நபி வழியில் நற்குணங்கள்

Vinkmag ad

திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்

                                                     தோஹா – கத்தர்

thahiruae@gmail.com

பரிசுத்தக் குர்ஆன் கூறுகிறது

“நபியே நீர் அழகிய நற்குணத்தின் மீது இருக்கிறீர் “ (68:4)

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராக, கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடுவீராக!. (அல்குர்ஆன்: 3:159 )  .

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  • ““நான் அழகிய குணங்களை முழுமைப் படுத்தவே அனுப்பப் பட்டுள்ளேன்..
  • இறை நம்பிக்கையில்  பரிபூரணம் பெற்றவர்கள் அதிசிறந்த பண்பாளர்களே’
  • ‘உங்களில் சிறந்தோர் அதிசிறந்த பண்பாளர்களே.
  • அதிகமதிகம் மனிதர்களை சுவனத்தில் நுழையச்செய்வது இறையச்சமும் , நற்குணங்களும்தான்.
    (ஆதார நூல்கள் : புகாரி, முஸ்லிம் திர்மிதீ)

இன்று முஸ்லிம் சமூகத்தில்  தோற்றத்தில் மற்றும் வணக்க வழிப்பாடுகளில் நபி (ஸல்) அவர்களை பின் பற்றுவதை ஊக்குவிக்கும் வண்ணம் உரைகள் ,விவாதங்கள் போன்றவைகளை அன்றாடம் இயக்கங்கள் நடத்தி வருகின்றன .

சில இயக்கங்கள் நபி அவர்களின்  தாடி, தலைப்பாகை, ஆடை  சாப்பிடும்போது அவர்கள் அமர்ந்திருந்த முறை, சாப்பிட்ட முறை ஆகியவற்றை பின்பற்ற மக்களை ஆர்வப் படுத்துகின்றன. அவைகளும்  மிகவும் ஆழமாக பின் பற்றுகின்றன .அவைக்கு மட்டும் முக்கியத்துவம் அதிகம் கொடுக்கின்றன.

சில இயக்கங்கள் நபி அவர்கள் தொழுத முறை, நோன்பு,மற்றும் மார்க்க சட்டங்களில் நபியை பின்பற்றுவதின் பக்கம் மக்களை அழைக்கின்றன .அதன் மீது ஆழ்ந்த விவாதங்கள் நடத்துகின்றன .

சில இயக்கங்கள் நபி அவர்களின் அரசியல் அமைப்பு முறையை தாங்கள் பின் பற்ற மக்களை ஆர்வப் படுத்துவதாக கூறுகின்றன.

 

ஆனால் பெரும்பாலான இயக்கங்கள் நபி அவர்களின் நற்பண்புகள்,நற்குணங்களின் பக்கம் மக்களை பின்பற்றுமாறு ஆர்வப் படுத்துகின்றதா என்றால் அது மிகவும் குறைவு. அவை உரைகளில் நபி மீது  புகழ் மாலை சூட்ட மட்டுமே நபியின் நற்பண்புகளை குறிப்பிடுகின்றன.

இன்று நாம் நம்மில் பலரும் புகழை மரியாதையை விரும்பாதார் யாருமில்லை.

பெரிய தலைவர்கள் தமக்குத்தாமே விழா எடுத்து தன்னை  புகழ்ந்திட வைப்பதை பார்க்கிறோம். தான் வரும் போது எழுந்து நிற்காத எத்தனையோ பேரை தன்னை அவர்கள் அவமானப்படுத்தி விட்டார்கள் என்று பழி வாங்கும் படலத்தையும் நாம் காண்கிறோம்.

நபி அவர்கள் தன்னை புகழ்வதை விரும்ப வில்லை. மர்யமின் மகன் ஈஸாவை அளவுக் கடந்து புகழ்ந்ததைப் போன்று என்னைப் புகழ வேண்டாம்.என்னை அல்லாஹ்வின் தூதர் என்றும் அவனின் அடிமை என்றுமே கூறுங்கள் என்றார்கள். நபி அவர்கள் தமக்காக பிறர் எழுந்து நிற்பதை தடை செய்தார்கள் .நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் “ யார் தனக்காக பிறர் எழுந்து நிற்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அவர் நரகத்தை தங்குமிடமாக்கி கொள்ளட்டும் என்றார்கள்.

நம்மில் எத்தனை பேர் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுகிறோம்.நபி அவர்கள் வீட்டு வேளைகளில் மனைவிமார்களுக்கு உதவி செய்யகூடியவர்களாக இருந்தார்கள்.இது அன்னை ஆயிஷா (ரலி) நபி அவர்களின் தூய துணைவியார் தரும் செய்தியாகும்.

நம்மில் எத்தனை பேர் மன்னிக்கிறோம். மன்னிப்பது இருக்கட்டும் நமது உறவினர்கள் செய்யும் தவறுகளை அப்படியே மனதில் பதித்து அவர்களை பழிவாங்க துடிக்கிறோம்.அவர்கள்  நமக்கு இழைத்து கஷ்டங்களுக்கு பதில் அவர்கள் வாழ்வில் ஏதாவது துயரம் நிகழாதா என எதிர்ப் பார்க்கிறோம்.அல்லாஹ் உங்களை மன்னிக்கிறான் ,நீங்கள் மனிதர்களை மன்னிக்க மாட்டீர்களா ?என்ற வசனம் நம்மில் எத்தனை பேர் மனதில் பட்டிருக்கிறது.

நபி அவர்கள் தம்மை ஊரை விட்டு விரட்டியவர்கள் , தம்மை கொல்ல வந்தவர்கள், சதி செய்தவர்கள் .தம் உறவுகளை படுகொலை செய்தவர்கள் அவர்கள் மக்கா வெற்றின் போது அவர்கள் நிறுத்தப் பட்ட பொது இறைத்தூதர் யூசுப் (அலை ) அவர்கள் தம் சகோதரர்களை நோக்கி கூறிய வார்த்தைகளை கூறினார்கள் உங்கள் மீது எந்த குற்றமும் பிடிக்கப் பட மாட்டாது .அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக. என்று .என்ன பெருந்தன்மையான வார்த்தைகள்.

இன்று கடன் வாங்கினால் அதை குறிப்பிட்ட தவணையில் தராமல் இழுத்தடிப்பவர்களை பார்க்கிறோம். சில நேரங்களில் கடன் தந்தவன் கேட்கும் போது அவனையே கடனாளி அடிப்பதை பார்க்கிறோம்.

யா அல்லாஹ்  துக்கம்,கவலை,இயலாமை ,சோம்பேறித்தனம். கடன் மிகைத்து விடுதல்,மனிதர்கள்  என் மீது ஆதிக்கம் செலுத்துதல் ஆகிய வற்றை விட்டும் என்னை பாதுகாப்பாயாக என பிரார்த்தனை செய்த அவர்கள், தான் யூதனிடம் வாங்கிய கடனுக்காக கொடுக்கும் தவணை தேதிக்கு முன்னே வந்து அவன் அவர்களை தாக்க முற்ப்பட்ட போது தரக் குறைவாக பேசிய போது அவனை மன்னித்து அந்த கடன் தொகையையும் அப்போது அந்த யூதனை தோழர்கள் கண்டித்ததால் கொஞ்சம் அதிகமாகவே கொடுக்குமாறும்  பணித்தார்கள்.இப்படி இருந்தது அவர்களின் நானயம்

இன்று அமானிதமாக எந்த பொருளும் கொடுத்து வைக்கும் போது அதை அடித்து விடுவதை பார்க்கிறோம். சிலர் தங்களுக்கு வைக்க பாதுகாப்பு இல்லாமல் நம்பிக்கையுடன் தம் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கொடுக்கின்றனர் சிலர் தங்கள் வயதான காலத்தில் தங்கள் பிள்ளைகளின் சொத்துகளுக்கு பாதுகாப்பாக சிலர் நியமிக்கின்றனர்.அந்தப் பிள்ளைகள் குறிப்பிட்ட வயதானப் பின் அதனை திருப்பி ஒப்படைக்க வேண்டியது அந்த பாதுகாவலர்களின் பொறுப்பு..ஆனால் நம்பிக்கை மோசடி செய்து அந்த சொத்துக்களை அப்படியே தங்கள் பெயருக்கு மாற்றி அந்த காப்பாளர்கள் ஏமாற்றி விடுகின்றனர். கடைசியில் அவர்களின் பாதுகாப்பில் இருந்த சிறார்கள் பிற்காலத்தில் அனாதைகளாய் மட்டுமல்ல, பரம ஏழைகளாகவும் வயிற்றுக்கு கூட வழியில்லாமல் ஆகி விடுகின்றனர் .

நபி அவர்கள் அமானிதம் பாதுகாப்பதில் சிறந்து விளங்கினார்கள். மக்கா மக்கள் அவர்களிடம் பொருட்களை அமானிதமாக கொடுப்பது வழக்கம்.அதை பாது காத்து வைத்து அவர்கள கேட்கும் போது திருப்பி நபி அவர்கள் ஒப்படைத்து விடுவர்.மக்கா நகரில் அவர்களை படுகொலை செய்ய பாதகர்கள் திட்டமிட்ட வேளையில் மார்க்கத்தையும் உயிரையும் பாதுகாக்க அல்லாஹ்வின் கட்டளைப் படி ஹிஜ்றத் செய்த தருணம் அலி (ரலி )அவர்களிடம் அந்த அமானிதப் பொருட்களை ஒப்படைத்து அதை மக்களிடம் ஒப்படைக்குமாறு பணித்தார்கள் .அவர்களுக்கு  அல் அமீன் – நம்பிக்கையாளர் என்ற பெயரும் கூடஉண்டு .

 

இன்று கெட்ட வார்த்தைகள் சொல்லுவது சாதரணமாகி விட்டது .எந்த அளவுக்கு என்றால் அநீதி இழைக்கப் பட்டவனுக்கு திட்ட அனுமதிக்கப் பட்டுள்ளது என கூறி தமக்கு எதிரான கருத்துக் கூறியவரை மட்டுமல்ல அவரது மனைவி ,பெற்றோர்களை கூட திட்டுகின்றனர் .நபி அவர்கள் கெட்ட வார்த்தை சொல்லக் கூடியவர்களாகவோ சபிக்க கூடியவர்களாவோ இருக்க வில்லை என்பது அவர்களின் தோழர்கள் தந்த செய்தியாகும் .

இன்று தவறுகள் செய்து விட்டு அல்லது அடுத்தவர் மனம் வெதும்ப அவர்களுக்கு அநீதியோ அல்லது வேதனையோ கொடுத்து விட்டு அதனை மனசாட்சிக்கு நன்கு தவறு அநீதி என்று தெரிந்தாலும் கூட ஏற்றுக்கொள்ள அவர்களிடம் மன்னிப்புக் கேட்க மறுக்கின்றனர் .நாங்கள் பெரியவர்கள் ,பெற்றோர்கள் ,பிரமுகர்கள் என்று தகுதி மற்றும் வயதின் அடிப்படையில் தங்களுக்கு கீழ் உள்ள மக்களிடம் மன்னிப்புக் கேட்க மறுக்கின்றனர்.இவ்வுலகில் அல்லாஹ்வின் தூதரை விட உயர்ந்தவர் யாருமில்லை .அவர்கள் மக்கள்  மனம் கோண பேசியது அரிது .ஒரு தடவை அப்துல்லாஹ்  பின் உம்மி மக்தூம் என்னும் கண் தெரியாத  சஹாபி மார்க்க விளக்கம் கேட்க வந்திருந்த தருணத்தில் சுற்றி மக்கா காபிர்களின் பெரிய தலைவர்களுக்கு நபி அவர்கள் மார்க்கம் எடுத்து வைக்க இவர் வருகையால் அவர்கள் போய் விடுவரோ என அஞ்சி அவர்களிடம் நபி அவர்கள் முகம் சுளிக்க அல்லாஹ் வசனம் இறக்கி கண்டித்த உடனே நபி அவர்கள் மனம் வருந்தினார்கள் .அவர் வரும்போதெல்லாம் அவரை கண்ணியப் படுத்தினார்கள் .தொழுகையில் தவறு சுட்டிக் காட்ட போது உடனே ஏற்றுக் கொண்டார்கள் .திருத்திக் கொண்டார்கள் .விடை பெரும் தருணம் வந்த போது யாருக்கும் கஷ்டம் எதுவும் கொடுத்திருந்தால் அதனை பழிவாங்கி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள் .

யாரை எடுத்தாலும் காபிர் ,யூதக் கைக்கூலி ,முஷ்ரிக் என்று பத்வா கொடுத்துக் கொண்டும் பத்திரிக்கைகளில் எழுதிக் கொண்டும் இருப்பதும் அன்றாட வழக்கமாகி விட்டது .மார்க்க அறிஞர்கள் இப்போதெல்லாம் முஸ்லிம்களாக மக்களை ஆக்குவதை விட அதிகமான மக்களை காபிர் ,முஷ்ரிக் என்று பத்வா என்று இஸ்லாத்தை விட்டு வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள் .நபி அவர்கள் முனாபிக்குகளை கூட முனாபிக் என்று பத்வா கொடுத்ததில்லை .போர்க்களத்தில் கலிமா சொன்ன ஒருவரை வாளுக்கு பயந்துதான் கலிமா சொன்னார் ,எனவே நான் அவரை வெட்டி விட்டேன் என்று சொன்ன போது உனக்கு எப்படி அவர் மனதில் உள்ளது தெரியும் என்று அவரை கண்டித்தார்கள் .

மார்க்கம் பிரச்சாரம் தொடங்கும் தருணம் ஏழ்மையில் தொடங்கும் பிரச்சாரகர்கள் அடுத்த பத்தாண்டுகளில் பணக்கார்களாக அவர்கள் ஆவதை பார்க்கிறோம் .மக்களிடம் மார்க்கம் போய் சரியாக சேர்ந்ததோ இல்லையோ அவர்களிடம் காசும் பணமும் சேர்ந்து விடுகிறது .நபி அவர்கள் மார்க்கம் அழைப்பு பணி தொடங்கிய தருணம் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தார்கள் .அதனையெல்லாம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக ஏழை முஸ்லிம் மக்களுக்கு செலவிட்டு தாங்கள் வாழ்க்கையின் நாட்களை ஏழ்மையிலேயே ,எளிமையிலேயே அமைத்துக் கொண்டார்கள்.தன்னை ஏழையாகவே வாழ செய்யுமாறும் மறுமையில் ஏழையாகவே எழுப்புமாரும் அல்லாஹ்விடம் வேண்டினார்கள் .

தலைமை பதவிக்கு ஈமானை விட்டு,காசு பணத்துக்கு மார்க்கத்தை விற்று ,பெண் ஆசையில் ஒழுக்கத்தை இழந்து வழி தவறும் சில தலைவர்கள் இருக்கிறார்கள் .தெரியும் அவர்கள் அனைவருக்கும்  தெரியும்  நபி அவர்களிடம் அரபு நாட்டில் அழகிய பெண் உமக்கு மனமுடித்து தருகிறோம்,இந்த தேசத்துக்கு உம்மை தலைவாக்குகிறோம் ,செல்வம் உம் காலடியில் கொட்டுகிறோம் என்ற போதும் அதனையெல்லாம் மறுத்து தம் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள் .

நபியவர்களின் நற்குணங்கள் பற்றிய நபிமொழி மற்றும் செயல்கள் மிகவும்  ஆதாரப்பூர்வமானவை என்பதில் இஸ்லாமிய உலகின் அனைத்து இயக்கங்கள்,வேறுப் பட்ட சிந்தனையாளர்கள் அனைவரும்  ஒருமித்த கருத்துக் கொண்டிருக்கிறார்கள்.எனினும் அவற்றை பின் பற்றுவதில் பெரும்பாலான மக்கள் மிகவும் தூரத்தில்தான் இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மையான உண்மையாகும் .

ஒவ்வொரு தடவை கண்ணாடி பார்க்கும் போதும் இறைவா எனது முகத்தை அழகுப் படுத்தியதுப் போல் எனது அகத்தையும் ( குணங்களையும் )அழகுப் படுத்துவாயாக என நபி வழியில் பிரார்த்திக்கும் நாம் நம்மில் எத்தனை பேர் நபி வழியில் நற்குணங்களை பின் பற்ற தயாராக இருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

நபி வழியில்நற்குணங்கள் பின் பற்றுவது குறித்த கருத்தரங்குகள் அதிகம் நடத்தப் பட வேண்டும். கட்டுரைகள எழுதப் பட வேண்டும்  நிச்சயமாக அவற்றில் அனைவருக்கும் ஒருமித்த கருத்துக்கள்தான் இருக்கும் .

மன்னிப்பு ,கருணை ,சகிப்புத்தன்மை,எளிமை, உண்மை ஆகிய நற்குணங்கள் இலக்கிய விழாக்களில் கவிதைகளில்  வாசிக்க அழகாக இருக்கும் .அதை விட அவை பின்பற்றப் படுவது மிகவும் அழகாக இருக்கும்.வாழ்வும் மிகவும் வனப்பாக இருக்கும் .

News

Read Previous

ஜான்சன் & ஜான்சன் கம்பெனி லைசென்ஸ் ரத்து

Read Next

சிறகு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *