கண்ணதாசனுடன்ஒருபேட்டி

Vinkmag ad

#கண்ணதாசனுடன்ஒருபேட்டி:

மீசை இல்லாத பாரதி, தாடி இல்லாத தாகூர் என்று கவிஞர் வாலி உம்மை வருணிக்கிறார். உமது வாழ்வு பற்றி……….

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு

கவிஞரே, மூன்று பெண்களை மணந்தீர், 15 குழந்தைகளுக்குத் தந்தையானீர். இன்னும் ஒன்று பெற்றிருந்தால் 16-ம் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க என்பது உண்மையாயிருக்குமே?

போட்ட கணக்கில் ஒரு புள்ளி தவறாமல்
கூட்டிக் கழித்துக் குறையாப்பொருள் வளர்க்கும்
நாட்டுக்கோட்டைச் செட்டி மரபில் நானும் பிறந்தவன் தான்
ஆனாலும் என் கணக்கோ அத்தனையும் தவறாகும்
கூட்டுகின்ற நேரத்தில் கழிப்பேன்; குறையென்று
கழிக்கின்ற நண்பர்களைக் கூட்டுவேன், கற்பனை பெருக்குவேன்
அத்தனையும் பிழையென்று துடைப்பத்தால பெருக்குவேன்; ஏதேதோ
பெரும்பெரிய திட்டங்கள் வகுப்பேன்; வகுத்தது எல்லாம் வடிகட்டிப்
பார்த்தபின் சிரிப்பேன் அடடா நான் தெய்வத்தின் கைப் பொம்மை.

4000க்கும் மேலாகக் கவிதைகள் எழுதினீர். 5000க்கும் மேலான சினிமா பாட்டுகள் எழுதினீர். இதன் நோக்கம்தான் என்ன?

மானிட இனத்தை ஆட்டிவைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை

நிவீர் படிக்காத மேதை. ஆதி சங்கரர் முதல் பாரதி வரை 2000 ஆண்டுகளாகத் தோன்றிய பெரும் மேதைகளின் கருத்தை எல்லாம் எளிய பாடல்களாக்கிக் கொடுத்தீர்களாமே?

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமென யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

உலக மகாகவி காளிதாசன் “சொல்லும் அதன் பொருளும் போல” பார்வதியும் பரமேஸ்வரனும் வாழ்வதாக கடவுள் வாழ்த்துப் பாடினான். நீவீர் கணவன் மனைவி பற்றி என்ன சொல்கிறீர்?

சத்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்
தர்மத்தில் இணைந்து வாழ்வோம்
கத்திவழி நேர்மையாய் பண்புவழி மேன்மையாய்ப்
பாரெல்லாம் வணங்க வாழ்வோம்
பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்
பக்கத்தில் பங்கு கொள்வோம்.

பட்டினத்தார் கருத்துக்களைப் பாடியிருக்கிறீராமே?

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி
காடுவரை பிள்ளை, கடைசி வரை யாரோ?

நல்ல தத்துவப் பாடல்தான்., உமது ஆசை என்ன?

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

நேருபோன்ற தலைவர்கள் இறந்தபோது உருக்கமான கவிதைகள்
எழுதினீர்கள். மரணம் பற்றி ஒன்றுமே பாடவில்லையா?

போனால் போகட்டும் போடா-
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
வந்தது தெரியும் போவது எங்கே, வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால், இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம், வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்

வரவு செலவு எழுதும் குலத்தில் உதித்த மாமேதையே.. ஜனன,மரணம் பற்றிய உமது வரவு செலவுக் கண்க்கிலும் பிழை இல்லை. இளமையில் வறுமை கொடிது என்று அவ்வைப் பாட்டி சொல்கிறாளே?

“ஏன் பிறந்தாய் மகனே – ஏன் பிறந்தாயோ
இல்லையொரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே”

Where there is a will, there is a away என்று ஆங்கிலத்திலும் மனம் இருந்தால் வழி உண்டு என்று தமிழிலும் சொல்வது உண்மைதானா?

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழ்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும் , கவலை தீர்ந்தால் வாழலாம்…..

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் கண்ணனுடன் வாழ்வேன் என்கிறாரே ஆண்டாள் திருப்பாவையில். உமது கருத்து என்னவோ?

நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் – நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!

லாட்டரி பரிசு விழுந்தால் பாதியைக் கோவிலுக்கு எழுதி வைப்பேன் என்று நூறு முறை சொன்னாலும் இந்த பாழாய்ப் போன கடவுள் செவிசாய்ப்பதில்லையே?

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை ,இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று எங்கள் புறநானூற்றுப் புலவன் கனியன் பூங்குன்றன் கூறுகிறான். இப்படி ஏதேனும் உயரிய எண்ணம் உண்டா?

எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க…வாழ்க…

துரியோதணனையும் அர்ஜுனனையும் அனுப்பி நல்லது கெட்டது பற்றி ரிப்போர்ட் கொடுக்கச் சொன்னான் கண்ணன். துரியோதணன் எல்லாரும் கெட்டவர்கள் என்றும் அர்ஜுனன் எல்லாரும் நல்லவர்கள் என்றும் சொன்னார்களாம். இவர்களில் யார் நல்லவர்?

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்

கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது
எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது
இன்பம் துன்பம் என்னும் எண்ணம் ஏன் வந்தது
இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதனின் கொள்கை தெரியவில்லை
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்

கண்ணதாசரே, 9000 க்கும் மேலாக கவிதை மழை பொழிந்துவிட்டீர்கள். உம்மை தினமும் பேட்டிக்கு அழைத்தாலும் எனது பேட்டி முடியவே முடியாது.
நன்றி.

News

Read Previous

நடிகர் எழுத்தாளர், இசை விமர்சகர் ஷாஜியுடன் கலந்துரையாடல்

Read Next

கௌரவர்கள்

Leave a Reply

Your email address will not be published.