பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல்

Vinkmag ad

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல்

மத நல்லிணக்கத்திற்கு சான்று !

முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானி ஹிஜ்ரி 535 ஆம் ஆண்டில் (கி.பி.1148) மதரசா தலைமைப் பொறுப்பை தன் மகன் ஹஜ்ரத் அப்துல்வஹாப்பிடம் ஒப்படைத்துவிட்டு உலகின் பல்வேறு பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இஸ்லாத்தை பரப்பும் பணியில் ஈடுபட்டார்.

இக்காலத்தில் முகைதீன் ஆண்டவர் மாலத்தீவு, இலங்கை, தென்னிந்தியா பகுதிக்கு வந்ததாகவும், தமிழகத்தில் தென்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் ராமநதி கரையோரத்தில் உள்ள பொட்டல்புதூருக்கு வருகை தந்ததாகவும் கூறப்படுகிறது.

ராமநதி ஆற்றில் அங்கத்தூய்மை (உளூ) செய்துவிட்டு முகைதீன் ஆண்டவர் அங்குள்ள சிறிய பாறையில் தொழுகையில் ஈடுபட்டார். அவர் தொழுகையில் ஈடுபட்ட இடத்தில் அவரது 2 பாதங்களும் அப்படியே பதிந்திருந்தன. இந்த இடத்தில் இருந்து அருள்பாலிக்க வேண்டும் என்பது இறைவனின் நாட்டம் போலும் என்பதை உணர்ந்த முகைதீன் ஆண்டவ, இவ்வூருக்கு அருகில் வாழ்ந்த சின்ன உமர் லெப்பை, பெரிய உமர் லெப்பை ஆகியோரின் கனவில் தோன்றி, தனது பாதங்கள் இருக்கும் இடத்தை தெரிவித்தார்கள்.

முகைதீன் ஆண்டவர்களின் பாதச்சுவடுகளை கண்டறிந்த சின்ன உமர், பெரிய உமர் லெப்பைகள், மழை, வெயிலில் இருந்து முகைதீன் ஆண்டவர்கள் பாதச்சுவடுகளை மறைப்பதாக கூரை வேய்ந்து பாதுகாத்து வந்தனர்.

இவ்வழியாக வந்த பெரியோர்கள், அரசர்கள், பிரபுக்கள் உள்ளிட்டோர் ஆண்டவர் கையின் அருளை அறிந்துகொள்ளும் வகையில் அற்புதங்கள் நிகழ்ந்தன. முகைதீன் ஆண்டகைக்கு நன்று செலுத்தும்விதமாக அங்கு கட்டடம் எழுப்பப்பட்டதாக இங்கு வசிப்பவர்கள் தெரிவித்தனர். இன்று பொட்டல்புதூரின் 8 ஏக்கர் பரப்பளவில் 2 மினாக்களுடன் முகைதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் கம்பீரத் தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் ரபியுல் ஆஹிர் பிறையில் முகைதீன் ஆண்டவர்களின் நினைவாக கந்தூரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ரபியுல் ஆஹிர் பிறை தொடக்கத்தில் அதாவது நிறைபிறை கொடி ஏற்றம் வைபவம் நடைபெறும்.

பிறைக்கொடி ஊர்வலமானது யானையில் முக்கிய வீதிகள், பிரதான சாலை வழியாக பள்ளிவாசலை வந்தடைந்ததும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவில் இரவணசமுத்திரத்தில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை பள்ளிவாசல் வந்தடையும்.

பிறை 11 ஆம் நாளில் பள்ளிவாசல் மூல ஸ்தானத்தில் சந்தனம் மெழுகும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று முன்னிரவில் பள்ளிவாசலில் எதிரே அமைந்துள்ள திடலில் தீப அலங்காரம் நடைபெறும். இந்த தீப அலங்கார நிகழ்ச்சியில் ஹிந்துக்களும் பெருமளவில் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கந்தூரி விழாவை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கந்தூரி விழாவில் ஹிந்துக்களும் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது மத நல்லிணக்கத்திற்கு சான்றாக நிகழ்ந்து வருகிறது.

-சா. ஷேக் அப்துல்காதர்

( தினமணி – ஈகைப் பெருநாள் மலர் 2015 )

News

Read Previous

கடல்

Read Next

அரசு கல்லூரியில் எழுச்சி தின விழா

Leave a Reply

Your email address will not be published.