நூல்: தஃப்ஸீர் அஷ்ஷஅராவீ

Vinkmag ad

நூல் அரங்கம்.
<><><><><>
நூல்: தஃப்ஸீர் அஷ்ஷஅராவீ.
ஆசிரியர்: இமாம் அஷ்ஷஅராவீ (ரஹ்)
தமிழாக்கம்: மௌலவி.எம்.ஒய்.
முஹம்மது அன்சாரி மன்பயீ
பக்கங்கள்: 304. விலை: 200/ ரூபாய்.
வெளியீடு: இமாம் புஹாரி எஜுகேஷனல் டிரஸ்ட்.
முகவரி: இமாம் புஹாரி பள்ளிக்கூட வளாகம்
44, மினா தெரு. லால்பேட்டை.
கடலூர் மாவட்டம்- 608 303.
தொடர்பு எண்: +91 814840 2300
———————-~~~~——————-

மிஸ்ர் எனும் எகிப்து நாடு இஸ்லாமிய அறிவுலகத்துக்கு பல உன்னதக் கொடைகளை வழங்கியுள்ளது.

அந்தக் கொடைகளின் வரிசையில் இமாம் ஷஅராவீ அவர்களுக்கு மகத்தானதோர் இடமுண்டு. இவர் மிகச்சிறந்த மார்க்க அறிஞர். நல்ல பேச்சாளர். ஆழ்ந்த மார்க்க ஞானமுள்ள முஃப்தி.
உள்மார்க்க விவகாரங்களில் எழும் எந்த கருத்துச் சிக்கல்களிலும் சிக்கியவரல்ல. மாற்றுக் கருத்துடைய அறிஞர்களையும் மதித்தவர். அவர்களால் மதிக்கப்பட்டவர்.

1980க்கு முந்தைய ஆண்டுகளில் தொலைக்காட்சியில் அவர் திருக்குர்ஆனின் விரிவுரைகளை ஆற்றியுள்ளார். திருக்குர்ஆனின் 60ஆவது அத்தியாயமான “அல் மும்தஹினா” வுக்கு விரிவுரை சொல்லி முடித்து 61 ஆவது அத்தியாயம் “அஸ்ஸஃப்” வுக்கு விரிவுரை சொல்லவிருந்த நிலையில் இறைவனின் அழைப்பை ஏற்றார். (இன்னாலில்லாஹி)

இவ்வுரைகள் யாவும் எழுத்து வடிவில் உள்ளன. 78 ஆவது அத்தியாயம் “அந்நபா” முதல் இறுதி வரை உள்ள அத்தியாயங்களின் விரிவுரை ஒலி வடிவில் உள்ளது.

அரபு மொழியில் அண்ணார் ஆற்றிய உரையின் மொழி பெயர்ப்பே இந்த நூல். இது மிகச் சிறந்த விரிவுரை நூல் என்ற போதிலும் கூட இமாம் ஷஅராவீ அவர்கள் தன்னடக்கம் காரணமாக இதை தஃப்சீர் (குர்ஆனின் விரிவுரை)என்று கூறாமல் “ஹவாத்திரீ ஹவ்லல் குர்ஆன்” குர்ஆனை பற்றிய என் எண்ண ஓட்டங்கள் என்கிறார்.

நபி(ஸல்) அவர்கள் ஏன்(தஃப்சீர்) குர்ஆனுக்கு விரிவுரை ஆற்றவில்லை?(பக்கம்:54)

மனிதர்களை வழிகெடுக்கும் ஷைத்தானை ஏன் அல்லாஹ் படைத்தான்?(பக்கம்: 126)

அல்லாஹ்வை ஏன் வணங்க வேண்டும்? சுவனம் பெறவா? நரகிலிருந்து பாதுகாப்பு பெறவா?(பக்கம்: 127)

இந்தக் கேள்விகளுக்கு நயம்படவும், கூர்மையாகவும் பதில் தருகிறார் இமாம் ஷஅராவீ.

“அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணிப் பார்த்தால் அதைக் கணக்கிட முடியாது(14:34) என்ற வசனத்துக்கு எளிமையான உதாரணம் மூலம் இந்த நூலில் விளக்கம் தருகின்றார்.(பக்கம்:171)

யூடியூபில் இமாம் ஷஅராவீ அவர்களின் ஏராளமான உரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கேள்வி, பதில் அமர்வுகளில் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து கேள்வி கேட்பவர் வாயை மூடும் முன்னரே பாய்ந்து கொண்டு இமாம் பதில் சொல்வது பார்ப்போரை பிரமிப்புக்குள்ளாக்கும்.

கேள்விகளுக்கு பதில் கூறும் போது குர்ஆன் வசனங்களையும் பெருமானாரின் பொன்மொழிகளையும் பொருத்தமாக மேற்கோள் காட்டுவார். சில கேள்விகளுக்கு கூர்மையான எதிர் கேள்விகளால் பதிலளிப்பார்.

அவற்றுள் சில கேள்வி பதில் என்ற அடிப்படையில் அல்லாமல் விரிவுரையின் ஒரு பகுதியாக இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது. இது வாசிப்போரின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.

மொழிபெயர்ப்பாளர் தமிழ் வாசகர்களுக்கு ஒரு சர்வதேச அறிஞரை அறிமுகப்படுத்தியிருக்கின்றார். இலகுவான நடையில் வாசிப்பின் ஓட்டம் தடைபடாத படி மொழிபெயர்த்திருக்கிறார்.

ஒரு நிறுவனம் செய்ய வேண்டிய பணியை தனியொரு நபராக இருந்து செய்தமைக்காக மௌலவி அன்சாரி மன்பஈ அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்த நூலில் இமாம் ஷஅராவியின் வாழ்க்கைச் சுருக்கம். குர்ஆன் பற்றிய ஓர் அறிமுகம். குர்ஆன் அருளப்பட்ட தொடக்கக்கால நிகழ்வு, நுழைவாயில், அல்ஃபாத்திஹா அத்தியாத்தின் விரிவுரை ஆகியன இடம் பெற்றுள்ளன.

எந்த சிந்தனைப் பள்ளிக்கும் (School of thought) சார்பாக நிற்காமல் குர்ஆனின் வசனங்களுக்கு பொதுவான விளக்கங்களை தருவதில் இந்த நூல் சிறப்பாக தன் பணியைச் செய்திருக்கின்றது.

குர்ஆன், சுன்னாவின் ஒளியில் சுயமுன்னேற்ற நூல்கள் பலவற்றை வழங்கிய இமாம் ஷஅராவீ திருக்குர்ஆன் விரிவுரையாளராகவும் நம் சிந்தனைகளைத் திறக்கிறார்.

வாசிக்க, அன்பளிக்க ஏற்ற நூல். இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவரும் என்று நம்பலாம்.

வெளியீட்டாளரும் மொழிபெயர்ப்பாளருமான அன்சாரி மன்பஈ அவர்கள் தன் முயற்சியை தளர்த்தி விடாமல் இப்பணியைத் தொடர்ந்து செய்திட வேண்டும்.

– இல்யாஸ் ரியாஜி.
செப்டம்பர் 2019, வைகறை வெளிச்சம் மாத இதழ்.

News

Read Previous

ஆசிரியர் தின வாழ்த்துகள்

Read Next

இன்று விடுதலை போராட்ட வீரர் சரத் சந்திரபோஸ் பிறந்தநாள்-1889

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *