கட்டாயக் கொடை

Vinkmag ad
கட்டாயக் கொடை
‘ஜகாத்’ என்பது இஸ்லாத்தைத் தாங்கி நிற்கும் ஐம்பெரும் தூண்களில் ஒன்றாகும். ‘ஜகாத்’ என்பதற்கு கட்டாயக்கொடை, அறக்கொடை, கட்டாய தர்மம், கட்டாய வரி, ஏழை வரி என்பன போன்ற பல பெயர்கள் உண்டு. ‘ஜகாத்’ என்ற சொல், பல விரிவான பொருளைக் கொண்டது. இந்தச் சொல்லுக்கு, வளர்ச்சி, தூய்மை, முன்னேற்றம் போன்ற பொருள் உண்டு.
‘ஜகாத்’ கொடுப்பதால், செல்வந்தரின் பொருள் வளர்ச்சி அடைகிறது; தூய்மை பெறுகிறது. பொருளை வழங்குகின்ற செல்வந்தர்களின் உள்ளங்களும் தூய்மை பெறுகின்றன. இத்தகைய காரணங்களால் அந்த அறக்கொடைக்கு ‘ஜகாத்’ என்ற பெயர் வந்தது.
‘ஜகாத்’ வழங்குவது, அன்பின் ‘முதலீடு’ மட்டுமல்ல; அது ஓர் ஆன்மிக ‘கொள்முதல்’ ஆகும்.
‘தொழுது வாருங்கள்; ‘ஜகாத்’தும் கொடுத்து வாருங்கள்’ என்று தொழுகையையும், ஜகாத்தையும் இணைத்து, திருக்குர்ஆனில் 28 இடங்களில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இதனால் தொழுகைக்கு இணையான அந்தஸ்தை ‘ஜகாத்’ பெற்று இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
‘அல்லாஹ் மீது ஆணையாக! தொழுகையையும், ஜகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன்.  ஜகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும்’ என்று முதலாம் கலீபா (ஜனாதிபதி) அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
ஒரு முஸ்லிமிடம் குறிப்பிட்ட அளவு செல்வம் சேர்ந்து- அது ஒரு வருடத்திற்கு மேலாக அவரது உடைமையில் இருந்தால், அந்தப் பணத்தில் 40-ல் ஒரு பங்கு அதாவது இரண்டரை சதவீதம் ‘ஜகாத்’ என்ற கட்டாயத் தர்மத்தைச் செலுத்துவது கடமை ஆகும்.
பொதுவாக, ‘ஜகாத்’ செய்யுங்கள் என்று மட்டும் இறைவன் திருமறையில் கூறவில்லை. யார் தர்மம் செய்ய வேண்டும்? யாருக்கு அதைக் கொடுக்க வேண்டும்? எப்படிக் கொடுக்க
வேண்டும்? என்பதையெல்லாம் விரிவாக விளக்கி இருக்கிறான்.
‘ஜகாத்’ கொடுக்க யாருக்குத் தகுதி உண்டு என்பதை இஸ்லாம் பட்டியலிடுகிறது.
1. ‘ஜகாத்’ கொடுப்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும், 2. பருவம் எய்தி இருக்க வேண்டும், 3. சம்பாத்தியத்தில் சுதந்திரம் பெற்றவராக இருக்க வேண்டும். (அடிமைகள் மீது ‘ஜகாத்’ கடமை இல்லை), 4. பொருளின் மீது  பூரண அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டும். ஒருவர் கைவசம் பொருள் இருக்கிறது. ஆனால் அந்தப் பொருளுக்கு அவர் சொந்தக்காரர் இல்லையாயின் அவர் மீது ‘ஜகாத்’ கடமை இல்லை, 5. பொன், வெள்ளி, ரொக்கப்பணம் ஆகியவற்றில் அவை ஓராண்டு காலம் கைவசம் இருந்தால் மட்டுமே ‘ஜகாத்’ கடமையாகும்.
6. வளரும் பொருட்களுக்கே ‘ஜகாத்’ வழங்க வேண்டும். வியாபார சரக்கு, தங்கம், வெள்ளி, பணம், கால் நடைப்பிராணிகள் வளரும் பொருட்களாகும். வளரும் பொருளில்லாதவை, தேவைக்கு அதிகமாக இருப்பினும் அவை மீது ‘ஜகாத்’ கடமை இல்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள், கார்கள், பாத்திரங்கள் (அவைகளின் மூலம் வருமானம் வராத பட்சத்தில்) இருந்தாலும் இவை மீது ‘ஜகாத்’ கடமை ஆகாது. ஒருவர் வருமானம் வரும் கட்டிடங்கள் (வியாபாரத் தலங்கள்) தொழிற்சாலைகள் போன்றவற்றில் முதலீடு செய்து இருந்தால், அவர் அவற்றில் இருந்து வரும் நிகர லாபத்தில் ‘ஜகாத்’ கொடுக்க வேண்டும். அதன் மொத்த மதிப்பில் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் ஒருவர் கட்டிடங்களையோ அல்லது வீடுகளையோ வியாபாரப் பொருட்களாக்கிக் கொண்டிருந்தால் (அதாவது அவர் வீடுகளையும், கட்டிடங்களையும் கட்டி அவற்றை விற்பதையே வியாபாரமாகக் கொண்டிருந்தால்) அவர் அவற்றின் மொத்த மதிப்பில் ‘ஜகாத்’ கொடுக்க வேண்டும்.
7. தானியம் மற்றும் காய்கறி வகைகள் போன்ற விவசாயப் பொருட்களுக்கும் ‘ஜகாத்’ கொடுக்க வேண்டும். இதில் ஆற்றுப் பாசனம் போன்றவை மூலம் தானாக விளையும் பொருட்களுக்கு 10 சதவீதம் ‘ஜகாத்’ கொடுக்க வேண்டும். பணம் செலவழித்து நீர் பாய்ச்சுதல் போன்ற பணிகளைச் செய்து விளையும் பொருட்களுக்கு 5 சதவீதம் கொடுத்தால் போதுமானது.
‘ஜகாத்’தைக் கடமையாக்கிய இறைவன், அதை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற வரையறையையும் வகுத்து விட்டான்.
‘(ஜகாத் என்னும்) தானங்கள்-வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதற்காக (வசூல் செய்வது, கணக்கிடுவது போன்ற வேலைகளில்) உழைப்பவர்களுக்கும், எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின்பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அவர்களுக்கும், (அடிமைகளை) விடுதலை செய்வதற்கும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப்போக்கர்களுக்கும் உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் (யாவையும்) அறிபவன்; மிக்க ஞானமுடையோன்’ (9:60) என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
இதன்படி 1. ஏழைகள், 2. வறியவர்கள், 3. ஜகாத்தை வசூலிக்கவும், பங்கிடவும் நியமிக்கப்பட்டவர்கள், 4. உள்ளங்கள் இணைக்கப்பட வேண்டியவர்கள், 5. கைதிகள், 6. கடனாளிகள், 7. இறைவழியில் உழைப்பவர்கள், 8. பயணிகள் ஆகியோருக்கு வழங்கிட வேண்டும்.
ஜகாத் பொருளைத் தன்னுடைய தாய், தந்தை, தந்தை வழி தாத்தா, பாட்டி, தாய் வழி தாத்தா, பாட்டி ஆகியோருக்குக் கொடுக்கக் கூடாது. இவ்விதமே தம்முடைய மக்கள், மகன் வழி பேரன் பேத்தி, மகள் வழி பேரன் பேத்தி ஆகியோருக்குக் கொடுத்தால் ஜகாத் நிறைவேறாது. இவ்வாறே கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் தமது ஜகாத்தைக் கொடுத்துக் கொள்வதும் கூடாது.
மேற்கூறப்பட்ட உறவினர்களைத் தவிர மற்றவர்களுக்கு ‘ஜகாத்’ கொடுப்பது கூடும். சான்றாக சகோதரன், சகோதரி, சகோதரர் குழந்தைகள், சகோதரி குழந்தைகள், சிறிய தந்தை, சிற்றன்னை, மாமா, மாமி ஆகியோர் ‘ஜகாத்’ பெறுவதற்குத் தகுதியுடையோர். அவர்களுக்கு ஜகாத் கொடுப்பது கூடும்.
ஜகாத் மற்றும் தான தர்மங்கள் கொடுப்பதில் உற்றார், உறவினர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
‘(நெருங்கிய உறவினருக்குத் தர்மம் செய்பவருக்கு) உறவைப் பேணல், தர்மம் செய்தல் ஆகிய இரு (நன்மைகளுக்கான) நற்பலன் கிடைக்கும்’ என்பது நபிமொழி.

News

Read Previous

முதுகுளத்தூரில் 1068 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

Read Next

துபையில் சுவைமிக்க அல் ஈமான் கேட்டரிங் சர்வீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *