தகுதி

Vinkmag ad
16-05-2018 தேதியிட்ட “குமுதம்” வார இதழில் வெளியான,
ஒருபக்கக் கதை
தலைப்பு: தகுதி
எழுதியவர்: கவி. முருகபாரதி
_____________________________
கண்ணாடியில் முகம் பார்த்தான் மணி.
இன்று அவனுக்கு நேர்முகத் தேர்வு.
“கேடலோனியா எங்குள்ளது?” – முதல் கேள்வி.
“அது ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கில் உள்ள தன்னாட்சிப் பகுதி.”
“குட்..! அமெரிக்காவைக் கண்டுபிடித்து யார்..?”
“இந்தியா என்று நினைத்து, அமெரிக்க கண்டத்தைக் கண்டுபிடித்தவர் – கொலம்பஸ். அது இந்தியா அல்ல; ஒரு புதிய கண்டம் எனக் கண்டறிந்தவர் – அமெரிக்கோ வெஸ்புகி. எனவே, அவர் பெயரையே, இலத்தீன் மொழியில், பெண்பால் பெயராக்கி, வரைபடத்தில் முதலில் வெளியிட்டவர் – மார்டின் வால்ட்சிமுல்லர்.”
“அபாரம்!” தொடர் பாராட்டுகளுக்குப் பின், எழுந்தது அந்தக் கேள்வி. “முத்தன் பள்ளம் எங்கிருக்கிறது?”
“தெரியவில்லை சார்!”
“என்ன மணி சார்..? உங்க புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் இருக்கு. சமீபத்துல, அந்த ஊரைப்பத்தி ஒரு நாவல் கூட வந்ததே..! சரி. புதுக்கோட்டை-னு ஏன் பேர் வந்தது..?”
“சாரி சார். தெரியல.”
“உலகத்தையே தெரிஞ்சு வச்சிருக்கீங்க. ஆனால், உள்ளூர் பற்றித் தெரியல. நீங்க இந்தியப் பிரதமர் கூட ஆகலாம். ஆனால், துணை வட்டாட்சியர் ஆகும் தகுதி இல்லை.”
மணிக்கு, தன் முகம் தெரிந்தது… கண்ணாடி இல்லாமலே..!

News

Read Previous

பெண் குழந்தைகள் இடுப்பு வலிமை பெற

Read Next

முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாத் நிர்வாகிகள்

Leave a Reply

Your email address will not be published.