சொல்ல இயலாச் சொல்லிது…!

Vinkmag ad

சொல்ல இயலாச் சொல்லிது…!
பிறை 22

✍. வி.எஸ்.முஹம்மது அமீன்

‘இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மை செய்தன தாம் விளையாட’ என்று
வாழ்வைக் குறித்து விளையாட்டுத்தனமான கருத்தைச் சிலர் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இறைவன் இந்த உலகை வீணாக, விளையாட்டுக்காகப் படைக்கவில்லை.உயரிய நோக்கோடு மிக
நுட்பமாகப் படைத்தான்.வழிகாட்டும் வான்மறையையும்,வழிநடத்தும் தூதர்களையும் அனுப்பினான்.அந்தப் பகலொளிப் படைவரிசையின் இறுதி முத்திரையாய் வந்தவர்கள்தாம் நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்)அவர்கள்.

இறைத்தூதை எடுத்துவைத்த நபி(ஸல்)அவர்கள் அந்தத் தூதுத்துவத்தின் இலக்கணமாய்த் திகழ்ந்தார்கள்.சொல்லுக்கும் செயலுக்கும் இட்டு நிரப்பமுடியாத இடைவெளி கொண்டவர்களுக்கு மத்தியில் வார்த்தையே வாழ்க்கையாக்கி வரலாறு படைத்தார்கள்.அவர்கள் கொண்டுவந்த ஓரிறைச் செய்தியின் அடிப்படையில் ஒரு சமுதாயத்தைக் கட்டமைத்தார்கள்.

காற்றோடு கரைந்துபோகும் வெற்றுத் தத்துவங்களை அவர்கள் உதிர்க்கவில்லை.ஆன்மிகத் தலைவராக,ஆட்சித் தளபதியாக,போர் மறவராக,குடும்பத் தலைவராக,தோழமை கொண்ட தோழராக, நனிசிறந்த வியாபார விற்பன்னராக மக்களோடு மக்களாகக் கலந்து முன்மாதிரியாக வாழ்ந்தார்கள்.வாழ்ந்துகாட்டிவிட்டு ‘என்னைப் பின்பற்றுங்கள்’ என்று சொன்னார்கள்.உலகில் எந்தத் தலைவராலும் ஒருகாலும் சொல்ல இயலாச் சொல்லிது!

அன்று முதல் இன்று வரையல்ல..உலகத்தின் உயிர்மூச்சு நின்றுபோகும் வினாடிவரை உலக முஸ்லிம்களால் அட்சரம் பிசகாமல் நபிகளாரைப் பின்பற்றவேண்டும்.அவர்கள் என்ன சொன்னார்களோ,எதைச் செய்தார்களோ அதை அப்படியே பின்பற்றவேண்டும்.இறை வழிகாட்டுதலின்
அடிப்படையில் அவர்கள் நன்மையை ஏவினார்கள்.தீமையைத் தடுத்தார்கள்.

நபி(ஸல்)அவர்கள் அரியணையில் ஆடம்பரமாய் அமர்ந்துகொண்டு ஆசீர்வாதம்
வழங்கவில்லை.கால்மேல் கால்போட்டுக் கட்டளைகளைப் பிறப்பித்துக்
கொண்டிருக்கவில்லை.நபி(ஸல்) அவர்கள் கடைக்கண் பார்வையால் சுட்டும் கட்டளைக்குக் கீழ்ப்படியக் கைகட்டிக்காத்திருந்த மக்களுக்கு மத்தியில் உதாரண புருஷராக வாழ்ந்துகாட்டினார்கள்.

மக்களுக்கு எந்த நன்மையை ஏவினார்களோ அதை தானும் கடைப்பிடித்தார்கள்.மக்களுக்குச் சொல்லியதை விட அவர்கள் அதிகமாகச் செய்துகாட்டினார்கள்.ஐந்து வேளை மக்களைத் தொழச்
சொன்ன நபி(ஸல்)அவர்கள் தாம் கூடுதலாக இரவு நின்று தொழுதார்கள்.நபி(ஸல்) அவர்களின் வழிபாடு எவ்வாறு இருந்தது என அண்ணலாரின் அன்பு மனைவி ஆயிஷா(ரலி)அவர்களிடம் கேட்டபோது ‘இரவு நீண்ட நேரம் தொழுவார்கள். அந்தத் தொழுகையின் நீளத்தையும் அழகையும் கேட்காதீர்கள்.அது அவ்வளவு நீளமானது.அவ்வளவு அழகானது’ என்று சொன்னார்கள்.

ரமளான் மாதத்தில் அதிகமதிகம் வணங்குபவர்களாக, அதிகமதிகம் வாரி வழங்குபவர்களாக,அதிகமதிகம் பாவமன்னிப்புக் கோருபவர்களாகத் திகழ்ந்தார்கள். நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள் என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் ‘ நான் ஒவ்வொரு நாளும் நூறு முறை பாவமன்னிப்புக் கோருகிறேன்’என்று சொன்னார்கள்.

நபிகளார் ஏன் பாவமன்னிப்புக் கோரவேண்டும்.‘நீங்கள் இறைவனை அஞ்சுவதைக் காட்டிலும் நான் அதிகம் இறைவனை அஞ்சுகிறேன்’ என்று நபி(ஸல்)அவர்களே குறிப்பிடுகிறார்கள்.பாவ மன்னிப்பு எவ்வாறு கோர வேண்டும் என்பதை நபி(ஸல்)அவர்கள் கற்றுத்தரவில்லையென்றால் யாரிடம்போய்

நாம் கற்றுக்கொள்ள முடியும்?

மனிதர்கள் யாவரையும் விட அதிகமாக இறைவனை அஞ்சினார்கள்; நேசித்தார்கள்: வணங்கி வழிபட்டார்கள்.அதனால்தான் புனித ரமளானின் இறுதிப் பத்து நாள்கள் அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள்.இஃதிகாஃப் என்றால்……………..?

வரும் பிறை
தரும் பதில்….🔽

⭕http://www.idealvision.in/?p=3462

News

Read Previous

அல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)

Read Next

ஒரு யுத்த காண்டம்

Leave a Reply

Your email address will not be published.