உழைக்கும் கைகளே

Vinkmag ad

#குறுங்கதை

உழைக்கும் கைகளே

ரியாத் அவென்யூ மாலில் தரைத்தளத்தில் வங்கியில் எனது எண்ணிற்கான அழைப்பு திரையில் வந்தது. எழுந்து சென்றேன். நான் அலுவலரின் மேசையை அடைந்த பின்னும் எனக்கு முன்னால் இருந்த வாடிக்கையாளர் நகரவில்லை.

அலுவலர் அவரைக் கடிந்துகொண்டார்.

‘எத்தனை முறை சொல்வது? இப்பொழுது இந்திய வங்கி எண்ணைச் சொல்லிப் பணம் அனுப்புவதை எங்களால் ஏற்க முடியாது. மற்ற பணமாற்று இடங்களில் ஏற்கலாம். எங்களால் முடியாது. இங்கு இனிமேல் அனைத்துக் கணக்குகளும் வங்கியைப் போலத்தான். நீங்கள் கண்டிப்பாக ஏடியெம் அட்டை வாங்க வேண்டும். அதற்கு இருபது ரியால்கள் தரவேண்டும். இடத்தை விட்டு நகருங்கள். அடுத்த வாடிக்கையாளர் வந்துவிட்டார்.’

அவர் மீண்டும் துவங்கினார்.

‘நானூற்றெழுபது ரியாலைப் பிரித்து அனுப்புகிறேன். அதற்கு தனித்தனிக் கட்டணம். இப்பொழுது இதற்கும் இருபது ரியால்கள். நான் அடிக்கடி பணம் அனுப்புவதில்லை. மாதம் ஒருமுறைதான் வருகிறேன். எனக்கு எதற்கு ஏடியெம்?’

உருது உச்சரிப்பில் லேசாக போஜ்பூரி பாணி தெரிந்தது. வடக்கில் எங்காவது கிராமப்புறத்திலிருந்து வந்திருக்கவேண்டும். நானூற்று எழுபது ரியால்களையும் பிரித்து அனுப்புகிறாறென்றால், தோராயமாக ரூபாய் ஐந்தாயிரம் + ஐந்தாயிரம். மாதச் செலவுக்கு இவ்வளவுதான் அவரால் அனுப்ப முடிகிறது. ஆள் பார்ப்பதற்குப் பாவமாக இருந்தார்.

அலுவலரிடம் ஆங்கிலத்தில் ‘என் கணக்கில் அதைச் சேர்க்க முடியுமா எனப் பாருங்கள்’ வேண்டுமென்றே நீட்டிச் சொன்னேன். நான் தருகிறேன் என ஒற்றை வரியில் ஆங்கிலத்தில் சொன்னால் அவருக்கு புரிந்தாலும் புரியும்.

‘அச்சா ஆப்கா கார்டு பன்ஜாயேகா. உதர் பைட்டேங்கே (சரி உங்களுக்கு அட்டை தருகிறோம் அங்கே அமருங்கள்).

எனது வேலை முடிந்ததும் வெளியே வந்தேன். அந்த எளியவர் காத்திருந்தார்.

‘ஏ ருக். எனக்கு ஏன் பணம் தந்தாய்? ஆங்கிலம் எனக்கும் வரும்.’ – முரட்டுத்தனமாகத் துவங்கினார்.

‘பாருங்கள் நான் கருணையெல்லாம் காட்டப் பணம் தரவில்லை. எனக்கு நேரமாகிக்கொண்டிருந்தது. நானும் செல்லவேண்டும். அதனால்தான் விரைவில் முடிக்க…’

‘வோ டீக்கெ. பைசா லே (அது கிடக்கட்டும் காசைப் பிடி)’

பேசினார்.

‘என்னைப் போலப் பத்துப் பேர் இருக்கிறோம். அனைவருக்கும் உன்னால் உதவவா முடியும்? உதவினாலும் அது சரிதானா? எனக்கு உதவவேண்டுமென நினைத்தால் உன் வீட்டில் அலுவலகத்தில் எதற்காவது கூலியாள் தேவையென்றால் என்னிடம் சொல் வெள்ளிக்கிழமைகளில் ஓய்வாக இருப்பேன், வந்து செய்கிறேன். இப்போது காசைப் பிடி.’

* Abul Kalam Azad
Camp: Saudi Arabia

News

Read Previous

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

Read Next

திரைகடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *