பிரணாப்

Vinkmag ad

natarajanபிரணாப்- எம்.நடராசன்
நெகிழ்விக்கும் நேசம்
_________

எம் என் அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப் படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் அவர் எனக்கு அழைப்பு விடுத்தார். நானும் அவரை பெசன்ட் நகரில் பாரி தெருவில்(என்ன பொருத்தம் பாருங்கள்) உள்ள இல்லத்தில் சந்தித்தேன்.
அவர் என்னிடம் புகைப்படக் கற்றைகளைக் கொடுத்தார். அவற்றில் வரலாற்றைச் சொல்லக்கூடிய படங்கள் எவை என்பதைப் பார்த்து தனியே தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். நானும் அதன் படியே அவற்றை உற்று நோக்கினேன். 100 புகைப்படங்களைத் தனியே பிரித்தெடுத்து, அவற்றை அவரிடம் ஒப்படைத்தேன். “இவை ஒவ்வொன்றும் வரலாற்றைப் பேசுகின்றன. உங்கள் பெருமைகளை நிலைநாட்டுகின்றன. உங்கள் வாழ்க்கைக் காலத்தின் சாதனைகளை அடையாளப்படுத்துகின்றன” என்று தெரிவித்தேன்.
இவற்றை அவர் என்னிடம் ஒப்படைத்தார்.
“கொனிகா லேப் நிறுவனத்தில் சந்தோஷ் எனும் என் நண்பரைச் சந்தியுங்கள். அவரிடம் இந்த புகைப்படங்களைக் கொடுங்கள். இவற்றை ஒரே சீரான அளவில் வருமாறு பெரிதுபடுத்தி, சட்டம் கட்டித் தயார் செய்யும்படி தகவல் தெரிவித்து விடுங்கள். இதர விவரங்களை என்னிடம் நேரில் வந்து பேசிக் கொள்ளச் சொல்லுங்கள்” என்றார்.
“இவற்றை என்ன செய்யலாம் என்று கருதுகிறீர்கள்?” என நான் அவரிடம் கேட்டேன். அதற்கு பதிலளித்த அவர், “சீரான வரலாற்று ஆவணமாகத் திகழக்கூடிய புகைப்படக் கண்காட்சித் திட்டத்தை என்னிடம் விவரித்தார்.
“இந்த புகைப்படங்களை தஞ்சாவூரிலுள்ள தமிழரசி மாளிகை எனும் திருமண மண்டபத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப் போகிறேன். ஒவ்வொரு படத்திற்குக் கீழும் அந்தப படம் என்ன வரலாற்றைச் சொல்லுகிறதோ அந்த தகவல் வாசகங்கள் எழுதி வைப்போம். அதை நீங்கள் தான் எழுதவேண்டும். இக்கண்காட்சியை 15 நாட்களுக்குள் உருவாக்கி முடித்துவிடத் திட்டமிட்டு இருக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கி இருக்கிறார். அவரின் வருகைக்கு ஏற்றவாறு மிகப் பிரம்மாண்டமாக விழாவை நடத்தி முடிக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன். இதில் உங்களுக்கும் மகத்தான பங்களிப்பு இருக்கிறது. ஆகவே என்னோடு ஒருங்கிணைந்திருங்கள்” என்று அவர் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மறுநாளே சந்தோஷத்தை…சந்தோஷைத் தேடி அலைந்தேன். ஒரு வழியாக அவர் கோடம்பாக்கம் கொனிகா லேப் அலுவலகத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவரை அலைபேசியில் அழைத்து பேசினேன். அவரும், படங்களை திருவல்லிக்கேணியில் உள்ள தனது அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி நான் திருவல்லிக்கேணியில் காயிதே மில்லத் நெடுஞ்சாலையில் உள்ள அவரது கடையில் சென்று ஒப்படைத்து விட்டு, அவரிடம் போனில் பேசினேன்.
இவ்வாறாக இரு வாரங்கள் கடந்தோடின. சந்தோஷிடம் இருந்து எந்த விதமான பதிலும் எனக்கோ எம். என். ஐயாவுக்கோ வரவில்லை.
எனவே நானே சந்தோஷை தொடர்பு கொண்டேன். இதுகுறித்து விரிவாகப் பேசத் தொடங்கினார். “இந்த படங்கள் எல்லாம் செல்போனில் எடுக்கப்பட்டவை. இவற்றைப் பெரிது படுத்தினால் இந்த உருவங்கள் மங்கலாகிப் போகும். நாம் எந்த நோக்கத்திற்காக இந்த படங்களைப் பெரிதுபடுத்துகிறோமோ அந்த நோக்கமே சிதறிப் போகும்.” என்று தொழில்நுட்ப ரீதியான சங்கடத்தை என்னிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து எம்.என். வசம் விளக்கிச் சொல்ல ஓடினேன்.
ஆனால் அவர் உடல் நலம் குன்றி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய சூழலில் இருந்தார். ஆகவே நான் அவரிடம் இது பற்றி எதுவுமே பேசவில்லை.
மறுநாள் பேசலாம் என்று இருந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகவே எனது தொடர் பணிகள் துண்டிக்கப்பட்டு விட்டன.
“தனது வாழ்க்கைக் காலத்திலேயே தன் தொடர்பான வரலாற்றைச் சொல்லக்கூடிய புகைப்படங்களைக் கொண்ட புகைப்படக் கண்காட்சியைத் தஞ்சாவூர் தமிழரசி திருமண மண்டபத்தில் உருவாக்கிவிட வேண்டும். அதனை பிரணாப் முகர்ஜியைக் கொண்டு திறந்து வைத்து விட வேண்டும்” என்று அவர் பட்ட ஆசை நிராசையாக போய், அவர் மறைந்து விட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிரணாப் முகர்ஜியை இவர் அழைத்ததிலும், வருவதற்கு அவர் ஒப்புக் கொண்டதிலும் ஒரு சுவாரசியமான பின்னணி உண்டு. அவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதாக தானாகவே மனமுவந்து தேதி கொடுத்திருந்தார்.
ஏன் தெரியுமா?
பிரணாப் முகர்ஜி நம் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் அவரை அடிக்கடி சந்திக்கும் அளவுக்கு எம்.என். நேசம் கொண்டிருந்தார். பிரணாப் ஓய்வு பெற்ற பின் ஒரு சந்திப்பின்போது
பிரணாப் முகர்ஜி, “உங்கள் நிகழ்ச்சிக்கு வர நான் ஒப்புக்கொண்டிருந்தும் கலந்துகொள்ள முடியவில்லை. எனவே வேறு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யுங்கள். நான் வருகிறேன். என்னையும் என் குடும்பத்தாரையும் ஆத்மார்த்தமாக நேசிக்கும் உங்களுக்கு நான் காட்டும் கைமாறு இது.” என்று நடராசனிடம் அந்த வட ராசன் உருகினார்.
தஞ்சாவூரில் பொங்கல் தினங்களில் தமிழர் திருநாள் விழாவை ஆண்டுதோறும் அபாரமாக நடத்திக் காட்டுவது நடராசனின் வழக்கம். அத்தகைய விழாவுக்கு வருகை தர வேண்டும் என்று அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் நடராசன் வேண்டுகோள் விடுத்தார்.
பிரணாப்பும் ஒப்புக் கொண்டு அந்த தேதியைக் கொடுத்து விட்டார். இந்த தகவல்களை என்னிடம் பரிமாறிக் கொண்ட எம்.என். அடுத்தடுத்த விழா ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டார். அதில் நானும் உடனிருந்து உழைத்தேன்.
பணிகள் இவ்வாறாகச் சென்று கொண்டிருந்த நிலையில், விழா நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய அரசின் உளவுத் துறை அலுவலர்கள் என்னைத் தொடர்பு கொண்டு இது குறித்து பேசினர். ஜனாதிபதி வரக்கூடிய நிகழ்ச்சி உறுதிப்படுத்தப்பட்டு விட்டது என தெரிவித்தனர். ஜனாதிபதி கலந்து கொள்ளும் விழாவில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளைக் கூறினர். அவர்களின் கூற்றுகளை நடராசனிடம் தெரிவித்து இரு தரப்பினருக்கும் இடையே பாலமானேன்.
இந்த நிலையில் விழா நடப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக திடீரென்று ஜனாதிபதி மாளிகையில் இருந்து நடராசனுக்கு அவசர தொலைபேசி அழைப்பு வந்தது. கிடைத்த தகவல் அவரை அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டது. “பிரணாப் முகர்ஜி தனது தஞ்சாவூர் பயணத்தை ரத்து செய்து விட்டார்” என்பதே அந்த தகவல்.

