தவறை ஒப்புக் கொள்வது தலை குணிவல்ல!

Vinkmag ad

தவறை ஒப்புக் கொள்வது தலை குணிவல்ல!

-திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்

தோஹா – கத்தார்

thahiruae@gmail.com

Mob  .974 + 66928662

சுய மரியாதை என்ற பெயரில் வரம்பு மீறிய செயல்பாடுகள், சமூகத்தில் மிகவும் சிறந்த நபராக தம்மை தாமே கருதிக் கொள்ளல் ஆகியவற்றின் மூலம் மற்ற மனிதர்களுக்கு அநீதி இழைத்தல்,அவ மரியாதை செய்தல், அவதூறு கூறுதல்,தவறு இழைத்தல்,அல்லது தவறான கருத்தை சொல்லுதல் ஆகியவற்றை சிலர் செய்கின்றனர். இதில் குறிப்பிட பட வேண்டிய  விஷயம் என்னவென்றால் இச்செயல் பாடுகள் எதுவும் நீதி மற்றும் நெறிகளுக்கு முரணானது என்று தெரிந்தப் பின்னரும் வருத்தப் படவோ அதை திருத்திக் கொள்ளவோ அவர்கள் முன் வருவதில்லை. இதில் பெரியோர்கள் ,பிரமுகர்கள்,தலைவர்கள் ,அதிகாரிகள் ஆகியோர்தான் குறிப்பிடத்தக்கவர்கள்.

அருள்மறை குர்ஆனில் அல்லாஹுத் தஆலா கூறுகிறான் “பின்னர் ஆதம் சில வாக்கியங்களைத் தன் இறைவனிட மிருந்து கற்றுக் கொண்டார். (அவ்வாக்கியங்களைக் கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார்.) அதனால் அவரை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும் அளவற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான். (2:37)

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.” ஆதமின் மக்கள் தவறு செய்யக் கூடியவர்களே எனினும் திருத்திக் கொள்பவர்களே அவர்களில் சிறந்தவர்கள்”

நபியவர்கள் தம்மை பற்றி குறிப்பிடும் போது தாமும் தங்களை போன்ற மனிதன் என்று எந்த தவறும் இழைத்தால் குறிப்பிடும் படியும் கூறினார்கள்.தாம் அதனை திருத்திக் கொள்வதாக குறிப்பிட்டார்கள்.தொழுகையில் தாம் மறதியால் தவறு இழைத்த போது அதை மக்கள் சுட்டிக் காட்டிய போது அதை திருத்திக் கொண்டார்கள்.

உம்மி மக்தூம் என்ற கண் தெரியாத நபி தோழர் நபி (ஸல்) அவர்களை சந்திக்க வந்தக் காலை மக்காவின் மிகப்பெரும் இணை வைக்கும் குறைஷி தலைவர்கள் அவர்களை சந்திக்க வந்தார்கள்.அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம். பார்வையற்ற காரணத்தால், நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வின் முக்கியத்துவத்தை அப்பொழுது அவர் உணர்ந்திருக்கவில்லை. எப்பொழுதும் நபியவர்களை அண்மிக் கேட்பதுபோல், குர்ஆன் வசனம் புதிதாய் அருளப்பட்டிருந்தால் கேட்டுக் கொள்வோம் என்ற ஆர்வத்தில் நபியவர்களை நெருங்கினார். “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தங்களுக்கு அறிவித்ததை எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்றார். நபியவர்கள் நோக்கம் தங்களை நாடி வந்திருக்கும் அவர்களுக்கு

முக்கியமான ஒரு வேலையில் முழு கவனத்துடன், கவலையுடன் மூழ்கியிருக்கும்போது அசந்தர்ப்பமான குறுக்கீடு நிகழ்ந்தால் நமக்கு எப்படியிருக்கும்?அதிருப்தியுடன் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமிடமிருந்து தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு அந்தத் தலைவர்களிடம் தம் உரையாடலைத் தொடர்ந்தார்கள் நபியவர்கள். இது யதார்த்தமான செயல்தானே?. விவாதம் முடிந்த சற்று நேரத்தில் நபியவர்களுக்கு இவ்வாறு குர்ஆன் வசனங்கள் இறங்கின. நபியவர்களை அதிகம் அறிமுகமில்லாத மூன்றாம் மனிதரைப்போல் படர்க்கையில்   அவ்வசனங்கள் குறித்து தொடங்கி பின்னர் நேராகவே நபி (ஸல்) அவர்களை நோக்கி அவை பேசின :
‘முகம் சுளித்தார்; மேலும், புறக்கணித்தார், அந்தப் பார்வையிழந்தவர் அவரிடம் வந்ததற்காக! அவர் சீர்திருந்தக்கூடும்! அல்லது அறிவுரைக்குச் செவி சாய்க்கக்கூடும்; அந்த அறிவுரை அவருக்குப் பயனளித்திருக்கும் என்பது பற்றி உமக்குத் தெரியுமா, என்ன? எவன் அலட்சியம் செய்கின்றானோ அவன் பக்கம் நீர் கவனம் செலுத்துகின்றீர். அவன் திருந்தாவிட்டால் அதற்கு நீர் பொறுப்பாளியா, என்ன? மேலும், எவர் உம்மிடம் விரைந்து வருகின்றாரோ (இறைவனை) அஞ்சியவராக அவரைக் குறித்து நீர் பாராமுகமாக இருந்துவிடுகின்றீர்!(குர்ஆன்  80 : 1-10)

..

இவ்வசனங்கள் இறங்கியதும்  நபியவர்கள்  மிகவும் வருத்தப் பட்டார்கள் அந்நிகழ்விற்கு பிறகு  . அவர் தம்மிடம் வருகை புரியும் போதெல்லாம், “எவர் பொருட்டு என்னை என் இறைவன் கண்டித்தானோ, அவருக்கு நல்வரவு” என்று சிறப்பான வரவேற்பளித்து வாகான இடத்தில் சிறப்புடன் அமர்த்திக் கொள்வார்கள் அல்லாஹ்வின் தூதர், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். மதீனாவில் புலம்பெயர்ந்தபின், தொழுகையின் அழைப்பான பாங்கு சொல்லும். பணிக்கு முக்கியமான இருவரை நியமித்தார்கள் நபியவர்கள். ஒருவர் பிலால் இப்னு ரபாஹ், மற்றொருவர் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம். ஒருவர், அடிமையாய் இருந்த கறுப்பு இனத்தவர்; இன்னொருவர் கண்பார்வை அற்றவர்..
ஆனால் நபியவர்களின் முஅத்தின் எனும் பொறுப்பும் சிறப்பும் தாண்டி மற்றொரு சிறப்பும் அவ்வப்போது அப்துல்லாஹ்வுக்கு அளித்து வந்தார்கள் நபியவர்கள். மதீனாவின் நிர்வாகப் பொறுப்பு.
ஆம் தாம் . நகரில் இல்லாத நேரத்தில் மதீனாவின் மக்களுக்கு இமாமாகச் செயல்பட, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமை நியமித்தார்கள் நபியவர்கள்.
இஸ்லாமிய அரசின் முதல் குடியரசு தலைவராக நபி (ஸல்) அவர்களுக்குப் பின் பொறுப்பேற்ற அபூபக்கர் (ரலி ) அவர்கள் தமது முதல் உரையில் “நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்படும் வரைக்கும் எனக்கும் கட்டுப்படுங்கள். எப்பொழுது அவர்களுக்குக் கட்டுப்படுவதனின்றும் நான் தவிர்ந்து விடுகின்றேனோ அப்பொழுதிலிருந்து நீங்களும் எனக்குக் கட்டுப்பட வேண்டாம்.சந்தேகமில்லாமல் இப்பொழுது நான் உங்களால் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பினும் நான் உங்களை விடச் சிறந்தவனல்லன். நான் நேர்வழியில் இருப்பதற்கு எனக்கு நீங்கள் உதவுங்கள். நான் தவறிழைக்கும் பொழுது என்னை நீங்கள் நேர்வழிப்படுத்துங்கள் சீர்திருத்துங்கள் என்றார்கள்.

இஸ்லாமிய அரசின் இரண்டாம் குடியரசு  தலைவராக உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த மற்றுமொரு சம்பவம் நம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாகும்.மஹர் தொகை அதிகமாகிக் கொண்டே போனதால் ஏழைகள் திருமணம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது உமர் (ரலி) அவர்கள் மஹர் தொகைக்கு உச்ச வரம்பை நிர்ணயித்து அதை மக்களின் முன்னிலையில் அறிவித்தார்கள். அப்போது வயதான மூதாட்டி எழுந்து உமரே உங்களை நாங்கள் நன்கு அறிவோம்,உங்களின் இந்த அறிவிப்பு குர்ஆனிலோ அல்லது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலோ உள்ளதா என வினவ உமர் (ரலி) அவர்கள் இல்லை என பதிலளிக்கிறார்கள். உடனே அந்த மூதாட்டி திருக்குர்ஆனின் வசனமாகிய

“நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் – அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா? (அல்குர்ஆன் 4:20)

என்பதை ஓதிக் காண்பிக்கிறார்கள். இந்த குர்ஆன் வசனம் உமர் (ரலி) அவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக இருந்ததால் அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. இந்த மூதாட்டி இல்லையெனில் நான் அழிந்திருப்பேன் என்று கூறி, அவர் அறிவித்த முடிவை திரும்பப் உமர் (ரலி ) அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.

நான்கு மத்ஹபுகளின் இமாம்களான இமாம் அபூஹனீபா (ரஹ் ),இமாம் ஷாபி (ரஹ்) ,இமாம் ஹன்பலி (ரஹ்) மற்றும் இமாம் மாலிகி (ரஹ்) அவர்கள் யாரும் தாங்கள் மத்ஹபுகள்தான் இறுதியானது சரியானது என்று வாதிக்க வில்லை .அவை  குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருந்தால்  குர்ஆன் ஹதீஸையே பின்பற்றுமாறும் அந்த சஹீஹான ஹதீஸே தங்கள் மத்ஹபுகள் என்றும் கூறினர்.

இங்கு நம்மை குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.நாம் சமூகத்தில் செல்வந்தர்களாக இருக்கலாம்.அல்லது செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கலாம்.பெரியவர்களாக இருக்கலாம்.அல்லது பிரமுகர்களாக இருக்கலாம்.எனினும் நாம் நபியை விடவோ அவர்களின் தோழர்களை விடவோ அல்லது நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட பொற்காலத்தில் வாழ்ந்த இமாம்களை விடவோ நாம் சிறந்தவர்களல்ல.தவறுகளை ஒப்புக்கொள்வது தலை குனிவு அல்ல.அதை மறுக்கும்போதும், மறைக்கும் போதுதான் நாம் நம்மை நாமே இழிவுப் படுத்திக் கொள்கிறோம்.நமது சுற்றி இருப்பவர்களின் மதிப்பை இழக்கிறோம்.மறுமையிலும் அல்லாஹ்வின் சன்னிதியில் உலகின் அனைத்து மக்கள் முன்னும் அவமானப் பட்டு நிற்க வேண்டிய நிலைக்கு நாம் ஆளாகி விடுவோம்.அல்லாஹ்வின் தண்டனைக்கும் உட்பட்டு விடுவோம். எனவோ யாராக இருந்தாலும் நாம் தவற்றை சுட்டிக் காண்பிக்கும் மக்களை தகுதி பார்க்காமல் நமது செயலின் எந்த பகுதியை அவர் சுட்டிக் காட்டுகிறார் என்பதை நன்றியுடன் நோக்கி நம்மை நாமே திருத்திக் கொள்வோமாக .ஆமீன் .

News

Read Previous

வட்டநிலா

Read Next

மூடப்படுகிறது ‘பிளிப்கார்ட்’ வெப்சைட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *