நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!

Vinkmag ad
நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
                        (கீழை ஜஹாங்கீர் அரூஸி)
மனித குலத்தின் வாழ்வியல் வழிகாட்டியாய் வாழ்ந்து மறைந்த முகம்மது நபி(ஸல்)அவர்களை பற்றி இறைவன் தமது அருள்மறையான திருக்குர் ஆனில் இவ்வாறு கூறுகிறான்:நபியே,நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கிறீர்.(அத்தியாயம்:68,வசனம்:4)
தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தங்களது வாழ்வை நற்குணத்தின் மீதே கட்டமைத்து வாழ்ந்து காட்டிய மாமனிதர் தான் முகம்மது நபியவர்கள்.
முகம்மது நபியவர்களை பற்றி அவர்களின் உண்மை தோழரில் ஒருவரான அனஸ்(ரலி)இவ்வாறு கூறுகிறார்கள்:நபி(ஸல்)அவர்கள் மக்களில் மிக அழகிய குணமுடையவர்களாக விளங்கினார்கள்.(நூல்:புகாரி,முஸ்லிம்)
நற்குணம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் தானா?மற்றவர்களுக்கு இல்லையா?என்ற எதிர் கேள்வி வேண்டாம்.ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் பொதுவானதே.
ஆனாலும் ஓரிறையை ஏற்று வாழும் முஸ்லிம்களுக்கு அது அடையாளமாகும்.
நற்குணம் என்பது எது?அதற்கான நன்மைகள் என்ன? என்பதை பற்றி முகம்மது நபியவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:தான் உண்மையே கூறுவதாக இருந்த போதிலும் தர்க்கம் செய்வதை விட்டு விடுபவருக்கு சுவனத்தின் கீழ் தளத்தில் ஒரு வீடு கிடைப்பதற்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன்.
நகைச்சுவையான பேச்சு ஆனாலும் பொய்யை விட்டு விடுபவருக்கு சுவனத்தின் நடுப்பகுதியில் ஒரு வீடு கிடைக்க நான் பொறுப்பேற்று கொள்கிறேன்.
அழகிய குணம் உடையவருக்கு சுவனத்தின் மேல் பகுதியில் ஒரு வீடு கிடைக்க நான் பொறுப்பேற்று கொள்கிறேன்.(நூல்:அபூதாவூது)
தர்க்கம் செய்வதும்,பொய் பேசுவதும் நல்ல மனிதரின் அடையாளமல்ல என்பதை தான் நபிகளாரின் வார்த்தை தெளிவுபடுத்துகிறது.
நல்ல குணமுள்ள ஒரு முஸ்லிமை எப்படி அடையாளம் காண்பது?
பிறரை காணும் போது முகத்தில் புன்னகை இருக்கும்.நன்மையான செயல்களை தானும் செய்து பிறரையும் செய்ய தூண்டுவார்.
தனது நாவாலும்,செயலாலும் பிற மனிதருக்கு நோவினை தருவதை விட்டும் விலகி கொள்வார்.
இது போன்ற செயல்கள் யாரிடம் இருக்கிறதோ?அவர்களே மக்களில் மிக அழகிய குணமுடையவர்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.(நூல்:புகாரி,முஸ்லிம்)
பொய் சொல்பவன்,கோள் மூட்டுபவன்,புறம் பேசுபவன்,கொள்ளை அடிப்பவன்,கொலை செய்பவன்,பிறர் நிலத்தை அபகரிப்பவன் மற்றவரின் மனம் புண்படும்படியாக நடப்பவன்,லஞ்சம் கொடுப்பவன்,வாங்குபவன்,குடிகாரன்,சூதாடுபவன்,பெண்களை பலாத்காரம் செய்பவன் கண்டிப்பா முஸ்லிமாக இருக்க மாட்டான்.
ஒரு வேளை முஸ்லிம் பெயர் தாங்கிய ஒருவன் இந்த காரியங்களை செய்தாலும் அவன் இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிமாக கருதப்பட மாட்டான்.
அன்பும்,அமைதியும்,உண்மையும்,நீதியும்,சகிப்புத்தன்மையும்,சகோதரத்துவமும்,நல்ல பண்புமே இஸ்லாத்தின் அடையாளமாய் இருக்கும் போது ,
கழுத்தை அறுப்பவனையும்,தலையை துண்டிப்பவனையும் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று சொல்லும் மீடியாக்களே,அவர்களை முஸ்லிம் என்று சொல்லி ஒட்டு மொத்த இஸ்லாத்திற்கும் இழுக்கை ஏற்படுத்தாதீர்.
இது போன்ற காட்டுமிராண்டிகளை மனித குல விரோதிகள் என்று சொல்லுங்கள் நாங்களும் அப்படித்தான் சொல்கிறோம்.

News

Read Previous

தமிழ் கற்பிக்க உதவும் 32 அட்டைகளை எப்படி நடத்துவது – காணொளி

Read Next

மறக்க முடியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *