அன்புத் தம்பீ – சிராஜுல் மில்லத்

Vinkmag ad

 

அஸ்ஸலாமு அலைக்கும்

அருளாளன் உனக்கு எல்லா நலன்களும் அருள்வானாக !

நம்முடைய தாய்ச்சபையாகிய முஸ்லிம் லீகின் நாற்பதாவது ஆண்டு நிறைவு விழா அதற்குரிய கண்ணியத்துடனும், சிறப்புடனும் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

1988 மார்ச் 10-ம் தேதிக்கும் ஏப்ரல் 20-ம் தேதிக்கும் இடைப்பட்ட நாற்பது நாட்களில் தமிழகத்தில் மட்டும் நானூறு பொதுக்கூட்டங்கள் நடந்திருக்கின்றன. நாலாயிரத்திற்கு மேல் எண்ணிக்கையுள்ள கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன.

தம்பீ ! ஓராயிரம் கொடிகளை ஏற்றி வைத்து ஒரு நூறு பொதுக்கூட்டங்களில் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

மிஃராஜ் தினவிழா சொற்பொழிவுகளில் கலந்துகொள்ள ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றிருந்த எனக்கு அபுதாபியில் அதிர்ச்சி தரும் மகிழ்ச்சி வைத்திருந்தது. அரபு இந்தியன் அஸோஸியேஷன் அளித்த வரவேற்புரையில் கலந்து உரையாற்றிய பிறகு இரவு பத்து மணி அளவில் கேரள முஸ்லிம் இஸ்லாமிய கலாச்சார நிலையத்தினர் நடத்திய விழாவுக்கு அழைத்துச் சென்றனர். அலைகடல் தாண்டி அரபு அமீரகத்தில் வாழும் அந்தத் தோழர்கள் நம் தாய்ச்சபையின் நாற்பதாவது ஆண்டு நிறைவுக்கு விழா எடுத்திருந்தனர். இரவின் பிந்திய நேரத்தில் அங்கே சென்று பார்த்தால், கேரள ராஜ்யம் மல்லப்புரத்தில் நடக்கும் முஸ்லிம் லீக் கூட்டம்போல் பிரம்மாண்டமான கூட்டம்.

கேரள இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் தலைவர், அந்த ஸ்தாபனத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் 17,000 பேர் – கேரள முஸ்லிம்கள் அத்ல் உறுப்பினர்களாக இருப்பதாகவும், அபுதாபி கிளையில் மட்டும் 6000 பேர் உறுப்பினர்களாக விளங்குவதாகவும் குறிப்பிட்ட அவர், காதோடு காதாக – பெருமிதம் தொனிக்க அத்தனை பேரும் முஸ்லிம் லீகினர் என்று கூறியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அக்கரைச் சீமைகளிலே வாழும் நம்முடைய மக்களுக்கும், கேரள முஸ்லிம் சகோதரர்கள் நம் சமுதாய சபையில் காட்டும் அக்கரையைக் காட்ட வேண்டாமா என்ற ஏக்க உணர்ச்சியும் எனக்கு ஏற்பட்டது.

சுதந்திரம் பெற்ற பாரதத்தில் 40 ஆண்டுகாலம் நற்சேவை புரிந்த ஒரு இயக்கத்திற்கு நாம் எடுக்கும் விழா வரலாற்றின் பேருண்மைகள் பலவற்றை வெளிக்கொணரும் வாய்ப்பாக ஆகிவிட்டிருந்தது.

சரியாகச் சொல்வதானால் நம் இயக்கத்தின் வயது 82. அடிமை இந்தியாவிலே 40 ஆண்டுகள் சேவையாற்றி, சுதந்திர இந்தியாவிலும் 40 ஆண்டுகள் பணியை முடித்திருக்கிறது முஸ்லிம் லீக் உலக சரித்திரத்தில் அது ஆற்றியிருக்கிற அளப்பரிய சேவை நாள்தோறும் எழுதப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

சில இயக்கங்களுக்கு வரலாறும் இல்லை. வழிவாறும் இல்லை. சில இயக்கங்களின் தோற்றங்களை நினைவுகூர்ந்தால் வேடிக்கையாகத் தென்படும். சில இயக்கங்கள் வரலாற்றின் சுவடுகளில் மறைந்து விட்டன. சில வரலாற்றின் வரிகளில் சிக்கிகொண்டு தவிக்கின்றன.

ஆனால் முஸ்லிம் லீக் என ஒரு வரலாறு உண்டு என்பது மட்டுமல்ல, அதன் செயல்பாடுகள் எல்லாம் தனித்தனி வரலாறுகளாகப் பிரிந்துகொண்டு செல்கின்றன.

தம்பீ ! இந்திய நாட்டு வரலாற்றோடு முஸ்லிம் லீகை எந்தக் காலத்திலும் பிரித்துவிட முடியாது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லிக் காட்டுகிறேன்.

மறைமலைநகரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு சென்ற மாதம் 23-24 தேதிகளில் நடந்து முடிந்ததல்லவா? அதில் அடிக்கடி பாடப்பட்டு அதிகமாக விரும்பப்பட்ட பாடல் எது தெரியுமா?

“ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா”

அகில உலகிலும் சிறந்த நாடு எங்கள் இந்திய நாடே”

தம்பீ ! இந்தப் பாடலை இசைக்கலைஞர்கள் பக்கவாத்தியங்களோடு பாடினார்கள். பாடக்கேட்ட பிரதிநிதிகள் சேர்ந்து பாடினார்கள். வந்திருந்த பொதுமக்களும் எல்லா மொழி பேசக்கூடியவர்களும் வாய்விட்டுப் பாடினார்கள். இசைக் கலைஞர்கள் பாடிக்கொண்டிருக்கும் போதே மேடையில் தலைவர் வரிசையில் இருந்த ஒருவர் எழுந்து வந்தார். மைக்கை கையில் வாங்கி மிகவும் எடுப்பாக உருது மொழியிலான அந்தப் பாடலை அச்சா சுத்தமாக அழுத்தந்திருத்தமாக – முழுமையாகப் பாடி முடித்தார். மத்தியப் பிரதேச முதம் அமைச்சராகவும், பஞ்சாப் மாநில ஆளுநராகவும் பணியாற்றி இன்று மீண்டும் மத்திய அமைச்சரவையிலே இடம் பெற்றுள்ள அர்ஜுன் சிங் தான் அப்படிப் பாடினார்.

தம்பீ ! இப்போது நடந்த காங்கிரஸ் மாநாட்டிலே மட்டுமல்ல, நம் நாடு விடுதலை பெற்ற அந்த நள்ளிரவில் 1947 ஆகஸ்ட் 15 பன்னிரண்டு மணி அடித்து ஓய்ந்த உடன் உலகமே துயில் கொண்டிருந்த அந்த வேளையில் – இந்தியா விழித்தெழுந்தது. ஒரு புதிய வரலாற்றை எழுதத் தொடங்கியது. அந்த நேரத்தில் – இருநூறு ஆண்டுகளின் அடிமைத்தளை அகன்ற அந்த நற்போதில் பொங்கி வந்த பெருமகிழ்ச்சியை கீதமாக இசைக்க, டெல்லி நாடாளுமன்ற மணிமண்டபத்தில் கூடியிருந்த அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களான நம் தேசத் தலைவர்கள் – விரும்பியபோது டாக்டர் சுசீலா நய்யார் அவர்களும், சுசேதா கிருபளானி அவர்களும் குரலெடுத்துப் பாடிய சுதந்திர கீதம், “ஸாரே ஜஹான் ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா” என்பதாகும்.

அது மாத்திரமல்ல, தம்பீ ! விண்ணை வலம் வந்த முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவிடம் அவர் விண்ணில் மேலே இருந்து இந்தியாவைப் பார்த்தபோது அது எப்படி இருந்தது என்ற பிரதமர் இந்திரா கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் : “ஸாரே ஜஹான்ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா” என்பதாகும்.

அந்தப் பாடல், இன்று இந்தியாவில் உள்ள எல்லா வானொலி நிலையங்களில் இருந்தும் ஒலிபரப்பப்படுகிறது. எல்லா தொலைக்காட்சி நிலையங்களில் இருந்தும் ஒளிபரப்பப்படுகிறது.

கோடானு கோடி இந்தியக் குழந்தைகள், தாம் பயிலும் இடங்களில் குரலெடுத்துப் பாடுகிறார்கள். அதைப் பாடும்போது தாங்கள் அனைவரும் இந்தியர், இந்தியா உலகிலேயே சிறந்த நாடு என்ற பெருமிதத்தைப் பெறுகிறார்கள்.

தம்பீ அந்தப்பாட்டு சுதந்திர தினத்தில் எழுதப்பட்டது அல்ல. அதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. ஆமாம், பாட்டு எழுதப்பட்டு 60 ஆண்டு பூர்த்தியாகிறது. அதை எழுதிய கவிஞர் இறந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இது யார் எழுதிய பாட்டு என்று இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் தெரியும். 21-ம் தேதி அவர் நினைவைப் பசுமையாக்குவதற்கே இந்திய அரசு தபால் தலை வெளியிட்டு கண்ணியப்படுத்தியிருக்கிறது.

அவர் பெயரை இன்னும் நான் எழுதிக் காட்டாமல் இருக்க முடியாது. அவர் பெயர் அல்லாமா முகம்மது இக்பால் ! கீழை நாட்டு தத்துவங்களில் ஊறித் திளைத்து, மேலை நாட்டு அறிவமுதத்தை மாத்தி – அற்புதமான தத்துவங்களைக் கவிதைகளாக்கித் தந்த உலக மகாகவி அல்லவா முகம்மது இக்பால்.

அவருடைய தாய்மொழியாகிய பஞ்சாபிலும், இந்தியத் துணைக் கண்டத்து மொழிகளாகிய உர்துவிலும், உலக கவிதை மொழியாகிய ஃபார்ஹீயிலும் பல ஆயிரம் கவிதைகளை எழுதி மனித குலத்திற்குப் பரிசளித்த மேதை இக்பால். ஆங்கிலத்திலும், ஜெர்மன் மொழியிலும் அவர் எழுதிய நூற்கள் இன்றைய அறிஞர்களால் ஆய்ந்து எடுத்தாளப்படும் திறன் பெற்றவையாக விளங்கி வருகின்றன.

பிரிக்கப்படாத இந்தியாவில் பிறந்து வாழ்ந்து இறந்த அவரை, பிரிக்கப்பட்ட பாகிஸ்தானின் பிதாமகன் என்று அந்த நாட்டு மக்கள் போற்றிப் புகழ்கிறார்கள். அவர் பூத உடலை பாகிஸ்தானத்து லாகூர் தாங்கி நிற்கிறது. ஆனால் அவர் புகழ்க்கீதமோ இந்தியாவின் எல்லாத் திசைகளிலும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றது.

பாகிஸ்தான் அவரை உரிமை பாராட்டுகிறது என்பதற்காக, பாரதம் அவரைப் போற்றாமல் விடுவதில்லை என்று எடுத்துள்ள முடிவு நம் பரந்த மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லிக் காட்டலாம்.

தம்பீ ! நீ நினைப்பது எனக்குப் புரிகிறது.

நம் இயக்கத்தின் நாற்பதாவது ஆண்டு விழாவைப் பற்றிச் சொல்ல வந்த நான், இடையே இக்பாலையும், இக்பாலுடைய கீதத்தையும் பற்றி விரித்துரைப்பானேன் என்று தானே நினைக்கிறாய்.

அந்த அமரகவி இக்பால், உன் தாய்ச்சபையாகிய முஸ்லிம் லீகின் தலைமைப் பீடத்தை அலங்கரித்தவரடா, தம்பீ 1929-வது ஆண்டு முஸ்லிம் லீகின் மாநாடு அவர் தலைமையில் தான் நடந்து சிறந்தது. அமரகவி இக்பாலைப் போன்ற சான்றோர்களால் கட்டி வளர்க்கப்பட்ட இயக்கம் தான் உன் தாய்ச்சபை. அதனால் தான் நான் அடிக்கடி உன் வரலாற்றையும், வழிவாற்றையும் வற்புறுத்தி வருகிறேன். உன் வரலாறு புனிதமானது. உன் வழிவாறு மேன்மையானது நீ கடந்து செல்லும் பாதை எல்லாம் சரித்திரத்தின் சுவடு பதிந்து செல்கிறது. இதெல்லாம் தெரியாதவர்கள் உன்னை நிழலாகக் காட்டுகிறார்கள். உன் குடை நிழலில் தான் உலகமே செழிப்புற்றது என்பதை சொல்லிக்காட்ட வேண்டாமா?

தம்பீ ! எங்கெல்லாம், எப்போதெல்லாம் “ஸாரே ஜஹான் ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா” என்ற கீதமிசைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் நம் இயக்கத் தலைவரின் இதய ஒலி அது என்ற உணர்வைப் பெறுவாய் என்று நான் நம்புகிறேன்.

நம் தாய்நாட்டைப் பற்றி இதைவிட சிறப்பாகப் பாடும் புலவன் இனி பிறக்கப்போவதில்லை.

இந்தியாவின் நலவாழ்விலிருந்து நம்மைப் பிரிக்க முற்படுவோரின் முயற்சி வெற்றி பெறப் போவதுமில்லை !

உனதன்புள்ள “ஷிப்லீ”

(1988-ம் ஆண்டு மே மணிவிளக்கு

மாத இதழிலிருந்து எடுத்து அனுப்பியவர்

ஆலிமான் ஜியாவுதீன் )

 

நன்றி :

வெற்றி முரசு

ஏப்ரல் 4 – 10, 2006

News

Read Previous

ம‌லேசியா இக்பால் தாயார் சென்னையில் வ‌ஃபாத்து

Read Next

எம்மைக் கவர்ந்த சமூக சமத்துவ புரட்சியாளர் !

Leave a Reply

Your email address will not be published.