தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச்செயலாளர் சே.மு.மு.முஹம்மத் அலி அவர்களுடனான தூதின் சிறப்பு நேர்காணல்!

Vinkmag ad

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச்செயலாளரும், இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியருமான சே.மு.மு.முஹம்மது அலி அவர்கள், தூது ஆன்லைனிற்கு அளித்த சிறப்பு நேர்காணல்.

கேள்வி:தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன? அவ்வியக்கத்தின் மூலமாக நீங்கள் ஆற்றும் சமுதாய பணிகள் பற்றி கூற முடியுமா?

 பதில்:தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் 2000ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதிலே எல்லோரையும் ஒருங்கிணைத்து எந்தவிதமான நடப்பு அரசியல் கலப்பு இல்லாமல், மக்களுக்கு சரியான படி,  தேவையானவர்களை கண்டறிந்து உதவக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் நாங்கள் சுற்றுப்பயணம் செய்து, அதன் பலனாக ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.

இதனுடைய முதல் நோக்கம் கல்விதான். ஏனென்றால் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், இந்த மூன்று துறைகளிலே முன்னேற்றம் அடைந்தால்தான், ஒரு சமுதாயம் சரியானபடி மேம்பாடு அடைந்திருக்கிறது என்று அர்த்தம். இந்த மூன்று துறைகளிலுமே நாம் நலிந்து போயிருக்கிறோம். ஆகையால் கல்வியை முதலில் எடுத்துக்கொண்டோம்.

எல்கேஜி-யிலிருந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். படிப்பு முடிய எல்லோருக்குமே எல்லாவகையிலுமே பள்ளி, கல்லூரிகளில் சேர்த்துவிடுவதிலிருந்து, அவர்களுக்கு வேண்டிய கல்வி நிதிஉதவி வழங்குவதிலிருந்து எல்லாவிதமான ஏற்பாடுகளையும் இன்று தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு செய்துவருகிறது.

அதாவது ஒரு மாணவர் விண்ணப்பிக்கிறார் என்று சொன்னால், உடனே அந்த விண்ணப்பத்தை எங்களுடைய கிளைக்கு அனுப்பி நேரடியாக அந்த மாணவர், மாணவருடைய குடும்பத்தை சந்தித்து, அந்த ஜமாத் முத்தவலியையும் சந்தித்து, அவர்கள் மூலமாக பெற்று, யார் உரியவர்களோ அவர்களிடம் இருந்து அவருக்கு வேண்டிய  உதவியைப் பெற்று, அந்த உதவித் தொகையை நேரடியாக அந்த மாணவர் படிக்கின்ற கல்வி நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கிறோம். இதனால் சரியான ஒருவருக்கு சரியானபடி உதவுகிற ஒரு நிலையை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் பத்தாம் வகுப்பு, ப்ளஸ்-1, ப்ளஸ்-2 படிக்கிற மாணவர்களுக்கு Career Guidance Program நடத்திக் கொண்டிருக்கிறோம். Personality Development வகுப்பையும் நடத்திக் கொண்டிருக்கிறோம். நம்முடைய முஸ்லிம் பள்ளிக்கூடங்களை  தேர்ந்தெடுத்து அங்கே போய் ஆசிரியர்களுக்கு, What is the aim of teaching? How to teach? போன்ற வகுப்புகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் இருக்கிற முஸ்லிம் மக்களுடைய ஜனத்தொகை கணக்கெடுக்கும் பணி. இப்பணி நாங்கள் ஆரம்பத்திலிருந்து செய்து கொண்டிருக்கிற, மிகக்கடினமான பணி என்றாலும் கூட, அது மிக மெதுவாக நடந்துகொண்டிருக்கிறது என்றாலும் கூட, அதை ஓரளவு செய்து கொண்டிருக்கிறோம்.  

கணக்கெடுப்புத் திட்டம் (முஸ்லிம் சென்சஸ்) ஒவ்வொரு பள்ளிவாசலிலும் எப்படி நிக்காஹ் ரிஜிஸ்டர் பாதுகாக்கப்படுகிறதோ, அதேபோல் இந்த மக்கள் தொகை ரிஜிஸ்டரும் அவர்களால் பேணப்பட வேண்டும். அதிலே பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாமே பதியப்பட வேண்டும். எத்தனை பேர் இருக்கிறார்கள் குடும்பத்தில், ஆண்கள் எத்தனை, பெண்கள் எத்தனை, குழந்தைகள் எத்தனை, எதுவரை படித்திருக்கிறார்கள் பிஜியா, யுஜியா, +2 அல்லது 10th, ஆலிமா, ஆலிமாவா, வேலை செய்கிறார்கள் என்றால் உள்ளூரா வெளியூரா, உள்நாடா, வெளிநாடா,அவர்களுடைய குடும்பநிலை என்ன, அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறதா, அவர்கள் வீட்டில் சமையல் எரிவாயு இருக்கிறதா, அவர்கள் வீட்டில் ரேஷன் கார்டு இருக்கிறதா, என்ன வாகனம் வைத்திருக்கிறார்கள், அவர்கள் வீட்டில் ஊனமுற்றோர் இருக்கிறார்களா, திருமணம் ஆனவரா ஆகாதவரா, முதிர் கன்னிகள் யாராவது இருக்கிறார்களா இப்படி எல்லா விவரங்களையும் கொண்டு குடும்பத்துக்கு ஒரு பக்கம் என்று சொல்லி நாங்களே அதற்கென்று ஒரு பதிவேட்டை தயார் செய்து, அதை ஒவ்வொரு மஹல்லா வாரியாக கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

இதற்கு நாங்கள் கொஞ்சம் வருத்தத்தோடு சொல்லவேண்டி இருக்கு. அதாவது நாங்கள் எல்லோரிடத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி பல அரசியல் இயக்கங்களிடத்திலே ஆதரவு கேட்டோம், யாரும் கொடுக்கவில்லை. பல சமுதாய இயக்கங்களிடம் கேட்டோம், ஆதரவு கிடைக்கவில்லை. நாங்களே பள்ளிவாசல் பள்ளிவாசலாக போய் இந்த வேலையை செய்துகொண்டிருக்கும் போது, இந்த இடஒதுக்கீடு என்று வருகின்றபோது எல்லோரும் முனைந்தடித்துக் கொண்டு எங்களிடத்திலே ஓடிவந்தார்கள். நீங்க எடுத்தீங்களே என்னாச்சு, முடிச்சிட்டீங்களா? அதை வைத்து நாம் கேட்களாமே என்று.

நாம் அரசு புள்ளிவிவரப்படி 5.8% இருக்கோம். ஆனால் நாம் சொல்லிக்கொண்டிருப்பது  10 முதல் 13% வரை இருக்கின்றோம் என்று சொல்கிறோம். ஆதாரம் இருக்கிறதா என்றால் இல்லை. எந்த ஊரிலும் எந்த கிராமத்தில் போய் கேட்டாலும் சரி தலைக்கட்டு எண்ணிக்கையை சொல்கிறார்களே தவிர, சரியான நிலவரம் இல்லை. அதேபோல் நகரங்களில் வந்தால் சந்தாக்களின் எண்ணிக்கையை சொல்கிறார்களே தவிர, சரியாக நமக்கு கிடைக்கவில்லை. இதனால் ஜமாத்துக்குள்ளேயே ஒரு ஒருங்கிணைப்பு ஏற்படவும், முஹல்லாவுக்குள் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்படவும், முஹல்லாக்களுக்கு மத்தியிலே ஒரு ஒருங்கிணைப்பு ஏற்படவும், இந்த சென்சஸ் மிக முக்கியம். இந்த ஆதாரத்தின் அடிப்படையில் தான் வருங்காலத்தில் நாம் அரசாங்கத்திடம் எதையுமே சரியானபடி கேட்க முடியும், நம் குரலை உயர்த்த முடியும்.

கேள்வி:தற்போதைய  தேர்தலில் தமிழ்நாட்டில் முஸ்லிம் இயக்கங்கள், கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையால் முஸ்லீம்களின் ஒற்றுமை மற்றும் ஓட்டுக்கள் சிதற வாய்ப்புண்டா?

பதில்:தமிழக முஸ்லிம்களை பொருத்தளவில்,அவர்கள் தெள்ளத் தெளிவாக எல்லா தேர்தல் காலங்களிலேயும் இருந்திருக்கிறார்கள். கடந்த கால தேர்தல் முடிவுகளை நாம் ஆராய்ச்சி செய்து பார்த்தோமேயானால், சரியான முடிவிருக்கும். நம்முடைய சமுதாய மக்கள் தெள்ளத் தெளிவான முடிவை ஒரே பக்கமாக எடுத்திருக்கிறார்கள். அதில் குழப்பம் அவர்களிடத்தில் தெரிந்ததில்லை.

நம்முடைய சமுதாய தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள்  தான் பிரிந்து கிடக்கிறார்களே தவிர, தங்களுக்குள் பிணக்கு கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களை பொருத்தவரை அவர்கள் ஒற்றுமையாகவும், ஒருங்கிணைந்தும் இருக்கிறார்கள்.

கேள்வி:அரசியலை சாக்கடை என்றும் ஹராம் என்றும் கூறி விலகி இருப்பது குறித்து தங்களின் கருத்து?

பதில்:அதாவது இஸ்லாத்தையும், அரசியலையும் நீங்கள் பிரிக்க முடியாது. இரண்டும் இரண்டர கலந்ததுதான். ஆனால் இன்றைய அரசியல் நம்முடைய இஸ்லாமிய அரசியலாக இல்லாமல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நம்முடைய இஸ்லாமியர்களே இஸ்லாமிய அரசியலை நடத்தவில்லை, அதனால் பாழ்பட்டுப் போயிருக்கிறது. ஆனால் அதற்காக அரசியலை ஒதுக்கிவிட்டு இஸ்லாமியர்கள் இருக்கவே முடியாது. அரசியல் அதிகாரம் இல்லாமல் நாம் எதையும் சாதிக்கவும் முடியாது. ஆகவே அரசியல் அதிகாரம் வேண்டுமென்று சொன்னால், நாம் அரசியலிலே இருந்து தான் ஆக வேண்டும். அந்த ஆளுமையை பெற வேண்டுமென்று சொன்னால், இஸ்லாமியர்கள் அதில் ஈடுபட்டுதான் ஆகவேண்டும்.

கேள்வி:முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை விசயத்தில் பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள் மேற்கொள்ளும் போராட்ட நடவடிக்கையில் தங்கள் இயக்கத்தின் பங்கு பற்றி? 

பதில்:கோவை சிறைச்சாலையிலே மிக மோசமான நிலையிலே சிக்கியிருக்கிற நம்முடைய நிரபராதி இளைஞர்களுக்காக குரல் கொடுத்து பலமுறை அமைச்சர்களை சந்தித்தும், கடிதங்கள் எழுதியும், வலியுறுத்தியும் இன்றைக்கும் அதனை நாங்கள் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆகையால் சமுதாயத்தின் பொதுப் பிரச்சனை என்று வருகிற போது, அது எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சரி, அதற்காக தெருவுக்கு வருவதில்லை, ஆரவாரம் பண்ணுவதில்லை, ஆர்ப்பாட்டம் பண்ணுவதில்லை, போராட்டம் செய்யவில்லை. அமைதியான முறையிலே யாரை அணுக வேண்டுமோ அந்த அரசுத்துறை அதிகாரிகளை அணுகியும், கடிதம் எழுதியும், எவ்வளவு இலகுவாக சரியானபடி அதாவது பத்திரிக்கை இருக்கிறது, பேனா இருக்கிறது, பேப்பர் இருக்கிறது, இதை வைத்துக்கொண்டு எத்தனையோ சாதிக்க முடியும். அந்த முறையிலேதான் சாத்வீகமான முறையிலே நாங்கள் சாதிக்கிற வேலைகளில் இறங்கியிருக்கோம்.

கேள்வி:தங்கள் இயக்கத்தின் முக்கிய பணியாக கல்விப் பணியை சொல்லும் நீங்கள் இதனை தவிர்த்து நீங்கள் செய்யும் மற்ற பணிகள் குறித்து?

பதில்:அதாவது கல்விப் பணியை தவிர, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை, சென்னையில் ஒரே மேடையில் 30 ஏழைக்குமர்களுடைய திருமணத்தை செய்து வைக்கிறோம். கடந்த ஆண்டு ஏப்ரலில் கூட  ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் ஆண்டுதோறும் 5 அல்லது 6 திருமணங்கள் செய்துவைக்கிறோம். பல்வேறு இடங்களிலே மருத்துவ முகாம்களை  நடத்திக்கொண்டு இருக்கிறோம். இதெல்லாம் நாங்கள் சாதாரணமாக செய்து கொண்டிருக்கிற பணி.

இந்தப் பணிகள் எதுவுமே வெளிச்சத்துக்கு வந்ததில்லை. காரணம் நாங்கள் இதை விளம்பரப்படுத்துவதுமில்லை, போஸ்டர்கள் அடிப்பதில்லை, டிவியிலே சொல்லுவதுமில்லை, மீடியாக்களுக்கு கொண்டு வருவதில்லை. எங்களுடைய பணிகள் அத்தனையுமே பள்ளிவாசல்களிலே நடைபெற்று கொண்டிருக்கின்றன.

எங்களுடைய நோக்கம் வெளியே இருக்கிறவர்களை பள்ளிவாசலுக்குள் கொண்டுவருவது தானே தவிர, பள்ளிவாசலுக்குள் இருக்கிறவர்களை தெருவுக்கு கொண்டுவருவது இல்லை. அதுதான் எங்களுடைய எண்ணம்.

இந்த சமுதாயத்தில் ஏற்படுகிற பிரச்சனைகளை பொருத்தளவிலே இடஒதுக்கீடு என்று வருகிறபோது, இன்னும் சொல்லப்போனால் பல இயக்கங்கள் அதற்கு தீவிரம் காட்டுவதற்கு முன்னதாகவே, இதை குறித்து அரசுக்கு எழுதி, அரசுக்கு எப்படி எப்படியெல்லாம் அதைக் கொண்டு வரலாம், எந்தெந்த முறையில் கொண்டுவந்தால் இதை அடைய முடியும் என்பதையெல்லாம் சொல்லி, அதற்கான பணியை செய்திருக்கிறோம்.

இன்றைக்கு உலமாக்கள் நலவாரியம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், அதற்கு கால்கோடு போட்டு முதன் முதலாக மாநாடு நடத்தி அத்தகைய கான்செப்டையே கொண்டு வந்தது தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்தான்.

கேள்வி:3.5%  இடஒதுக்கீட்டை 5% மாக உயர்த்தித்தர பெரும்பாலான  முஸ்லிம் இயக்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. ஏற்கனவே வழங்கிய 3.5%  இடஒதுக்கீட்டால் இந்த சமுதாயம் ஏதேனும் பலன் அடைந்ததா? அது பற்றி? 

பதில்:3.5% இடஒதுக்கீடு என்பது ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரு இலாபமான ஒன்று. ஆனால் அது பல துறைகளிலே இலாபமாக இருந்தாலும், சில துறைகளிலே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக சொல்லப் போனால், மருத்துவப் படிப்பை எடுத்துக் கொண்டால், இது மிகப்பெரிய இலாபம். இன்னும் அணுபவப் பூர்வமாக சொல்லப்போனால், 1995ல் என்னுடைய மகளை சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கின்ற பொழுது 145 மாணவர்களிலே என் மகளார் மட்டும்தான் முஸ்லிம். ஆனால் இன்றைக்கு அதே மருத்துவக் கல்லூரியிலே 145 மாணவர்களிலே 7 பேர் முஸ்லிம். இது இடஒதுக்கீட்டினால் கிடைத்திருக்கிற நன்மை.

ஆனால் வேலைவாய்ப்பு என்று வருகிறபோது, சில துறைகளிலே 3 அல்லது 4 இடங்கள் தான் காலி என்று வருகிறபொழுது, சுழற்சி முறையிலே வேலைவாய்ப்பு கிடைக்கிறபோது, சில நேரங்களிலே நம்முடைய முஸ்லிம்கள் 40 ஆண்டுகள் கூட காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதை நாம் போக்கவேண்டும். அதற்குரிய வழிமுறைகளை ஆராயவேண்டும். அதற்காகத்தான் இப்பொழுது 5%ஆக உயர்த்திக் கேட்கிறோம். அநேகமாக இந்த தேர்தலிலே நாம் வைக்கிற மிக அடிப்படையான கோரிக்கை இதுவாகத்தான் இருக்கும். தேர்தலுக்குப் பிறகு வென்றெடுப்போம் என்று நம்புகிறேன் இன்ஷா அல்லாஹ்.

கேள்வி:தமிழ் நாட்டில் நாற்பதுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் இருபதாக கூறப்படும் நிலையில், அவைகள் நம் சமுதாயத்தை துண்டாடுகின்றனவா? நம்மில் ஒற்றுமையை உண்டாக்க தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள்?

பதில்:முதலிலிலே இந்த 40,50 இயக்கங்கள் இருக்கின்றன, இவை அனைத்தும் நம்முடைய சமுதாயத்தை துண்டாடிக்கொண்டு இருக்கின்றன என்று நாம் சொல்லுவதே தவறான கருத்தாகும்.

நீங்கள் சொல்லுகின்ற 40,50 இயக்கங்களிலே ஒரு 10 இயக்கங்களைத் தவிர பாக்கி எல்லா இயக்கங்களுமே சமுதாய இயக்கங்கள்தான். சமுதாயத்துக்கு பொதுநல சேவை செய்வதற்கு எத்தனை இயக்கங்கள் வேண்டுமானாலும் தோன்றலாம். நூற்றுக்கணக்கான இயக்கங்கள்கூட இன்றைக்கு தேவைப்படுகிறது.

நம்முடைய சமுதாயத்திலே பொதுநல பணிகளை செய்வதற்கு, மக்களை மேம்பட செய்வதற்கு, இன்னும் நூற்றுக்கணக்கான சமுதாய இயக்கங்கள் தோன்றலாம். ஆகவே அவற்றை நீங்கள் கணக்கில் வைத்துக்கொள்ள கூடாது.

அரசியல் கட்சிகள் அதிகமாவதுதான்  நாம் கவலைப்பட வேண்டிய விஷயம். நீங்கள் தனிநபர் கட்சியையும், காலாவதியான கட்சியையும், லெட்டர்பேடு கட்சிகளையும் விட்டுவிட்டு பார்த்தால் 1,2 தான் அரசியல் கட்சிகள் தேறும். இவையும்கூட மக்களை பொருத்தளவில் தெளிவான சிந்தனையோடு இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது. மக்கள் முட்டாள்கள் என்று நினைக்கிற நாம்தான் முட்டாள்களே ஒழிய, மக்கள் முட்டாள்கள் இல்லை. நம்முடைய சமுதாய மக்களைப் பொருத்தவரை மீண்டும் மீண்டும் சொல்கிறேன், அவர்கள் தெள்ளத்தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்றாலும் அது ஒரே முடிவாகத்தான் இருக்குமே தவிர, நீங்கள் நினைப்பதுபோல் சிதறுண்ட முடிவாக இருக்காது, பிளவுபட்ட முடிவாக இருக்காது. அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் போய்விடுவார்களோ என்று நீங்கள் அச்சப்படுகிறீர்கள். நிச்சயமாக இந்த அச்சம் தேவையில்லை. நம்முடைய சமுதாயம் ஒரே ஒன்றின் பக்கம் இருந்து தெள்ளத் தெளிவாக முடிவெடுத்ததைத்தான் நாம் ஆரம்பத்திலிருந்து சொன்னதுபோல், எல்லா தேர்தல் முடிவுகளும் நிரூபித்திருக்கின்றன.

கேள்வி:வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக அரசு நியமித்திருக்கும் ஆணையத்தைப் பெற்றுத்தர தாங்கள் எடுத்த முயற்சிகள்?

பதில்:முதலில் நாம் சொன்னதே வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக தனிவாரியமே அமைக்கப்பட வேண்டும் என்று. வெறும் ஆணையம் மட்டும் போதாது, அது வாரியமாக இருந்து அதற்கு உரியவர்கள் அந்த வாரிய தலைவராகவும், வாரிய உறுப்பினராகவும் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்திகொண்டு இருக்கிறோம். அந்த நிலையிலேயே தான் இன்றைக்கும் இருந்துகொண்டு இருக்கிறது.  இன்னும் சரியான முடிவு அதற்கு கிடைக்கவில்லை.

ஆணையம் என்று வைத்து இருப்பது அதிலே அரசு அதிகாரிகள் மட்டும் இருப்பதனாலே, நமக்கு தெளிவான ஒரு வாய்ப்பு கிடைக்குமென்று நாம் சொல்லமுடியாது. ஆகவே இன்ஷா அல்லாஹ் அந்த வாரியம் கிடைப்பதற்குத்தான் நாம் பாடுபடவேண்டும். அந்த வாரியத்தின் மூலமாக நாம் செயல்பட்டால்தான் அது சரியாகவரும்.

கேள்வி:கல்விப் பணியில் உங்களின் முக்கிய நோக்கம்?

பதில்:எங்களின் முக்கிய நோக்கம் என்னவென்றால் ஒரு ஊரில் கிறிஸ்தவ சர்ச் இருக்கிறது என்று சொன்னால் எப்படி அதனருகில் பள்ளிக்கூடமோ அல்லது மிஷினரி ஸ்கூலோ இருக்கின்றதோ அதேப்போல் பள்ளிவாசலும் இடவசதியும் இருக்கும் பட்சத்தில் அங்கு ஒரு கல்வி நிறுவனம் இருக்கவேண்டும். இது எங்களின் முக்கிய குறிக்கோள்.

கேள்வி:பாலைவனத் தூது (தூது ஆன்லைன்) பற்றிய உங்களின் கருத்து என்ன?

பதில்:வலைத்தளத்திலே, பாலைவனத்தூது தொடர்ந்து படித்துகொண்டிருக்கிற வாசகர்களிலே நானும் ஒருவன். அதனுடைய பல்வேறு செய்திகள், நிச்சயமாக நம்முடைய மக்களை சிந்திக்கவும், வாசிப்பின்பால் ஆர்வத்தை உண்டுபன்னவும் செய்யக் கூடியதாக இருக்கிறது. அதற்காக என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

News

Read Previous

வெற்றி படி…!

Read Next

Mudukulathur Educational and charitable trust

Leave a Reply

Your email address will not be published.