போபால் :முடியாத ஒரு பெருந்துயரத்தின் கதை

Vinkmag ad

போபால் விஷவாயு பயங்கரத்தின் 25வது ஆண்டு நிறைவு

முடியாத ஒரு பெருந்துயரத்தின் கதை

எஸ் வி வேணுகோபாலன்

கண்ணெல்லாம் எரியுதம்மா
கண்ணெல்லாம் எரியுதம்மா

உறக்கம் பிடிக்காமல்
புரண்ட சிறுவன்
இப்போது
தாயை எழுப்பாமல்
தானாகத் தூங்குகிறான்
 
தூங்க மறுத்துத்
தூளியை உதைத்துத்
துடித்துக் கதறிய
பச்சிளம் குழந்தை
இப்போது
நிம்மதியாகத் தூங்குகிறது

அந்தப் பாழிரவில்
நகரத்தின் தெருக்களெங்கும்
காலன் புகுந்து சென்றான்
முகமூடி கொள்ளைக்காரனைப் போல

ஊரைப் பிளப்பது போல
ஓலம் கிளம்பியது
தேவாலயத்து மணிகள்
விரிசல்கள் கண்டன

விதேசி மூலதனத்தின்
இரசாயனக் கிரியையால்
பால் வடியும் நிலவெல்லாம்
சீழ் வடிந்தது
போபால் தெருக்களெங்கும்
பிணங்கள் பிசுபிசுத்தன

இத்தனைக்கும் அசையாது
கால் சுருட்டி நிற்கிற
கருப்புச் சிலந்தியைப் போல்
அந்தத் தொழிற்சாலை
நகரத்தின் ஒரு புறத்தில்……..

  – பிரளயன் (‘சந்தேகி’ கவிதைத் தொகுப்பு – ஜூன் 1990)

ருப்புச் சிலந்தியைப் போல் நின்ற அந்தத் தொழிற்சாலை இன்றும் போபால் நகரத்தில் நின்று கொண்டுதான் இருக்கிறது. யூனியன் கார்பைடு இரசாயனத் தொழிற்சாலை. டிசம்பர் 2, 1984 நள்ளிரவைக் கடந்து 3ம் தேதியின் குளிர்கால விடியலுக்குச் சிலமணி நேரத்துக்கு முந்தைய அந்த நேரத்தில் நடந்த மீத்தைல் ஐசோ சயனேட் என்கிற விஷவாயுக் கசிவு பயங்கரம், உறங்கிக் கிடந்த அப்பாவி உயிர்களை நொடி நேரத்தில் ஆயிரக்கணக்கில் விழுங்கிவிட்டது. லட்சக் கணக்கானோரைச் செயலிழக்கச் செய்துவிட்டது. கால்நடைகளும், பிற ஜீவராசிகளும் கூடத் தப்பவில்லை. 

அன்றோடு முடிந்துவிடவுமில்லை, உயிர்களுக்கு எதிரான அந்தத் தாக்குதல்.  உடனடியாக இறந்த சில ஆயிரம் பேர் ‘கொடுத்து வைத்தவர்கள்’ என்று நினைக்கும் அளவிற்குக் கொடூரமான நிலைக்குத் தள்ளப்பட்டனர் உயிரிருந்தாலும் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்தவர்கள்.  இந்த டிசம்பர் 3ம் தேதி வந்தால் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிடப் போகிற அந்தக் கொடிய விபத்தினால் (அது விபத்தா, இரசாயனப் போர் ஆயுதம் ஒன்றின் பரிசோதனையா என்ற கேள்விகள் அப்போதிருந்தே எழுப்பப்பட்டு வருகின்றன என்பது ஒருபுறம் இருக்க) பாதிக்கப்பட்டோருக்கான முழு நிவாரணம் இன்னமும் அவர்களை எட்டாதிருப்பதும், அராஜக நிகழ்வுக்குப் பொறுப்பான பெரும்புள்ளிகள் இன்னமும் தண்டிக்கப்படாததுமான உண்மைதான் நம்மைச் சுடுவது.

இந்தியாவின் ஹிரோசிமாவாக வருணிக்கத்தக்க அளவிற்கு, மத்தியபிரதேச மாநிலத்தின் தலைநகரமான போபால் இந்த இரசாயன வாயுவிபத்திற்கு அடுத்த சில மணிநேரங்களிலிருந்து பரிதாபமான நிலைக்கு மாற்றப்பட்டது.  போபால் நகரத்தின் மொத்தமுள்ள 56 வார்டுகளில் 36 வார்டுகள் பாதிக்கப்பட்டன. அதில்  இருந்த 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாக அரசுதரப்பில் பதிவான விவரங்களே சொல்கின்றன. மாநகரத்தின்  வடக்கே,  ஏழை மக்கள் வசித்துவந்த  ஒதுக்குப்புறப் பகுதியில்தான் நிறுவப்பட்டிருந்த இந்த இராட்சத தொழிற்சாலை.  அங்கே என்ன தயாரிக்கப்படுகிறது, என்ன அபாயமான சூழல் அது, கொஞ்சம் அசந்தாலும் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது எதுவும் அறிந்திராத ஏழை மக்கள்.  போபால் நகரில் 1981 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கல்வியறிவு விகிதம் வெறும் 34 சதவீதமே. இதுவும் பெண்களுக்கு 19 சதவீதமாக இருந்தது.  வெளியிடங்களிலிருந்து புலம்பெயர்ந்து வேலை தேடி வந்த மக்களும் சேர்ந்து வாழ்ந்த அந்தப் பூமியின் மேற்பரப்பில் படிந்த இரத்தக் கறையும், குவிந்த மண்டையோடுகளும் என்றும் வேதனைக்குரியவை.

பூச்சிக்கொல்லி தயாரிக்க நிறுவப்பட்ட இந்தத் தொழிற்சாலையின் தொட்டிகளில் ஒன்றிலிருந்து கசிந்த விஷவாயுவின் அளவு 40 டன்கள் என்று சொல்லப்படுகிறது.   ஏற்கெனவே ஆலைக்குள் 1981ல் நடந்த விபத்தில் ஒரு தொழிலாளி மரணமடைந்திருந்த போதிலும், அதற்குப் பின்னரும் வெவ்வேறு விதமான சிறு பிரச்சனைகளும், விபத்துகளும் நடைபெற்றிருந்த போதிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப் படவில்லை என்பது மட்டுமல்ல, இருந்த பாதுகாப்பு அம்சங்களின் தரமும் தாழ்த்தப்பட்டிருந்தது. விஷ வாயு கசிவின் நெடியை மூக்கு நுகர்ந்த அடுத்த நொடியே அது நுரையீரலை எட்டித் தனது கைவரிசையைக் காட்டிவிடும் என்றிருக்க, சிறிய ஈரத்துணியால் மூக்கை மூடிக்கொண்டு அதிவேகமாக அந்தப் பகுதியை விட்டே ஓடியிருந்தால் ஒருவேளை அதிக பாதிப்பிலிருந்து தப்பித்திருக்கலாம் என்ற அடிப்படை அறிவியல் ஆலோசனை கூட அறிந்திராத மக்கள் பகுதியில் தான் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.  அதுவும், அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நள்ளிரவைக் கடந்த வேதனை மிக்க நேரத்தில்….

நிலைமையின் தீவிரமறிந்து, யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் இந்தியாவிற்கு வந்ததும், மத்திய அரசு தொடுத்திருந்த வழக்கின் அடிப்படையில் அவர் உடனே கைது செய்யப்பட்டார்.  ஆனால் அது வெறும் நாடகம் என்பது, உடனடியாக அவருக்கு எதிர்ப்பின்றி ஜாமீன் வழங்கப்பட்டதும், அடுத்த நொடியே தனி விமானமொன்றில் அவர் அமெரிக்காவிற்குத் தப்பி ஓடி ஒளிந்ததும், பின்னர் பல்லாண்டுகள் போபால் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒருபோதும் அவர் ஆஜர் ஆகாமல் நழுவிக் கொண்டிருந்ததும், அவரை இந்தியாவிற்குக் கொண்டுவர பிரத்தியேக நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றமே வழங்கிய சிறப்பு உத்தரவை அமலாக்க இந்தியப் புலனாய்வுத் துறையோ, மத்திய அரசோ இன்றுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதிருப்பதுமான பல நிகழ்வுகளிலிருந்து வெளிப்பட்டது.  ஆண்டர்சன் மட்டுமல்ல, இவ்வளவு படுபயங்கரமான ஒரு சம்பவத்திற்குப் பொறுப்பானவர் என்று ஒற்றை ஆள் கூட அடையாளம் காணப்படவோ, விசாரணைக்கு உட்படுத்தப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாகும்.

அமெரிக்காவின் பணவெறி பிடித்த வழக்கறிஞர்கள் பலர் போபால் நகரத்திற்கு வந்திறங்கி அப்பாவி மக்களுக்கு நிவாரணம பெற்றுத்தரும் ஆசைகாட்டிக் கொண்டிருந்த அதே வேளையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தொடுத்திருந்த வழக்கில், இந்தியாவின் மிக பிரபல வழக்கறிஞரான நானி பால்கிவாலாவைத் தனக்குச் சாதகமாக வாதாட நியமித்திருந்தது யூனியன் கார்பைடு.  மிக உயர்ந்த மனிதர்களாகச் சமூகத்தில் தங்களைக் காட்டிக் கொண்டிருக்கும் இத்தகைய பல நபர்களுக்கு, தேச பக்தியைவிடவும் தொழில்பக்தியும், காசு பக்தியுமே விஞ்சி நிற்கும் என்பது மீண்டும் நிரூபணமானது.  முகம் தெரியாத, பெயர் அறியப்படாத ஏழை எளிய மக்களின் உயிரும், உடல் ஊனமும் அமெரிக்க நீதிமன்றத்தில் பேசப்படக் கூடாதது, வழக்குக்கு அங்கு இடமில்லை என்று இந்திய அறிவுஜீவியையே பேச வைத்தது அந்நிய கம்பெனியின் பணபலம். 

அதுமட்டுமல்ல, லாபவெறியும், இரத்தவெறியுமிக்க இந்த நிறுவனத்தின் சார்பில் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்ட பெரும்பொய்கள் சாதாரணமானவை அல்ல.  விஷவாயு கசிந்தது சீக்கிய தீவிரவாதிகளின் வேலை (அக்டோபர் 1984 இறுதியில் தான் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கிய தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பதைப் பயன்படுத்தி !) என்றது.  எங்கள் நிறுவனமே அல்ல, அது இந்தியக் கம்பெனி, இந்தியத் தொழிலாளர்களால் மோசமாகக் கட்டப்பட்டிருந்தது என்றது. சட்டப்படியாக, பன்னாட்டு நிறுவனம் என்ற ஒரு வரையறையே எங்கும் செய்யப்படவில்லை என்று கூசாமல் சொல்லுமளவு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயன்ற அதன் முயற்சிகள் அம்பலப்படுத்தப்பட்டன.

ஆனாலுமென்ன, 3000 கோடி டாலர் கேட்டதற்கு வெறும் 47 கோடி டாலர் நஷ்ட ஈடுதான் விதிக்கப்பட்டது.  இதன் நடுவே, நயவஞ்சகன் ஆண்டர்சன் 1986ல் பணி ஓய்வு பெற்றார்.  நிறுவனத்தை டவ் கெமிகல்ஸ் என்ற வேறு நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்.  டவ் கெமிகல்ஸ் எங்களுக்கு எதுவும் தொடர்பில்லை என்று சாதிக்க ஆரம்பித்துவிட்டது.  இதற்குள் ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன.  உயிர்பிழைத்து பாதிப்புற்றிருப்போர் போராட்டக் குழுக்கள், முக்கியமாக பெண்கள் போராட்டக் குழு உதயமாயின.  இந்த அமைப்புகளின் போர்க்குரலும், தீர்மானமான போராட்டமும் இதுவரை தேசம் சந்திக்காதது.  எங்கே சென்றாலும், அநீதி இழைத்தவனைத் துரத்திப் பிடிப்போம் என்று அமெரிக்காவரை சென்ற இந்தக் குழுவின் தலைவியர் பெரிய கல்வியறிவோ, செல்வமோ படைத்தவர்களே அல்லர்.

இதில் முக்கியமாக அறியப்படும் இரட்டையர், ரஷிதா பீ – சம்பக் தேவி சுக்லா என்கிற இஸ்லாமிய-இந்து பெண்மணிகளாவர்.  மத பேதங்களை மீறி இலட்சிய வெறியோடு, பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க இவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் அளப்பரியவை.  டவ் கெமிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் வாசலில் தர்ணா நடத்த அமெரிக்காவின் சிகாகோ நகரம் சென்றவர்கள்.  ‘துடைப்பக்கட்டையால் அடிப்போம் வாருங்கள்’ (ஜாடு சே மாரோ) என்ற இயக்கத்தின் பெயரால், போபாலில் துவங்கி புது தில்லி வரை எத்தனையோ கிராமங்களுக்குச் சென்று சாதாரண மக்களிடமிருந்து துடைப்பங்களைத் திரட்டிக் கொண்டு போய்ப் போராட்டம் நடத்திவந்த இவர்களுக்கு 2004ம் ஆண்டின் கோல்டுமேன் விருது (1990ல் கோல்டுமேன் தம்பதியரால் சுற்றுச்சூழல் இயக்கவீரர்களுக்காக நிறுவப்பட்ட விருது) வழங்கப்பட்டது.

ஆண்டர்சன் மற்றும் பொறுப்பான அதிகாரிகளை இந்தியாவிற்குக் கொணர்ந்து கிரிமினல் வழக்கு தொடரப்படவேண்டும், வாயுக்கசிவின் முழு உண்மைகள், பாதிப்பின் விளைவுகள் மக்களது தகவலுக்கு வெளியிடப்படவேண்டும், தொழிற்சாலை அதன் நச்சுக் கழிவுகளோடு உடனடியாக அகற்றப்படவேண்டும், பாதிப்புற்றோர் வாழ்வாதாரங்களுக்கு முழு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதுதான் போபால் விஷவாயுவின் பாதிப்பால் அல்லலுறுவோர் எழுப்பும் குரலாகும்.  பாதரசம், நிக்கல் போன்ற உலோகங்களும், வேறு பல நச்சு வேதியல் பொருள்களும் மண்ணிலும், உடலிலும், ஏன் – தாய்ப்பாலிலும் கூடக் கலந்துவிட்டிருப்பதன் பாதிப்புகள் சமூக ரீதியாகவே தலைமுறைகளைத் தாக்கிக் கொண்டிருக்கிற பயங்கரம்தான் போபால் நிகழ்வு.  தொழிலுக்கும், லாபத்திற்கும் வேட்டைக்காடாக வளரும் நாடுகளைப் பயன்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எந்தச் சமூகப் பொறுப்போ, தார்மீக மதிப்போ, அரசியல் ரீதியான கடிவாளமோ கிடையாது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது அந்த பயங்கரம்.

பொன்னார் வளநகரில் வேதாளம் சேர்ந்தது 

வெள்ளெருக்கு பூத்ததுபாதாள மூலி படர்ந்தது

உழுமண்ணில்குடிநீரில்சுவாசத்தில்கர்ப்பத்தில்

அனைத்திலுமே பாஷாணம்பாஷாணம்…..’.

என்று அப்பாவி மக்களைக் கதறடித்துவிட்ட போபால் விஷவாயு கசிவின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு, இன்றைய உலகமய-தாராளமய சூழலில் எந்த எச்சரிக்கையும் கொள்ளாதிருக்கிற ஆட்சியாளர்களைப் பற்றிய கோபத்தையும், ஏகாதிபத்திய உலகமயமாக்கல் மக்களுக்கு எதிரான தாக்குதலுக்கு அஞ்சாதது என்ற விழிப்புணர்வையும் புதுப்பிக்கிறது.

************

நன்றி: புதிய ஆசிரியன்டிசம்பர் 2009

News

Read Previous

புளூட்டோ பதவியிறக்கப்பட்டது ஏன்?

Read Next

அமீரகம் வாழ்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *