கம்பன் களஞ்சியம் தொகுதி 1

Vinkmag ad
பேரா பெஞ்சமின் லெபோ அவர்கள் அவர் எழுதியிருந்த “கம்பன் களஞ்சியம்” என்ற நூலை  என்னுடைய வேண்டுகோளுக்கிணங்க நூல் அறிமுக விழாவன்றே கிடைக்குமாறு அனுப்பிவைத்திருந்தார். முதல்பக்கத்தில் ‘நாடிய நட்புடன்’ என்று கையெழுத்திட்டிருந்தது கவர்ந்தது. கம்பக் காவலர் திரு முருகேசன், நாவுக்கரசர் சொ.சத்தியசீலன் அணிந்துரைக்குப் பின் ‘பணிந்துரை’ என்று பேரா லெபோ தன்னுரைக்குத் தலைப்பிட்டிருந்ததும் உரையில் வாழ்க்க்கையின் வசந்தமாய் வந்த திருமதி லூசியா லெபோ அவர்களுக்குக் கொடுத்திருந்த அடைமொழிகளும் மேலும் கவர்ந்தன.
நூலில் எட்டுத் தலைப்புகளில் கள்ளூறு கம்பன் கவிகளில் திளைத்தவற்றைத் தொகுத்துப் பதிவுசெய்துள்ளார். கண்ணதாசன் இரசித்த கம்பன், வாலி வதை – ஒரு விளக்கம், கம்பனின் கூனியும் மில்தனின் சாத்தானும், பரசுராமப் படலம் என்று எட்டு இரத்தினங்கள். அவற்றில் என்னைக் கவர்ந்த கம்பரும் வீரமா முனிவரும் என்ற கட்டுரையின் சிறப்பைக் காட்டாகக் கூறிப் பதிவை நிறைவு செய்கிறேன்.
கம்பர் – கன்னித் தமிழ் நாட்டுக் கழனியில் விளைந்த கரும்பு
வீரமாமுனிவர் – தமிழகக் காந்தத்தால் ஈர்க்கப்பட்ட இரும்பு
என்று கட்டுரை தொடங்குகிறது. இருவரும் வெவ்வேறு காலத்தவர், சமயத்தவர், கம்பர் தமிழ்நாட்டவர் – முனிவர் தமிழுக்குத் தன்னைத் தந்தவர், பன்னீராயிரம் பாடல்களால் படையெடுத்துப் படிப்போர் நெஞ்சைச் சிறைப்பிடித்துக் கவிச்சக்கரவர்த்தியானவர் கம்பர் – அதில் கால் பங்கு பாடல்களால் (3615) தமிழரைக் கவர்ந்தவர் முனிவர் என்று பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் பாட்டுத்திறத்தாலும் கூறும் கருத்தாலும் ஒன்றுபட்டவர்கள் எனப் பதிவு விரிகிறது.
முதலில் கடவுள் வாழ்த்தில் வீரமாமுனிவர் கம்பனை ஒட்டிப் பொதுமையே பாடியுள்ளார், உலகம் யாவையும் என்று கம்பன் தொடங்க ‘சீரிய உலகம்’ மூன்றும் என்று கிருத்துவம் சொல்வது போன்று மண்ணுலகு, விண்ணுலகு, நரகுலகு மூன்றையும் வீரமாமுனிவர் குறிப்பிடுகிறார். வள்ளுவனையொட்டிப் பாதம் பணிகிறார். தூய வேரிய கமல பாதம் என்பதில் வேரிய கமல சொல்லாட்சியும் கம்பனுடையதே.
கம்பனை ஒட்டி அவையடக்கம் பாடுகிறார்.
‘வண்டமிழ் இனிதின் கேட்ட மடக்கிளி கிளற்றுள் புன்சொல்
கொண்டுஉமிழ்ந்து உரைப்ப நூலோர் குறையெனக்கொள்ளார்’… என்று தன்னைத் தாழ்த்திக்கொண்டு உயர்கிறார்.
மூலநூல் பற்றிச் சொல்வது, படலங்கள் மூலம் கதை நகர்த்துவது, நாட்டுவளம், எருசலவளம் என்று சொல்லிலும், கவிதையிலும் பற்பல இடங்களிலும் கம்பனை ஒட்டிச் செல்கிற வீரமாமுனிவர் வேறுபடுகிற இடம் காமத்துப்பாலைச்சார்ந்து கம்பன் கடைப்பிடித்த காவிய உத்திகளை முனிவர் தவிர்த்தமையே என்று நூலாசிரியர் சுட்டுகிறார். வள்ளுவத்தின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீனில் மொழிபெயர்த்த முனிவர் இன்பத்துப்பாலை மொழிபெயர்க்கவில்லை என்பதையும் காட்டுகிறார்.
கம்பர் உலகியலோடுகாட்டும் வர்ணனை தேம்பாவணியில் வானுலக எண்ணங்களோ, அறம் சார்ந்த எண்ணங்களோ சார்ந்து நிற்கும் என்று கவிதைகள் காட்டப்பட்டுள்ளன.
கம்பனின் சந்த நயங்களையும் தேம்பாவணியின் ஒலி நயங்களும் போற்றப்படுகின்றன.
இவ்வாறு இரு பெரும் காவியங்களையும் கற்பார்க்கு இன்பம் கனியும் என்ற எண்ணத்தை ஊன்றுவது பேரா.பென்சமின் லெபோ அவர்களின்
வெற்றி.
இந்நூல் அவருடைய முதல் தொகுதி. மேலும் பல தொகுதிகளை அவர் அள்ளக் குறையா கம்பன் களஞ்சியத்திலிருந்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நூல் விவரம்    : கம்பன் களஞ்சியம் தொகுதி 1.
                              பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, செயலர், கம்பன் கழகம், பிரான்சு
நூல் வெளியீடு: வானதிப் பதிப்பகம்
                             23, தீனதயாளு தெரு, தியாகராய நகர்,
                             சென்னை 17.        விலை: ரூ 60
அன்புடன்

சொ.வினைதீர்த்தான்
சொ. வினைதீர்த்தான் <karuannam@gmail.com>

News

Read Previous

உன் நினைப்பில் …………

Read Next

ஈமானை வெளுக்கச் செய் இறைவா !

Leave a Reply

Your email address will not be published.