கண்ணதாசன்

Vinkmag ad

இன்று கவிஞர் #கண்ணதாசனின் …
எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘#ஆயிரத்தில்_ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல். அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.
அப்போது கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று #எம்ஜிஆர் கூறியதில்லை.
எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று அந்த கவிஞரும் சொன்ன தில்லை. மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங்கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.
‘#ஆயிரத்தில்_ஒருவன்’ படத்தில் மேலே குறிப்பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது.
படக்குழுவினர் கவிஞரிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.
அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத
‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’
அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.
எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘#மாட்டுக்கார_வேலன்’ படத்தில்,
‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’
என்ற இனிமையான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகியைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்
‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’
என்று வரும்.
பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’
என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன்.
நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.
கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,
‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.
நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.
ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.
எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார்.
‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.
எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.
‘#அரசவைக்_கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன்,
‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது.
கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார்.
கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்.,
‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.
எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.
‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’
என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.
எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘#நீதிக்குப்பின்பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…
‘தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது’
இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.
எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ணதாசன் பாடல் ‘#மன்னாதி_மன்னன்’ படத்தில் அவர் எழுதிய
‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா…’பாடல்.
காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.

News

Read Previous

நிரந்தரமானவன் அழிவதில்லை !

Read Next

பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் நுண்ணுயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *