சுவனம் நுழையச் செய்யும் தூய்மை…

Vinkmag ad

சுவனம் நுழையச் செய்யும் தூய்மை… 

 

ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை

lptyasir@gmail.com

 

         தூய்மை   பல நோய்களுக்குத் தடுப்புச் சுவராக நிற்கின்றது. தூய்மை  வெறும் வார்த்தை கிடையாது. அது வாழ்வின் ஒரு அங்கம். தூய்மை இல்லாத வாழ்க்கை நோய்கள் ஆளும் சாம்ராஜ்ஜியமாகும்.

 

இறைவனை வணங்குதல் தொடங்கி, சாப்பிடுதல், சக மனிதர்களுடன் பழகுதல் வரை நம் வாழ்வின் ஒவ்வொரு நகர்வுகளையும், தூய்மையாக இருப்பதை உறுதி செய்த பிறகே! அடுத்த நகர்வை நகர இஸ்லாம் அறிவுறுத்துகிறது. 

           

     

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா. சீனர்களின் தவறான உணவுப் பழக்கத்தில் உருவானது என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். இது போன்ற பிரச்சினைகளை உலகம் சந்திக்கக் கூடாது என்பதற்காக இஸ்லாம் உணவு விஷயங்களில் பல கட்டுப்பாடுகளை விதிக்கின்றது

 

நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்” (2:172)

 

மனிதனின் ஆளுமையை தூய்மையான ஆடைகளே தீர்மானிக்கின்றன!. ஆடைகள்  விஷயத்தில் தூய்மைளை நாம் முழு கவனம் செலுத்த குர்ஆன் நமக்கு அறிவுரை கூறுகிறது. தூய்மைகளை நம்மிலிருந்து தொடங்க குர்ஆன் வழிகாட்டுகின்றது.
 
உன் ஆடையை தூய்மைபடுத்துவீராக.அசுத்தத்தை வெறுப்பீராக (அல் குர்ஆன்74:34) 

 

 மனிதச் சமூகம் சுத்தத்திலிருந்து பாராமுகமாக முகம் திருப்பி விடக் கூடாது என்பதற்காக, தூய்மையாக இருப்பதை இறை நம்பிக்கையோடு இணைத்துக்  கூறி  நபி (ஸல்) அவர்கள், தூய்மையாக இருப்பதின் முக்கியத்துவத்தை உணரச் செய்கிறார்கள்.


“தூய்மை இறை நம்பிக்கையின்ஒரு பகுதியாகும் நபி (ஸல்) நூல் முஸ்லிம் 381.

மனிதன் பிறந்தது முதல் மரணிக்கும் வரை  தூய்மையாக இருக்க வேண்டிய நீண்ட பட்டியலை இஸ்லாம் நமக்கு போதிக்கின்றது.



மக்களின் ஆழ் மனதில் தூய்மை என்பது பதிய வேண்டுமென்பதற்காக, இறை வணக்கத்தை  தூய்மைலிருந்து  தொடங்க அறிவுறுத்துகிறது. இன்னும் கூடுதலாக, இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைவேற தூய்மைகளை நிபந்தனைகளை விதிக்கின்றது.

 

நோய்த் தொற்று இரு கைகள் மூலமாகவே பரவத் தொடங்குகின்றது.  இரு கைகளை “அடிக்கடி” கழுகி சுத்தமாக வைத்திருக்க மருத்துவ உலகம் தொடர்ந்து வலியுறுத்துகின்றது.

மருத்துவ அறிவு குறைவாக இருந்த அப்போதும், இப்போதும் இறைவனை வழிபட  இரு கைகளை கழுவுவது கடமை என்று இஸ்லாம் கூறுகிறது.

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) – நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; “

தண்ணீரைக் கொண்டு தூய்மைபடுத்திக் கொள்ள  ஆணையிட்ட இஸ்லாம். தண்ணீர் கிடைக்காத நிலையில் எப்படி நம்மை சுத்தப்படுத்திக் கொள்வது? அல்லது தண்ணீரை தொட விடாமல் குளிறு  ஆட்கொண்டது என்றால் என்ன செய்வது? தண்ணீர் கிடைத்தாலும், கிடைக்கவிட்டாலும் தூய்மையை கட்டாயமாக பின்பற்ற  மேற்கண்ட குர்ஆன் வசனத்தின் தொடர்ச்சியாக, தண்ணீர் இல்லாத நேரத்தில் தூய்மை பெறுவதற்கான வழிகளை குர்ஆன் நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கின்றது.



தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லைஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
(அல்குர்ஆன் : 5:6)



நாளொன்றுக்கு  இரு முறைகள் பல் துலக்குவதை, அதிகமான மருத்துவர்கள் அறிவுரை செய்கின்றார்கள்.அன்றேநாளொன்றுக்கு  ஐந்து முறை பல் துலக்குவதை நபி (ஸல்) வலியுறுத்தி சென்றுள்ளார்கள்பல் துலக்கினால் சுத்தங்கள் நமக்கு கிடைப்பதுடன், இறைவனின்  விருப்பங்கள் நமக்கு கை கூடும் என்பதையும் கூடுதல் செய்தியாக நமக்கு நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.



“பல் துலக்குவது வாய்க்கு சுத்தத்தையும் இறைவனிடத்தில் பொருத்ததையும் பெற்று தருகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை (நஸாயி5) நமக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் தருகின்றார்கள்”.`


தன்னிலை மறந்து மனிதன் உறங்கும் நிலையில் கைகள் உடலில் எந்த பகுதிகளிலும் சென்று வந்திருக்கலாம்!.அல்லது கைகளில் ஏதேனும் ஒன்று விழுந்திருக்கலாம்! என்பதற்காக உறக்கம் கலைந்த நிலையில் தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் கைகளை நேரடியாக நுழைக்க இஸ்லாம் கண்டிக்கின்றது..


உங்களில் ஒருவர் தூங்கி எழுந்தால் மூன்று முறை தன் கைகளை கழுவுகின்ற வரை பாத்திரத்தில் இரு கைகளை நுழைக்க வேண்டாம்.. என்பதை நபியின் கூற்றை (முஸ்லிம் 403) அபு ஹூரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

 

நாம் முறையாக சுத்தம் செய்தால், நம் சிறிய பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற சுபச் செய்திகள் நபி மொழிகளில் இடம்பெறுகின்றன.  உறக்கத்திலிருந்து விழித்த முதல், மறுபடியும் உறங்க செல்லும் வரை தூய்மையாக இருப்பதை கவனத்தில் கொள்ள இஸ்லாம்  இயம்புகிறது.

 

வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் பேணவேண்டிய தூய்மைகளை, நோய் காலங்களில் மட்டுமே பின்பற்றுவதின்  விளைவு,  பல நோய்களை அறுவடை செய்கின்றோம்.

இஸ்லாம் காட்டிய வழிகள்படி  கை,கால்,முகம் கழுவதை நாம் வாழ்வில் அன்றாடம் செய்துவரும் செயல்களுடன் இணைத்துக் கொள்வோம்.  உலகில் எத்தனை வைரஸ்கள் பரவினாலும் நம்மை விட்டு தூரம் போகும்.


நம் உடல்,உடை, இருப்பிடம்,ஊர், நகரம் என்று  வாழும் இடங்களை தூய்மையாக வைத்திருப்பது நம் அனைவரின் மீதுள்ள கடமையாக இஸ்லாம் கூறுகிறது. “தூய்மை நம்மை சுவனம் நுழையச் செய்யுமென்பதை மனதில் நிறுத்துவோம்”.  நாம் வாழ்வில் தூய்மைகளை பேணுவோம்.உலகத்தை அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ். அழிந்து ஆரோக்கியமான காற்றை சுவாசித்து, நோயில்லா சமூகம் உருவாகட்டும்..

 

News

Read Previous

சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்‍‌‍

Read Next

கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *