சரித்திரம் பேசுகிறது : இஸ்லாமியக் கம்பர்

Vinkmag ad

நறுமணப் பொருளை விரும்பி வாங்கும் பழக்கமுள்ள எட்டையபுரம் மன்னர் வெங்கடேச பூபதி கல்வியிலும் ஒழுக்கத்திலும் மெய்ஞானத்திலும் உயர்ந்து விளங்கிய நறுமணப் பொருள் வணிகரான செய்கு முகம்மது அலியாரை எட்டையபுரத்திலேயே தங்கும்படிச் செய்தார். இவ்வேளையில் அவருக்கு அரசவைக் களப்புலவர் செந்தமிழ்ச் செல்வர் கடிகை முத்துப்புலவரின் நட்பும் கிட்டியது. ஆதலால், முகம்மது அலியாரின் தவப்புதல்வர் உமறு தமிழ்மேதை கடிகை முத்துப்புலவரிடம் தமிழ்ப் பாடங்கேட்டுக் கற்பன கற்று, கேட்பன கேட்டுப் புலமையில் சிறந்து வளரலானார். பின்னர் உமறின் அருட்திறத்தையும், கவிதையாற்றலையும், உள்ள உறுதியையும் உணர்ந்த எட்டையபுர மன்னர் கடிகைமுத்துப் புலவரின் விருப்பப்படி அவைகளைப் புலவராக நியமித்தார்.

  இவரது புகழ் எங்கும் பரவியது. எட்டையப்பரின் அவைக்கு வந்த வள்ளல் சீதக்காதி உமறின் சிறப்பைக் கண்டு மகிழ்ந்து போற்றித் தம் ஊருக்கு வரும்படி அழைத்துத் தம் நெடுநாள் கனவாகிய நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாற்றை வண்ணத் தமிழ்க் காப்பியமாக வடித்துத் தரும்படிக் கேட்டுக் கொண்டார். உமறுப்புலவரும் ஆர்வத்துடன் இசைந்து கீழக்கரையில் தங்கிக் காப்பியம் இயற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

  வள்ளல் சீதக்காதி காப்பியத்திற்குரிய கருப்பொருளைப் பெற்று வரும் பொருட்டு உமறுப்புலவரை மார்க்க மேதையும் அரபிக் கவிஞரும் ஆகிய செய்கு சதக்கத்துல்லா அப்பாவிடம் அழைத்துச் சென்றார். உமறுப்புலவரின் புறத்தோற்றத்தைக் கண்ட அப்பா உரைதர மறுத்து விட மனம் வருந்திய உமறுப்புலவர் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதுவிட்டு ‘முகம்மது நபியை என்று காண்பேனோ?’ என்று முடியும் 88 விருத்தங்களைப்பாடிக் கண்ணயர்ந்து விட்டார்.

  காலைத் தொழுகைக்குப் பின்னர் சென்ற உமறை அப்பா அன்புடன் வரவேற்று உரைதர முற்பட்டார். வேலை பளு மிகுந்திருந்ததால் பரங்கிப் பேட்டையில் வாழ்ந்த தனது மாணாக்கர் கண்ணாட்டி வாப்பா என்னும் காலிமுகம்மது தீபியிடம் உரைபெற ஏற்பாடு செய்தார். அவரும் உரை தந்து உதவினார். உமறுப்புலவரை உயிர்போல மதித்துப் போற்றிய வள்ளல் சீதக்காதி இறந்துவிட்டார். புரவலரை இழந்து தவித்த புலவரை அபுல்காசிம் என்னும் பரங்கிப்பேட்டைச் செல்வர் வரவேற்று ஆதரித்தார். சீறாக்காப்பியம் சீராக வளர்ந்தது.

  ‘சீறத்து எனும் அரபிச் சொல்லின் தமிழ் வடிவம் ‘சீறா’ சீறத் என்றால் வாழ்க்கை வரலாறு என்று பொருள். இப்பொதுச் சொல் காலப்போக்கில் நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றையே குறித்தது. இது சீறத்துன்னபி என்ற அரபுத் தொடரின் சுருங்கிய வடிவமாகும். புராண என்பது புனிதமான பழங்கதை அல்லது புனிதமான பழைய வரலாறு என்று பொருள்தரும். சீறாப்புராணம் பொதுவான பெருங்காப்பிய அமைதிகளைப் பெற்றுள்ளது. சிறப்பாகத் தண்டியலங்காரம் வகுத்துள்ள காப்பியப் பண்புகளைக் கொண்டுள்ளது.

  இந்நூலின் கண் மூன்று காண்டங்களில் 92 படலங்களும் 5027 பாடல் களும் உள்ளன. முதல்காண்டம் விலாதத்துக் காண்டம், இதில் நபிகள் நாயகம் பிறப்பும், இளமையும், தொழில் முயற்சியும் மனமும் பற்றி 24 படலங்கள் அமைந்துள்ளன. 1240 விருத்தங்கள் உள்ளன. அடுத்தது நுபுவ்வத்துக் காண்டம். இது நபிகள் நாயகம் நபித்துவம் பெற்றதிலிருந்து கொடுமனக் குரைசிகள் இழைத்த கொடுமை பற்றியும், முஸ்லிம்களின் பொறுமை பற்றியும், இஸ்லாம் நிலை கொண்டது பற்றியும் கூறுகிறது. இதன்கண் 21 படலங்களும் 1014 பாடல்களும் உள்ளன. ஹிஜ்ரத்துக் காண்டத்தில் மக்கா குரைசிகளின் கொடுமையால் நபிகள் நாயகம் மக்காவை விட்டு மதினா மக்களின் அழைப்பை ஏற்று சென்று அங்கு குடியேறியதிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை 47 படலங்களின் 2082 பாடல்களில் வர்ணிக்கப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகம் வரலாறு நிறைவு செய்யப்படவில்லை. ஹனிக்கூட்டத்தார் படலத்தில் நின்று விடுகிறது. சீறாப்புராணத்தைச் சரிபார்த்து முதன்முதலில் புதுப்பித்தவர் செய்கு அப்துல் காதிர் நெயினார் லெப்பை ஆலிம் ஆவார்.

  சீறாப்புராணம் மட்டுமன்றி முதுமொழி மாலை, சீதக்காதி திருமண வாழ்த்து, சீதக்காதி பெயரில் கோவை போன்ற நூல்களையும் உமறுப்புலவர் இயற்றி உள்ளார். சீறாப்புராணம் இலக்கியத் தரம் மிகுந்த சிறந்த பேரிலக்கியமாகும். மற்ற மூன்றும் சிற்றிலக்கியங்கள் ஆகும். இவற்றில் சீதக்காதி கோவை கிடைக்கவில்லை.

  கவிநயமும் இனிய சொல்லாட்சியும் அருளுணர்வும் கலந்த தேன்பாகு போன்றது இவரது விருத்தப்படைப்பு. இஸ்லாமிய மரபுகளையும், தமிழ் மரபுகளையும் இணைத்து வழங்கிய சிந்தனைக்கினியவர் உமறுப்புலவர்.

                                    அரும்பாவூர் மு. சாஹிரா பானு

9842491363

நன்றி :

ஜனசக்தி

08 ஜுன் 2009

News

Read Previous

ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ! வைரமுத்து ….

Read Next

“பால் கலக்காத “டீ” சாப்பிட்டால் உடல் எடை குறையும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *