற்ற காணிக்கையை நாயகத்துக்கு சமர்ப்பித்துள்ளார். அதை ஏற்க மறுத்த நாயகம், பிற்காலத்தில் தமக்கு சிறிது நிலம் தேவைப்படும். அப்போது கொடுத்தால் போதுமானது என்றார். பின்னர், நாயகம் நாகூர் வந்தடைந்த போது தன் நிரந்தர இருப்பிடத்தை அங்கேயே நிர்மானிக்க தீர்மானித்தாராம். தகவலறிந்த அச்சுதப்ப நாயக்க மன்னர் தனது மெய்க்காப்பாளர்களுடன் நாகூர் வந்து, 5 வேலி நிலத்தை நாயகம் அவர்களுக்கு எல்லையிட்டுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

நல்லிணக்கம் காணும் நாயகம்…

முதல் ஆண்டு கந்தூரி விழா தொடங்கிய போது நாயகத்தின் சீடர்கள் முன்கூட்டியே வந்தனர். நாகையைச் சேர்ந்த மீனவர்கள், நாகூர் ஆண்டவருக்கு சந்தனக்கூடும், சந்தனமும் அளிக்க அனுமதிக் கோரினார். நாயகம் அவர்கள் ஏற்கெனவே அறிவுறுத்தியபடி,

நாகை மீனவர்கள் சந்தனக்கூட்டை தயார் செய்தனர். நாயகம் அவர்கள் அருளியப்படி, மாற்று மதத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து சந்தனம் வந்தது. இன்றுவரை அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து கந்தூரி விழாவுக்கு சந்தனம் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.

இன்றும் சந்தனக்கூடு ஊர்வலம் நாகையிலிருந்து தொடங்கியே நாகூர் வந்தடைகிறது. ஆண்டு தோறும் கந்தூரி விழாவையொட்டி, ஏராளமான பக்கிர்மார்கள் நாகூர் வந்து தங்கியிருந்து, நாயகத்தின் சீடர்களின் நினைவாக காணிக்கைப் பெற்றுச் செல்லும் வழக்கமும் தொடர்கிறது.

மன்னர் இந்தத் தர்காவுக்காக 15 கிராமங்களை மானியமாக அளித்த பட்டயம், சிக்கா என்ற பெயரில் நாகூர் தர்காவில் உள்ளது. 5 அழகிய மனோராக்களைக் கொண்ட இந்த தர்காவின் 5-வது மனோரா 131 அடி உயரம் கொண்டது.

கந்தூரி விழாவின் தொடக்கமாக 5 மனோராக்களிலும் கொடி ஏற்றப்படும்.

இதில், ஒரு கொடி சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு குடும்பத்தாரால் ஆண்டு தோறும் அனுப்பப்படுகிறது. மற்றொரு கொடி அடியக்கமங்கலத்திலிருந்தும், 2 கொடிகள் நாகை ஜமாத்திலிருந்தும் வழங்கப்படுகிறது. மற்றொரு கொடி செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தாரால் வழங்கப்படுகிறது. இந்தக் கொடி செட்டிப்பல்லக்கு எனும் அலங்கார வாகனத்தில் கொண்டு வரப்படுவது வழக்கம்.

சென்னையில் ஜவுளித் தொழில் நடத்திய பழனியாண்டிப் பிள்ளை என்பவர் நாகூர் ஆண்டவரை வேண்டி, கடன் சுமையிலிருந்து மீண்டு தொழிலில் அபிவிருத்திக் கண்டாராம். இதற்கு காணிக்கையாக தர்கா அருகே 2 தர்ம சத்திரங்களை கட்டியுள்ளார்.

நாகூர் ஆண்டவரின் அடக்கத் தலத்திற்கு ஆண்டுக்கு ஒரு போர்வை மட்டுமே போர்த்தப்படுகிறது. தர்காவின் சந்தனம் பூசும் நிகழ்ச்சியின் போது அந்தப் போர்வை போர்த்தப்படும்.

மகான் நாகூர் ஆண்டவரை தரிசிக்க நாள்தோறும் தர்காவுக்கு வந்து செல்வோர் ஆயிரக்கணக்கானோரில், 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் முஸ்லிம் அல்லாத மாற்று மதத்தினர். இவர்களிலும் பெரும்பாலானோர் இந்துக்கள். நாகூர் ஆண்டவரின் சந்நிதியில் அனைவரும் சரிநிகர் சமமாகவே கருதப்படுகின்றனர். சாதி, மத வேறுபாடுகளுக்கு எள்ளளவும் இங்கு இடம் கிடையாது.

-எம். சங்கர்

( தினமணி – ஈகைப் பெருநாள் மலர் 2015 )

News

Read Previous

பாரத ரத்னா ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்த நாள்

Read Next

ஓ..முஹர்ரமே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *