ராயபுரம் ரயில் நிலையம்..!

Vinkmag ad

ராயபுரம் ரயில் நிலையம்..!
***********************
கால வெள்ளத்தில் எவ்வளவு பெரிய விஷயங்களும் காணாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான நிகழ்கால சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது ராயபுரம் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் கதை, மிக மிக சுவாரஸ்யமானது. ஆனால் இந்த பகுதியைச் சேர்ந்த பலருக்கே கூட இன்று அது தெரியவில்லை என்பதுதான் உச்சகட்ட சோகம்.

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம்தான். இங்கிருந்துதான் தென்னிந்தியாவின் முதல் ரயில் தனது பயணத்தைத் தொடங்கியது. ஸ்டீபன்சன் நீராவி என்ஜினை கண்டுபிடித்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்னிந்தியாவில் ரயில்களை இயக்குவது குறித்து லண்டனில் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து 1845ஆம் ஆண்டு ‘மெட்ராஸ் ரயில்வே கம்பெனி’ தொடங்கப்பட்டது.

ஆனால் அவர்கள் திட்டமிட்டு வேலையைத் தொடங்குவதற்கு முன்னர், 1849ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘தி கிரேட் இந்தியா பெனின்சுலா கம்பெனி’ இந்தியாவின் முதல் இருப்புப் பாதையை அமைத்துவிட்டது. 21 மைல் நீளத்திற்கு அமைக்கப்பட்ட இந்த இருப்புப் பாதையில் பம்பாயின் போரி பந்தரில் (Bori Bunder) இருந்து தானே வரை, இந்தியாவின் முதல் ரயில் 1853, ஏப்ரல் 16ந் தேதி இயக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் இருப்புப் பாதை அமைக்கும் பணியை மெட்ராஸ் ரயில்வே கம்பெனி தொடங்கியது. அதற்காக அது தேர்ந்தெடுத்த இடம்தான் ராயபுரம். கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வசித்து வந்த புனித ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகில் இருந்ததால், இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு, விசாலமான அறைகள், உயரமான தூண்கள், அழகான முகப்பு என பிரம்மாண்டமான ராயபுரம் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.

அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபு 1856, ஜூன் 28ந் தேதி இதனைத் திறந்துவைத்தார். இதனை அடுத்து, ஜூலை 1ந் தேதி தென்னிந்தியாவின் முதல் ரயில் இங்கிருந்து புறப்பட்டது. ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற்காடு வரை இந்த ரயில் இயக்கப்பட்டது. இதற்கான ரயில் பெட்டிகளை அக்காலத்தில் புகழ்பெற்ற சிம்சன் கம்பெனி தயாரித்திருந்தது. ஆளுநர் ஹாரிசும், சுமார் 300 ஐரோப்பியர்களும் இந்த முதல் ரயிலில் பயணப்பட்டனர். ஆம்பூர் சென்றடைந்த ரயிலுக்கு துப்பாக்கி குண்டுகளும், பேண்டு வாத்தியங்களும் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் மற்றொரு ரயில் ராயபுரத்தில் இருந்து திருவள்ளூர் வரை இயக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி பற்றி லண்டன் பத்திரிகையான The Illustrated London News விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது. வழிநெடுகிலும் இந்த ரயில்களை ஏராளமானோர் அச்சம் கலந்த ஆச்சர்யத்தோடு பார்த்ததாக அந்த செய்தி தெரிவிக்கிறது. வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும், மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களும் ஒரு மிகப் பெரிய இரும்பு வாகனம் தங்களை நோக்கி விரைந்து வருவதைப் பார்த்து மிரண்டு ஓடினார்களாம். சில இடங்களில் மக்கள் விழிகள் விரிய பலத்த ஆரவாரத்தோடு இந்த ரயிலை ரசித்துப் பார்த்திருக்கிறார்கள். இப்படி அன்றைய மெட்ராஸ்வாசிகளுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுத்தன ராயபுரத்தில் இருந்து புறப்பட்ட முதல் இரண்டு ரயில்கள்.

முதல் ரயில் ஆம்பூர் சென்றடைந்ததும், அங்கு ஒரு சிறிய விழா நடத்தப்பட்டிருக்கிறது. அதில் பேசிய ஆளுநர் ஹாரிஸ் பிரபு, மெட்ராஸ் ரயில்வே கம்பெனியையும், அதன் மேலாளர் ஜென்கின்சையும் (Major Jenkins) வெகுவாகப் பாராட்டி இருக்கிறார். ஒரு மைல் இருப்புப் பாதை அமைக்க 5,500 பவுண்டுகள் செலவானதாகவும், அது ஒரு நல்ல முதலீடுதான் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி கோலாகலமாக தொடங்கப்பட்ட ராயபுரம் ரயில் நிலையம், அடுத்த 17 ஆண்டுகளுக்கு மெட்ராஸ் மாநகரின் ஒரே ரயில் நிலையமாக கோலோச்சியது. 1873இல் இதற்கு போட்டிக்கு வந்தது மெட்ராஸ் சென்ட்ரல் ரயில் நிலையம். பின்னர் வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் சென்ட்ரலில் இருந்தும், தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் ராயபுரத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும் என சொத்து பிரிக்கப்பட்டது. இதனிடையே சென்னை துறைமுகம் வேகமாக வளர்ச்சி அடைந்ததால், துறைமுகத்தின் சரக்குப் போக்குவரத்தும் ராயபுரம் ரயில்நிலையம் மூலம் நடைபெறத் தொடங்கியது. இதன் விளைவு, புதிதாக முளைத்தது எழும்பூர் ரயில் நிலையம். பின்னர் தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் எழும்பூருக்கு இடம்பெயர்ந்தன.

ராயபுரம் ரயில் நிலையம் மெல்ல தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ரயில் நிலையம், இன்று புதர்கள் மண்டி பொட்டல்வெளி போல காட்சியளிக்கிறது. சென்னை கடற்கரை மார்க்கத்தில் இயக்கப்படும் வெகு சில ரயில்கள் மட்டுமே இங்கு நின்று செல்கின்றன. அப்படி ஒரு ரயிலில் அமர்ந்துகொண்டு ஜன்னல் வழியாக, பொலிவிழந்து கிடக்கும் இந்த ரயில் நிலையத்தைப் பார்க்கும்போது, நம்மையும் அறியாமல் கண்கள் பனிக்கின்றன.

* இந்தியாவில் ஹவுரா ரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக அதிக இடவசதி இருக்கும் ஒரே ரயில் நிலையம் ராயபுரம்தான்.

* இந்த ரயில் நிலையம் கடந்த 2005ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது.

Rajesh Reddy's photo.

News

Read Previous

எல்லோர்க்கும் நன்மையன்றோ !

Read Next

வஃபாத்துச் செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *