ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது

Vinkmag ad

ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது 

எஸ் வி வேணுகோபாலன் 

ன்பின் பெருமழை எப்படி பெய்யும் என்பதைக் கண் கூடாகப் பார்த்தாயிற்று…. இந்தத் தொடரை ஏதேனும் ஒரு கட்டத்தில் நிறைவு செய்யலாமா என்ற குறுஞ்செய்தியை வாட்ஸ் அப்பில் 1024 பேருக்கு அனுப்பப் போக, உங்களால் இயன்ற அளவு, எழுத விஷயமிருந்தால் அந்த அளவு, குறைந்த பட்சம் ஒரு ஐம்பது வாரம் வரை என்றெல்லாம் சாரல் அடித்தது. ஆனால், அப்புறம் அடித்தது பாருங்கள், ஆலங்கட்டி மழை, எங்கும் ஒதுங்க முடியாமல் சாட்டையடி மழை, கூரை பொத்துக்கொண்டு இடி மின்னல் எட்டு திசையிலும் பளபளக்க ஜோவென்று பெருத்த ஓசையோடு அடித்த மழை…. தொடரை நிறுத்தலாம் என்று உள்ளத்தால் உள்ளலும் தீதே என்று ஓங்கி அடித்து நொறுக்கிய பேரன்பின் பெருமழை!

சங்கீத சாத்திரமோ, இசைக்கருவிகள் குறித்த ஞானமோ, திரைப்பாடல்கள் அல்லது தனிப்பாடல்கள் பற்றிய விவரங்களோ அறிந்திராத ஓர் எளிய இசை கொண்டாடியின் ரசனையின் பகிர்வு தான் இந்த இசை வாழ்க்கை. இந்தத் தொடரின் கட்டுரைகள், வாழ்க்கைப்பாடுகளின் ஓட்டத்தில் வலி நிவாரணி போன்றவை என்றும், மனத்திற்கு இன்பம் சேர்ப்பவை  என்றும், தத்தமது சொந்த இசையார்ந்த நினைவுகளை மீட்டெடுப்பவை  என்றெல்லாம் வாட்ஸ் அப்பில் பதில் அனுப்பியுள்ள நேயர்களுக்கு மகத்தான நன்றி உரித்தாகிறது.  அலைபேசியில் அழைத்துப் பேசியவர்கள், புக் டே இணையதளத்தில் சென்ற கட்டுரைக்கான பதில் எழுதுகையில் இதை நிறுத்துவதாக யோசிப்பானேன், புதிய அம்சங்கள் கொண்டுவாருங்கள், தொடருங்கள் என்று  பதிவு செய்துள்ள தோழர் தினேஷ் உள்ளிட்டு எல்லோருக்கும் சிறப்பு நன்றி.   நல்லது வாசக உள்ளங்களே, நீங்கள் ‘விரும்பும் வரையில் விருந்து’ படைப்போம் வாருங்கள்….

மே தின சிறப்பு வாழ்த்துகள் எல்லோருக்கும் ! சென்னையில் தான் தேசத்தில் முதல் மே தினம் 1923ம் ஆண்டு கொண்டாடப்பட்டது என்பது இந்திய தொழிலாளி வர்க்க வரலாறு. அந்தப் புரட்சிக்காரர் சிங்காரவேலர். அவரது கம்பீர நினைவுகளுக்கு செவ்வணக்கம். மே தினக் கவிதை, தமிழில் முதன்முதல் எழுதியவர் கவிஞர் தமிழ் ஒளி. அவரது சீரிய நினைவுகளுக்கு செவ்வணக்கம். இழக்கப்போவது அடிமை சங்கிலிகளே அடையப்போவது பொன்னுலகம் எனும் மானுட விடுதலைக்கான தத்துவம் உருவாக்கி வழங்கிய கார்ல் மார்க்ஸ், ஃபிரெடரிக் ஏங்கல்ஸ் உற்சாக நினைவுகளுக்கு செம்முத்தம்!

இயற்கைக்கும் உழைப்புக்கும் பிறந்த குழந்தை தான் செல்வம் என்பார் மார்க்ஸ் என தொடக்க கால இடதுசாரி வகுப்பு ஒன்றில் கேட்டேன். அன்புத் தோழர் விபி சிந்தன் நினைவுகளுக்கு செவ்வணக்கம். மே 8 அவரது நினைவு நாள்.

