இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கு

Vinkmag ad

JALIAN

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கு-2

ஷா அப்துல் அஜீஸ்

இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை ‘தாருல் ஹர்ப்’ ஆகப் பிரகடனம் செய்தார்.

ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன் னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் ‘பத்வா’ எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.

அஞ்சாத புலி ஹைதர் அலி

18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் ‘முதலாம் மைசூர் போர்’ எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.

தீரன் திப்பு சுல்தான்

‘மைசூர் புலி’ திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.

1790ம் ஆண்டு முதல் 1792ம் ஆண்டு வரை நடை பெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் ‘முடியாது’ என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.

வங்கத்துச் சிங்கங்கள்

வங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10-ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக் கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரை கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.

தென்னாட்டு வேங்கைகள்

தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது. ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்தியத் தாயின் விடுதலைக்குத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.

குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூ ருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று தூக்கிலிடப் பட்டனர்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கு-3

முஃப்தீ இனாயத் அஹ்மது

தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடு தலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப் பட்டது. ‘நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?’ என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.

‘ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்’ என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

அன்றும்… அயோத்தி அவலம்…

தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.

தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறு வேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசை பெற்றான்.

#புதைந்து_போன_புரட்சி_மலர்கள்

வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிட ப்பட்டுக் கொல்லப்பட்டார்.

1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலி டப்பட்டார்.

#அன்றும்_ஒருபொடோ

இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது ‘ரௌலட் சட்டம்’. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணை ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். ‘கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது’ என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். ‘எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்’ என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மன சாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.

இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப் பட்டது. 1931ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. ‘நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனை யற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்’ என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளை யெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று ‘லப்பைக் லப்பைக்’ என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார். அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.

முஹம்மதலி, ஷெளகத் அலி, அபுல்கலாம் அஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர். காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார்.

விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர் – கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமிய பெண்களின் பங்கு!

இந்தியாவுக்கு சுதந்திரம் என்பது பலரின் கூட்டு ஒத்துழைப்பினாலும், விடா முயற்சியாலும், பலரின் உயிர் தியாகத்தினாலும் கிடைத்தது என்பதனை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அப்போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட பல தியாகிகள், மாவீரர்கள் என்று பலரும் போராடி, உயிர் நீத்த பின்னரே, இன்றைய சுதந்திர இந்தியா அயல் நாட்டவரின் அடிமை தளத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.

இப்படிப்பட்ட ஒரு மாபெரும் சுதந்திரம், ஒரு தனி மனிதானலோ அல்லது ஒரு தனி மதத்தவராலோ கிடைத்தது என்று கூறினால், அது பச்சப் பொய்யாகவே தான் இருக்க முடியும். வரலாற்றை சற்று புரட்டி பார்த்தல், இந்திய சுதந்திரத்திற்கு அடித்தளமும், பொருள் வசதியும் அளித்தவர்களில் இஸ்லாமியர்களே முதல் இடம் வகிப்பார்கள். இதில் வரலாற்றில் வெளிவந்தது சில பெயர்கள், மறைக்கப்பட்டதோ பல பெயர்கள்.

இவ்வீரமிகு போராட்டத்தில் முஸ்லிம் பெண்களும் தங்கள் வீரத்தை, உயிர் தியாகத்தை, அறிவு பலத்தை பயன்படுத்தினார்கள் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
இந்த திருநாட்டில் உள்ள மக்களும், சமுதாயமும் சுதந்திரமாக மேலை நாட்டவரின் அடிமை தளத்தில் இருந்து மீட்டெடுக்க போராடிய வீரமிக்க முஸ்லிம் சமூகப் பெண்களின் வரலாற்றை ஒரு குறுகிய தொகுப்பாக இங்கு காணப் போகிறோம்.

#பேகம்_ஹஜ்ரத்_மஹல்-
இவர் ஒத் மாநிலத்தின் ராணி, நவாப் வாசித் அலி ஷாவின் மனைவியுமாவர். ஒத் என்பது இப்போது உள்ள உத்திர பிரதேச மாநிலம் ஆகும். இந்தியா பிரிடிஷ் காரர்களால் அடிமை பட்டுக் கிடந்த காலத்தில், அவர்களின் அடிமை தளத்தில் முழு மாநிலமும் உறைந்த நிலையில் இருந்த பொழுது துணிந்து எழுந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர்.

பேகம் என்பது இவரது பெயர், “ஹஜ்ரத் மஹல்” என்பது மற்றவர்களால் போற்றி வழங்கப்பட்ட பெயர். அம்மாநிலத்தை ஆண்டு கொண்டு ராஜாவாகிய அவரது கணவரை பிரிடிஷ்காரர்கள் கொல்கத்தாவுக்கு நாடு கடத்திய பிறகு, அம்மாநிலத்தையே தன் கையில் எடுத்து ஆண்டவர். அம்மாநிலத்தை காக்க தன்னுடைய மகன் பிரிஜிஸ் காதரை மன்னனாக்கிவிட்டு, நாட்டை காப்பதற்காக அவர் சுதந்திர போராட்டத்தில் களம் இறங்கினார்.

இந்தியாவின் முதலாம் உலக போரின் போது முக்கிய பெறும் தலைவர்களுடன் இணைந்து பல சாதனைகளை செய்து உள்ளார். ஒரு சமயம் பிரிட்டிஷ் தலைவர்களில் ஒருவரான சர் ஹென்றி லாரன்ஸ் என்பவரையும், அவரை சுற்றி இருந்த மற்றும் சில அதிகாரிகளையும் வளைத்து பிடித்து ஒரு தனி பெண்மணியாக எதிர் கொண்டு, அவர்களுடன் நடந்த போராட்டத்தில் பேகம் ஹஜ்ரத் மஹல் சர் ஹென்றி லாரன்ஷை தன் கையால் சுட்டு வீழ்த்தினார்.

பின்னர் பிரிட்டிஷ்காரர்களின் சார்பில் ஜெனரல் ஹவ்லாக் என்பவரின் கண்காணிப்பில் மீண்டும் அம்மாநிலத்தை கைப்பற்ற முயன்று பெரும் தோல்வியை தழுவினார்கள். இறுதியில் சர் கேம்பால் தலைமையில் லக்னவை மீண்டும் பிரிட்ஷ்காரர்களே கைபற்றினர். இந்த சூழ்நிலையில் பேகம் ஹஜ்ரத் மஹல் பிரிட்ஷ்காரர்களால் பின் வாங்கிக் கொள்ளும் படி வற்புறுத்தப்பட்டார். ஆனால் வீரப் பெண்மணியான அவரோ இவர்கள் கொடுக்கும் “பொது மன்னிப்பில்” வெளி வந்து மீண்டும் இவர்களின் அடிமைத்தனத்திற்கு ஆளாவதை விட இங்கு இருந்து இடம் பெயர்வது மேல், என்று முடிவு எடுத்த துணிச்சல் மிக்க பெண்மணி.

#அஜிஜன்-
இவரை என்னவென்று புகழ்வது, தமிழ் அகராதியில் இத்துணை தைரியமிக்க மகத்தான பெண்ணுக்கு என்ன வார்த்தை உள்ளது என்றால் கிடைக்குமா என்று தெரியவில்லை தைரியத்தை தன் இரத்தமாக கொண்டு வாழ்ந்தவர். லக்னோவில் பிறந்த இவர் 1832-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் நானா ஸாஹிப் அவர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக அனைத்து மக்களும் ஒன்றினைந்து போரடா வேண்டி, இந்து முஸ்லிம் மக்களை ஒற்றுமைக்காக அழைத்த போது நாட்டிற்காக இவர் வீட்டை விட்டு வெளியே வந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்.

தன் ஒருத்தியின் வாழ்க்கை பல பேருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தவர். பெண்கள் அனைவரையும் போருக்கு தயார்படுத்தியவர், பெண்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்த கற்றுக் கொடுத்தவர். பிரிட்ஷ்க்காரர்களின் ரகசியங்களை ஒன்று திரட்டி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அனுப்புவராக பணி புரிந்தவர். இறுதியாக பிரிட்டிஷ் அரசாங்கம் இவர்களை சிறை பிடித்த போது இவர்களுக்கு எதிராக செயல்பட்டதை துணிச்சலோடு ஒப்புக்கொண்டு, பிரிட்டிஷாரின் மன்னிப்பை ஏற்க மறுத்து, உயிர் தியாகம் செய்வதே மேல் என்று முழக்கமிட்ட வீர மங்கை.

#பி_அம்மா (அபாடி பேகம்)

இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் கைபற்றிய போது, மிக துணிந்து போராடிய பெண்மணிகளில் இவரும் ஒருவர். இவருடைய மகன் முகமது அலி 1921-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் பொது மன்னிப்பில் சிறையை விட்டு வெளியே வருவதாக கேள்விபட்ட பி அம்மா உரைத்த பதில், “முஹம்மது அலி வெறும் சாதாரண மனிதன் அல்ல, அவன் இஸ்லாத்தின் மகன், அவனால் ஒரு போதும் மற்றவர்கள் கொடுக்கும் மன்னிப்பு பிச்சையில் வருவதை சிந்திக்க முடியாது. ஒரு வேலை அவன் அதை விரும்பினாலும் இந்த வயது முதிர்ந்த தாயின் கைகள் பலம் இழந்து கிடந்தாலும் அவனை எதிர் கொள்ள இது பலம் பெறும்” என்று உரைத்தவர்.

அவர் அயல் நாட்டின் பிடியில் இருந்து தன் தாய்நாட்டை காப்பற்ற அயராது உழைத்தவர். சுதந்திரத்திற்காக போராடியவர்களுடன் மிக துணிந்து செயல்பட்டவர். அவர்கள் அயல் நாட்டின் ஆடைகளை அணிவதை தவிர்த்து மற்றவர்களையும் காதி துணியை அணிய வைக்க முயற்சித்தவர். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பெரிதும் போராடியவர், இத்துணை போராட்டத்திலும் தன்னுடைய ஈமானை ஒருபோதும் தளர விடாதவர்.

#ஜுபைதா_தாவூதி-

இவர்கள் மௌலான ஷாபி தாவூதி அவர்களின் மனைவி, பீகாரை சேர்ந்தவர். பிரிட்டிஷ்க்கு எதிராக “துணிச்சலை” தங்கள் ஆடையாக உடுத்தி செயல்பட்டவர். மேலை நாட்டவர்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை ஒன்று திரட்டி பிரிட்டிஷ் காரர்களுக்கு முன் தன் எதிரித்துவத்தை காட்ட தீ வைத்து கொளுத்தியவர். பிரிடிஷ்க்காரர்களுக்கு எதிராக நடந்த அனைத்து கூட்டங்களிலும் பங்கெடுத்து, மற்ற பெண்ககளுக்கும் துணிச்சலை வளர்க்க தன்னை முன் மாதிரியாக செயல்படுத்திக் கொண்டவர்.

#சதாத்_பனோ_கிச்லேவ்-

இவர் பஞ்சாபை சேர்ந்தவர். மற்றவர்களை ஊக்குவிப்பதற்காக சுதந்திர போராட்டத்திற்காக பல கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதியவர். சாதாரண பெண்மணியாக இருக்கும் நாம் நம் கணவர் சத்தியத்தின் பாதையில் போராடியோ அல்லது இறை நேர்மைக்காகவோ சிறையில் அடைக்கப்பட்டார் என்று கேள்வி பட்டால் அழுது, ஆர்ப்பாட்டம் செய்து நாம் வருந்துவதோடு அல்லாமல் நம் குழந்தை, பெற்றோர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி, தனிமையில் வீழச் செய்வோம்.

1920-ஆம் ஆண்டு சதாத் பனோ கிச்லேவ் தன் கணவர் டாக்டர்.கிச்லேவ் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்ட அவர் தெரிவித்தது என்ன தெரியுமா? “அவர் தன் நாட்டுக்காக கைது செய்யப்பட்டதை எண்ணி நான் மிகவும் பெருமை படுகிறேன், அவர் ஒருவரின் வாழ்க்கையை கொடுத்து ஆயிரம் பேரின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளார்” என்று ஒரு துளிக் கூட வருத்தம் கொள்ளாமல் பெருமிதம் கொண்டார். அந்த கண்ணியமிக்க பெண்மணி. இவர் அரசாங்கத்தின் அத்து மீறல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக குரல் கொடுத்தவர், டாக்டர். கிச்லேவ்-ஆல் நிறுவப்பட்ட “ஷுவராஜ் ஆசிரமத்தை” தன் கணவனுக்கு பின் வழி நடத்தி சென்ற பெருமையை கொண்டவர்.

#ஜுலைகா_பேகம்-

இவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் மனைவியாவார், மிகவும் தைரியமிக்க பெண்மணி. சுதந்திர போராட்டத்தில் காந்தியாலும், நேருவாலும் மிகவும் மதிக்கத்தக்க, உன்னதமான மனிதன் அபுல் கலாம் ஆசாத்தை 1942-ல் கைது செய்யப்பட்ட போது, ஜுலைகா காந்திக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

அதில் “என் கணவர் ஒரு வருடம் சிறைத் தண்டனை மட்டுமே பெற்றுள்ளார். அவர் தன் நாட்டின் மீது வைத்து இருந்த பற்றுக்கு, அவருடைய பக்குவப்பட்ட மனதிற்கும் நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்த தண்டனையே, ஆனால் நியாயம் இன்னும் கிடைக்கவில்லை என்றும், இன்று முதல் இந்த வங்காளத்தின் முழு கிலாபாத் அமைப்பையும் நானே பொறுப்பேற்று நடத்துவேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தன் கணவனின் பொறுப்பை மிக எளிதாக தனதாக்கி கொண்டு தன்னுடைய பங்கையும் சுதந்திரத்திற்காக முழுமையாய் வெளிக்கொணர்ந்தவர்.

#ரஜியா_காத்தூன்-

பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து நின்ற வங்க தேசத்தின் முதல் பெண்மணி என்ற சிறப்பை பெற்றவர், இதனால் அவர்களை கைது செய்து களப்பணி என்ற இடத்தில அடைத்து வைத்தனர். அவருடைய கடைசி மூச்சை அவர் அங்குதான் நீத்தார்.

மேலே குறிப்பட்டவர்களை தவிர நிசதுன்னிஷா பேகம், அக்பரி பேகம், அஷ்கரி பேகம், ஹபீபா, ரஹீமி, அமினா குரைஷி, பாத்திமா குரைஷி, அமினா தயப்ஜி, பேகம் சகினா லுக்மணி, சாபியா சாத், பேகம் குல்சூம் சயானி, அஸ்மத் அரா காத்துன், சுகரா காத்துன், பீபி அமதுள் இஸ்லாம், பாத்திமா இஸ்மாயில், சுல்தானா ஹயாத் அன்சாரி, ஹழ்ரா பேகம் மற்றும் ஜுஹரா அன்சாரி இவர்களில் பல பேர் சிறையில் இருந்தும் பல சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். இவர்களின் மகத்தான போராட்டத்தாலும், வீரத்தாலும் இன்று நம் சுதந்திர இந்தியாவை காண முடிகிறது.

Independence-Day-Messages-Quotes-Wallpapers-Facebook-Timeline-Cover-Whatsapp-Status

News

Read Previous

இலக்கணம் : புணர்ச்சியின் வகைகள்

Read Next

இந்திய முஸ்லிம்களின் முக்கிய சவால் கல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *