அல்லாஹ் பெரியவன்!

Vinkmag ad

 

” மச்சான்.. நீ பஷீர் தானே ”

பஷீர் என்  கல்லூரி நண்பன். படிப்பு முடிந்து சிலகாலம் ஆனபின் தொடர்பில் இல்லை.  நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது அவனைப் பார்க்கிறேன்.  அவன் கண்ணில் லேசான திகைப்பு, ஆச்சரியம் கொண்ட,  பின் புன்னகையுடனான மகிழ்வு தெறித்தது. முகத்தில் வளர்ந்திருந்த கருந்தாடியும்,  நெடு நெடுவென  ஆறடிக்கும் குறைவில்லாத உயரமும், அதற்கேற்ற பருமனான உடலும், தலையில் வெள்ளைக் குல்லாவும் அவனின் முந்தின அடையாளங்களை முற்றிலும் மாற்றி இருந்தாலும் எளிதில் உணர்ச்சியில் மூழ்கும் அவன் கண்கள் காட்டிக் கொடுத்துவிட்டன.

“  டேய் மச்சான்… எப்படிடா இருக்க ”

பேருந்து என்றும் பாராமல் என்னை எழுந்து வந்து அணைத்துக் கொண்டான். அத்தனை பெரிய உருவத்துக்குள் நான் புதைந்து போனேன் என்று தான் சொல்லவேண்டும்.

” ரொம்ப நாளாச்சுடா. எப்படி இருக்க என்ன பண்ற. ஒரு போன் கூடப் பண்ணனும்னு தோனல இல்ல. அடச்சே நானும் உனக்கு நம்பர் தரல நீயும் எனக்கு நம்பர் தரல எப்படிப் போன் பண்றதாம். இல்ல ”

இவன் மாறவே இல்லை.  கேள்வியும் பதிலுமாக அதே படபடப் பேச்சு அதே  ஆக்ரமிக்கும் அன்பு.

“கல்யாணம் ஆகிடுச்சாடா மச்சான் உனக்கு. ம்க்கும் ஆகிடுச்சா என்ன உன் தலை முடியும் மீசையும் நரைச்சிருக்கிறதப் பாத்தா ரெண்டு மூனு கொழந்தையே பொறந்திருக்கும் இன்னேரத்துக்கு ”

” ஹெ..ஹெ.. டேய் பஷீர்.. என்னையும் கொஞ்சம் பேச விடுடா. இன்னும் மாறலையா நீயி ”

” போடா.. பெரிய இவனாட்டம். ஆமா என்ன இந்தப் பக்கம் எதுனா விஷேஷமா என்ன ”

” ஆமாண்டா. என் பொண்ணுக்கு மொட்டையடிச்சுக் காது குத்துறோம் ”

” நல்ல விஷயம். அல்லா உன்னையும் உன் பொண்ணையும் ஆசிர்வதிக்கட்டும். எத்தனைப் பசங்க ”

“ரெண்டு பொண்ணுங்க. ரெண்டாவது பொண்ணுக்குத்தான் இப்ப மொட்டை அடிக்கிறேன் ”

” ஊர்ல யாரும் இல்லைன்னு கேள்விப் பட்டேன்.  சாப்பாடுல்லாம் என்ன பண்ணப் போறே”

” எங்கயாச்சும் ஹோட்டல்ல ஆர்டர் பண்ணலாம்னு இருக்கேன் ”

” போடா இவனே.. எங்கயாச்சும் ஹோட்டலாம். எத்தினிப் பேரு வருவாங்கன்னு சொல்லு. மொத்தப் பேருக்கும் பிரியாணி என் ஹோட்டல்ல  நான்  கொண்டாரேன். நானும் ஃபங்க்‌ஷனுக்கு வரலாம்ல ?  ”

சொன்னது போலவே ஐம்பது பிரியாணியை கொண்டு வந்து இறக்கினான். காசு கொடுத்த போது மறுக்காமல் வாங்கி அதில் பாதியைத் திருப்பிக் கொடுத்தான்.

” இது மருமவளுக்கு நான் செய்யற சீரா இருக்கட்டும் ”

” வேலக்காரண்டா நீயி. மொத்தத்தையும் சீராத் தரக்கூடாதா ”

” அல்லா கருணைக் காட்டுனா அடுத்த விஷேஷத்துக்கு நான் மொத்தமும் ஃப்ரீயா சாப்பாடு தரேன். இப்ப கொஞ்சம் பண முடை. அதான். ”

போட்டிக் கடையினால் வியாபாரம் கொஞ்சம் சுணக்கமாகத்தான் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தான்.  பேச்சு  கல்லூரி வாழ்க்கைத் தொட்டு, கூட படித்தவர்கள், அவனுக்கு அல்லாவின் கொடையாக இரண்டு பையன்கள் என பேச்சுப் போய்க் கொண்டே இருந்தது.

” மச்சான்.  இந்த சினிமாவத் தடைப் பண்ணிட்டாங்களாமேடா ”

“ம்ம்..”

” நீ என்ன சொல்ற. சரிங்கற ? இல்ல தப்ப்பா ? ”

” நான் சொல்லி என்ன நடக்கப் போகுது மச்சான். விடேன் ”

” இல்லடா.. ”

” இந்த சினிமாவாலயாடா மார்க்கம் தப்பாய்டும்? ஆனா  இது மாதிரி எதுனா விவகாரங்களா வரும் போது சுத்தி இருக்கிறவங்க பாக்குறப் பார்வைய நினைச்சா.. ரொம்ப அவமானமா இருக்குடா ? குல்லாப் போட்டு தாடி வச்சிருக்கிறவன்லாம் தீவிரவாதியா ”

ஆறடி உயரமும் கைக்குள் அடங்குவது போலிருந்தது அவனின் அந்த நேரத்துத் தோற்றம். கண்கள் எந்த நேரத்திலும் கண்ணீரை துணைக்கழைக்கும் போலிருந்தது.

” என்னாச்சுடா மச்சான். ” ஆதரவாய் அவன் கையைப் பற்றிக் கொண்டு கேட்டேன்.   யாரோ பஸ்ஸில் இவன் காது படவே ” இவனுங்களெஎ தீவிரவாதியைப் போல இருக்கிறானுங்க. இவனுங்க அதனால தான் படத்தை வேண்டாங்கறாங்க” என்பது போல பேசி இருக்கிறார்கள்.

” அங்கயே செருப்பால அடிச்சிருக்க வேணாமா மச்சான்… ” எனக்கு ஆத்திரத்தில் கொஞ்சம் குரல் உயர்ந்தது. வீட்டில் வந்திருந்ததில் சில பேர் என்னைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

” வா மச்சான்.  கொஞ்சம் நடந்துட்டே பேசுவோம் ” அழைத்துக் கொண்டு கிராம வயல் வரப்புகளில் அவனுடன் நடந்தேன்.

” சரி அத விட்றா.. எவனோ ஒரு நாயி சொல்றான்னு “  என் வார்த்தைகள் சமாதானமாக பேச ஆரம்பித்தப் போது சொன்னான்.

” மச்சான்… கொஞ்சம் மனசு கஸ்டமாத்தான் இருந்துச்சு அந்த நேரத்துல. என்ன பண்றது சொல்லு? நான் எதுனா செஞ்சிருந்தா அவன் வார்த்தையால சொன்னத நான் நிரூபிச்ச மாதிரி தானே ஆகிருக்கும் ”

” சாரிடா மச்சான் ”

” நீ எதுக்குடா சாரி சொல்ற ”

” இந்த சமுதாயத்தில நானும்  ஒரு அங்கம் இல்லையா ? ”

” அடப் போடா இவனே… ” அவன் கை என் கையை இறுகப் பற்றியது.  அவனே பேசினான்.

” எதுவும் நம்ம கைல இல்ல மச்சான். இது இது நடக்கனும்னு அல்லா முடிவு பண்ணிருக்கான். எல்லாம் அது படி நடக்கும்.  இந்த நெல்லப் பாரேன். இந்த நெல்லுக்கு முந்தின நெல்லு எதுவோ விதை நெல்லா இருக்கும். ஆனா முத நெல்லப் போட்டது யாரு ? அதைத் தொடர்ந்து இன்னைக்கு வரைக்கும் கொண்டு வந்து உனக்கும் எனக்கும் சோறு போடறது யாரு.  இதெல்லாம் செஞ்சவன் நான் பட்ட அவமானத்துக்கு காரணமும், அவமானப் படுத்தியவனுக்கு கூலியும் வைக்காமயா போய்டுவான்.”

” என்ன தாண்டா சொல்ல வர..  ”

“  அல்லாஹ் பெரியவன். ”

அந்த வார்த்தைக்குப் பிறகான மௌனம் பல உணர்ச்சிகளைக் கொண்டிருந்தது. அந்த மௌனத்தை அனுபவித்தவாரே வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.

***

( அதீதத்தில் வெளியான கதை )

News

Read Previous

துள்ளி விளையாடு திரைப்படம்

Read Next

பேராசிரியர் அப்துல்லாஹ் மறைவுக்கு ஈர அஞ்சலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *