அல் பர்ரு–நலம் செய்பவன்

Vinkmag ad
22.அல் பர்ரு–நலம் செய்பவன் (22/ 79)
**********************************************
அளவே இல்லா அருளாளன்
நிகரே இல்லா அன்பாளன் ஆன
அல்லாஹ், தன்
அருளாலும் அன்பாலும்
நமக்கு
’நலமே செய்யும் பண்பாளன்’- இதை
நாமுணரச் செய்யும் பெயர்
“அல்-பர்ரு”.
இருள்சூழ்ந்தது, இவ்வுலகம் . அவன்
அருள் சூழ்ந்ததால்,
ஒளியுமிழும் சூரியனும் சந்திரனும்
விண்மீன்களும் நமக்குக்
கலங்கரை விளக்குகள் போல்
நலம்செய்கின்றன.
வெளிப்படையாகவும் மறைவாகவும்
விளங்குவதெல்லாம் அவன் உள்ளன்பே.
கடல், காடு ; கடல்போலும் பாலை… என
இடம் எதுவே ஆயினும் அவனுதவி இன்றி
நடக்குமோ நன்மை, இந்த நாநிலத்தில்?
அல்லாஹ்வின்
எல்லையற்ற பிரபஞ்சம், நமக்கு
அருகிலும் தொலைவிலும் இருந்து
நலம்செய்து, நம்மை
வியப்படையச் செய்வதை நாம்
விளங்கிடல் வேண்டாமா?
கட்டாயக் கடமைகள் கூடக்
கடினமாகிவிடக் கூடாதென
எளிய வழிகள் கூறும்
இனியவனே நம் இறைவன் !
நலன்கள் அனைத்தையும்
நல்குபவன் என்பதனால்
புலன்கள் ஐந்தும்
புகன்றிடுமே, நம்நன்றி!
இறைநம்பிக்கையோடு நடக்க
எழுச்சியூட்டி,
இன்னல், இடுக்கண்களை
இல்லாமல் ஆக்கி
நன்மைசெயும் வேட்கைமிகும்
நன்னய வாழ்வை நல்குபவன், அந்த
‘நலம் செய்பவன்’ !
நெருக்கடிகளால் நிகழும்
குற்றத்தையும் பாவத்தையும்
நேர்வழி பெற்றுவிடின்
நிச்சயமாய்ப் பொறுத்தருளும்
இறைவன் இருப்பது
எத்தகைய பெரும்பேறு?
நன்மை செய்வதில், எதிலும்
உண்மை செய்வதில்
இறைவனுக்கு இணையாக
எவர் இருக்க முடியும்?
— ஏம்பல் தஜம்முல் முகம்மது

News

Read Previous

காதலர் தின வாழ்த்துக்கள்

Read Next

வாழ்தல் இனிது

Leave a Reply

Your email address will not be published.