கொஞ்சம் சிரித்தால் தப்பில்லை….

Vinkmag ad
சிரிப்பு 
 
கொஞ்சம் சிரித்தால் தப்பில்லை….
எஸ் வி வேணுகோபாலன் 

ந்த ஊரடங்கு நேரத்தில் நேர்ப்பட சந்திக்க முடியாத மனிதர்களின் உள்ளங்களும் நேரலையில் சங்கமம் ஆகும்படியான கூட்டங்கள் இணைய வழியில் சாத்தியமாகி இருந்தன. இன்னும் தொடர்கின்றன. அப்படியான தொடர் நிகழ்வுகள் நடத்தி வரும் கள்ளக்குறிச்சி அறிவியல் இயக்க அன்பர்கள் பேசுவதற்காக அழைக்கையில், நகைச்சுவை குறித்துப் பேசலாமா என்று கேட்டதும் உற்சாகமாக ஏற்றுக் கொண்டனர். ‘நகைச்சுவை மிகச்சுவை’ என்பது தலைப்பு.  அதாவது, அன்றாட வாழ்க்கைப் பாடுகளில் நாம் சிரிப்பது போதாது என்பது.

நம் வாழ்க்கை நெடுக எதிர்கொள்ளும் அபத்தங்களை ஒரு கணம் நினைத்துக் கொண்டாலே போதும், அத்தனை இருக்கிறது சிரிக்க. வடிவேலு ஒரு திரைப்படத்தில் சொல்வாரே, ‘வீட்டுக்குப் போய் என் முகத்தை நினைச்சுப் பாருங்க கெக்கபிக்க என்று சிரிப்பீர்கள்’ என்று, அப்படி!
ஆனால், சிரிப்பையும் ‘அவுட்சோர்சிங்’ செய்து வைத்திருக்கிறோம், பார்வையாளர் நேரம் போல் அதற்கு ஒரு தனி நேரம் வைத்திருக்கிறோம். பெரும்பாலும் விடுமுறை கொடுத்துவிடுகிறோம். வீட்டு வாசலில் அல்லது அலைபேசியில் யாராவது அழைத்து ஏதேனும் பொருளை நம் தலையில் கட்டப் பார்க்கும்போது, எச்சரிக்கையாக, ‘இப்ப வேணாங்க, இன்னொரு தடவை பார்க்கலாம், ஸாரி’ என்று தப்பித்துக் கொள்வதைப் போல, கதவைத் தட்டி உள்ளே வரக் காத்திருக்கும் நகைச்சுவை தருணங்களையும் ‘வேண்டாம், இப்போ நேரமில்ல’ என்று மறுத்துக் கொண்டுவிடுகிறோம்.
‘கிங்கிணி கிங்கிணி கிணி’ என்று தொடங்கும் திரைப்பாடலில் (தவப்புதல்வன்), ‘பிள்ளை நெஞ்சில் கள்ளமில்லை சிரித்தால் என்ன பாவம்?’ என்ற வரியை எழுதி இருப்பார் கவிஞர் வாலி.  கள்ளமற்று சிரித்தல் எதிரே இருப்போர்க்கும் பேரானந்தம் தருகிறது. தன்னியல்பான நகைச்சுவை இன்னும் ருசியானது. இந்தக் குழந்தை மனம் இருந்தால், சிரிப்பதற்குக் கொள்ளை கொள்ளையாகக் கொட்டிக் கிடக்கிறது.
சென்னை தி நகர் ரங்கநாதன் தெரு காய்கறி சந்தைக்குச் செல்கையில், சில ஆண்டுகளுக்குமுன் நடந்த சொந்த அனுபவம். பீன்ஸ் விற்றுக் கொண்டிருந்த சிறுவனிடம் கேட்டேன், ‘தம்பி, காய் முத்தலா இல்லாம பிஞ்சா நல்லா இருக்கா?’ என்று. அவன் உடனே, ‘பக்கத்துக் கடையில் முளைவிட்ட உருளைக் கிழங்கு வாங்கினியே, அதுக்கு இது எவ்வளவோ மேல்’ என்றான். அதிர்ந்து போய், ‘பார்த்துக்கிட்டுத் தானே இருந்தே, சொல்லி இருக்கலாமே!’ என்று கேட்க, அதற்கு அவன் சொன்ன பதில் இன்னும் அபாரம்: ‘அந்தக் காயும் வித்துத் தானே ஆகணும், எங்க அண்ணன் கடையாச்சே!’.
ங்கிப்பணியின் தொடக்க காலத்தில் திருத்தணி அருகே சிற்றூர் கிளையொன்றில் நிறைய சிரிப்பு அனுபவங்கள். பொத்தல் பொத்தலாகக் கிழிந்த ரூபாய்த் தாள் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்த ஒரு சிறுவன் கிளை மேலாளரிடம் கொடுத்து, ‘இது போகுமா?’ என்று கேட்க, மேலாளர், ‘இது எப்பவோ போயிருச்சே’ என்று பதில் சொல்லித் திருப்பி அனுப்பி விட்டார்.
வங்கியில் எப்படியாவது பேசி சும்மாவே ஒரு கடன் வாங்கி விடுவது என்று வந்து நின்ற ஒருவர், ‘அய்யா செங்கல் சூளை போடணும், கடன் தருவீங்களா?’ என்றார். ‘அடடா, இப்போ நடக்கறது ஜூன், சூலையிலே வாங்க ‘ என்று சொல்லி அனுப்பி விட்டோம். இன்னொருவர் வந்தார், ‘பெண்ணுக்கு கல்யாணம் பண்ணக் கடன் உண்டா?’ என்று. மேலாளர், ‘அதெல்லாம் தருவதில்லை, பயிருக்கு மட்டும் தான் கடன்’ என்று  அனுப்பியதும்,நான் அவரைக் கேட்டேன், ‘கல்யாணம்ங்கறதும் ஆயிரம் காலத்துப் பயிர்னு தானே சொல்றாங்க, கொடுத்திருக்கலாமே’ என்றேன். மேலாளர் முறைத்திருப்பார் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
ஆடி கிருத்திகை நேரத்தில் அத்தனை நெரிசல் இருக்கும் நேரத்தில், எங்கள் கிளை மேலாளர், திருத்தணியில்  கூட்டமான கூட்டம் நிறைந்த பேருந்தில் ஏறி இருக்கிறார், ஆனால், நடத்துனர் விசில் அடித்து அவரைக் கீழே இறக்கி விட்டார், இவர் வேறு பேருந்துக்குக் காத்து நின்றிருந்தார், ஒரு வழியாக வந்துவிட்டார். ஆனால், இவரை இறக்கிவிட்டுச் சென்ற பேருந்து விபத்தில் சிக்கி விட்டது. பத்திரமாக ஊர் வந்து சேர்ந்த மேலாளரை, உள்ளூரில் வெகுளியான ஒரு வாடிக்கையாளர், ‘அடடா, நீங்க ஏறின பஸ் ஆக்சிடென்ட் ஆயிருச்சுன்னு கேள்விப்பட்டு பயந்து போயிட்டேன், ஒண்ணும் ஆகலியே?’ என்று கேட்டார். ‘உங்க அன்புக்கு நன்றி, தப்பிச்சுட்டேன்’ என்றார் மேலாளர். அந்த வாடிக்கையாளரோ, ‘அதுக்கில்லீங்க, உங்களை நம்பித் தான் பணம் போட்டிருக்கேன், நீங்க போயிட்டிருந்தா என்ன ஆவறது, அடுத்த மேலாளர் என்னைத் தெரியாதுன்னு சொல்லிட்டா?’ என்று சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு நகர்ந்து போனார்.
இதைவிட வேடிக்கை ஒன்று நடந்தது, சிறிய கிளை என்பதால் நிறைய பண இருப்பு வைத்துக் கொள்ளாத நிலையில், ஒரு நாள் திடீர் என்று காலையில் இருந்தே பணம் செலுத்துவோரை விட, தங்கள் கணக்கில் இருந்து பணம் வாங்கிச் சொல்வோர் அதிகமாகி விட, பணத் தேவை ஏற்பட்டது. வேறு கிளைக்குப் போய் பணம் வாங்கி வர வேறு ஊழியரும் இல்லை என்பதால், மேலாளர், உள்ளூரில் பெரிய கடை வைத்திருக்கும் வாடிக்கையாளரை தொலைபேசியில் அழைத்து, அவசரமா கொஞ்சம் பணம் வேணும் என்றதும், அவர் அதற்கென்ன கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லி பையனை அனுப்பி வைத்தார். பையன் கொண்டு வந்தது பணம் அல்ல, காசோலை, ‘எங்க கணக்கில் இருந்து இந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு அப்புறம் கொடுக்கச் சொன்னார் அப்பா’ என்றார் மகன். அவருக்கும் சேர்த்துப் பணத்தை வேறு கிளையில் இருந்து வாங்கி வந்து கொடுக்க வேண்டியது ஆயிற்று!
தைகளில், நாடகங்களில், படங்களில் இப்படியான காட்சிகள் இயல்பான நகைச்சுவையாக வந்து போகும். சுஜாதாவின் நாவல் ஒன்றில், ஒரு பத்திரிகை ஆசிரியரை சந்திக்க செல்வார்கள் கணேஷ், வசந்த் இருவரும். ஆபீஸ் பையன் சொல்வார், ‘அய்யா காபி குடிக்கப் போயிருக்காரு, நீங்க?’ என்று. உடனே வசந்த் ‘நாங்க குடிச்சுட்டோம்’ என்பார். வெறுத்துப் போகும் பையன், ‘அதைக் கேக்கல, நீங்க யாரு?’ என்பார்.
திரைப்படம் ஒன்றில், தங்கவேலுவிடம் ஒருவர் ‘மன்னிக்கணும்’ என்பதைச் சற்று அழுத்தமாகச் சொல்வார், உடனே, தங்கவேலு, ‘மண்ணு நிக்காதுங்க’ என்பார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் வரும் ஓவ்வொரு தருணத்திலும் அப்படியான நகைச்சுவை வெடிகள் தெறிக்கும்.  திருவிளையாடல் படத்தில் சிவாஜி, விறகுவெட்டியாக வரும் காட்சியில் உன் பெயர் என்னப்பா என்றால், அவர்  ‘சட’ என்று சொல்ல, அருகே நிற்பவர் ‘அட’ என்று ரசித்துக் கேட்பார். கிரேசி மோகன் வசனங்களில் வேகவேகமாக அடுத்தடுத்த நகைச்சுவை பொறிகள் வெடிக்கும்.
சிரிப்பு பற்றிப் பேச இணைய வழியில் தேடிக் கொண்டிருக்கக் கூட வேண்டாம். சிரிப்பின் வழியில் இணைய முடிந்தால் போதும். வாழ்க்கை சிறக்கும்.
நன்றி: வண்ணக்கதிர் இணைப்பு (தீக்கதிர்: பிப்ரவரி 7, 2021)

News

Read Previous

ஆனாலும்.. அன்பு மாறாததா..??

Read Next

மக்கள் ஒன்றுபட்டுவிட்டால்…

Leave a Reply

Your email address will not be published.