தமிழகத்தில் இஸ்லாமியர்கள் !

Vinkmag ad

தமிழகத்தில் இஸ்லாமியர்கள் !

செ.திவான் வரலாற்று ஆசிரியர்

அகிலத்தின் அருட்கொடையாகத் தோன்றிய அண்ணல் முகம்மது (ஸல்) அவர்கள் போதித்த ஏக இறைக் கொள்கையை பின்பற்றுகின்ற முஸ்லிம்கள் தமிழகத்தில் ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் இருந்தே வாழ்ந்து வருகின்றனர். அவர்களை துலுக்கர், இராவுத்தர், லெப்பை, மரக்காயர் என்று பல பெயர்களில் அழைத்தார்கள்.

துலுக்கர்

ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியில், காஞ்சிபுரம் மாளிகையில் முதற் குலொத்துங்க சோழ மன்னனுக்கு திரையளந்த நாற்பத்து எட்டு தேச மன்னர்கள் அனைவரும் கப்பங் கட்ட நிற்கின்றனர்.

‘வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர்

மச்சர் மிலேச்சர்களே

சூத்திரர் பிடத்தர் குடக்கர் குக்கர்

குருக்கர் துருக்கர்களே’

ஒட்டக் கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், முத்தப் பருவம் 8 –வது பாடலில் (52) கருநடர், துருக்கர் வட கவுசலர் குத்தர்விடு கவுரியர் மகத்தர் பிறர் சூழ் கடலென வளைத்து அமரர் ககனதலம் முட்ட என்று வருகிறது.

கருநடர் முதலியோர் சூழ்ந்து கடலென ஒலி பெருகப் பொருதகணத்தில் சோழன் குதிரையினத்தை அழித்து யானைகளைத் துண்டித்து, மருப்புகளை ஒடிக்கும்போது குருதியோடு வெளிப்படும் முத்துகளை விரும்பி நினையோம் என்று பாடியுள்ளார்.

கம்பர் பால காண்டத்தில், சந்திர சயிலப் படலத்தில் வரிசையாகக் குதிரைகளைக் கட்டி வைத்தல் குறித்துச் சொல்லும் 825 – வது பாடலில் துருக்கர் தர வந்த என்று பாடியுள்ளார்.

உலாவியற் படலத்தில் சீதையின் திருமணத்திற்கு வந்த மன்னர்களைக் குறிப்பிடும் 1110 – வது பாடலில் சோனகேசர், துருக்கர், குருக்களே என்று துருக்கர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கர் தரவந்த என்ற கம்பரின் பாடலுக்கு சோனகர் கொண்டு வந்தளவுமான அலங்காரம் அமைந்த வலிய குதிரைகளை, குதிரைக் கூடத்தில் நவமணி மாலை போல ஒழுங்காகக் கட்டினார்கள். சோனகரால் ஏற்ற உணவளித்து வளர்க்கப்பட்ட குதிரைகள் அங்கு வந்தன என்று விளக்கம் தருவார் அ.ச. ஞானசம்பந்தன்.

1110-வது பாடலுக்கு துருக்கர் துருஷ்க தேசத்தாரர்களும் என்று விளக்கம் தருவார் வை.மு.கோ துருக்கி நாட்டில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் என்ற பொருளில் இந்தச் சொல் துருக்கர் என்றும், நாளடைவில் துருக்கர் எனவும் மருவி வழங்கியுள்ளது. இந்தச் சொல் வடமொழி, தெலுங்கு இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் துருஷ்கா என பயன்படுத்தப்பட்டு உள்ளது.

சீமத்த சனீகார துலுஸ்க தானுஸ்க என்பது தாராபுரம் கல்வெட்டுத் தொடரில் உள்ள விருதாவளியாகும். விஜயநகர மன்னர்களுக்கு துலுக்க மோகத் தவிழ்ந்தான். துலுக்க தளவிபாடன் என்பனவும், அவை விருதாவளி (சிறப்புப் பெயர்கள்) எனத் தெரியவருகிறது.

வீரபாண்டிய தேவரது நிலக் கொடையொன்றில் எல்லை குறிப்பிடும்பொழுது கோவை மாவட்ட பாரியூர் கல்வெட்டு, கிழக்கு புரட்டலுக்கு மேற்கு துலக்கன்பட்டி நேர் மேற்கு என வரையறுத்துள்ளது. கொங்கு நாட்டில் துலுக்கர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் நிலைத்து விட்டதை இந்தக் கல்வெட்டு உறுதி செய்கிறது.

தாராபுரம் கல்வெட்டு துலுக்கர் பள்ளியாகி தானம் தெரியாமலாகிவிட்ட என்ற 14 –வது நூற்றாண்டின் கல்வெட்டுத் தொடரும், முன்னாள் ராஜராஜன் ஸ்ரீசுந்தரபாண்டியத் தேவர் துலுக்கருடன் வந்த நாளையில்… என்ற திருக்களர் கல்வெட்டும், துலுக்கர் பல சேமங்கள் தப்பித்து என்ற திருவெற்றியூர் கல்வெட்டுத் தொடரும் துலுக்கர் பற்றிய வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிட்டு, துலுக்கர் தமிழ் மண்ணில் தழைத்துவிட்ட பாங்கினை கோடிட்டுக் காட்டுகின்றன. இன்றைக்கும் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் உள்ள சிற்றூர்கள் துலுக்கர் குடியிருப்பைக் குறிக்கும் வகையில் அவற்றின் ஊர்ப் பெயர்கள் அமைந்துள்ளன.

துலுக்கபட்டி –ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், துலுக்கபட்டி – சாத்தூர் வட்டம், துலுக்கபட்டி – விருதுநகர் வட்டம், துலுக்கன்குளம் – நெல்லை வட்டம், துலுக்கன்குளம் – ராஜபாளையம் வட்டம், துலுக்கன்குளம் – அருப்புக்கோட்டை வட்டம், துலுக்கன்குறிச்சி – முதுகுளத்தூர் வட்டம், துலுக்க முத்தூர் – அவினாசி வட்டம், துலுக்கமொட்டை – கோவை வட்டம், துலுக்க தண்டாளம் – காஞ்சி வட்டம் என துலுக்கர் பெயர் தாங்கிய பல ஊர்கள் தமிழகத்தில் உள்ளன.

துருக்கநாடு

பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தில் மாணிக்கம் விற்ற படலத்தில், அப்பொழு கமல வித்தில் – எனத் துவங்கும் 64- வது பாடலில் (வரிசையில் 1259 –வது பாடல்) துருக்க நாட்டும் என்று பாடியுள்ளார். கருடப்பறவை கெளவிக் கடலிலும், துருக்க நாட்டிலும் பரவ விடுத்த வழியே கருடப் பச்சை தோன்றியது.

இராவுத்தர்

பழந் தமிழக அரசியலில் அரபு நாட்டுக் குதிரைகள் பிரதான அங்கமாக விளங்கின. அதனைக் கொண்டு வந்து, பழக்கி, பேணி தமிழ் மன்னர்களுக்குப் பயன்படச் செய்த அரபிகள் இராவுத்தர்கள் எனப் பெயர் பெற்றனர். அவர்கள், தமிழர்களோடு மண உறவு கொண்டு தமிழகக் குடிகளாகவே மாறியது வரலாற்றில் சிறப்பு அம்சமாகும்.

தொன்று தொட்டு, தமிழ்நாட்டின் நால்வகைப் படைப் பகுப்பில் குதிரைப் படையும் ஒரு பிரிவாக இருந்து வந்துள்ளது. அறுபத்து நான்கு கலைகளில் குதிரை ஏற்றமும் ஒன்றாக இருந்தது.

போரில் குதிரையின் மறத்தைப் பற்றிப் பாடுவதற்கான துறையொன்று வகுப்பட்டிருந்ததை புறப்பொருள் வெண்பாமாலை சுட்டுகின்றது, பத்தாவது நூற்றாண்டில், சோழப் பேரரசுப் பெருக்கத்திற்கு, குதிரைகள் பெருமளவில் தேவைப்பட்டன. இந்த உண்மையை அக்காலத்து இலக்கியங்களில் சோழர்களின் வெற்றியுடன் குதிரைகள் பற்றிய புகழ்ச்சியும் புனைந்து குறிப்பிடப்படுகிறது.

பாரசீக, அரபு நாடுகளில் இருந்து சோழ நாட்டில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்ட பொழுது அரபிய முஸ்லிம்களும் தமிழகத்திற்கு உடன் வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தொடக்கத்தில், குதிரைகள் பெரும்பாலும் கொங்கண, கேரளக்கரை பட்டினங்களில் கரை இறக்கப்பட்டு, கொங்குநாடு வழியாக சோழ நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. இன்னும் கோழிக்கோடு நகரில் குதிரை வட்டம் என்ற பகுதியும், கோவை மாவட்டத்தில் குதிரைப்பாளையம் என்ற ஊரும் இருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

குதிரை இராவுத்தன்

அரபுக்குடா நாட்டுக் குதிரைகளின் நடமாட்டமும் வணிகமும் பிற்காலப் பாண்டியப் பேரரசு காலத்திலும் விறுவிறுப்பாக நடைபெற்றன. ஆண்டுதோறும் பதினாயிரம் குதிரைகள் பாண்டிய நாட்டுப் பெருந்துறைகளான காயல்பட்டினம், தேவிபட்டினம் ஆகிய துறைகளில் கரை இறக்கப்பட்டு, நெல்லைக்கும், மதுரைக்கும் நடத்தி, கடத்திச் செல்லப்பட்டன.

அந்த வழிகளில் ஒன்று இன்னும் முதுகுளத்தூர் வட்டத்தில் குதிரை வழிக்காடு என்று வழங்கப்படுகிறது. திருச்செந்தூர் பரமன்குறிச்சியில் குதிரை வழிக்குளம் இருந்து வருவது ஆராயத்தக்கது. குதிரைகளை பாண்டியனுக்காகப் பெற்று வரச் சென்ற வாதவூரர், திருப்பெருந்துறையில் திருப்பணி செய்து தீட்சை பெற்று மாணிக்கவாசகரான கதையை திருப்பெருந்துறை புராணம், கோட்டமிலா மாணிக்கவாசகர் முன் குதிரை இராவுத்தனாக இறைவன் வந்து நின்றதாக குறிப்பிடப்படுகிறது.

அந்த பெருந்துறையில் உள்ள ஆலயத்தின் முகப்பு மண்டபம், குதிரை வீரர் சிற்பங்களுடன் அமைக்கப்பட்டு இருப்பதுடன், இராவுத்தர் மண்டபம் என வழங்கப்படுதலும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.’

அரபு நாட்டுக் குதிரைகளும் அரேபியரும் பெரும் மரக்கலங்களில் நமது கடற்கரைக்கு வந்து சேரும் நிகழ்ச்சி வண்ண ஓவியமாக திருப்புடைமருதூர் கோபுரத்தளத்தில் தீட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியம் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். குதிரை வணிகம் இரு நாடுகளின் உறவு நிலையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியதுடன்

தமிழகத்தில் பல்லாயிரம் அராபிய இஸ்லாமியர் வந்து தங்குவதற்கான பொன்னான வாய்ப்புக்கும், வாழ்க்கை நிலைக்கும் உதவின.

தமிழ் மண்ணில் வந்து இறங்கிய அரபிக் குதிரைகளைப் பழக்கி, தமிழ்நாட்டு முறையில் பயிற்சி அளித்து வரவும், அவற்றுக்கு ஏற்ற உணவு வகைகளை கொடுத்துப் பராமரிக்கவும் வைத்திய உதவி அளிக்கவும், அரபிகளது பணி தேவைப்பட்டது.

பதினான்காம் நூற்றாண்டு வரை தொடர்ந்த இந்த வணிகத்தைப் பற்றி பல வரலாற்று ஆசிரியர்கள் விவரமாக வரைந்துள்ளனர். இந்த நூற்றாண்டு இறுதியில் பாரசீக நாட்டில் இருந்து குதிரை வியாபாரிகளாக வந்த சுல்தான் குலி என்பவர், கி.பி. 1518 –ல் ஹைதராபாத் சமஸ்தானத்தில் (ஆந்திரத்தில்) குதுப் ஷாஹி பரம்பரையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொன்மைக் காலங்களில் தமிழக இஸ்லாமிய அரபிகளுக்கு இராவுத்தர் என்ற சிறப்பு பெயர் வழங்கப்பட்டது, நாளடைவில் குதிரை வணிகம் மட்டுமல்லாமல், அரசு சேவையில் குதிரை வீரராகவும், குதிரை அணியின் தளபதியாக விளங்கியவர்களைக் குறிக்கவும் இராவுத்தன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

இவ்விதம் தமிழகத்தில் அரபிக் குதிரைகளுடன் வந்து தங்கி நிலைத்த தமிழக இஸ்லாமியரான இராவுத்தர்களது உறைவிடம், இராவுத்தர் என்ற விகுதியுடன் பல ஊர்கள் அமைந்துள்ளன. அவற்றில் சில; இராவுத்த நல்லூர், கள்ளக்குறிச்சி வட்டம், இராவுத்த நல்லூர் – காஞ்சிபுரம் வட்டம், இராவுத்தன்பட்டி – குளித்தலை வட்டம், இராவுத்தன்பட்டி – திருமங்கலம் வட்டம், இராவுத்தன் வயல் – பட்டுக்கோட்டை வட்டம், இராவுத்தர் பாளையம் – திருநெல்வேலி வட்டம், இராவுத்தர் சாயபு தர்கா – அறந்தாங்கி வட்டம், இராவுத்த ராயன்குப்பம் – திருக்கோயிலூர் வட்டம், இராகுத்த நல்லூர் – ஈரோடு வட்டம்.

இவை அனைத்தும் இஸ்லாமியத் தமிழர்களது தொன்மையான இருப்பிடங்கள் என்பதில் ஐயமில்லை.

மேலும் இராவுத்தருக்கும் குதிரைக்கும் உள்ள சம்பந்தத்தை தெரிவிக்கும் வழக்கு, ராமநாதபுரம் மாவட்டத்தில் குதிரைக்காக இராவுத்தர் கொக்காகப் பறந்தார் என்பது இன்றும் வழக்கில் உள்ளது.

லெப்பை

லெப்பை என்ற சொல் தமிழகம் முழுவதும் பரந்து வாழும் முஸ்லிம்களைக் குறிப்பிடும் சொல்லாக உள்ளது. லப்பைக் என்ற அரபிச் சொல்லுக்கு இதோ அடி பணிந்தேன் என்று பொருள். ஒரு குழுவின் தலைவரின் ஆணைக்கு அடிபணிதல் என்று பொருள்படும் வகையில், லப்பைக் எனக் குழுவினர் உரைப்பார்கள். இதனால் அம்மக்கள் லெப்பை என்று அழைக்கப்பட்டார்கள். லப்பை –லெவைகள்-லெப்பை எனத் திரிந்தது.

மரக்காயர்கள்

விடுதலை வீரர்களான குஞ்ஞாலிகள், குஞ்ஞாலி மரைக்காயர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். மரக்காயர்கள் என்றால் யார் மிகாப் என்ற அரபுச் சொல்லிற்கு படகு என்பது பொருள். அரேபியாவிலிருந்து இந்தியாவிற்குப் படகில் வந்த இவர்கள் தங்களை மரகாப் என்று அழைத்துக் கொண்டனர்.

இந்த மரகாப் என்ற சொல் தான் பின்னர் மரக்காயர் (மரைக்காயர்) என்றாயிற்று. மரக்கலம் – படகைக் குறிக்கும், ராயர் என்பது ஆளுநர் எனப் பொருள்படும்.

முதன் முதலாக அரபு நாட்டிலிருந்து மரக்கலங்களில் தென்னகம் வந்திறங்கியவர்களை நோக்கி, அவர்கள் யார் என்று வினவியபோது அவர்கள் தங்கள் மரக்கலங்களைச் சுட்டிக் காட்டி மர்க்கப் என்று கூறியதால் மக்கள் அவர்களை மரக்காயர் என்று அழைத்தனர்.

மரைக்காயர்கள் மரக்கலத்தில் பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் சென்று வாணிகம் செய்து மன்னரைப்போல் வாழந்தவர்கள் ஆவர். இவர்கள் ஆரம்பக் காலங்களில் மரக்கலராயர் என அழைக்கப்பட்டார்கள்.

அரபியில் மர்க்கப் என்றால் கப்பல் என்று பொருள்படும். அவர்கள் அதன் மூலம் வந்ததைச் சுட்டிக் காட்டியதின் காரணமாக மரைக்காயர் எனப் பெயர் பெற்றனர்.

கேரளக் கடலோரப் பகுதிகளில் தோன்றிய மாப்பிள்ளை முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் மரைக்காயர் என்றழைக்கப்படுகின்றனர்.

மரக்கலத்துக்குரிய முதலாளிகளை மலபாரில் மரக்கான் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. கேரளப் பகுதியில் இன்றும் மரக்கலத்தை உரிமை உடையவராக விளங்கும் முஸ்லிம் ஆண்கள் மரக்கார் என்றும், முஸ்லிம் பெண்கள் மரக்காத்தி என்றும் அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் மலபாரிலும் கடற்கரையோரப் பட்டினங்களில்தான் இந்த மரக்காயர்கள் வாழ்ந்தார்கள் என்பதும், இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் தெரிய வருகிறது.

தென் ஆர்க்காடு மாவட்டக் கையேட்டில் ‘செல்வ வளமுடைய வணிகர்கள் மரக்காயர்’ என அழைக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கலம் என்ற பொருளைத் தருகிற மர்க்கப் என்ற அரபுச் சொல்லின் தமிழ் ஆக்கமே மரைக்காயர் என்பது பேராசிரியர் முகம்மது ஹுஸைன் நயினாரின் முடிவு.

தமிழக இஸ்லாமியரின் ஒரு பிரிவினரை – தங்களுக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியரைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல்லே மரைக்காயர் என்பது. மரக்காயர் என்ற நல்ல தமிழின் திரிபுதான் மரைக்கார் அல்லது மரைக்காயர்.

 

( தினமணி – ஈகைப் பெருநாள் மலர் – 2015 )

 

News

Read Previous

பூச்சி ஜமால் வஃபாத்து

Read Next

வானம் ஏன் வளைந்து கிடக்கிறது?

Leave a Reply

Your email address will not be published.