ஆண்டுதோறும் பொங்கல் நாட்களில் தஞ்சாவூரில் தமிழர் திருநாள் என்ற பெயரில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதும் அன்றைய தினங்களில் ஆயிரக்கணக்கானோருக்கு விருந்து உபசாரம் செய்து, அவர்களைப் பேணிப் போற்றுவதும் எம்.என். அவர்களுக்கு வழக்கம். அத்தகைய பிரம்மாண்டமான தமிழர் திருநாள் விழாவில் ஜனாதிபதியை பங்கெடுக்க வைக்க வேண்டும் என்பதுதான் எம்.என். வகுத்த திட்டம். அந்த திட்டப்படி ஜனாதிபதி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால்… எம்.என். செல்வாக்கின் மாய பிம்பம்…தூய பிம்பமாய் விசுவரூபம் எடுத்துவிடும். எனவே தமிழக உச்சபட்ச அதிகாரம், நேரடியாக ஜனாதிபதி மாளிகையைத் தொடர்பு கொண்டு, “இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டாம்” என்று தடுத்து விட்டது.
இதனால் வேறு வழியின்றி ஜனாதிபதி தனது தஞ்சாவூர் பயணத்தை ரத்து செய்து விட்டார். அந்த தகவலை தான் ஜனாதிபதியின் செயலாளர் நேரடியாக தொலைபேசி வாயிலாக நடராசனை அழைத்து தெரிவித்தார்.
பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவரை நடராசன் மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார். அப்போது பிரணாப் முகர்ஜியே மனமுவந்து எம்.என். வசம் ஒரு கருத்தைத் தெரிவித்தார் .
“ஏற்கனவே உங்களுக்கு நான் கொடுத்திருந்த தேதியின்படி விழாவுக்கு என்னால் வர இயலவில்லை. ஆகவே அதற்குப் பரிகாரமாக வேறு ஒரு தேதியை நீங்கள் குறிப்பிட்டால் அந்த நேரத்தில் நான் உங்கள் விழாவில் வந்து கலந்து கொண்டு என்னுடைய இயலாமையைச் சரி செய்து கொடுக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். அதைப் பயன்படுத்திக் கொண்டு தான் அவரை அழைத்து, புகைப்படக் கண்காட்சியைத் திறக்கலாம் என நடராசன் திட்டமிட்டிருந்தார்.
அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளாமல் போய்விட்டார் நடராசன் எனும் மனித நேய மாண்பாளர்.

நூருல்லா ஆர் ஊடகன் 01-08-2020. 9655578786

News

Read Previous

கால்நடை – பெருகும் அசையும் சொத்து

Read Next

அறிவொளி இயக்கத்தில்….

Leave a Reply

Your email address will not be published.