பாவேந்தர் பாரதிதாசன் கவிதை வரிகளில் தான் விடியும் மே தினம் எப்போதும். ‘சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே முன்னர் எத்தனை தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே’ என்ற வரி உழைப்பின் மகத்துவத்தை நேரடியாக உள்ளத்தில் கொண்டுபோய் எழுதுகிறது.  திருப்பதி மலைக்குச் செல்லும் போதெல்லாம், அந்த மலைப்பாதை உருவாக்கத்திற்கு வேர்வையும் இரத்தமும் சிந்திய எண்ணற்ற உழைப்பாளிகள் குறித்த சிந்தனை எப்படி தோன்றாமல் இருக்கும் !

சங்கர் கணேஷ் இசையில் டி எம் சவுந்திரராஜன் அவர்களது கணீர் என்ற குரல் எத்தனை உயிராக இசைக்கிறது பாவேந்தர் கவிதை வரிகளை…  மேற்கத்திய பாணி இசையில்  பியானோ, வயலின் உள்ளிட்ட கருவிகளின் இசையில், மூன்றாவது சரணத்திற்கு முன் இதமான புல்லாங்குழல் இசையும் சிறப்பாகக் கலந்திருக்கும். (நான் ஏன் பிறந்தேன் திரைப்படம்)

‘தாமரை பூத்த தடாகங்களே’ என்ற முதல் சரணத்தின் எடுப்பில் அத்தனை கனிவைக் குழைத்திருப்பார் டி எம் எஸ். ‘ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே’ என்று தொடங்கும் இரண்டாம் சரணத்தின் தொடக்கம் அந்தச் சொற்களுக்கான தூக்கல் ஒலியில் கொண்டுவந்திருப்பார். மூன்றாவது சரணத்தில், நியாயம் கேட்கும் வகையில், ‘தாரணியே தொழிலாளர் உழைப்புக்குச் சாட்சியும் நீ அன்றோ’ என்ற வரியை அவர் பாடுவது மனத்திற்கு அத்தனை நெருக்கமாக வந்து ஒலிக்கும்.

சிகாகோ வீதிகளில் 1886 மே முதல் நாள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பரித்த தொழிலாளர்கள், எட்டு மணி நேரம் வேலை என்று முழக்கம் எழுப்பினர். பதினெட்டு மணி நேரங்கள் பணியிடங்களில் உறிஞ்சி எடுக்கப்பட்ட உழைப்பின் மிச்ச மூச்சில் தெறித்த நெருப்பு அந்தப் போராட்டம். சிந்தனைக்கு, கேளிக்கைக்கு, வாழ்வை வாழ்வதற்கு நேரம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதே அந்தப் போராட்டத்தின் அடுத்த உயிரிழை.  கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் வேடிக்கை மனிதராக வீழ்ந்து கொண்டிருக்க முடியாது என்று நிமிர்ந்து நின்று கேட்டது தான் அந்தப் புரட்சிப் பேரணியின் முக்கிய சங்கொலி.

உலக உழைப்பாளிகளுக்கு மே தினத்தை ஈந்தது அமெரிக்க தொழிலாளி வர்க்கம், ஆனால், அந்த நாளை ஆளும் வர்க்கம் விசுவாச நாளாக மாற்றிவிட்டது. தொழிலாளர் நாளை செப்டம்பருக்குத் தள்ளிவிட்டது. தனது வாழ்க்கையைக் கொண்டாட்டமாகக் கழிக்க விரும்புகிறோம் என்ற தொழிலாளியினது உள்ளத்து உரத்த கோரிக்கை தான் மே தினம்.

பகல் முழுக்க பட்டினி கிடந்தாலும் ராத்திரி ராஜா வேஷம் போட்ற இன்பம் இருக்கிறதே…என்று ஒரு கூத்துக் கலைஞர் பேசுவதை ராஜ பார்ட் ரங்கதுரை கவனத்திற்குக் கொண்டுவந்தது. ‘பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள் பாரில் கடையரே எழுங்கள் வீறுகொண்டு தோழர்காள்’ என்ற சர்வதேச கீதத்திற்கு இட்டுச் செல்கிறது அந்த வசனம்.

ழைப்பைக் கொண்டாடிப் புறப்படும் ஒரு பாடலில் கொஞ்சும் காதல் உணர்வு, அந்த உழைப்பின் மீதான காதலின் வேர்வையில் இன்னும் தித்திப்பதைக் கேட்டறிய முடியும். ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது என்பது எப்பேற்பட்ட கவிதை வரி. உடுமலை நாராயண கவி! மாஸ்டர் வேணு இசையில் கண்டசாலா, பி சுசீலா பாடி இருக்கும் அந்தப் பாடல் ஒரு காதல் தெம்மாங்கு.  மென்மையான காதலை கண்டசாலா குரலும், அதை அரவணைத்துக் கொள்ளும் அழுத்தமான காதலை பி சுசீலா குரலும் உணர்த்திக் கொண்டே செல்லும் பாடல் முழுவதும். (எங்க வீட்டு மகாலட்சுமி)

இறைத்துப் போடும் கூடையை எடுத்து வீசும் போதே, காதலும் சேர்த்துப் பேசும் பாடல் அது. கயிற்றை வீசும் போதே கண் பார்வையும் சேர்த்து வீச அது காந்தம் போல இழுக்கிறது. பொன்னால் ஆன வளையல் அல்ல, வெறும் கண்ணாடி வளையல் தான், ஆனால், ‘கண்ணாடி வளை கலகலக்கக் கைய வீசுற வீசு’ என்று அவன் அந்த வீச்சில் பேச்சிழந்து நிற்பதையும் பேசுகிறது இந்தப் பாடல்.

வேளாண் குடிகள் குடும்ப உழைப்பில் தரிசைப் பொன்னாய் விளைத்த மாயத்தையும் வியக்க வியக்கக் கூறும் இந்தப் பாடல், இன்றைய தேசத்தில் விவசாயம் படும் பாட்டை நினைவூட்டாமல் இல்லை. அதனால் தான் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது என்பது உழைப்புக்கு மட்டுமல்ல, உரிமைக்கான போராட்டத்திலும் என்று முழங்குகிறது மே தினம்.

வேலை நடக்கும் இடத்தின் உற்சாகம் எப்போதுமே இன்பமான காட்சி தான். குலமகள் ராதை படத்தில் நாயகன் பணியாற்றும் சூழலை விவரிக்கும் ‘உலகம் இதிலே அடங்குது’ பாடல், அந்நாளைய பத்திரிகை அச்சாகும் இடத்திற்கே அழைத்துச் சென்று ரசிக்க வைக்கிறது. அச்சு கோப்பவர்கள், மெய்ப்பு திருத்துபவர்கள், அச்சடிப்பவர்கள் என பல்வேறு தளங்களில் கருமமே கண்ணாக உழைக்கும் தொழிலாளர்களைப் படம் பிடிக்கும் அந்தக் காட்சி உழைப்பின் மகத்துவம் பேசுவதாகவே எப்போதும் தோன்றும்.

அந்தக் காட்சியில் இயங்கும் இளைய, நடுத்தர வயது உழைப்பாளிகள் ஒவ்வொருவரும் அத்தனை இயல்பாக உழைத்துக் கொண்டிருப்பார்கள். அச்சாபீஸ் வேலையில் அக்காலத்து டிரெடில் அச்சு முறையில், முதலில் அச்சுக் கோத்த வகையில் நூலால் இறுக்கிக் கட்டி பேப்பரை மேலே தடவி ஒரு மெய்ப்பு எடுத்துத் திருத்தி விடுவார்கள், பின்னர், எந்திரத்தில் ஏற்றி ஓடவிட்டு அடுத்த மெய்ப்பு திருத்தம் பார்ப்பார்கள், நடிகர் திலகம், மெஷினில் இருந்து ஒரு பிரதியை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டே பாடலுக்கும் வாயசைத்தவாறு பேனா எடுத்துத் திருத்தங்கள் செய்துவிட்டு உடல்மொழியில் பாடலுக்கு பாவங்கள் செய்து நடந்து வெவ்வேறு மனிதர்களைக் கடந்து அச்சு கோப்பவர் ஒருவரிடம் வந்து அந்த காகிதத்தைக் கொடுக்குமிடம் அத்தனை திருத்தமாக எடுத்திருக்கிறார் இயக்குநர். அத்தனை அசலாக நடித்திருக்கிறார் சிவாஜி. எவரொருவர் வேலையையும் குறுக்கிடாத இயல்பான நடையில் அந்தப் பாடல் முழுக்க வலம்வருவார் அவர்.

கே வி மகாதேவன் அவர்களது அருமையான இசையில் அந்த வேகமான தாளக்கட்டு நாமே எந்திரத்தில் நின்று அச்சடித்துக் கொண்டிருக்கும் உணர்வை ஊட்டுவது. தொழிற்சங்க வாழ்க்கையில் எண்பதுகளில் மணிக்கணக்கில் செலவிட்ட இடங்களில் அச்சுக்கூடங்கள் அதிகம். பின்னர் பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி அனுபவம் இன்னும் நெருக்கமாக அச்சுக் கூடங்கள் பக்கம் கொண்டு நிறுத்தியது எல்லாம் நினைவில் ஓடவைக்கிறது ‘உலகம் இதிலே அடங்குது’. அச்சுக்கலை நவீன மயமானதில் முந்தைய தலைமுறை உழைப்பாளிகள் வீட்டுக்குத் திரும்ப நேர்ந்தது ஒரு சோகம்.

கண்ணதாசன் புனைவில், பல்லவியின் எதுகையும் மோனையும் ஏந்தி வரும் செம்மையான உள்ளடக்கமே சிறப்பாக விளங்க, சரணங்களில், ஓர் இதழின் வெற்றி – தோல்வி – வாசகர் எதிர்பார்ப்பு எல்லாம் பேசி விட்டிருப்பார் கவிஞர்.  ‘கலகம் வருது தீருது அச்சுக் கலையால் நிலைமை மாறுது’ என்ற வரிகள் எத்தனை தீர்க்கமானவை. ஊருக்கு உண்மை சொல்ல வேண்டிய துறை இது.

ஜனநாயகத்தின்  நான்காம் தூண் ஆகக் கருதப்படும் ஊடகம், இன்று எப்பேற்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதையும் நினைவூட்டத் தவறவில்லை பாடல். அது மட்டுமல்ல, கொரோனா ஊரடங்கு காலத்தில், ஊடகம் சார்ந்த அன்பர்கள் எண்ணற்றோர் வேலையும், வாழ்வாதாரமும் இழந்த கொடுமையும் உள்ளூர ஓடத்தான் செய்கிறது. கொரோனாவை எத்தனை சாதுரியமாக உழைப்பாளிகளுக்கு எதிராகப் பயன்படுத்திக் கொள்கிறது மூலதனம் !

வீன முதலாளித்துவம் தனது சுரண்டலை இன்னும் கூர்மைப்படுத்திக் கொண்டு கண்ணுக்குப் புலப்படாத வேகத்தில் உழைப்பு சக்தியை உறிஞ்சிக்  கொண்டிருக்கிறது. அந்த உணர்தலை, அதற்கு எதிரான திரட்டலைத் தான் இந்த மே தினம் உழைப்பாளி மக்களுக்கு சேதியாகக் கொண்டு வருகிறது.

‘மனிதர்களின் நெஞ்சங்களில் வைரம் பாய்ச்சியும்

அவரது முதுகு நிமிர்த்தியும்

புவியின் செல்வம் அனைத்தும் தந்தது

மானுட உழைப்பே

என்றே சொல்லி

மனிதரையெல்லாம்

எழுப்பியதும் நீ அன்றோ,

அவர் சிந்தையிலே

அனல் கங்குகள் கொட்டிச் சுடரும்

பேரொளியாய்

நின் இலட்சியம் வெல்ல

மடிந்தோர் எல்லாம்….’

என்பது மே தினமே என்கிற பாடலின் வரிகள். மே தினமே ஒளி வீசுக நீ என்பது அதன் நிறைவில் வரும் பல்லவி.

நம்பிக்கை ஒளி தான் வாழ்க்கையின் ஆதாரம். கொரோனாவோடு சேர்த்துச் சுரண்டல் கிருமியையும் சேர்த்து முறியடிக்கும் நம்பிக்கையை இந்த மே தினம் வழங்கட்டும்.

(இசைத்தட்டு சுழலும் ….)

கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691

மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

News

Read Previous

இவன் தந்தைக்கு எந்நோற்றான்…

Read Next

முதுகுளத்தூர் அருகே சங்ககாலத்தைச் சேர்ந்த மான் கொம்புகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *