தவறுகளை சுட்டி காட்டுவதிலும் ஒரு இங்கிதம் இருக்க வேண்டும்!

Vinkmag ad

தவறுகளை சுட்டி காட்டுவதிலும் ஒரு இங்கிதம் இருக்க வேண்டும்!

தவறுகளை சுட்டி காட்டுவதிலும் ஒரு இங்கிதம் இருக்க வேண்டுமென்ற எனது ஆசிரியரின் நினைவலைகள்!

அரபிக்கல்லூரியின் 5ம் வருட மாணவர் பருவம் அது.தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த எனது ஆசிரியர் மௌலானா,மௌலவி ஜியாவுதீன் ஹழ்ரத் அவர்கள் மாலை நேரத்தில் வாக்கிங் செல்லும் பழக்கம் கொண்டவர்கள்.

ஒரு நாளைக்கு ஒரு மாணவர் என்று தனக்கு துணையாக அழைத்து செல்வார்கள்,73 வயது நிரம்பிய அந்த மூத்த ஆசான்.

எனக்கான நாள் வந்த போது நானும் அவர்களுடன் மகிழ்ச்சியாக உடன் சென்றேன்.எனது குடும்பம்,ஊர் மக்களின் பழக்க வழக்கம் தொடர்பான கேள்விகளை கேட்டு கொண்டே வந்தார்கள்.நானும் பதில் சொல்லி கொண்டே வந்தேன்.

திடீரென ஒரு டீக்கடைக்குள் சென்றவர்கள் டீ மாஸ்டரிடம் இரண்டு டீ போட சொல்லி விட்டு கல்லாவில் அமர்ந்திருந்த முதலாளிக்கு அருகில் உள்ள பெஞ்சில் அமர்ந்து கொண்டார்கள்.

நான் அவர்களுக்கு எதிரில் இருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டேன்.டீ மாஸ்டர் எங்கள் இருவருக்கும் டீயை தந்து விட்டு சென்றார்.

இரண்டு மிடக்கு டீயை குடித்து விட்டு எனது ஆசிரியர் டேய்…ஜஹாங்கீர்,இறைவனின் படைப்பு ஒவ்வொன்றும் அதிசயம் நிறைந்தவை.

அதில் சிறப்பான படைப்பாக மனிதர்களாகிய நம்மை படைத்துள்ளான்.மனிதர்களின் நெஞ்சத்தில் பல்வேறு ஏமாற்று சிந்தனைகளை ஊடுறுவ செய்தாலும் அதில் பகுத்தறிவை கொடுத்து தடுக்கவும் செய்கிறான்.

பகுத்தறிவு இருந்தும் அதை முறையாக நடைமுறை படுத்த தெரியாத மனிதனை கண்டு நாம் பரிதாபப்பட வேண்டுமென்று சொன்னார்கள்.

எனது உஸ்தாது சொன்ன விசயங்களை நான் மட்டுமல்ல,அந்த டீக்கடை முதலாளியும் கவனத்தோடு கேட்டு கொண்டே இருந்தார்.

டேய்…ஜஹாங்கீர், மனிதனுக்கு பயன் தரும் வகையில் மாட்டை படைத்து அதிலிருந்து பாலையும் தந்த இறைவன் அந்த பாலுக்கும் ஒரு அற்புதத்தை கொடுத்திருக்கானே…அதை நினைத்து நாம் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார்கள்.

“பாலில் எவ்வளவு தண்ணீர் கலந்தாலும் அதில் உள்ள வெள்ளை நிறம் மாறாமல் இருப்பதே பாலுக்கு இறைவன் கொடுத்திருக்கும் அற்புதம்” என்று சொன்ன எனது ஆசான் டீ கிளாஸை கீழே வைத்து விட்டு அதற்குரிய காசை கொடுத்து விட்டு கடையில் இருந்து வெளியில் வந்து விட்டார்கள்.

பிறகு மற்றொரு நேரம் அந்த கடைக்கு நான் மட்டுமே சென்ற போது அந்த டீக்கடை முதலாளி என்னை பார்த்து உங்கள் உஸ்தாது சொன்ன அந்த இங்கிதமான அறிவுரைகளை நான் மதிக்கிறேன் தம்பி என்றவர்,

வழக்கத்திற்கு மாற்றமாக ஒன்றுக்கு இரண்டு என எடை கட்டுவதற்கு பதிலா அன்றைக்கு ஞாபக மறதியா மூன்று என எடை கட்டி விட்டான் டீ மாஸ்டர்.அதனால் தான் உங்கள் உஸ்தாது வந்த நேரம் டீ ரொம்ப தண்ணியா இருந்திருக்கு என்று சொன்னார்.

எங்களது தவறை மிகவும் நேர்த்தியாகவும் இங்கிதமாகவும் எடுத்து சொன்ன உனது உஸ்தாதிடம் நான் மன்னிப்பு கேட்டதாக சொல்லி விடு தம்பி என்ற அவரது வார்த்தை எனக்குள் கொஞ்சம் ஆறுதலை தந்தது.

டீக்கடை ஓனரையும் சிந்திக்க வைத்த எனது ஆசானின் பிழைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சுவனவாசிகளுக்குரியதாய் ஆக்குவானாக.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

காற்றே விடை கூறு

Read Next

ஹைக்கூ

Leave a Reply

Your email address will not be published.