நூல் : தஃவாவின் பன்முகங்கள்

Vinkmag ad

நூல் மதிப்புரை

நூல்            : தஃவாவின் பன்முகங்கள்

நூலாசிரியர்     : ஆடிட்டர் பெரோஸ்கான்

பக்கங்கள்       : 228

விலை          : ரூ. 100

வெளியீடு       : மக்கள் சேவைப் பதிப்பகம்

                  புதிய எண் 101 தம்பு தெரு

                  சென்னை – 600 001

                  தொலைபேசி : 044 – 4216 4350

அணிந்துரை

நம் இஸ்லாமிய மார்க்கத்தில் அழைப்பு இருவகை உண்டு. ஒன்று நம் சமுதாயத்தவர்களை நாமே அழைப்பது. அது ‘பாங்கு’ என்று அழைக்கப்படும் இறைத்தொழுகைக்கான அழைப்பு. தொழுகைக்கு வந்து கலந்து கொள்ள வருகை புரிவதை ‘வெற்றியின் பக்கம் வாருங்கள்’ என்றழைக்கும் பாங்கோசை உலகம் முழுவதும் இடையறாது நிமிடம் தவறாமல் அழைக்கும் அழைப்பொலியாகும். உலகம் முழுவதும் நிரம்பி நிற்கும் இந்த அழைப்போசை அழகிய அரபியில் அமைந்தது. நம் பெருமானார் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் திருவாயில் பேசிய, ஓதிய ஏக இறைவனாம் அல்லாஹ்வின் அற்புதத் திருமொழியாகும். புனித மொழியாகும்.

மற்றுமொரு அழைப்பு நாம் இஸ்லாமியரல்லாத சகோதர, சகோதரிகளை இஸ்லாத்தின் பால் அழைக்கும் ‘தாஃவா’ என்னும் இஸ்லாமிய அழைப்புப் பணியாகும். இந்தப் பணி ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகவும் கருதப்படுகிறது.

நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் காலத்தில் அவர்களது சஹாபாக்கள் இந்த தாஃவா பணியைச் சிரமேற்கொண்டு செவ்வனே செய்து வந்தார்கள். நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களின் ஹஜ் பயண இறுதிப் பேருரையில் அரபா மலையடிவாரத்தில் நின்று கேட்ட பல்லாயிரக்கணக்கான சஹாபாக்கள் பரந்த உலகெங்கும் விரிந்து சென்று இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தார்கள். அவர்களில் பலர் இறைநேசச் செல்வர்களாக மலர்ந்தார்கள்.

இஸ்லாமிற்கு இனி எதிர்காலம் இல்லை என்று பிறர் எண்ணிய நேரத்தில் இஸ்லாத்திற்கு மறுமலர்ச்சி ஊட்டியவர்கள் தலையாய இறைநேசச் செல்வர் அப்துல் காதிர் ஜெய்லானி அவர்கள் ஆவார்கள். தரீக்கத் என்னும் அவர்கள் பாதை மேலை நாட்டவர்களால் சூஃபியிஸம் ( Sufism ) என்று போற்றிப் புகழப்படுகிறது. பல நாடுகளில் இஸ்லாமை வேற்று மதத்தவர் ஏற்றுக்கொள்ள தரீக்கத் முறை பேருதவி செய்துள்ளது எனலாம்.

கதைகள் மூலமும், கவிதைகள் மூலமும், மருத்துவம் மூலமும் இறைவன் அருளிய ‘கராமத்’ என்னும் அற்புத நிகழ்வுகள் மூலமும் இறைநேசர்கள் பிற மத மக்களை இஸ்லாமை நேசிக்கவும், இணையவும் வழிவகுத்தார்கள். மேலைநாட்டவரும், இந்தியாவில் ஒரு சில சரித்திர ஆசிரியர்களும் கூறுவது போல் உலகம் முழுவதும் இஸ்லாம் வாளால் பரவவில்லை. கலிமா சொன்ன இறைநேசச் செல்வர்களின் நாவால் பரவியது. இறைநேசச் செல்வர்களே உலகின் பல பாகங்களுக்கும் சென்று தாஃவா என்னும் இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து இஸ்லாமை உலகெங்கும் தழைக்கச் செய்தனர்.

இன்று ஆர்வமுடைய பலர் தாஃவா பணியில் ஈடுபடுகின்றனர். நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் காலத்தில் ஏக இறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டோர் உயர் அரபிகள், மதினாவாசிகள். பின்னர் ஹஜ்ரத் பிலால் போன்ற அடிமைகள். உலகம் முழுவதும் பின்னர் பரவியது.

இஸ்லாமை பிறர் ஈர்க்க இஸ்லாமியர்களாகிய நாம் செய்ய வேண்டியது, நாம் தீன்நெறி வழுவாமல் நடந்து கொள்வது, அன்பாகப் பேசுவது, நலிந்தோர்க்கு உதவிடுவது, மென்மையாகவும், நளினமாகவும் பிற சமய நண்பர்களுக்கு இஸ்லாத்தின் மேன்மையை எடுத்துக்கூறுவது ஆகும். இதுவே தஃவாவின் பன்முகங்கள் ஆகும். படித்தவர்கள் இதனையும் தாண்டி ஆற்றவேண்டிய கடமை ஒன்று உள்ளது. அது பிற சமூகத்தவரிடையே காழ்ப்புணர்ச்சி இல்லாத சமயப்பிரச்சாரம் செய்வது, பிரச்சார நூல்கள் எழுதுவது.

அந்த வகையில் ஆடிட்டர் பெரோஸ்கான் எழுதிய தஃவாவின் பன்முகங்கள் நூல் சகோதரர் முதுவை ஹிதாயத் மூலம் கிடைத்தது. 35 சம்பவங்களைச் சுட்டிக்காட்டி இஸ்லாத்தின் மேன்மையை எவ்வாறு பிறர் புரிந்து கொண்டு தீனை நாடுகிறார்கள் என்பதை நயம்பட எடுத்துரைக்கிறார். இஸ்லாமை எளிய வகையில் பிற சமயத்தவருக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறவர்கள் அவசியம் இந்த நூலைப் படிப்பது நலம்.

எளிய சம்பவங்கள் மூலம் கூறும்போது அதில் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. இதில் வரும் சம்பவங்கள் பல சிங்கப்பூரில் நிகழ்ந்தவை. ஒவ்வொரு சம்பவங்களும் நமக்கும் பிறருக்கும் படிப்பினை.

பள்ளிவாசல் பணியாளரால் அனுமதி மறுக்கப்பட்ட வெள்ளைக்காரப் பெண் மௌலானாவின் தீன்வழி அறிவுரையால் இஸ்லாத்தைத் தழுவி மதரஸா பாட ஆசிரியையாக மாறிய விந்தையை முதல் சம்பவமாக கூறுகிறார். பள்ளிவாசல் திறப்பு விழாவில் செட்டியார் தம்பதிகள் அன்று நிகழ்ந்த மார்க்கச் சொற்பொழிவைக் கேட்டு நீங்க பேசியதெல்லாம் மதம் அல்ல. அனைத்தும் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஞானி என்று கூறிய பாங்கு, கைவண்டி இழுக்கும் இந்து முதியவர் சுமையைக் குறைக்க உதவிய நூலாசிரியரின் உறவினர், இஸ்லாமைத் தழுவிய மூதாட்டி மரணத்தில் அவர் மையத்தை மார்க்கப்படி நல்லடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள், கிடைக்கும் உணவை பகிர்ந்து உண்பது என்று எண்ணற்ற சம்பவங்கள் மாற்றாரை நம் மார்க்கத்திற்கு அழைக்கும் இனிய தாஃவாவின் பன்முகங்களாகும்.

நூலாசிரியர் ஆடிட்டர் பெரோஸ்கான் இது போன்ற மென்மேலும் நூல்களை எழுதி அனைத்து சமயத்தவரை ஈர்த்து தாஃவாவின் பன்முகங்களை பல்லோர்க்கும் பகிர்ந்து அளிக்க வல்ல இறைவனிடம் துஆச் செய்கிறேன்.

குடந்தை இதழியல் பேராசிரியர் தமிழ்மாமணி

முனைவர் மு. அ. முகம்மது உசேன்

நிர்வாக இயக்குநர்

தமிழ் இதழியல் மற்றும் தகவல் தொலை தொடர்பியல் பயிற்சிப் பள்ளி

( Tamil Journalism & Mass Communication Institute )

கும்பகோணம்

அலைபேசி : 94431 04549

மின்னஞ்சல் : hussaintamil@yahoo.co.in

பேஸ்புக் : Mohamed Hussain

News

Read Previous

அனீஸ் பெற்றோர் துபாய் வருகை

Read Next

துபாயில் திரும‌ண‌ அழைப்பித‌ழ் ம‌ற்றும் வாழ்த்து ம‌ட‌ல்க‌ள் அச்சிட‌ ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *