காத்திருக்கிறேன்…

Vinkmag ad
காத்திருக்கிறேன்…
நிதானமாக எழுந்தார் ராகவன். பொறுமையாக மனைவி கொடுத்த காஃபியை ருசித்துப் பருகினார். பிள்ளைகளின் அறைக்குள் நுழைந்தார். அவர்களுக்கு நடுவே படுத்துக் கொண்டார். அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டான் மூத்தவன். வயிற்றில் கை போட்டுக் கொண்டு அவர் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான் இளையவன்.
இருவரும் ஒரே நேரத்தில் கண்விழித்துப் பார்த்தார்கள். யாரின் கழுத்தைப் பிடித்திருக்கிறோம்? யாரின் வயிற்றில் கை போட்டிருக்கிறோம்?
“அப்ப்ப்ப்பா…” இந்த உணர்வு, அது தந்த சுகங்கள், இதுக்காக காத்திருந்த ஏக்கங்கள் இன்னும் எத்தனையோ… இந்த மகன்களின் நெஞ்சுக்குள்.
பத்து நாட்களுக்கு முன் பணம், பணம் எனப் பறந்தவர்.  எப்போதும் பிசி, பிசி என ஓடிய பிசினஸ் மேன். கடமைக்கு காஃபி பருகிவிட்டு, அவசரத்தில் குளித்துவிட்டு, அரைகுறையாக சாப்பிட்டு, அலுவலகம் நோக்கி விரைந்து, நடுநிசியில் வீடுவந்து…
இப்படியே சுழன்று கொண்டிருந்த ராகவனின் உலகத்தில் மனைவி, குழந்தைகள் என்ற  எண்ணங்களெல்லாம் தூரமாகவே இருந்தது.
இப்போது இந்த தனிமை, குடும்பத்தினரோடு தனித்திருந்தே ஆகவேண்டிய சூழ்நிலை…
முன்னோக்கி முழுவேகத்தில் பறந்த அவரது வாழ்க்கை   பறவை தன்சிறகுகளை இறுகக் கட்டி  ஊரடங்கு உத்தரவு வேடனால் குடும்ப வலைக்குள் நுழைந்து கொண்டது.
“என்னங்க அடுத்தவாரம் ஸ்கூலில் ஆண்டுவிழா.பிள்ளைகள் டான்ஸ், ட்ராமாவில் சேர்ந்திருக்காங்க. எல்லோருடைய பேரன்ட்ஸும் வராங்களாம். நாமளும் போய்ட்டு வரணும்.” “இல்லை சுதா, அடுத்தவாரம் ஃபாரின் கஸ்டமர்ஸ் வராங்க அதனால் வரமுடியாது. நீயே பார்த்துக்க”
உறவுக்காரர்கள் வீட்டுத் திருமணம், நண்பர்களின் பிறந்தநாள் அழைப்புகள், வீடு குடிபுகும் விசேஷங்கள், மட்டுமல்லாது தன்மனைவி, குழந்தைகளின் பிறந்தநாள்கள், தனது திருமணநாள் எதிலுமே கலந்து கொள்ளாமல் பணம் மட்டுமே குறிக்கோளாக வாழ்ந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? மறுகிய மனதுடன் தன் மனைவி குழந்தைகளுடன் உருகிய தங்கமாய் ஒட்டிக் கொண்டு நாள்களை நகர்த்தத் தொடங்கினார் ராகவன்.
இழந்த ஆண்டுவிழாக்களை, கல்யாணங்களை, விசேஷங்களை, பிறந்த தினங்களை தேடுகிறது மனம்.வருடம் முழுவதும் பணம் தராத நிம்மதி, திருப்தி, மகிழ்ச்சியை இந்தத் தனிமை நாட்கள் எனக்கு உணர்த்திவிட்டதே! கொரோனா அழிந்தவுடன் குடும்பத்தோடு எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். கொரோனா விரைவில் ஒழிந்து போக குடும்பத்துடன் தனியாக பிரார்த்தனையோடு காத்திருக்கிறார்.
ஃபாத்திமா,
ஷார்ஜா.

News

Read Previous

மின்பாடங்கள் தயாரிக்க இலவச மென்பொருள்கள்

Read Next

நாலாவதும் பொண்ணு.எருக்கம்பால் ஊத்திட்டோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *