பைத்துல் ஜகாத்

Vinkmag ad
அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
18. பைத்துல் ஜகாத்
இன்று ‘ஜகாத்’தை தனித்தனியாகக் கொடுத்து வருவதைப் பார்க்கிறோம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தனித்தனியாக ‘ஜகாத்’ கொடுக்கப்படவில்லை. அனைவரும் ‘ஜகாத்’ பொருளை நபிகளாரிடம் கொடுத்து அதை அவர்கள் மற்றவர்களுக்குப்  பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
‘ஜகாத்’ பெற தகுதி உடையவர் பட்டியலில் (திருக்குர்ஆன்-9:60 வசனம்) ‘ஜகாத்தை  வசூலிப்பவர் பெயரும் இடம் பெற்றுள்ளது.
மேலும், ‘(நபியே!) அவர்களுடைய செல்வத்தில் இருந்து தர்மத்தை (ஜகாத்தை) எடுத்துக் கொண்டு, அதைக்கொண்டு அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவீராக’ (9:103) என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான்.
இதன் மூலம் ‘ஜகாத்’தை கூட்டு முறையில்தான் கொடுக்க வேண்டும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
‘ஜகாத்’தைத் தனிப்பட்ட முறையில் கொடுக்கும் போது ஒருவரின் முழுமையான தேவையை நிறைவேற்ற முடியாமல் போகிறது.  கூட்டு முறையில் கொடுக்கும் போது ஒருவரின் முழுமையான தேவையை நிறைவேற்ற இயலும். கூட்டு முறையில் ‘ஜகாத்’தை வசூல் செய்வதால் அதைக்கொடுப்பவர்கள் ஆண்டுதோறும் தவறாமல் கணக்கிட்டு வழங்கும் நிலை ஏற்படும்.
தனித்தனியாக ஒவ்வொரு பணக்காரரும் ஏழைகளுக்கு நேரடியாக ‘ஜகாத்’ கொடுக்கும் பழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டால், சரியாகப் பகிர்ந்தளிக்கப்படாமல் அதன் நோக்கம் பாழாகி விடும். ஏழைகள் பற்றி தெளிவான தகவல்களைத் திரட்டி முறையாகப் பங்கீடு செய்யப் பணக்காரர்கள் எவரும் முன் வர மாட்டார்கள். சில சமயம் எல்லோரும் தங்கள் ‘ஜகாத்’ நிதியை ஒரே ஏழையிடமும் கொடுக்கவும் வாய்ப்பு உருவாகி விடும்.
மிகத்தேவையுள்ள ஏழைகளை விட்டு விட்டு, தேவை குறைந்த ஏழைகளுக்கு வழங்கிடும் சூழ்நிலை ஏற்படலாம்.
எண்ணற்ற பல நன்மைகள் இருப்பதாலும், இறைவனும், அவனுடைய திருத்தூதர் நபிகளாரும் கூட்டு முறையில் ‘ஜகாத்’தைக் கொடுக்க வலியுறுத்தியதாலும் நாமும் கூட்டு முறையில் ‘ஜகாத்’தை வசூலிக்க வேண்டும்.
மக்களிடம் இருந்து ‘ஜகாத்’ வசூலிக்கப்பட்டு, அதைப் பொதுநிதியில் சேர்த்து வழங்கும் முறையை இஸ்லாம் வகுத்துள்ளது; அதை வரவேற்கிறது. பொது நிதி கருவூலம் என்பது ‘பைத்துல் மால்’ எனப்படும். இந்தப் பைத்துல் மால்’ மூலம் ஜகாத்’ வழங்குவதை ‘பைத்துல் ஜகாத்’ என்பார்கள்.
‘பைத்துல் மால்’ மூலம் ‘ஜகாத்’ வழங்குவதால், ஜகாத்தைப் பெறுவோரின் சுய மரியாதையும் பாதுகாக்கப்படு கிறது.
தர்மத்தை மறைவாகக் கொடுப்பதையே இஸ்லாம் விரும்புகிறது.
‘நீங்கள் தர்மங்களை வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நன்றே; அவற்றை மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது (இன்னும்) உங்களுக்குச் சிறந்ததாகும்’ (2:271) என்று இறைவன் கூறுகின்றான்.
இறையருளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் பிறருக்கு ‘ஜகாத்’தை வழங்குகிறோம். இதன் நோக்கத்தை நாம் பாழ்படுத்தி விடக்கூடாது. நாம் யாருக்கு வழங்குகிறோமோ அவர் நமக்கு நன்றிக்கடன்பட்டிருக்க வேண்டும், நமது பெருமையைப் பேசுபவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஒருபோதும் ஏற்படக்கூடாது. பொருளை வழங்கிய பிறகு வசதியற்றோரின் சுய மரியாதையைப் பாதிக்கும் வகையில் அவர்களை இழிவுபடுத்தக் கூடாது.
‘எவர்கள் அல்லாஹ்வுடைய வழியில் தங்கள் பொருட்களைச் செலவு செய்த பின்னர், அதைத் தொடர்ந்து தாங்கள் செலவு செய்ததைச் சுட்டிக் காட்டி பேசாமலும், (மனம்) புண்படச் செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர் களுக்கு உரிய நற்கூலி அவர்கள் அதிபதியிடம் இருக்கின்றது. மேலும் அவர்களுக்கு எந்தவித அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்” என்று இறைவன் திருமறையில் (2:262) கூறுகின்றான்.
கூட்டு முறையில் ‘ஜகாத்’ வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை, அதிலிருந்து விடுபட்டு முன்னேற்றப் பாதையில் செல்லவும், பசி, பட்டினியில் இருந்து நிரந்தரமாக விடுபடவும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
தையல் தொழில், தச்சுத்தொழில் மற்றும் குடிசைத் தொழில் போன்ற சிறு தொழில்களில் ஈடுபாடு இருக்குமானால், அவர்களுக்கு அந்தந்த தொழில்கள் செய்ய போதிய நிதி உதவி வழங்கியோ, அவர்களின் தொழிலுக்குத் தேவையான கருவிகளை ‘ஜகாத்’ நிதியில் இருந்து வாங்கிக் கொடுத்தோ உதவலாம்.
அதேபோல ஒரு ஏழைக்கு வியாபாரம் செய்வதில்  ஆர்வம் இருக்குமானால் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கலாம்.
ஒரு ஏழை முதியவராகவோ, ஊனமுற்றவராகவோ, மனநலம் பாதிக்கப்பட்டவராகவோ இருந்து அதனால் எதுவும் செய்ய இயலாத நிலையில் இருந்தால், அவரது அத்தியாவசிய வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு நிரந்தர ஆண்டு வருமானத்திற்கு ஏற்பாடு செய்யலாம்.
ஆக தொழில் செய்ய தெரிந்தவர்களுக்கு அதற்கான மூலதனத்தை ‘ஜகாத்’ நிதியில் இருந்து வழங்கி அவர் களின் வாழ்க்கைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும்.
எதுவுமே செய்ய முடியாத ஏழைகளுக்கு அவர்களது அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக நிதி உதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
எனவே ‘ஜகாத்’ நிதியைத் திரட்டி, ‘பைத்துல் மால்’ என்னும் பொது நிதி கருவூலத்தில் சேர்த்து, பின்னர் ஏழைகள் குறித்து முறையாக கணக்கெடுத்து அவர் களுக்கு தேவைக்கேற்ப வழங்குவதே முறையானது.
இதற்காக ஒவ்வொரு ஊரிலும் ‘பைத்துல் மால்’ அமைப்பை அங்குள்ள மஹல்லா ஜமாத்தினர் ஏற்படுத்தி ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும். (‘மஹல்லா ஜமாத்’ என்பது அந்தந்த பகுதியில் உள்ள முஸ்லிம்  கூட்டமைப்பாகும்.) இதன் மூலம்,  இந்த ஆண்டு ‘ஜகாத்’ நிதி பெறுவோர், உழைத்து பொருளீட்டி அடுத்த வருடம் ‘ஜகாத்’ கொடுக்கும் நிலைக்கு உயர வேண்டும் என்பதே இஸ்லாம் வகுத்துள்ள இந்த ‘ஜகாத்’தின் நிலைப்பாடு ஆகும்.
(தொடரும்)

News

Read Previous

முதுகுளத்தூரில் பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு

Read Next

சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா

Leave a Reply

Your email address will not be published.